2025 மே 20, செவ்வாய்க்கிழமை

போர் வெற்றிக் கொண்டாட்டங்களும் தமிழ் மக்களும்

Super User   / 2012 மே 20 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் சனிக்கிழமை நடத்திய போர் வெற்றித் தினக் கொண்டாட்டங்களை இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் கொண்டாடினார்களா? குறைந்த பட்சம் தமிழ் மக்கள் மே மாதம் 19ஆம் திகதியை வெற்றித் தினமாக கருதுகிறார்களா? இந்தக் கேள்விகள் நிச்சயமாக தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரியதாகவே இருக்கின்றன எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால போரில் அரச படைகள் அடைந்த வெற்றியினால் தமிழ் மக்கள் பயனடையவில்லையா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பினால் அதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பி விடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், போர் காலத்தில் தமிழ் மக்களே கூடுதலான துயரங்களை அனுபவித்தார்கள். அதற்கு அரசாங்கத்தின் கொள்கைகள் மட்டுமன்றி புலிகளின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளும் காரணமாகின.

போர் பிதானமாக தமிழ் மக்கள் வாழும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே நடைபெற்றது. சிலவேளைகளில் மட்டும் அந்தப் பகுதிகளுக்கு வெளியே போர் நடவடிக்கைகள் இடம் பெற்றன. போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் விமான குண்டு தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருந்தது. மக்கள் தமது வீடுகள் அருகே பதுங்குக் குழிகளை அமைத்துக் கொண்டு தான் வாழ்ந்தார்கள். இப்போது அவர்களுக்கு அந்த பயம் இல்லை.

அதேவேளை, புலிகள் தமது பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்துக் கொண்டு சென்று கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்துவார்கள் என, போர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் தமிழ் மக்களில் பலர் எப்போதும் பதறிய மனதுடன் வாழ வேண்டிய நிலை இருந்தது. இப்போது அவர்களுக்கு அந்த பயமும் இல்லை. பொர் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலத்தில் தமிழ் சிறார்களுக்கு நாட்டின் தென் பகுதியில் சிறார்களுக்கு போல் நிம்மதியாக கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. வசதிகள் இல்லாவிட்டாலும் இப்போது தமிழ் சிறார்களுக்கும் அந்த நிம்மதி கிடைத்துள்ளது எனலாம்.

தென் பகுதியில் வாழம் தமிழ் மக்களும் சிங்கள மக்கள் எதிர் நோக்கிய புலிகளின் குண்டு வெடிப்புகளினால் பாதிக்கப்பட்டார்கள். அதற்குப் புறம்பாக வடக்கே நடைபெறும் ஒவ்வொரு சம்பவத்தினதும் எதிரொலியாக தென் பகுதியில் வெடிக்கக் கூடிய இனக் கலவரங்களைப் பற்றியும் அவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ வேண்டியதாக இருந்தது. இப்போது அந்தப் பிரச்சினையும் இல்லை. எனவே, போரின் முடிவு அல்லது அரச படைகளின் வெற்றியிலாவது போர் முடிவடைந்தமையினால் தமிழ் மக்களும் பயனடைந்து வருகிறார்கள்.

ஆனால், தமிழ் மக்களுக்கு அரச படைகளின் போர் வெற்றி அந்நியமாக இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் ஒன்றில் இந்த போர் வெற்றிக் கொண்டாட்டங்களை அவமானமாக அல்லது வெதனை தரும் நிகழ்வாக கருதுகிறார்கள் அல்லது உதாசீனம் செய்தார்கள். சிங்களவர்களைக் கொண்ட அரச படைகளால் தமிழர்களைக் கொண்ட புலிகள் தோற்கடிக்கப்பட்டமையினால் பொதுவாக தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். தமிழர் அரசியல் என்றால் அது அரச எதிர்ப்பு அரசியலாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடையே பொதுவாக பரவியிருக்கும் அபிப்பிராயம் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

மறுபுறத்தில் புலிகள் மீதான அரச படைகளின் வெற்றியை அடுத்து அரசாங்கமோ அல்லது பெரும்பான்மை சமூகமோ நல்லிணக்கத்திற்காக ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. தமிழ் தலைவர்கள் வடக்கில் இராணுவ மயமாக்கலைப் பற்றியும் சிங்கள குடியேற்றங்களைப் பற்றியும் குற்றஞசாட்டி வருகிறார்கள். அதேவேளை இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீரவொன்றை வழங்க அரசாங்கம் முன்வருவதில்லை என்றும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதுவும் தமிழ் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

