2025 மே 19, திங்கட்கிழமை

கொள்கைகளுக்கு இடமே இல்லாத கிழக்கு மாகாண சபை தேர்தல் களம்

Super User   / 2012 ஜூலை 23 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோன்பும் வந்து விட்டது. கிழக்கில் தேர்தலும் அத்தோடு வந்து விட்டது. இனி என்ன நடக்கப் போகிறது? கிழக்கு மாகாண முஸ்லிம்கள் நோன்பை பெயரளவில் வைத்துக் கொண்டு தேர்தலின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வார்களா? அல்லது தேர்தலினால் பயன் பெறப் போகிறவர்களை முன்பே அறிந்து தேர்தலை பெயரளவில் வைத்துக் கொண்டு நொன்புக்கு முக்கியத்துவம் அளிப்பார்களா? எல்லாம் அரசியல்வாதிகளின் கைகளில் தான் இருக்கிறது.

கிழக்குக்கு புறம்பாக தேர்தல் நடைபெறும் சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் பெறுபேறுகள் எற்கெனவே நிர்ணயிக்கப்டடுள்ளது போல் தான் தெரிகிறது. அவ்வாறு இருந்தும் பழக்க தோசமோ என்னவோ ஆளும் கட்சி அம் மாகாணங்களில் அரச வழங்களையும் அரச அதிகாரத்தையும் தேர்தலுக்காக பாவிக்கிறார்கள். இதனை தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசசார்பற்ற அமைப்புக்களும் கூறுகின்றன.

கிழக்கில் போர் முடிவடைந்த உடன் 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் போதும் ஐ.ம.சு.கூவின் வெற்றி ஆரம்பத்திலேயே நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அப்போது ஆளும் கட்சி ஊழல் மோசடி இல்லாமலேயே அந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. 

இம்முறை கிழக்கு மாகாண சபைக்கு நான்கு முக்கிய குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கினறன. அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற சில கட்சிகளும் வேட்பு மனு தாக்கல செய்திருந்த போதிலும் அவற்றை பிரதான போட்டியாளர்களாக கணக்கில் எடுக்க முடியாது. பிரதான நான்கு குழுக்களில் ஐக்கிய தேசிய கட்சியைப் பற்றி எவரும் அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய மூன்று பிரதான அணிகளாகும். அவற்றில் மு.கா. பக்கமாக சில தினங்களாக ஊடகங்களின் கவனம் திரும்பியிருந்தது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிழக்கில் தேர்தல்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் நிர்ணயகரமான சக்தியாக கருதப்படுவதே அதற்குக் காரணமாகும்.

தேர்தலுக்காக போட்டி அணிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது கொள்கை என்பது கவனத்திற் கொள்ளப்படாத விடயமாகவே தெரிகிறது. எவ்வாறு கூட்டு சேர்ந்தால் தாம் சேரும் அணி கூடுதலான ஆசனங்களை பெறும், எந்தக் கட்சியில் இருந்தால் அல்லது எந்தக் கட்சியில் சேர்ந்தால் தமக்கு கூடுதலான வாய்ப்புக்கள் இருக்கினறன என்பது மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

மு.கா. ஆளும் ஐ.ம.சு.கூவுடன் சேர்ந்த போட்டியிடுமா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுமா அல்லது தனித்து போட்டியிடுமா என்பதே கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் அலசப்பட்டு வந்த விடயமாகும். கிழக்கு மாகாண சபைக்கான தெர்தலின் போது இது தான் எல்லாவற்றையும் விட முக்கியமான விடயமாக பலர் கருதினர். ஏனெனில் மு.கா. ஐ.ம.சு.கூவுடன் சேர்ந்து போட்டியிட முடிவு செய்திருந்தால் அந்தக் கூட்டணி அதிகப்படியான ஆசனங்களை பெறுவது நிச்சயம்.

அதேவேளை மு.கா. த.தே.கூவுடன் சேர்ந்திருந்தாலும் அச்சிறுபான்மையினக் கூட்டணி அனேகமாக மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவது நிச்சயம். ஆனால், எந்த அடிப்படையில் இவ்வாறான கூட்டணிகளை அமைப்பது என்பது எவரும் முக்கியமானதாக கருதுவதாக தெரியவில்லை.

