2025 மே 19, திங்கட்கிழமை

முதல்வர் ஜெயலலிதா - தி.மு.க. தலைவர் கருணாநி ரகசிய ஒப்பந்தம்?

A.P.Mathan   / 2012 ஜூலை 10 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசியல் களம் ஜூலை நான்கிற்கு பிறகு சூடுபிடித்துள்ளது. தி.மு.க.வினர் நடத்திய பிரமாண்டமான சிறை நிரப்பும் போராட்டத்தால் வாக்காளர்கள் மத்தியில் உள்ள எதிர்க்கட்சி தி.மு.க.வே என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவே ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க.வுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பதிவு செய்யப்படும் நிலஅபகரிப்பு வழக்குகள், முன்னாள் அமைச்சர்கள் திடீர் திடீரென்று கைது செய்யப்படுவது போன்ற விடயங்களை முன்னிறுத்தியே தி.மு.க. போராட்டம் நடத்தியது. அக்கட்சியின் செயற்குழு தீர்மானத்தில் மக்கள் பிரச்சினைகளும் போராட்டத்திற்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தாலும், முன்னாள் அமைச்சர்களின் கைதே பிரதானமாக பிரசாரம் செய்யப்பட்டது.

ஆங்காங்கு உள்ள மாவட்டச் செயலாளர்கள் நாளை நமக்கும் இந்த கைது நடவடிக்கை வரலாம் என்ற அச்சத்தில் அணி வகுத்து போராட்டத்திற்கு பங்கேற்றார்கள். குறிப்பாக விரைவில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் வரவிருக்கின்ற நேரத்தில் இப்போராட்டம் அக்கட்சியினருக்கு வெற்றிப் போராட்டமாக அமைந்தது. காரணம், "போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத்தான் எதிர்காலத்தில் பதவிகள் கிடைக்கும்" என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததேயாகும். சுமார் 2.31 லட்சம் பேர் கைது என்று தி.மு.க. தலைமை அறிவித்தாலும், தமிழக காவல்துறை கைது எண்ணிக்கையை 96 ஆயிரத்துக்குள்ளேயே காட்டியது. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அவ்வளவு பேரை ஒரே நேரத்தில் சிறையில் அடைக்க முடியாது. ஏனென்றால் சிறைச்சாலைகளில் அடைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை சுமார் 23,000 மட்டுமே. ஆகவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்ட அன்றே விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்த தீவிர போராட்டம், கைது எல்லாம் தி.மு.க.விற்கு பிரதான எதிர்கட்சி என்ற முத்திரையை கொடுத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. அங்கு போட்டியிட்ட தே.மு.தி.க. கட்டுத்தொகையை வாங்கியது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அதிலும் தி.மு.க.வுக்கு "இனி தே.மு.தி.க.தான் அ.தி.மு.க.வை எதிர்கொள்ளும் சக்தி படைத்த கட்சியோ" என்ற சிந்தனையை வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கி விடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. தி.மு.க.வுக்கும்- அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் தமிழக அரசியல் கடந்த 35 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் எதிர்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்து வந்துள்ளன. ஆனால் தி.மு.க. இருமுறை எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடியாத வகையில் தோல்வியை சந்தித்துள்ளது. அது 1991 சட்டமன்ற தேர்தல். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரம் அது. அதேபோல் 2011 சட்டமன்ற தேர்தல். 2-ஜி ஊழல் புயலிலும், குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டியிலும் தி.மு.க. சிக்கி திணறிய தேர்தல் அது. இதில் 1991இல் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்திற்கு வந்தது. 2011இல் தே.மு.தி.க. எதிர்கட்சி அந்தஸ்தை சட்டமன்றத்தில் பெற்றது.

இதேமாதிரி அ.தி.மு.க. ஒரேயொருமுறை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க முடியாமல் போனது. அது 1996 சட்டமன்ற தேர்தல். பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நேரத்தில் அ.தி.மு.க. சந்தித்த தேர்தல் அது. அப்போது புதிதாக காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (மூப்பனார் தலைமையிலானது) எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுக்குள்தான் தமிழக அரசியல் என்று உருவாக்கிக் கொண்ட நினைப்பை மாற்றிக் காட்டிய தேர்தல்கள் இவை. அதனால் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸை பின்னுக்குத் தள்ள 1996இல் ஆட்சிக்கு வந்தவுடன் இப்போதைய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் போன்றவர்களை கைது செய்து அ.தி.மு.க.வை முன்னிலைப்படுத்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அதேமாதிரி இப்போது தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களை நிலஅபகரிப்பு புகாரில் கைது செய்து தி.மு.க.வை முன்னிலைப் படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கைது பிறகு சற்று ஓய்வு எடுத்தது. ஆனால் புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் தே.மு.தி.க. கட்டுத்தொகையை வாங்கும் அளவிற்கு வாக்குகளை வாங்கிய பிறகு இந்த கைது நடவடிக்கைகள் மேலும் சூடுபிடித்துள்ளது. இந்த அரசியலை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை உடனே சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

