2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி தேர்தல்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சி வெற்றி பெறுமா?

A.P.Mathan   / 2012 மே 21 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தேர்தல் வரும் பின்னே, பிரசாரம் வரும் முன்னே" என்பதுதான் இப்போது ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா கையிலெடுத்து இருக்கும் ஆயுதம். இந்திய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று முதலில் கோரிக்கை எழுப்பினார் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் சங்மா. அவர் இருக்கும் சரத்பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றாலும், அவருக்கு முதலில் ஆதரவு குரல் எழுப்பியது ஒடிஸ்ஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலை ஒலித்திருக்க வேண்டும் என்பது, சமீபத்தில் அவர் சென்னை வந்து ஒடிஸ்ஸாவின் 76ஆவது ஆண்டு விழாவினை சிறப்பாக நடத்திவிட்டு, தமிழக முதல்வரையும் சந்தித்து விட்டுச் சென்ற பின்னணியிலிருந்து தெரிய வருகிறது. நவீன் பட்நாயக் சொன்னவுடன் அதை அதிக சிரத்தையுடன் முன்னின்று சங்மாவுக்கு வாக்களியுங்கள் என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.


முதலில் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "அரசியலுக்கு அப்பாற்பட்டு சங்மாவை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். அவர் மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல. ஜனாதிபதி பதவிக்கு திறமையான வேட்பாளர்" என்று அந்த வேண்டுகோளில் கேட்டுக் கொண்டார். இந்த வேண்டுகோள் பற்றி மற்ற கட்சிகள் இன்னும் கருத்துச் சொல்லவில்லை என்றாலும், சங்மாவை முதலில் ஆதரிக்க வேண்டிய உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, "மூன்றாவது அணி அமைக்கும் நோக்கமில்லை. ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ, தேசிய ஜனநாயக கூட்டணியோ இன்னும் அறிவிக்கவில்லையே" என்று கூறியதோடு மட்டுமில்லாமல், "மூன்றாவது அணி என்ற சிக்கலில் எல்லாம் நான் மாட்டிக்கொள்ள மாட்டேன்" என்று தடாலடியாக அறிவித்துள்ளார். அதேபோல் லோக் ஜன் சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், "நான் ஏற்கனவே சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பேன்" என்று கூறியிருக்கிறார். சங்மாவின் இயற்கையான ஆதரவாளர்களாக இருக்க வேண்டிய மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் போன்றோரே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்னொரு அதிரடி நடவடிக்கையையும் எடுத்துள்ளார். பா.ஜ.க. தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏ.பி.பரதன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாடிக் கட்சி தலைவர் முலயாம் சிங் யாதவ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "சங்மா மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் மட்டுமல்ல. ஜனாதிபதி பதவிக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவர். ஆகவே அவரை ஆதரியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இப்படி ஜனாதிபதி பதவிக்கு சங்மாவை முன்னிறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள பிரசாரத்தின் பின்னணி என்ன?

சென்றமுறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாமையே மீண்டும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இன்றைய தமிழக முதல்வர். ஆனால் அன்று அது நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க. முன்னின்று பிரசாரம் செய்த பிரதீபா பட்டீல் ஜனாதிபதியானார். அதற்காக பிரமாண்டமான வெற்றி விழாவையே முன் கூட்டியே நடத்தினார் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி. மத்தியில் ஆட்சி அமைப்போருக்கு தமிழகத்தின் 39 எம்.பி.க்கள் முக்கியமாக இருப்பது போல், ஜனாதிபதி வேட்பாளராக வருவோருக்கும் தமிழகத்தின் வாக்குகள் முக்கியமாக இருந்தது. இந்த முறையும் அதே வலிமை தமிழகத்திற்கு இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. ஆளுங்கூட்டணி கட்சியான காங்கிரஸ் அணியில் மத்தியில் இல்லை. இந்த சூழ்நிலையில் தானே முன்னின்று ஜனாதிபதி வேட்பாளருக்காக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதிலும் குறிப்பாக வெளிநாட்டவரான சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக வரக்கூடாது என்று அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்திலேயே குற்றம் சாட்டி, அங்கிருந்து வெளியேறி தேசிய வாத காங்கிரஸ் கட்சி என்று தனிக்கட்சி கண்டவர் சங்மா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வகையில் சங்கமாவை முன்னிறுத்தி களத்தில் குதிப்பது அகில இந்திய அளவில் தமிழக முதல்வருக்கு ஒரு இமேஜைக் கொடுக்கும். நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தனி அக்கறை உண்டு என்பதை பறைசாற்றும் விதமாக இது இருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர் மட்டுமல்ல, இதற்கான முயற்சியில் இந்த முறை ஆட்சிக்கு வந்தவுடனேயே தொடங்கி விட்டார் ஜெயலலிதா. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிலிண்டன் முதன் முதலாக தமிழகம் வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விட்டுச் சென்றார். பிறகு,மத்திய அரசு கொண்டு வந்த மதக்கலவர தடுப்பு மசோதாவை எதிர்த்து ஏப்ரல் 2ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமே எழுதினார். "தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை முதலில் நிறுத்தி வைத்து விட்டு முதல்வர்களின் மாநாட்டை கூட்டுங்கள்" என்று கோரிக்கை விடுத்தார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது என்பது மாநில அரசுகளை முனிசிபாலிட்டிகள் போல் ஆக்கும் முயற்சி என்று பிறகு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கூறி தீவிரமாக அதை எதிர்த்தார். "துக்ளக்" பத்திரிக்கையின் 42ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க. தலைவர் அத்வானி கூட, "ஜெயலலிதா போன்ற தலைவர்கள் நாட்டுக்குத் தேவை" என்றே பாராட்டி விட்டுச் சென்றார். இது எல்லாமே அகில இந்திய அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்தும் முயற்சியே.

