2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சங்மாவிற்கு 'ஜெ'?

A.P.Mathan   / 2012 மே 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வைத்தால் குடுமி, இல்லையென்றால் மொட்டை'. இதனையே முன்னாள் மக்களவை தலைவர் சங்மாவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தி - தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா செய்துவரும் அரசியல் வெளிப்படுத்துகிறது. தப்பித்தவறி சங்மா ஜனாதிபதி ஆகிவிட்டால் அதற்கு ஜெயலலிதாவின் அரசியல் திறமையே காரணம் என்று அவரது அஇஅதிமுக கட்சி பிரசாரம் செய்யலாம். அந்த முயற்சி ஏதாவது விதத்தில் தோல்வி அடைந்தாலும், இதுவரை நாட்டின் சரித்திரத்தில் இல்லாதவகையில் கிறித்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தினார் என்று கூறி, மாநிலத்தில் உள்ள அந்த சமுதாய வாக்காளர்களின் ஒருமித்த ஆதரவை அஇஅதிமுக பெற முயற்சி செய்யலாம். அதிலும் குறிப்பாக, கூடம்குளம் பிரச்சினையில் அந்த மதத்தவர்களின் மனம் புண்படும் படியாக மாநில அரசு நடந்துகொண்டது என்ற எண்ணத்தையும் துடைத்துவிட ஜனாதிபதி தேர்தல் அஇஅதிமுக தலைமைக்கு ஒரு வாய்ப்பாக அமைந்ததாக எண்ணி, தமிழ் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் மருகலாம்.

ஜனாதிபதி தேர்தலில் அஇஅதிமுக போன்ற மாநில கட்சிகளின் பங்களிப்பை உதறித் தள்ளிவிட முடியாது. ஆனால், தேர்தல் என்று வந்து, கடும் போட்டி ஏற்பட்டால் மட்டுமே அவர்களது வாக்குகள் முக்கியத்துவம் பெறும். மற்றபடி, காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள்ளும் கருத்துவேறுபாடு இல்லை என்ற நிலைமை தோன்றிய பிறகு, உத்திரபிரதேச முலாயம் சிங் யாதவிற்கு உள்ள அதே அதிக செல்வாக்கு தமிழ் நாட்டின் ஜெயலலிதாவிற்கு இல்லை என்பதே இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்த உண்மை. இந்த நிலைமை மாறுமேயானால், அஇஅதிமுக தலைமை தலைநிமிர்ந்து நாட்டின் தலைநகரில் வலம் வரும் சூழல் உருவாகலாம். அடுத்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை குறிவைத்து அரசியல் செய்யும் ஜெயலலிதாவின் தற்போதைய திட்டமும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, தேசிய அரசியலில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது மாத்திரமே.

மக்களவை தேர்தலுக்கு பின்னர், தேசிய அரசியலில் தான் நேரடியாக கால் பதித்தால், மாநில அரசியலில் தனக்கு வாரிசாக யாரை நியமிக்கவேண்டும் என்ற கேள்வி ஜெயலலிதா முன்னால் எழும். இதில், காமராஜரின் தோல்வி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்ற தமிழ் நாட்டு தலைவர்களுக்கு மட்டுமல்ல. பிற்காலத்தில் சந்திரபாபு நாயுடு போன்ற பிறமாநில தலைவர்களுக்கும் அது ஒரு படிப்பினையாக அமைந்தது. கடந்த 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில், இதுபோன்ற ஒரு குழப்பமான சிந்தனையும் அன்றைய ஆளும் கட்சியான அஇஅதிமுக தேர்தலில் படுதோல்வி அடைவதற்கான ஒரு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, மாயாவதி மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், மத்தியில் ஆளும் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது. இந்த உண்மையை கருத்தில் கொண்டே, முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, முதல் சுற்றில் காலை முன்வைத்துவிட்டு தற்போது அடக்கி வாசிக்கிறது. அந்த கட்சியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதை தடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ஆளும் கூட்டணியிலும் சிறிது குழப்பத்தையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தினால், அதுவே தங்களுக்கு கிடைத்த அரசியல் வெற்றியாக கருதி மகிழ்சியடையும் மனநிலையிலேயே உள்ளது.

