2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொன்சேகா என்ன செய்யப் போகிறார்?

Super User   / 2012 மே 27 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று விடுதலையானாலும் அவரது அரசியல் எதிர்காலம் இன்னமும் நிச்சயமற்றதாகவும் தெளிவற்றதாகவுமே இருக்கிறது. அதேவேளை, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏன் முடிவு செயதார் என்பதும் இன்னமும் தெளிவற்ற விடயமாகவே இருக்கிறது.

ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு வழங்கிய காரணம் என்னவென்று அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக கூறவில்லை. கருணை அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார் என அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் வகையில், தாம் நினைத்தவையெல்லாம் அரசாங்கத்தின் முடிவுகளாக ஊடகங்களுக்கு தெரிவிக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருந்தார். ஊடகங்கள் அதனை அவ்வாரே அறிக்கையிட்டாலும் உண்மை அதுவல்ல வேnறுதுவோ என்பதும் ஊடகங்களுக்குத் தெரியும்.

அடுத்த முக்கியமான விடயம் பொன்சேகாவின் விடுதலையை பொதுவாக தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்களா என்பதே. அவர் ஏன் விடுதலை செய்யப்பட்டார், அவரது எதிர்க் காலம் என்ன, தமிழ் மக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குகிறார்கள் என்ற மூன்று விடயங்களும் சுவாரஷ்யமான விடயங்களையும் உள்ளடக்கிய முக்கிய விடயங்களாகும்.

பொன்சேகாவின் விடுதலையைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் சில மாதங்களாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன் விளைவாகவே அவர் விடுதலை செய்யப்பட்டார் என கூறப்பட்டது. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி அவர் விடுதலை செய்யப்பட்டார் என்றால் அவருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமைகளை வழங்க ஜனாதிபதி ஏன் இணங்கவில்லை?

அரசியல் உரிமைகளற்ற வெறும் விடுதலையை பொன்சேகா ஏன் விரும்பினார்? எவ்வாறோ வெளியே வந்துவிட்டால் மற்றதை பின்னர் பார்க்கலாம் என்று அவர் நினைத்தாரோ?

விடுதலையின் பின்னர் பொன்சேகாவும் அரசாங்கமும் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட இணக்கப்பாடொன்றின் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று கருத முடியாமல் இருக்கிறது. அவரது விடுதலையின் பால் முழு உலகத்தினதும் கவனம் செலுத்தப்பட்ட போதிலும் அரச ஊடகங்கள் அதனை கண்டு கொள்ளாமை அதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கூறலாம்.

அரச ஊடகங்களின் இச்செயல் ஊடக ஆசாரங்களை மீறும் செயல் என சிலர் கூறலாம். அவ்வூடகங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கான கடமையை நிறைவேற்ற தவறியதாக மற்றொருவர் கூறலாம். அது எவ்வாறாயினும் அரச ஊடகங்களின் இச் செயலானது இணக்கப்பாடொன்றின் பேரில் பொன்சேகா விடுதலையானாரா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

விடுதலையானவுடன் சில இடங்களில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி, தாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடரப் போவதாக கூறியிருந்தார். இதுவும் உண்மையிலேயே இணக்கப்பாடொன்றின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதேவேளை, அவரது விடுதலைக்கு ஏதுவான வேறு உள்நாட்டு காரணங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.

சிலவேளை, வெளிநாட்டு நெருக்குதல்கள் இதற்கு காரணமாகியிருக்கலாம். பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா சில காலமாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறி வந்தமை தெரிந்ததே. அதேவேளை, அமெரிக்க இராஜங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் அழைப்பின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அமெரிக்காவுக்குச் சென்று இருந்த வேளையிலேயே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறோ பொன்சேகா விடுதலையாகிவிட்டார். இனி என்ன செய்யப்போகிறார் என்பதே இப்போது அனைவரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. பொது மக்கள் இந்த விடயத்தில் அக்கறை செலுத்துவதை விட ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்துகிறார்கள் என்பதே உண்மை. ஏனெனில் ஆட்சியாளர் அன்றும் அவரது அரசியல் பிரவேசத்தை அச்சத்தோடு பார்த்தார்கள். அவரை விடுதலை செய்யும் போது அவருக்கு அரசியல் உரிமைகளை வழங்காததன் மூலம் அவரது அரசியலுக்கு இன்னமும் அவர்கள் அஞ்சுகிறார்கள் போலும் தெரிகிறது.

அரசியலுக்கு கட்டாயத் தேவையான வாக்குரிமை பொன்சேகாவுக்கு இல்லை என்றே சட்ட மா அதிபர் கூறியிருந்தார். ஏனெனில் இராணுவ நீதிமன்றமொன்றினால் அவருக்கு 30 மாத கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறை தண்டனை வழங்கப்பட்ட ஒருவர் சட்டப்படி வாக்குரிமையையும தேர்தல்களில் வேட்பாளராகும் உரிமையையும் இழக்கிறார். தண்டனை காலத்தின் ஆரம்ப நாள் முதல் செல்லுபடியாகும் வகையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தால் அவர் இந்த அரசியல் உரிமைகளை இழப்பதில்லை என சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஜனாதிபதி அவ்வாறு அரசியல் உரிமையுடனான மன்னிப்பை பொன்சேகாவுக்கு வழங்கவில்லை என்றே தெரிகிறது. அவ்வாறாயின் இது அவர் தற்போது எதிர்நோக்கி இருக்கும் மிகப் பாரதூரமான பிரச்சினையாகும்.