ஆகவே தே.மு.தி.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்று இருந்த அரசியல் மீண்டும் தி.மு.க. பக்கமாக திரும்பியிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள். அக்கட்சிகளின் தலைமையில்தான் மற்ற கட்சிகளான தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இரு கம்யூனிஸ்டுகள் போன்றவை அணி சேர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை புதுக்கோட்டை இடைத் தேர்தலும், அதைத்தொடர்ந்து தி.மு.க. நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் நிரூபித்துக் காட்டியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. மிக விரைவில் ஒரு பெரும் மாநாட்டை நடத்தலாம் என்ற அக்கட்சியில் உள்ள சீனியர் அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகிறார்கள். "எங்கள் கட்சியின் சார்பில் மாநாடு நடத்தி ரொம்ப வருடங்களாகிறது. எங்கள் தலைவியின் தேர்தல் பிரசார கூட்டங்கள் மாநாடுகள் போல் இருக்கும். ஆனால் தனியாக எந்தவொரு மாநாடும் சமீப காலத்தில் நடத்தப்படவில்லை. தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி தங்கள் பலத்தை காட்டியிருப்பதால் எங்கள் தலைமையும் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்று நாங்கள் எல்லாம் தலைமையை வற்புறுத்துவோம். ஏனென்றால் யார் இரண்டாவது கட்சியாக வந்தாலும், நாங்கள்தான் தமிழகத்தில் முதல் கட்சி. அதில் சந்தேகமில்லை" என்றார். தி.மு.க. பிரதான எதிர்கட்சியாக முன்னிலைப்படுவதால், அ.தி.மு.க.வும் ஜரூராக களத்தில் இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் அரசு நிர்வாகம் செம்மையாக நடக்கிறது என்ற இமேஜ் கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1006 இலவசத் திருமணங்களை இந்து அறநிலையத்துறை சார்பில் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார். அதில் குளறுபடி செய்த அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார் ஐ.ஏ.எஸ். அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் துறையில் முறைகேடுகள் செய்த அதிகாரிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி சம்பத் இடைக்கால பணி நீக்கமே செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் தொகுதிகளுக்குச் சென்று மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர் என்பது கோட்டை வட்டாரத்து தகவல். அது தவிர உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது என்ற மாநில உளவுத்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து அந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்காணிக்குமாறு உளவுத்துறை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். வரும் வாரங்களில் சில உள்ளாட்சி பிரநிதிகள் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. இது தவிர கொடநாட்டில் தங்கியிருக்கும் முதல்வர் தினமும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆணைகளை வெளியிட்டு வருகிறார். "எங்களுக்கு மாற்று தேவையில்லை. நாங்களே சிறப்பான நிர்வாகத்தைக் கொடுக்கிறோம்" என்ற இமேஜை இப்போதிலிருந்தே கொடுத்தால்தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பலனளிக்கும் என்பது அ.தி.மு.க. தலைமையின் கணக்கு.

வெளிப்படையாக ஒருவருக்கொருவர் அறிக்கைப் போர் நடத்தினாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் "நம் இரு கட்சிகளுக்குள்தான் தமிழக அரசியல் களம் அமைய வேண்டும்" என்ற ரகசிய ஒப்பந்தத்தை மையப்படுத்தியே கடந்த 23 வருடங்களாக அரசியல் செய்து வருகிறார்கள். தி.மு.க. சமீபத்தில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வும் தன்னை “நம்பர் ஒன்“ கட்சி என்ற நிலைநிறுத்திக் கொள்ள அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் இறங்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே விரைவில் அக்கட்சி ஒரு மாநாட்டை நடத்தக் கூடும் என்ற பேச்சு அ.தி.மு.க. முக்கியத் தலைவர்கள் மத்தியில் பரபரப்பாகியிருக்கிறது. அதே சமயம், "இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று நாங்கள்" என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறிவந்த விஜயகாந்த், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்கள் தி.மு.க- அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்குள் நடக்கும் போட்டி அரசியலைப் பார்த்து பிரமித்து நிற்கிறார்கள்- அடுத்த மூவ் எப்படிச் செய்வது என்று தெரியாத வகையில்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X