2025 மே 19, திங்கட்கிழமை

பிரணாப் வருகையும் சிறை நிரப்பும் போராட்டமும்; அனல் பறக்கும் குடியரசு தலைவர் தேர்தல்

A.P.Mathan   / 2012 ஜூன் 25 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருகின்ற 30ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிறந்த மண்ணுக்குச் சென்று விட்டு தமிழகம் வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தி.மு.க. தலைமை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கு முன்பு பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக முன்மொழிந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்ட போட்டோவும் அக்கட்சியின் அதிகார பூர்வமான பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலுவும் ஏ.கே.எஸ்.விஜயனும் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலை நோக்கி தி.மு.க. இப்படி விறுவிறுப்பான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், மாநிலத்தில் அ.தி.மு.க. அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் என்றும் திடீரென்று அறிவித்துள்ளது.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் - குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்து மதுரை மாநகர செயலாளராக இருக்கும் தளபதி அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் முடிந்து போனது என்று அக்கட்சி தலைமை கருதிக் கொண்டிருந்த நேரத்தில் இப்படி அடுத்தடுத்து மீண்டும் நில அபகரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் குழப்பத்துக்குள்ளானது தி.மு.க. தலைமை. அதனால் உடனே அக்கட்சியின் அவசரச் செயற்குழு கூட்டத்தை கடந்த 22ஆம் திகதி சென்னையில் நடத்தியது. அக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், "ஜூலை நான்கு அன்று அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்" என்று அறிவித்துள்ள தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, விவகாரமாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் ஜூலை நான்கு அன்று நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள் அனைவருமே கலந்து கொள்ள நேரிடும். சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பொலிஸ் அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறி. பெரும்பாலும் அப்படியொரு போராட்டத்திற்கு வழக்கமாக அனுமதி கொடுப்பதில்லை. இந்நிலையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் தி.மு.கழகத்தின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் போன்றோரும் கைதாக நேரிடும். பொதுவாக ஒருவரை கைது செய்தால் நீதிமன்றம் அவருக்கு பதினைந்து நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடும். அதன்படி பார்த்தால் ஜூலை 4ஆம் திகதி கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 18ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் இருக்கும். ஜூலை 19ஆம் திகதி குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முக்கியமான குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கும் நேரத்தில் இப்படியொரு "க்ளோஸ் ஃபைட்"டை அ.தி.மு.க. அரசுடன் தி.மு.க. தலைமை உருவாக்கியுள்ளது பல அரசியல் தலைவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க. செயற்குழு முடிந்தவுடன் அளித்த பத்திரிக்கையாளர் பேட்டியில் இது பற்றியும் கேள்வி எழுந்தது. சிறைக்குப் போய்விட்டால் வாக்களிக்க முடியுமா என்று கேட்ட கேள்விக்கு "சிறையிலிருந்தாலும் வாக்களிக்கக்கூடிய அனுமதி அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதே நேரத்தில் வருகின்ற ஓகஸ்ட் 5ஆம் திகதி சென்னையிலிருந்து 160 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை முன் வைத்து "டெசோ" மாநாட்டை கூட்டுகிறது தி.மு.க. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். டெசோவில் இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெசோ மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 5ஆம் திகதிதான் இந்த மாநாடு நடக்கப் போகிறது என்றாலும், சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்த தி.மு.க. செயற்குழுவில் பேசிய அக்கட்சி தலைவர் கருணாநிதி, "குறிப்பிட்ட 5ஆம் திகதி டெசோ மாநாடு நடைபெறும் என்றாலும், நாம் நடத்தும் போராட்டத்தின் (ஜூலை 4 சிறை நிரப்பும் போராட்டம்) விளைவுகள் வேறு மாதிரியாக இருந்தால், அந்த மாநாட்டினுடைய திகதி சற்று தள்ளி வைக்கப்படும்" என்று கூறியிருக்கிறார். ஜூலை 19ஆம் திகதி நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் சிறையில் இருந்தாலும் தி.மு.க.வினர் வாக்களிப்பார்கள் என்று கூறியிருக்கும் தி.மு.க. தலைமை, ஓகஸ்ட் 5ஆம் திகதி நடக்கும் டெசோ மாநாடு இந்த போராட்டத்தால் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் தி.மு.க.வினரின் போராட்டம் வேறு மாதிரியாக இருந்தால் குடியரசுத் தலைவர் தேர்தலும் பரபரப்பாகிவிடும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

நம்மிடம் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர், "இதுவரை பல வழக்குகளில் எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்கள். தன் கூட்டணிக் கட்சி இப்படி நடவடிக்கைகளை சந்திக்கும் போது மத்திய அரசோ, அல்லது மத்திய அரசின் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களோ பெரிதாக கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. இது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை ஜெயலலிதா பல்வேறு விடயங்களில் சாடிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பெரிய அளவில் கண்டனக் குரல் எழுப்பவில்லை. ஆட்சியிலிருக்கும் வரை தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் மீதும் தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி "இரட்டைக் குதிரை சவாரி" செய்யவே விரும்புவதாக எங்கள் தலைமை கருதுகிறது. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மீது ஒவ்வொரு விடயத்திலும் ஜெயலலிதா தாக்கி அறிக்கை விடுகிறார். ஆனால் மத்திய அரசோ அது பற்றி கண்டு கொள்வதில்லை. அப்படியே ஏதாவது அறிக்கை விட்டாலும், பூசி மெழுகியே அறிக்கை விடுகிறது. அதனால்தான் நாங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக காத்திராமல், எங்கள் கட்சியினர் பாதிக்கப்படுவதை தடுக்க இப்படியொரு போராட்டத்தை உடனடியாக அறிவித்திருக்கிறோம். நாங்கள் அவதிப்படும் போது, குடியரசுத் தலைவர் தேர்தல் முடியட்டும் என்றெல்லாம் எப்படி நாங்கள் காத்திருக்க முடியும்" என்றார் ஆவேசமாக.

இந்த போராட்டத்தில் தி.மு.க. தலைமை கருதுவது போல் "விளைவுகள் வேறுமாதிரியாக இருந்தால்" தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம். அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் தேர்தல் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகும். இது வாக்கெடுப்பை பாதிக்காதா என்று தி.மு.க.வின் எம்.பி. ஒருவரிடம் கேட்டதற்கு அவரோ, "தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிக்க வருவார்களா, மாட்டார்களா என்பது பற்றி நாங்கள் எப்படி கவலைப்பட முடியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சிதான் கவலைப்பட வேண்டும். எங்கள் மத்திய அமைச்சர்களை 2001இல் அ.தி.மு.க. அரசு கைது செய்த போது அப்போதிருந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, "மத்திய அமைச்சர்களை விடுதலை செய்யுங்கள்" என்று அப்போது இருந்த இதே அ.தி.மு.க. அரசுக்கு உத்தரவிட்டது. அதுபோல் இப்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் நடவடிக்கை எடுக்கட்டும்" என்றார் கூலாக. ஆக, தி.மு.க.வின் சிறை நிரப்பும் போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. அதுவும் பிரணாப் முகர்ஜி தமிழகத்திற்கு வரும் நிலையில் ஒரு பக்கம் தி.மு.க. இப்படியொரு போராட்டத்தை அறிவித்துள்ளது. இன்னொரு புறம், தங்கள் எம்.எல்.ஏ.க்கள் "குரெஸ் வோட்டிங்" செய்து விடப் போகிறார்கள் என்ற அச்சத்தின் விளைவாக குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் உள்ள தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இப்படி தனித்தனி அஜெண்டாக்களுடன் களத்தில் நிற்பது குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை டென்ஷனைக் கொடுத்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X