போரின் இறுதி காலப் பகுதியில் அதாவது 2006 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து அதன் கொடூரமும் அதிகரித்தது. எனவே அக்காலப் பகுதியில் குறிப்பாக வட மாகாணத்தில் ஏறத்தாழ சகல குடும்களும் தமது உறவிர்களை இழக்க நேரிட்டது. கிழக்கு மாகாணத்தில் போலன்றி வடக்கில் புலிகள் பொது மக்களை கேடயமாக பாவித்தமையினால் போரின் இறுதிக் கட்டத்தில் எல்லோரும் பிணங்களுடனும் இரத்தத்துடனும் அநாதரவு மனப்பான்மையுடனும் அடுக்கடுக்காக வந்த அவலங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

அந்த நிலைமையில் இருந்து மீண்டமை அம் மக்களுக்கு நிம்மதியை அளித்த போதிலும் அந்த கொடூரத்தில் இழந்த தம் உறவுகளின் நினைவும் தமிழ் மக்களை அரசாங்கத்தின் அந்த போர் வெற்றிக் கெண்டாட்டத்திலிருந்து அந்நியப்படுத்தியிருக்கலாம். போரின் போது சிங்கள படை வீரர்களும் உயிரிழந்த போதிலும் வெற்றி பெற்றது தமது சமூகமே என்ற எண்ணம் காரணமாக சிங்களவர்களுக்கு இது உண்மையிலேயே வெற்றிக் கொண்டாட்டமாக இருக்கிறது. 

தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயங்களை கட்டியெழுப்பும் பிரதான கருவியான தமிழ் ஊடகங்களும் போர் காலத்தில் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டு இருந்து, போருக்குப் பின்னர் சில மாதங்களாக வித்தியாசமாக நடந்து கொண்டு, பின்னர் மீண்டும் அரச எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. இது போன்ற காரணங்களால் அரச படைகளின போர் வெற்றியானது தமிழ் மக்களினதும் வெற்றியே என்ற எண்ணத்தை தமிழ் மக்களிடையே ஊட்ட அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.

சிங்கள மக்களிலும் சிலர் இந்தக் கொண்டாட்டங்களில் ஒருவித போலித் தன்மையை காண்கிறார்கள். போர் வெற்றிக்கு மூல காரணங்களில் ஒன்றாகவிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் இருக்கும் போது இக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதே அதற்குக் காரணமாகும். பொன்சேகா என்ன நிலைமைகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார் என்பது பொதுவாக தெரிந்த விடயமே.

வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கும் போது போரின் இந்த முடிவை தமிழர் தரப்பினரால் மாற்றியிருக்க முடியாதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுக்கூடிய இலங்கையில் தனித் தமிழ் நாடொன்றை உருவாக்குவதை இந்தியா விரும்புமா என்ற பூகோள அரசியல் யதார்த்தத்தை புறக்கணித்த வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானம் ஒரு புறமிருக்க, அதன் பின்னர் கூடுதல் மாநில சுயாட்சியுடன் கூடியதோர் தீர்வொன்றுக்கான பல சந்தர்ப்பங்களை தமிழ் தலைவர்கள் நழுவவிட்டனர்.

அதிலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும் ரனில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை முறையாக பயன்படுத்திக் கொள்ளாமையை சுட்டிக் காட்டலாம். இவ் விரண்டு சந்தர்ப்பங்களின் போதும் வெளிநாடுகளின் மேற்பார்வை இருந்தமை முக்கியமாகும்.

போரை மட்டும் எடுத்துக் பொண்டால் அரச படைகள் அதில் வெற்றி பெறுவதற்கு பல காரணிகள் காரணமாக அமைந்தன என்றே இப்போது தோன்றுகிறது. குடும்ப ஆதிக்க நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையும் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டமையும் இதில் முக்கிய திருப்பமாகும். இவ்விருவரும் கடும் போக்களர்கள் என்பதை பலர் அறிவர்.

இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் என்ற பயத்தினால் போருக்காக போதியளவில் பணம் ஓதுக்கவில்லை. ஆனால், கோட்டாபய ஜனாதிபதியின் சகோதரர் என்பதால் அரசியல் தேவைகளையும் இராணுவத் தேவைகளையும் சமாளித்தும் சமப்படுத்தியும் போருக்கு தெவையான ஆட்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் முன் ஒருபோதும் இல்லாத அளவில் திரட்டிக் கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த போது ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பெருமளவில் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் வெளிநாட்டு கண்காணிப்பு ஏற்பட்டது. இதனை சர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு என்றே விக்கிரமசிங்க வர்ணித்தார். இது புலிகளுக்குப் பாதகமாகவே அமைந்தது.

புலிகள் தந்திரோபாய ரீதியில் அந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்களேயல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தை அடைய முடியும் என்றோ அடைய வேண்டும் என்றோ இருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு கண்காணிப்பு இருக்கும் போதே அவர்கள் தமது விருப்பப்படி போர் நிறுத்த உடன்படிக்கையை மீறினர்

அவ்வப்போது எதையாவது கூறி சமாளித்தாலும் ராஜதந்திர ரீதியாக இதன் பாரதூரத் தன்மையை புலிகள் உணரவில்லை. 2003 அம் ஆண்டு புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறும் போது அதற்காக கூறிய காரணங்களையும் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே ஆண்டு டோக்கியோ மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கு காட்டிய காரணங்களையும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவற்றின்; விளைவாகவே ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளும் கனடாவும் 2006ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை தத்தமது நாடுகளில் தடை செய்தனர். இது புலிகள் செய்த பிழையாகும்.

கருணாவின் பிரச்சினையையும் புலிகள் முறையாக கையாளவில்லை என்றே இப்போது தெரிகிறது. இறுதியில் இந்த சர்வதேச வலைப்பின்னலும் கருணாவும் அரச படைகளுக்கு உளவு ரீதியில் பெரும் பலத்தை அள்ளிக் கொடுத்தமை இப்போது அம்பலமாகியுள்ளது.

புலிகளின் நன்பர்களாகவிருந்தவர்களும் இந்த குறைகளை அவர்களுக்கு சுட்டிக் காட்டவில்லை. சர்வதேச விடயங்கள் தொடர்பான புலிகளின் ஞானம் மிகவும் மோசமாக இருந்தது என சொல்ஹெய்ம் அண்மையில் கூறியிருந்தார். ஆனால் அவ்விடயத்தில் நிலைமையை சீராக்க சொல்ஹெய்ம் அப்போது எதனையும் செய்யவில்லை. இராணுவத் தீர்வின் மீதான புலிகளின் அபார நம்பிக்கை அவர்களது தோல்விக்கு காரணமாகியது என கடந்த வாரம் அவர் கூறியிருந்தார். ஆனால் புலிகளின் இராணுவத் திறமைகளை இதே சொல்ஹெய்ம் தம்மிடம் கூறி பிரமித்தார் என சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'இந்து' பத்திரிகைக்கு கூறியிருந்தார்.

இப்போது மிதவாதிகளாக தோன்றும் அனுபவம் வாய்ந்த தமிழ் தலைவர்களும் அப்போது புலிகளுக்கு வழி காட்டக் கூடிய முறையில் நடந்து கொள்ளவில்லை. புலிகள் அதற்கு இடம் வைக்கவும் இல்லை.

இவ்வாறு பார்க்கும் போது அரச படைகளின் வெற்றிக்கு அப்படைகளின் திறமை மட்டுமன்றி தமிழர் தரப்பின் பிழைகளும் காரணமாகியிருப்பதை காணலாம். பூகோள அரசியல் நிலைமைகள் உட்பட சகல நிலைமைகளையும் கருத்திற் கொண்டு இருந்தால் தமிழர் தரப்பினர் நிலைமையை மாற்றியிருக்கலாம். அதாவது பிரிவினைக்கு பதிலாக கூடுதல் அதிகாரத்துடன் தம்மை தாமே ஆளும் நிலைமையை அடைந்திருக்கலாம். அதற்கான அறிவுத் திறமை தமிழ் சமூகத்திடம் இருந்தது, இன்னமும் இருக்கிறது. ஆயுத கலாசாரம் அதற்கு அப்போது இடமளிக்காவிட்டாலும் இப்போது இவர்களுக்கு அதனை பாவிப்பதற்கு தடை ஏதும் இல்லை.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X