இந்த பின்னணியில் தான், அவசியமில்லாமல் அப்துல் கலாமின் பெயரை முன்னிறுத்தி, பாரதீய ஜனதா அரசியல் செய்யப் பார்த்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு சொல்லாத கலாம், பின்னால் சுதாரித்துக் கொண்டதால் அவருக்கு என்று நாடு முழுவதும் மக்களிடையே தோன்றியுள்ள மரியாதை தப்பியது. தனது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நிலைமை தோன்றி இருந்தால், பாரதீய ஜனதாகட்சி, ஜனாதிபதி தேர்தலுக்கு அப்துல் கலாமை முன்னிறுத்தி இருக்குமா என்பது சந்தேகமே. அதிலும் அண்மையில் நடந்துமுடிந்த உத்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவில் பாரதீய ஜனதாகட்சி இடங்களை பிடித்திருந்தால் கூட அந்தக் கட்சியின் மனநிலையும் ஜனாதிபதி தேர்தல் குறித்த மனப்பாங்கும் வேறுவிதமாக அமைந்து இருந்திருக்கும்.

அந்தவிதத்தில், அப்துல் கலாமிற்கு பின்னர், சங்மாவும், ஏன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூட பாரதீய ஜனதா கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் அடங்குவர். அப்துல் கலாம் - முஸ்லிம் இனத்தவர் என்றால், சங்மா கிறிஸ்தவர். அப்துல் கலாமை பொறுத்தவரை, அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலகட்டத்தில், 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பதற்கு 'வெளிநாட்டவர்' பிரச்சினையை முன்னிறுத்தி முட்டுக்கட்டை போட்டதாக கருதப்படுபவர். பாரதீய ஜனதாவை பொறுத்தமட்டிலாவது சங்மாவை அவர்கள் ஜெயலலிதாவை போல் ஓர் ஆதிவாசிகள் இன தலைவர் கருதவில்லை. மாறாக, பிறப்பால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்ற உண்மையே அவர்களது கண்களில் பெரிதாக தெரிந்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், அப்துல் கலாம் குறித்த சோனியா காந்திக்கு ஆதரவான கருத்து இல்லை என்று கருதி வருகிறது. தன்னைப் போலவே கிறிஸ்தவ இனத்தை சார்ந்த சங்மாவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதரித்தால், அதுவே சோனியவிற்கு எதிராக மதம் சார்ந்த அரசியல் செய்ய இந்துத்வா அமைப்புகளுக்கு வாய்ப்பாக அமையலாம். இதன் காரணமாகவும், தொண்ணூறுகளில் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகும் போது. சோனியா காந்தி மீது, சங்கா வெளிப்படுத்திய காட்புணர்ச்சி காரணமாகவும் அவரை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று பாரதீய ஜனதா முடிவே எடுத்துவிட்டது. அதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி, 'மைனாரிட்டி' இனத்தவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோரின் ஏகபிரதிநிதியாக தன்னைக் காட்டிக் கொள்வதில் ஓட்டை இடுவதுமட்டுமே, பாரதீய ஜனதாவின் ஜனாதிபதி தேர்தல் கால அரசியலாக தற்போது இருந்துவருகிறது.

இந்த பின்னணியில், யார் ஆதரித்தாலும் இல்லை எதிர்த்தாலும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று சங்மா அறிவித்துள்ளார். அவர் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவார், சங்மாவின் முயற்சிகளுக்கு துணைபோவதாக இல்லை என்றே தெரிகிறது. புவாரின் நிலைபாடில் தவறு இல்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மூலம் பதவி வகித்துக் கொண்டு, தனது கட்சி அந்த கூட்டணியையே குறிபார்க்கும் விதத்தில் ஜனாதிபதி தேர்தலில் தனியாவர்த்தனம் வாசிப்பதை அவர் விரும்பாதது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயம். மேலும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவது குறித்து சரத் பவாருடன் சங்மா ஆலோசனை நடத்தியதாகவும் தெரியவில்லை.