அத்துடன் நில்லாமல் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு எதிரான தன் கருத்துக்களை தெளிவாக பதிவு செய்தார். இதன் பின்னணியில் அதே மாநாட்டில் பங்கேற்ற ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க முதலமைச்சர்கள் கொண்ட துணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அக்குழுவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். அதுவே அகில இந்திய அளவில் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளர்கள் வரிசையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா இருக்கிறார் என்பதை முன்னிறுத்தவே என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு விழாவின் சாதனைகளை அகில இந்திய அளவில் அனைத்து பத்திரிகைகளிலும் கொடுத்து விளம்பரம் செய்ததும் அகில இந்திய இமேஜ் உருவாக்குவதன் நோக்கமே! அதன் தொடர்ச்சியாகவே இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முதல்வர் ஜெயலலிதா முன்னுக்கு நிற்கிறார். இவருடைய கோரிக்கைக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அதேபோல் பிரதமர் வேட்பாளர் ரேஸில் இருக்கும் முலயாம் சிங்கும் இது பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளும் மௌனமாகவே இருக்கின்றன. ஏனென்றால் இவர்கள் அனைவருக்குமே ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் தமிழக முதல்வருக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுப்பதில் இன்னும் தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக பா.ஜ.க.விற்கே அந்த தயக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே "பிரணாப் முகர்ஜியும், அன்சாரியும் சரியில்லை" என்று பா.ஜ.க. தலைவர் சுஷ்மா கருத்துச் சொல்லி, கையைச் சுட்டுக் கொண்டார். ஆகவே இப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கை குறித்து அவசரப்பட்டு அக்கட்சி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்பதையே பா.ஜ.க.வின் அமைதி காட்டுகிறது. ஏனென்றால் சங்மா அத்வானியை சந்தித்த பிறகும், தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்த பிறகும் தங்கள் நிலைப்பாட்டை வெளியிடாமல் பொறுமையாக இருக்கிறது பா.ஜ.க.

அதே நேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் வழக்கம் போல் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா லீடிங் ரோல் எடுத்துள்ளார் என்பது அகில இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிஸ்ஸாவில் இருப்பது போல் மலைவாழ் சமுதாய வாக்காளர்கள் பெருமளவில் தமிழகத்தில் இல்லை. ஆனால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சங்மாவை ஜெயலலிதா ஆதரிப்பது ஜனாதிபதி தேர்தலில் அகில இந்திய அரசியல் தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கட்டும் என்பதன் முதல் முயற்சியே. ஒருவேளை காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளர் மீது அனைவருக்கும் அதிருப்தி ஏற்பட்டால், சங்மாவை காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் ஆதரிக்கக்கூடும் என்றே ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கருதுகிறார்கள். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான ரேஸில் குடியரசு துணை தலைவர் அமீது அன்சாரி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் பி.ஏ.சங்மா போன்றோர் இருப்பது மத்தியில் ஆளுங் காங்கிரஸ் கட்சிக்கு இடியப்ப சிக்கலை உருவாக்கும் என்பது மட்டும் உண்மை. மற்றபடி அகில இந்திய அரசியலில் ஓர் "உயர்ந்த லீடர்ஷிப்" அந்தஸ்தை பெற்று, தான் ஒரு பிரதமர் பதவிக்குரிய வேட்பாளர் என்ற இமேஜ் மேலும் வளரவே சங்மாவை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்பதில் மட்டும் சந்தேகமில்லை. ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அ.இ.அ.தி.மு.க. இல்லாதது இந்த ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் மூலம் எந்த அளவிற்கு இமேஜைப் பெற்றுத் தரும் என்பது பா.ஜ.க. போன்ற முக்கிய எதிர்கட்சி ஜெயலலிதாவின் கோரிக்கையை ஆதரிப்பதை வைத்து இருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • Vimalanaathan G Uday Friday, 25 May 2012 05:20 AM

    கட்டுரை எதார்த்தமாக உள்ளது. அரசியல் களத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் ஜெயலலிதா எப்போதுமே முன்னிலை வகிப்பவ‌ர். ரிசல்ட் நெகட்டிவ் ஆனாலும் அது தன்னுடைய ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை என்பதால் ஜீரோ % முதலீட்டில் களம் இறங்கியுள்ள அம்மாவின், பிரதமர் பதவி ஆசைக்கு பாஜக உள்ளிட்ட‌ வட இந்தியர்கள் துணை போவார்களா என்பது சந்தேகமே...


    -விமல் உடையார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X