2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிறந்த நாள் கொண்டாட்டமும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி சொன்ன செய்தியும்

A.P.Mathan   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மூன்றாம் திகதி தடல்புடலாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவவி சோனியா காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். தி.மு.க. முன்னணித் தலைவர்களும் வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் 2-ஜி அலைக்கற்றையில் சிக்கி பிணையில் வெளியே வந்து டெல்லியில் தங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வாழ்த்துச் சொல்ல வரமுடியவில்லை. "நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழ்நாட்டுக்குப் போகக் கூடாது" என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி போட்ட உத்தரவின் விளைவால் அவரால் சென்னைக்கு வர முடியவில்லை. ஆனால் வழக்கமாக வருபவர் என்றாலும், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துச் சொன்னது சற்று வித்தியாசமாக இருந்தது.

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் 89 வயதைக் குறிக்கும் வகையில் திருமணத்திற்கு சீர் வரிசை செய்வது போல் 89 வகையான பொருள்களுடன் வந்து கலக்கினார்கள் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. தொண்டர்கள். வாழை மரம் கட்டி கிட்டத்தட்ட ஒரு திருமண விழா போலவே நடந்தது பிறந்தநாள் கொண்டாட்டம். மாலையில் சென்னையில் உள்ள கே.கே. நகரில் பிறந்த நாள் விளக்கப் பொதுக்கூட்டம். அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி மாநில அரசு மீதும் விமர்சனம், மத்திய அரசுக்கும், தி.மு.க.தொண்டர்களுக்கும் எச்சரிக்கை, பிறந்த நாள் சபதம் என்று ஆவேசமான உரை நிகழ்த்தினார். "மாநிலத்தில் 18,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி போட்டு விட்டு பெற்றோல் விலை உயர்த்தும் மத்திய அரசை எதிர்த்து கொடிப்பிடிக்கிறோம் என்றால் என்ன அர்த்தம். யாரும் சிரிக்க மாட்டார்களா? யாரும் இது என்ன கேவலம் என்று சொல்லமாட்டார்களா? இந்த அம்மையார் (முதல்வர் ஜெயலலிதா) இவ்வளவு வரியையும், கட்டணத்தையும் நம் தலையில் சுமத்தி விட்டு  "பெற்றோலுக்கு மத்திய சர்க்கார் வரி போட்டு விட்டது என்று சொன்னவுடன் கொடிபிடித்து கிளம்பிவிட்டார்களே, என்ன நியாயம் இது" என்று மாநில அரசை சாடினார்.

அடுத்து மத்திய அரசின் பக்கம் திரும்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, "கூட்டணியிலே இருக்கிறோம் என்பதற்காக தமிழ்நாட்டிற்கு விரோதமாக எது நடந்தாலும் ஆதரிப்போம், நாங்கள் மறுப்பே சொல்ல மாட்டோம் என்கிற அளவிற்கு கொள்கையற்ற கட்சியல்ல தி.மு.கழகம். இது ஒரு கொள்கை கோபுரம்... ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு மக்களுக்கு விரோதமான காரியங்களைச் செய்தால் அதை நாங்கள் என்றைக்கும் பொறுத்துக் கொண்டது இல்லை. அந்த நேரத்திலே எங்களுடைய கொள்கைகளைச் சொல்லி விட்டு வெளியே வருவோம்" என்றும், "பாரதீய ஜனதா கட்சி வாஜ்பாய் தலைமையிலே அரசு அமைத்தது. அந்த அரசு மத சார்புள்ள அரசாக செயல்படத் தொடங்கியதும், இஸ்லாமியர்களுக்கு எதிராக சில காரியங்களிலே ஈடுபட்டதும், தி.மு.கழகம் "சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக நீங்கள் நடத்துகின்ற இந்த காரியங்களை நாங்கள் ஆதரிக்க முடியாது என்று சொல்லி- வாஜ்பாய் தலை சிறந்த மனிதர். பி.ஜே.பி. கட்சியிலே உள்ள யோக்கியர்களிலே ஒருவர் என்று சொன்னால் அது வாஜ்பாய்தான். அந்த வாஜ்பாயினுடைய தலைமையை நாங்கள் ஏற்கமுடியாது என்று அன்றைக்குச் சொல்லிவிட்டு வெளியேறினோம்... எனவே உடன்பாடு கொண்டு விட்டோம் என்பதற்காக நாங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டோம்" என்று மத்திய அரசை, அதை வழி நடத்தும் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரடியாகவே தன் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வாயிலாக எச்சரித்தார் தி.மு.க. தலைவர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே, உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, "என் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும் அண்ணாவும் நமக்காக உச்சரித்தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல், எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்து தெளிவு பெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப்பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி, கட்டுப்பாடு போற்றி களங்களில் நாம் காணும் வெற்றிக்குப் பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும். ஒற்றுமை உரமாகட்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், தொண்டர்களுக்கு பிறந்த நாள் செய்தியாக "தேர்தல் வெற்றி என்பது வரும் போகும். இன்றைக்கு இருக்கும், நாளைக்கு இல்லாமல் போய் விடும். ஆனால் நிலையாக இருக்கக்கூடியது கழகம் (தி.மு.க) ஒன்றுதான். கழகம் ஒன்றுதான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது" என்றார் தி.மு.க. தலைவர். தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கடந்த பத்து தினங்களுக்குள் மூன்று நான்கு முறை இப்படி சுட்டிக்காட்டி பேசிவிட்டார் தி.மு.க.தலைவர் கருணாநிதி. அதற்கு முக்கியக்காரணம் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே நடைபெறும் கட்சியுத்தம். இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை "யார் மீதும் நடவடிக்கை இல்லை. ஒழுங்காக இருங்கள்" என்று சில தினங்களுக்கு முன்பு முடித்து வைத்தாலும், பனிப்போர் பல மாவட்டங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பிரச்சினைக்குரிய மதுரை மாவட்டத்தில் அந்த பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. சில காலமாக தி.மு.க. தலைவர் எழுதும் கடிதங்களில் "கண்ணியம்" "கட்டுப்பாடு" "ஒற்றுமை" என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இதை தன் பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும், பிறந்த நாளை வெளியிடப்பட்ட முரசொலி மலரில் வாழ்த்துக் கவிதை எழுதிய கனிமொழி எம்.பி. "உங்கள் கனவுகள் மெய்ப்பட வீண்பழிகள், கழுமரங்கள், காராகிரகங்கள் எதையும் ஏற்பேன்" என்று தி.மு.க. தலைவருக்காகவும், தி.மு.க.வுக்காகவுமே 2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் சிறைக்குச் சென்றேன் என்பதை கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளதை பலரும் படிக்க மறக்கவில்லை. தி.மு.க.விற்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை அதிகாரபூர்வமாக தி.மு.க. அறிவிக்காத வரை இந்த "ஸ்டாலின்-அழகிரி-கனிமொழி" பனிப்போர் கட்சிக்குள் கொடிகட்டிப் பறந்து கொண்டே இருக்கும்!