என்றாலும், தான் போட்டியில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று சங்மா கூறியுள்ளது, ஜெயலலிதா மற்றும் அவருக்கு துணை நிற்கும் ஓடிசா மாநில முதல்வர் நவீன் பாட்நாயக்கையும் குறிவைத்துதான் என்றும் எடுத்துக் கொள்ளவேண்டும். தங்களது முக்கியத்துவத்தை தேசிய அரசியலில் நிலைநிறுத்திக்கொள்ள இந்த இரு தலைவர்களும் தன்னை பலிகடா ஆக்கிவிடக் கூடாது என்று சங்மா கருதுவதாக தோன்றுகிறது. எப்படி தன்னை காங்கிரஸ் கூட்டணி தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிச்சம் போட பாரதீய ஜனதா விரும்புகிறதோ, அப்படியே தன்னை முன்னிறுத்தி ஜெயலலிதா மற்றும் நவீன் பாட்நாயக் ஆகியோர் அரசியல் மட்டுமே செய்து அவமானப் படுத்திவிட்டனர் என்ற எண்ணவோட்டத்தை இரு மாநிலங்களிலும் உள்ள கிறிஸ்தவர் மற்றும் பழங்குடி இன மக்களிடையே தோற்றுவிப்பதும் சங்மாவின் திட்டமாக இருக்கவேண்டும். இது நிறைவேறாமல் இருக்கவேண்டுமென்றால் கடைசிவரை அவரை ஆதரிப்பதைத் தவிர இந்த இரு மாநில தலைவர்களுக்கும் வேறுவழியில்லை.

இந்த காரணத்திற்காகவோ தனது தேசிய அரசியலில் முக்கியத்தும் போன்ற காரணங்களுக்காகவோ சங்மாவிற்காக ஜெயலலிதா தீவிரமாக பிரசாரம் செய்தால், மக்களவை தேர்தலுக்குக்கும் அதற்கு பின்னரும் அவருடைய ஆதரவும் அதுபோன்றே பாட்நாயக் ஆதரவும் விரும்பும் பாரதீய ஜனதா, அதிகமாக பிணங்க முடியாது. அஇஅதிமுக உட்பட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுபெற்ற வேட்பாளரே ஜனாதிபதி ஆகும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே பாரதீய ஜனதா அத்தகைய இக்கட்டில் இருந்து தப்பமுடியும். இல்லை என்றால், தனக்கு என்று ஒரு வேட்பாளரோ, வெற்றிவாய்ப்போ இல்லாத பாரதீய ஜனதா, ஜெயலலிதா இனம் கண்ட ஒரு வேட்பாளரை ஆதரிப்பதை தவிர வேறுவழியில்லை என்ற சூழல் உருவாகலாம். அந்த சூழ்நிலையில் சங்மா - ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அதன் பின்னாலுள்ள அரசியல் வெற்றி ஜெயலலிதாவிற்கே.

ஏன், ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை விட்டுக் கொடுக்கும் சூழல் தோன்றினால், அதனையே காரணம் காட்டி, அவரை அடுத்துவரும் துணை ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சி வேட்பாளராகவோ அல்லது பாரதீய ஜனதா அணி வேட்பாளராகவோ ஜெயலலிதா முன்னிறுத்த விரும்பலாம். அதுகுறித்து சங்மா பிரச்சினை எழுப்பாதவரையில், அதிலும் அரசியல் வெற்றி ஜெயலலிதாவிற்கே! மக்களவை தேர்தலுக்கு பின்னர் தொங்கு நாடாளுமன்றம் அமையும் பட்சத்தில் காங்கிரஸ் ஆதரவுவேட்பாளர் ஜனாதிபதியானால், அவர் பிரதமர் தேர்வு உட்பட்ட பிரச்சினைகளில் காங்கிரஸ் ஆதரவு நிலையே எடுப்பார். மாறாக, ஜெயலலிதா சுட்டிக்காட்டிய வேட்பாளர் தேர்வுபெறுவாரேயானால், தன்னை பாரதீய ஜனதா கூட்டணி ஆதரித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்ற உண்மைக்கும் அப்பாற்பட்டு, அவர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம். அல்லது, அதுதான் அஇஅதிமுக-வின் கணக்காக இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X