2025 மே 19, திங்கட்கிழமை

விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களுக்கு விடுதலை?

A.P.Mathan   / 2012 ஜூலை 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வவுனியா சம்பவத்திற்கு பின், சிறையில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டணித் தலைமை இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது. இவ்வாறு உரிமைக்குரல் எழுப்பும் போது அதோடு ஒட்டிய கடமை குறித்து யாருமே பேசாதது விந்தைக்குரியது.

இதுபோன்ற நிலைப்பாடுகளால் தான், கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் அதிகமாகவே அவதிப்பட வேண்டியிருந்தது. தற்போதைய பிரச்சினை அடுத்தகட்டத்தை அடையும் முன்னரே, தமிழ் அரசியல் தலைமையும் சமுதாய அமைப்புகளும் இதுபோன்ற இன்னபிற பிரச்சினைகளிலும் அனைத்து சமூகத்தவர்களும் சர்வதேச சமூகமும் கூட ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாடுகளை அலசி, ஆராய்ந்து அவற்றுக்கு செயல்வடிவமும் கொடுக்கவேண்டும்.

'இனப் போர்' முடிந்த காலகட்டம் தொடங்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சமூகமும் கூட்டமைப்பு தலைமையும் முன்வைத்து வந்துள்ளன. அரசுடனான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த பிரச்சினையும் அலசி, ஆராயப்பட்டது.

என்றாலும் ஒன்றல்ல, இரண்டு அல்லது மூன்று முறைகள் சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளின் விவரங்களை வெளியிடுவதற்கு நாள் குறித்த அரசு தனது வார்த்தையை காப்பாற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், கொடுத்த கெடுவை காப்பாற்ற முடியாமல் போனது குறித்து கூட்டமைப்பு மூலமாகவோ வேறுவிதமாகவோ காரணங்களை விளக்கவில்லை. அரசின் ஏனோ – தானோ என்ற போக்கு கூட தற்போதைய வவுனியா சிறைச்சாலை சம்பவத்துக்கான காரணங்களில் ஒன்று என்று கூட கூறலாம்.

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் என்று சந்தேகப்படப்படும் தமிழ் இளைஞர்கள் - பாதுகாப்பு படையினரால் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் நிமலரூபன் என்ற தமிழர் பலமாக தாக்கப்பட்டதால் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர் இறந்துள்ளதை ஏற்றுக்கொண்டாலும் அதற்கான காரணத்தை அரசு மறுத்துள்ளது. நிமலரூபன் திடீர் மார்பு வலியால் இறந்துள்ளதாக அரசு கூறியுள்ளது. அதற்கான மருத்துவ அத்தாட்சி உள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல... நிமலரூபனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், அவரது உடலைப் பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் யாருமே முன்வரவில்லை என்றும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.

இதில், குறிப்பாக கடைசியாக கூறப்பட்டஅரசு தரப்பின் நிலைப்பாடு நம்பும்படியாக இல்லை. பத்திரிகை செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, நிமலரூபனின் தாய் மற்றும் சகோதரி தலைநகர் கொழும்பில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து முறையீடு செய்துள்ளனர். கூட்டமைப்பு உட்பட்ட அரசியல் தலைமை இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினை ஆக்கும் வரையில் நிமலரூபனின் குடும்பத்தினர், இராணுவத்திற்கு பயந்து அவரது உடலை பெற்றுக்கொள்ள முன்வராதிருந்திருக்கலாம். இது குறித்த உண்மை நிலைமையை கூட்டமைப்பு கூறியுள்ளதுபோல், பாரபட்சமற்ற விசாரணையால் மட்டுமே வெளிக்கொணர முடியும். அதில் தான் சிக்கல் உள்ளது என்று கருத இடம் இருக்கிறது.

வவுனியா சிறையில் அரங்கேறியுள்ளதாக ஊடகங்கள் நேரம் தவறாது வெளியிட்ட செய்திகள் கூறும் விடயம் இரண்டு. ஒன்று, சிறையில் இருந்த தமிழ் கைதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். இரண்டாவது, அதற்கு முன்பாக ஒருசில நாள் நிகழ்வுகள். பத்திரிகை செய்திகளின்படி தமிழ் கைதிகள் மூன்று சிறைப் பாதுகாவலர்களை சிறையெடுத்து, அவர்களை விடுதலை செய்யாதிருந்தனர். இந்த செய்தியை, இன்றளவும் தமிழ் கைதிகளின் சார்பிலோ, அல்லது தமிழ் அரசியல் தலைமைகளின் சார்பிலோ மறுக்கப்படவில்லை. அந்த செய்தி உண்மை என்றால், அரசு அலுவலர்களை, அதுவும் சிறைப் பாதுகாவலர்களை ஒருசில சிறைக்கைதிகளே சிறையெடுப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பது அவர்கள் அனைவருமே அறிந்த ஒன்று. ஆனால், இன்று சிறைக் கைதிகளுக்காக முறையிடும் அரசியல் கட்சிகள் ஏனோ, அவர்கள் சட்டத்திற்கு எதிராக செயல்படும் போது அதுகுறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்க தவறிவிட்டனர். அதனை கண்டனம் செய்யவும் தவறிவிட்டனர்.