89 வயது பிறந்த நாள் சபதமாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையிலெடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி - அதே பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், "இலங்கையிலே தமிழன் இருக்கிறான். ஆனால் அவன் தன்மானமுள்ளவனாக இன்றைய தினம் காட்டப்படவில்லை. அவன் சுதந்திர மனிதனாக இல்லை. அவனை சம அந்தஸ்து உள்ளவனாக அங்கு இருக்கின்ற இலங்கை அரசு சிங்களவர்களோடு வைத்து மதிப்பிடவில்லை. அந்த மதிப்பீடு தேவை என்பதற்காக சிங்களவர்கள் வேறு, தமிழர்கள் வேறு. அந்த இனம் வேறு, இந்த இனம் வேறு, அது உயர்ந்த இனம், இது தாழ்ந்த இனம், அவர்களுக்குள்ள உரிமையெல்லாம் தமிழர்களுக்கு கிடையாது என்று சொல்லுகின்ற அந்த சர்வாதிகாரத்தை, எதேச்சதிகாரத்தை, ஏற்றதாழ்வை அடித்து வீழ்த்த வேண்டும் என்பதற்காக டெசோ இயக்கத்தினுடைய மாநாட்டை மீண்டும் நாம் தமிழகத்திலே நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். என்னுடைய பிறந்த நாள் செய்தியாக நான் சொல்லுகிறேன். விரைவில் விழுப்புரத்தில் நம்முடைய திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய இந்த இயக்கங்கள் எல்லாம் சேர்ந்து- இலங்கையிலே தமிழர்கள் மீட்சி- ஈழத்தமிழர்களுடைய மீட்சி என்பதற்காக நாம் நடத்தவிருக்கின்ற அந்த அருமையான மாநாடு வெகு விரைவிலே ஈழத்திலே ஒரு தனி நாடாக- தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு பயன்பட வேண்டும்" என்று உணர்ச்சி பூர்வமாக உரையாற்றினார். இந்தப் பேச்சின் போது கூட்டத்தில் பலத்த கைதட்டல்!

மத்திய அரசு, மாநில அரசு, ஈழத்தமிழர், தி.மு.க.விற்குள் உள்ள பனிப்போர்- இப்படி நான்கு முக்கிய விடயங்களில் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, அடுத்து நடக்கப் போகும் டெசோ மாநாட்டுப் பணிகளில் ஆர்வத்துடன் களமிறங்குகிறார். ஏனென்றால் அவருக்கு கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஜோசப் ஹார்ப்பர், கனடாவில் உள்ள ஒன்டோரியா மாநில முதல்வர் டால்டன் மெக்கைண்டி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னது அந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார்கள் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள். எது எப்படியோ, காங்கிரஸ் தன்னுடன் சேர்ந்து பயணிக்க முடியாத "தனி ஈழம்" என்ற கோரிக்கையை முன்னெடுத்து போராட்டப் பாதையில் இறங்கியுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதுவே "என் வழி அடுத்த தேர்தலுக்கு தனி வழி" என்று காங்கிரஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுவது போலவே அமைந்திருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • IBNUABOO Sunday, 10 June 2012 05:23 AM

    உண்மையில் கலைஞர் முக.அவர்கள் சாதாரணமான மனிதர் அல்ல .அவர் ஆயுள் அதிகரித்தாலும் இந்த 89 இலும் போர்ர்குனம், செயல்திரன் தலைமைத்துவ கம்பீரம் இன்னும் உயிர் துடிப்புடன் திகழ்கிறதே. அவர் ஒருவர்தான் இந்த வயதான காலதில் வாலிபனாக வாழ்ந்து காட்டுபவர். இலக்கிய வாதிகளுக்கு பெருமை சேர்த்தவர். ஏன் தெரியுமா? இந்திய மாபெரும் அரசியல் வாதிகளில் இன்று கலை இலக்கிய வித்தகனாய் திகழ்பவர் கலைஞர் மட்டும்தான், அவரது நல்லவற்ரை போற்றுவோம். இப்பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X