2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போர் முடிந்து மூன்றாண்டுகள்...

Super User   / 2012 மே 13 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய அழிவுகளையும் மீளமுடியாத துயரங்களையும் விட்டுச் சென்றுள்ளது.

மூன்று தசாப்தங்களாக நீடித்த போர், 2009 மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து – புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ்மக்களை விடுவித்து- நாட்டில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து மூன்றாண்டுகள் ஓடி மறைந்து விட்டன.

போரின் போதும், போர் முடிவுக்கு வந்த போதும் - நாட்டை சிங்கப்பூராக மாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை அரசாங்கம் அள்ளி வீசியிருந்தது.

இவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை இப்போது எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டியது முக்கியம்.

போர் முடிவுக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் ஏமாற்றங்களும் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டியவை.

அரசியல் ரீதியாக, சமூக ரீதியாகப் போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆராய்வது எந்தளவுக்கு முக்கியமோ - அதேயளவுக்கு பொருளாதார ரீதியான தாக்கம் குறித்து ஆராய வேண்டியதும் முக்கியமானது.

ஏனென்றால், மூன்று தசாப்த காலப் போரும், பொருளாதாரமும் பின்னிப் பிணைந்து போயிருந்தது. போரை முடிவுக்கு கொண்டு வராமல் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தது. அந்தளவுக்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்புகளைப் போர் ஏற்பத்தியிருந்தது.

போர் முடிவுக்கு வந்து விட்டால், அதற்காக செலவிடப்படும் நிதியை அபிவிருத்திக்கு ஒதுக்கலாம். நாட்டை சிங்கப்பூராக்கி விடலாம் என்று - கனவுகளில் மிதக்க வைக்க ஆசைகாட்டியது அரசாங்கம்.

இப்போது போர் இல்லை, அது முடிந்து மூன்றாண்டுகளாகி விட்டன. ஆனால், சிங்கப்பூருக்கு அருகில் கூடப் போகவில்லை நாடு. போரின் முடிவு, பொருளாதார ரீதியாக நாட்டில் பெரிய மாற்றங்கள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை.

போர் முடிந்ததும் ஏராளமாக வெளிநாட்டு உதவிகள் குவிந்தன. அவற்றைக் கொண்டு அரசாங்கம் பெரியளவில் நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்புகள் இருந்தன.

,அரசாங்கம் கடைப்பிடித்த கடும் போக்குடனான அணுகுமுறை உதவ முன்வந்த நாடுகளை பின்வாங்கச் செய்து விட்டது.

அரசாங்கத்தின் ன் போக்கினால், போர் முடிந்ததும் உதவ முன்வந்த பல நாடுகள் வெறும் வாக்குறுதியோடு நின்று கொண்டன.
அதைவிட, தொடர்ச்சியாக வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதும் நின்று போய்விட்டது.

முன்னரெல்லாம், உதவித் திட்டங்கள், நிதியுதவிகள் பற்றிய செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வரும். இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறும் கடனுக்காக நடத்தப்படும் இழுபறி யுத்தம் பற்றியே செய்திகள் வருகின்றன.

கட்டம் கட்டமாகப் பெறும் கடனுக்கு அனுமதி கிடைத்தால் அதுவே மிகப்பெரிய செய்தியாக மாறியுள்ளது. இது பொருளாதாரம் பின்னடைந்து போயுள்ளதையே காட்டுகிறது. போர் முடிந்ததும் பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்றது அரசாங்கம். ஆனால், விலைவாசியைத் தான் தொடர்ச்சியாக ஏற்றி சாதனை செய்துள்ளது.

போர் முடிவுக்கு வந்தபோது போடப்பட்ட கணக்கின் படி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவில்லை. மீண்டும் பழையபடி பணவீக்கம் மக்களைச் சுரண்டித் தின்னத் தொடங்கி விட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாவுக்குள் இருந்த வருடாந்த பாதுகாப்புச்செலவு, இப்போது 23 ஆயிரம் கோடி ரூபாவுக்குப் போய் விட்டது.

போர் முடிந்தால் அதற்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதியை அபிவிருத்திக்கு ஒதுக்கி நாட்டைச் சிங்கப்பூராக்கலாம் என்றது அரசாங்கம். போர் முடிந்து மூன்று ஆண்டுகளான போதும், முன்னரை விட அதிகம் செலுவிடுகிறது பாதுகாத்துறை.

காரணம் கேட்டால், போருக்காக வாங்கிய ஆயுதங்களுக்காக பட்ட கடனை அடைக்க வேண்டியுள்ளதாகக் கூறி வாயை அடைக்கிறது.

போரின் இறுதிக்கட்டத்தில் பொருளாதாரம் எந்தளவுக்குப் பலவீனமாக இருந்ததோ அதே நிலையை நோக்கியே நாடு தள்ளப்பட்டு வருகிறது.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மாத்தல விமான நிலையம் போன்ற கட்டமைப்புகள் உருவாகியுள்ள போதும் அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவுக்கு உதவ முடியவில்லை.