இந்த நிலையே கட்சிக் கொள்கைகள் கூட்டணி அமைப்பதில் எவ்வித பங்கும் வகிக்கவில்லை என்பதற்கு சிறந்த சான்றாகும். எல்லோரும் எண்ணிக்கை விளையாட்டுகளை ((Numbers game) ) பற்றித் தான் கவனம் செலுத்துகிறார்கள், கொள்கைகளைப் பற்றியல்ல.

ஆளும்கட்சி தேர்தல் கூட்டணி அமைப்பதற்காக மு.காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது கொள்கை சார்ந்த விடயங்களை அல்லது கிழக்கில் மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்nநுர்க்கியிருக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்ததாக எவ்வித தகவலும் இல்லை. மாறாக கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்படும் வேட்பாளர் எண்ணிக்கையே அவ்விரு கட்சிகளினதும் தலைவர்களிடையிலான பேச்சுவார்த்தைகளின் கருவாக அமைந்துள்ளன.

ஒரே அரசாங்கத்தில் இருப்பதால் இவர்களிடையே கொள்கை பிரச்சினை இல்லை என சிலர் கூறலாம். இரு கட்சிகளிடையே ஏற்கனவே கொள்கையளவில் இணக்கப்பாடு இருந்திருந்தால் வேட்பாளர் எண்ணிக்கை ஏன் பிரச்சினையாக அமைய வேண்டும்? கோள்கைக்காக எந்தக் கட்சியாவது விட்டுக் கொடுத்திருக்கலாமே.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் அமைச்சர்களே தேர்தல்களின்போது அரசாங்கத்திற்கு சவாலாக அமைவதாக இருந்தால் வாக்காளர்கள் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதா? ஆல்லது அரசாங்கம் கூறுவதை ஏற்றுக் கொள்வதா? மறுபுறத்தில் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு வாக்களிக்காது தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்கும் மு.கா. தேர்தலின் பின்னர் அதே ஐ.ம.சு.கூவுடன் மாகாண சபையில் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறது. இவை அனைத்தும் தேர்தல் விடயத்தில் கொள்கை எடுபடவில்லை என்பதனையே எடுததுக் காட்டுகிறது.

மு.கா. ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தயாராக இருந்ததாகவும், அதற்காக மு.காவின் 12 வேட்பாளர்களை ஐ.ம.சு.கூட்டணியின் வேட்பாளர்  பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஐ.ம.சு.கூ. தயாராக இருந்ததாகவும் ஆனால், பின்னர் அரசாங்கத்திலுள்ள அகில அலங்கை முஸ்லிம் காங்கிரஸினதும் தேசிய காங்கிரசினதும் நெருக்குதலின் காரணமாக மு.காவிற்கு 11 வேட்பாளர்களை மட்டுமே வழங்க முடியும் என ஐ.ம.சு.கூ. தலைமை கூறியதாகவும் இதுவே மு.கா. தனித்து போட்டியிடுவதற்கான காரணம் எனவும் கூறப்படுகிறது.

அது உண்மையாக இருந்தால் மு.காவை வெளியேறச் செய்வதன் மூலம் அவ்விரு கட்சிகளும் தாம் சேர்நதுள்ள கூட்டணியின் வெற்றி வாயப்புக்களை குறைத்துள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. அதை விட இது அவ்விரு கட்சிகளுக்கும் மு.காவுக்கும் இடையிலான உறவின் நிலைமையை (இதுவரை காலம் அதை தெரியாமல் இருந்தவர்களுக்கும்) எடுத்துக் காட்டுகிறது.

இவ்விரு கட்சிகளும் கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் மு.கா அதற்குத் தயாராக இல்லை என்றும் அண்மையில் நடைபெற்ற தொலைக் காட்சி விவாதம் ஒன்றின் போது கூறப்பட்டது. ஆனால், தேர்தல் வந்த போது அவ்விரு கட்சிகளும் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பேச்சே இல்லாமல் ஆளும் கட்சியோடு போட்டியிட இணங்கிவிட்டன. ஆனால், நடைமுறையில் மு.கா தான் இப்போது முஸ்லிம் முதலமைச்சர் பதவிக்காக போராடுகிறது.