இலங்கை என்று அல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே இனம், மொழி, ஜாதி, மதம் என்பன போன்ற அனைத்து அரசியல் பிரச்சினைகளுக்கும் போராட்டங்களுக்கும் அப்பாற்சென்றும், இது கடுமையாக தண்டிக்கப்படும் கொடுஞ்செயல். அதுபோன்றே, இது போன்ற சிறைக் கலவரங்களை ஒடுக்க பல நாடுகளிலும் கடுமையான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வந்துள்ளன. அதுசரியான முறை என்பதல்ல வாதம். அதுவே வழக்கமான முறை என்பதே உண்மை. அதுவும் சிறை அலுவலர்களையோ, பிற கைதிகளையோ தாக்கினால் அதனை முரட்டுத்தனமாகவே சிறை நிர்வாகம் கையாளும் என்ற எதிர்பார்ப்பும் நிறையவே உள்ளது. ஏன், 'விருமாண்டி' போன்ற தமிழ் திரைப் படங்களை பார்த்துவந்துள்ள குழந்தைகளுக்கும் கூட இது புரியும். இது ஏன் அந்த சிறைக் கைதிகளுக்கு புரியவில்லை. அவர்கள் தான் தங்களது பொறுமையின் எல்லைக்கே போய்விட்டார்கள் என்றால், அவர்களுக்காக தற்போது வாதாடும் அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஏன் அவர்களுக்கு சரியான அறிவுரை வழங்கவில்லை?

வவுனியா சிறைச் சம்பவங்கள் அனைத்தையுமே, இனப் பிரச்சினைக்கு அப்பாற்பட்ட குற்ற சம்பவங்களாகவே பார்க்கப்படவேண்டும். எப்படி சிறைக் காவலர்கள் செய்ததாக கூறப்படும் அதிரடி நடவடிக்கைகள் குற்றமோ, அதுபோன்றே கைதிகள் - மூன்று பாதுகாவலர்களை சிறை எடுத்ததும் குற்றம். இன்னும் சொல்லப்போனால், 'காவலர் சிறையெடுப்பு' சம்பவம் நிகழ்ததனாலேயே அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் தமிழர் தலைமைகள் கூறியதை வைத்துப் பார்க்கும் போது, பலமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இனப் பிரச்சினை எங்கு வந்தது என்று தெரியவில்லை. அல்லாமல், கைதிகளின் விடுதலைப் புலிகளோடான கடந்தகாலம், அவர்கள் மீதான தாக்குதலுக்கு இனச் சாயம் கொடுக்குமேயானால், அதுபோன்றே, அவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் பாதுகாவலர்களின் சிங்கள - பௌத்த பின்புலமும் அந்த சிறைச் சம்பவங்கள் அனைத்திற்குமே இனச் சாயத்தை வாரிப்பூசிவிட்டுள்ளது. எது எப்படியோ, இதுவே உண்மை என்றே தோன்றுகிறது. மற்றபடி, இது குறித்து நடுநிலைமையான விசாரணை நடந்தால் மட்டுமே இரு தரப்பாரின் நிலைப்பாட்டிலும் உள்ள உண்மையையும் உண்மையின்மையையும் வெளிக் கொண்டுவரும்.

ஜெனிவா வாக்களிப்புக்குப்பின் நாட்டிலுள்ள தமிழர் அமைப்புகள் அரசை எதிர்த்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. ஆனால், இதுவே கடந்த தசாப்தங்களில் நடந்ததுபோல், மீண்டும் போராளிக் குழுக்கள் உருவாகும் முதல் கட்டமாக அமைந்துவிடக்கூடாது. அல்லது அதுதான் அரசு மற்றும் சிங்கள பேரினவாதிகளின் பயம், சந்தேகம் அல்லது பிரசார யுக்தியாக அமையும். அதுபோன்றே, அரசையும் சிங்கள பேரினவாதிகளையும் காரணம் காட்டி அரசியல் செய்வதும் தமிழ் மக்களுக்கு சிறந்த அரசியல் தீர்வு கிடைப்பதற்கு உதவாது.

இதனால் எல்லாம், விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் என்று சந்தேகப்படுபவர்களை விசாரணை இன்றி ஆண்டாண்டுகளுக்கும் சிறையில் வைத்திருக்கவேண்டும் என்றல்ல பொருள். இன்னும் சொல்லப் போனால், இவர்கள் மட்டுமல்லாது, பல்வேறுதரப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களும் விசாரணை இன்றியும் விசாரணை இழுத்தடிக்கப்பட்டும், நீதிமன்றத்தினம் முடிவு முழுமையாக தெரியப்படாமலும் ஆண்டாண்டிற்கும் சிறையில் வாடுகின்றனர். இதுவும் 'மூன்றாவது உலக' நாடுகளின் சாபக்கேடு. இலங்கையில் இந்த நிலைமை மாறுவதற்கான முதல் முயற்சியாக கூட விடுதலைபுலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் விவகாரத்தை கருதி - அரசு செயல்படலாம்.
அதேசமயம், அவர்கள் குறித்தும் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு உணர்வு குறித்தும் உண்மையிலேயே கவலைப்படுபவர்கள் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கவும் கூடாது. அவற்றிற்கு நியாயம் கற்பிக்கவும் முயலக்கூடாது. இதுபோன்ற தவறுகளும் கூட, தமிழ் சமதாயத்தின் இன்றைய அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதனை ஏற்றுக் கொண்டு, அதன்படி அனைவரும் செயல்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X