1980ஆம் ஆண்டு அரசியல் நோக்கத்தோடு ஐ.தே.க. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றினால் முன்னாள் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் ஏழு ஆண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்டன. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென அவருக்கு குடியியல் உரிமைகளை வழங்கினார். குடியியல் உரிமைகளை இழந்து இருந்த காலத்தில் சிறிமா தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் கட்சி அரசியலில் ஈடுபட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவியாகவும் கடமையாற்றினார்.

பொன்சேகாவுக்கும் அவ்வாறு செயற்பட சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியைப் போன்ற பிரதான கட்சியொன்று பொன்சேகாவுக்கு இல்லாததன் காரணமாக மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்ள அவரால் முடியுமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் கூறியாக வேண்டும்.

அரசியலில் பொன்சேகாவுக்குள்ள மிகப் பெரும் சாதகமான அம்சம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடித்து இராணுவத் தளபதி என்ற புகழே. இந்த காரணத்தை அரசாங்க தரப்பினர் மறுக்கலாம். ஆனால், போர் வெற்றிக்கான பிரதான காரணிகளில் பொன்சேகா முக்கியமானதோர் காரணி என்பதை மறுப்பது அரசியல் நேர்மையல்ல.

போர் வெற்றிக்கு ஜனாதிபதியின் அரசியல் தலைமையும் முக்கிய காரணியொன்று தான். அதேபோல் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபகஷ, அரசாங்கத்தின் அரசியல் தேவைகளையும் இராணுவத்தின் போரியல் தேவைகளையும் சமப்படுத்தி ஆற்றிய பங்கும் படைகளின் போர் வெற்றிக்கு ஏதுவாகியது என்பது மறுக்க முடியாத உண்மையே.

இவற்றுக்கு புறம்பாக 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான திட்டத்தின் காலத்தின் போது ஏற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பு காரணமாக புலிகள் சர்வதேச ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டனர். புலிகளின் மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதியாகவிருந்த கருணா அக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை சமாளிக்க முடியாது புலிகளிடம் இருந்து பிரிந்து சென்றார்.

இவற்றினால் புலிகள் ஐரோப்பா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டு அரசாங்கத்தின் உளவுப் பணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவில் உதவிகள் கிடைத்தன. இவையும் போர் வெற்றிக்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பான சூழ்நிலைமை உருவாகியது.

ஆனால், இவை அனைத்தும் பின்புலமாக செயற்பட பொன்சேகாவின் இராணுவ திறமை மேலோங்கி காணப்பட்டது. இதனால் அவருக்கு நாட்டுக்குள் பெரும் பெருமை சேர்ந்தது. அது இன்னமும் அவரது அரசியலுக்கு உதவியாக அமைந்துள்ளது.
விந்தையான ஒரு விடயம் என்னவென்றால் அவருக்கு கடந்த காலத்தில் தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்தமையே. போரின் விளைவாக தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்த போதிலும் போரை முன்நின்று நடத்திய இராணுவ தளபதிக்கே அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களித்தனர்.

அந்த ஆதரவு இன்னமும் இருக்கலாம். கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தையும் சில மூத்த இராணுவ அதிகாரிகளையும் சாடிய உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. மனித உரிமைகளைப் பற்றி அக்கறை காட்டும் அரசசார்ப்பற்ற அமைப்புக்களும் அவரை குறை கூறவில்லை. எனவே இதுவும் அரசியலில் அவருக்கு தமிழ் மக்களிடையே சாதகமான நிலைமையை உருவாக்கலாம்.
ஆனால் தேர்தல் என்று வரும் போது பொன்சேகா பெரும் நெருக்கடியை எதிர்நோக்கலாம். ஏனெனில் வெற்றிக்கான வாய்புக்கள் தெளிவாக தெரிந்தால் மட்டுமே மக்கள் தேர்தல்களின் போது எந்தவொரு கட்சியையும் எந்தவொரு நபரையும் ஆதரிப்பார்கள். அவ்வாறானதோர் நிலைமையை பொன்சேகா அடுத்த பிரதான தேர்தல்களுக்கு முன்னர் உருவாக்கிக் காட்டுவாரா?

அவருக்கு குடியியல் உரிமைகள் கிடைத்து அவர் ஐ.தே.க. போன்றதோர் கட்சியொன்றின் தலைவராக இருந்தால் அந்த நிலைமை உற்படலாம். ஆனால், ஐ.தே.க. அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை. அவர் ஐ.தே.க.வில் இணைவதாகவும் தெரியவில்லை.

மக்கள் விடுதலை முன்னணியும் பொன்சேகாவை கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது. எனவே இனி அவர் தனியான அரசியல் பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். இது தேர்தல்களின் பொது அவ்வளவு பயனளிக்கும் என்று இப்போதைக்கு விளங்கவில்லை.

ஆனால், 2010ஆம் ஆண்டில் போல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சகல முக்கிய எதிர்க் கட்சிகளையும் ஐக்கியப் படுத்தி பொன்சேகாவும் அதன் நட்சத்திரமாக மேலெழுந்து வந்தால் இப்போதைய நிலையில் பொன்சேகாவின் பின்னால் மக்கள் அணி திரள்வார்கள்.

ஆனால் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அவரோ வேரெந்தத் தலைவரோ இன்னமும் நடைமுறை ரீதியாக எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X