ஆயிரக்கணக்கான கோடிகள் கொட்டப்பட்டும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது.  போர் முடிந்த மூன்றாண்டுகளில் உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.

போர்க்காலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலங்களில் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீன்பிடித் தடைகள் தளர்த்தப்பட்டதால், மீன்உற்பத்தியும் உயர்ந்துள்ளது.  நெல், மரக்கறி உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனாலும் நாட்டின் பொருளாதார நிலை முன்னேறவில்லை.

தேயிலை உற்பத்தி, ஆடை தயாரிப்பு உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்துள்ள போதும், இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ள போதும், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அரசாங்கம் தவறிவிட்டது.

பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்தும் உள்ளக மற்றும் வெளியக புறச்சூழலை உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் அவற்றை சந்தைப்படுத்த முடியாமல் நிலத்தில்  ஊற்றியுள்ளனர்.

ஆடை தயாரிப்புத் துறையில் முன்னேற்றம் இருந்தாலும், இந்த ஆண்டில் குறிப்பிட்ட வருவாயை ஈட்ட முடியாது என்கிறார் மத்திய வங்கி ஆளுனர். அதுபோலவே, பொருளாதார வளர்ச்சி இலக்கையும் எட்டமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறைந்து போயிருந்த பணவீக்கம் மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. போருக்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியாக முன்னேறுகிறது என்று காட்டப்பட்டு வந்த பிம்பம் இப்போது உடைந்து போகத் தொடங்கியுள்ளது.

போர் முடிவுக்கு வந்தபோது 1200 டொலராக இருந்த தலா வருமானம் இப்போது 2800 டொலர் வரை உயர்ந்துள்ளது.
விரைவில் தலா வருமானத்தை 4000 டொலர்களாக உயர்த்தப் போவதாகச் சொல்கிறது அரசாங்கம். ஆனால் தலா வருமான உயர்வு மட்டும் பொருளாதார வளர்ச்சியாகவோ மக்களின் வாழ்க்கைத்தர அதிகரிப்பாகவோ இருக்க முடியாது.

தலா வருமானம் அதிகரித்துள்ள போதும், மக்கள் நிம்மதியாகவும் திருப்தியாகவும், வாழ்கிறார்களா என்று பார்க்க வேண்டும். அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தலா வருமான உயர்வு என்பது உழைப்பினால் மட்டும் உருவாக்கப்படக் கூடியதல்ல. நிர்ப்பந்தத்தினாலும் ஏற்படக் கூடியது.
விலைவாசி அதிகரிப்பினால்இ வருமானம் போதாமல் பெரும்பான்மையான மக்கள் திண்டாடுகின்றனர்.

இந்தநிலையில் எப்படியாவது அதிகம் உழைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகின்றனர். இதனால் தலாவருமானம் உயர்கிறது. ஆனால் அவர்களின் சேமிப்பு உயரவில்லை. வாழ்க்கைத்தரம் உயரவில்லை.

சேமிப்பு இல்லாத – வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாத தலா வருமான உயர்வு, அரசாங்கத்துக்கு புள்ளிவிபரக் கணக்குகள் போட மட்டுமே உதவுமே தவிர சாதாரண மக்களுக்கு கைகொடுக்காது.

போரில்லாத மூன்றாண்டுகளும் குண்டுச் சத்தங்கள் இல்லை நிம்மதியையும், வடக்கிலுள்ளோர் தெற்கேயும், தெற்கிலுள்ளோர் வடக்கேயும் சென்று வரலாம் என்ற நிலையையும் தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

போர்க்காலப் பொருளாதாரச் சுமைகளில் இருந்து மக்களால் விடுபடவும் முடியவில்லை. அரசாங்கத்தினால் அவர்களை விடுவிக்கவும் முடியவில்லை. அரசாங்கம் பொருளாதாரப் புரட்சி பற்றிப் பேசுகிறது.

சாதாரண மக்களோ ஏறிய விலை இறங்குமா என்று அங்கலாய்க்கிறார்கள். விலைவாசியைக் கட்டுப்படுத்தும் தந்திரங்களையோ மக்களை பொருளாதாரச் சுமைகளில் இருந்து மீட்கும் சூட்சுமங்களையோ அரசாங்கம கைக்கொள்வதாக இல்லை.

போரின் முடிவு அரசாங்கத்தைப் புகழின் உச்சாணிக்கு எந்தளவு வேகத்தில் கொண்டு சென்றதோ, பொருளாதாரச் சுமைகள் அதே வேகத்தில் கீழே இறக்கி வந்து விட்டது.

இதனால் போரிலும், தேர்தல்களிலும் வெற்றியீட்டிய அரசாங்கத்தினால் மக்களின் மனங்களை வெல்ல முடிந்ததா என்ற கேள்வி நிறையவே எழுந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X