இப்போது தேர்தல் பிரசார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கின் தேர்தல் வரலாற்றை பார்க்கும் போது இந்த முறையும் தேர்தல் பிரசாரக் களம் சாத்வீகப் போராட்டக் களமாக அமையாதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் பட்டம் பதவி என்று வரும் போது சிலருக்கு நோன்பும் பெரிய விடயம் அல்ல என்ற நிலைமை உருவாகிறது. குறிப்பாக கிழக்கில் கணக்கில் எடுக்கக்கூடிய அளவில் பலம் வாய்ந்த கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் மு.காவும் போட்டியிடும் நிலையில் ஆளும் கட்சி பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும். எனவே எப்படியோ வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தால் நிலைமை மோசமாகிவிடும். மக்கள் அர்த்தமற்ற அரசியலை உணர்ந்து விழிப்பாக இருந்தால் இந்த நிலைமையை தவிர்கலாம்.

மற்றவர்கள் பாவம் என்று நினைக்கக் கூடிய அளவிக்கு மு.காவும் நெருக்கடிகளை எதிர் நோக்கியிருக்கிறது. கிழக்கில் மக்கள் அரசாங்கத்தை விரும்பவில்லை என்று சில வாரங்களுக்கு முன்னர் தான் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திருகோணமலையில் வைத்து கூறினார். ஆனால் அவரால் அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேற முடியாது. மு.கா. வெளியேறினால் அதில் உள்ள சிலர் அரசாங்கத்திலேயே தங்கிவிடுவார்கள். மு.கா. எம்.பிக்கள் சிலர் அரசாங்கத்தோடு இணைந்து கொள்ள முயற்சித்தமையே அவர் இரண்டாவது முறையாக அரசாங்கத்தில் சேர்ந்து கொள்வதற்கும் காரணமாகியது என கூறப்பட்டது.

இப்போதும் மு.கா. தனியாக போட்டியிட முடிவு செய்தாலும் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க தமது கட்சி ஐ.ம..கூவுக்கு ஆதரவு அளிக்கும் என ஹக்கீம் கூறுகிறார். ஏனெனில், அரசாங்கத்தை, பகைத்துக் கொண்டு அதிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமையை உருவாக்கிக் கொள்ள அவரால் முடியாது.

தனித்து போட்டியிட்டு கிழக்கில் ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் மு.கா. வெற்றி பெற்றாலும் ஆட்சியை அமைப்பதும் ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதும் அக்கட்சிக்கு இலேசான விடயமாக இருக்காது. ஏனெனில் வெற்றி பெற்ற மு.கா ஆட்சி அமைக்கு முன் அல்லது ஆட்சி அமைத்ததன் பின்னர் வெற்றி பெற்ற மு.கா. உறுப்பினர்களை அரசாங்கம் தம் பக்கம் வளைத்துக் கொள்ளலாம். அதற்கான பலமும் வளங்களும் அரசாங்கத்திடம் இருக்கின்றன. அதேபோல் அதற்கான பலவீனம் மு.கா உட்பட எல்லா சமூகங்களிலும் இருக்கிறது.

எனவே இப்போது தேர்தல்களின் போது கொளகைகள் மற்றும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெறும் வார்த்தை ஜாலங்களாகவே இருக்கினறன. மக்களுக்கு அவற்றில் எவ்வித பயனும் இல்லை.


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 24 July 2012 10:13 AM

    மகி ராசா கிழக்கு மாகாண சபை தேர்தலில் பங்காளி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிலை சின்னத்தில் ஒரு குதிரையையும்,கூட்டாளி கட்சியான மு.கா.வின் மரசின்னத்தில் ஒரு குதிரையும் களத்தில் இறக்கியுள்ளதினால் அவர் பயப்படமாட்டார், இந்நிலையில் மு.கா.வினரும் கொள்கையை பெரிதாக மதித்து எதிர் கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைப்பதை விட அரசுக்கு முட்டு கொடுத்து அமைச்சர் பதவிகளை பாதுகாப்பதிலேயே முன்னுரிமை வழங்குவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X