2025 மே 19, திங்கட்கிழமை

கடல் மேல் மிதக்க விட்டான்...

A.P.Mathan   / 2012 ஜூலை 23 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனப் போர் முடிந்த காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் இருந்து மேலை நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு கள்ளத் தோணியில் செல்பவர்கள் எத்தனை பேர் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் நடுக்கடலில் பிடிபட்ட படகுகளின் எண்ணிக்கையே திகைக்க வைக்கின்றன. இது குறித்து அந்த நாடுகள் வெகுவாக கவலைப்பட தொடங்கியுள்ளன. அதுபோன்றே இந்தியாவில், தமிழ் நாட்டில்; அரசு முகாம்களில் வாழும் அகதிகள் திருட்டுத்தனமாக மேலை நாடுகள் செல்ல முயலும் போது பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கமும் தனது பங்குக்கு சில கள்ள தோணிகளை தடுத்து நிறுத்தியுள்ளன.

ஆனால், இது குறித்து இலங்கையில் உள்ள தமிழ் சமூகமும், அவர்களுக்காக கவலைப்படும் தமிழினம் சார்ந்த சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைமைகளும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களும் சொல்வதும், செய்வதும் என்ன? ஒன்றுமே இல்லை! அவர்கள் அனைவரையும் பொறுத்த வரையில் பிரச்சினை என்று வந்து விட்டாலே அது இலங்கை அரசுடனும் மற்றும் சிங்கள அரசியல் தலைமைகள் மற்றும் சமூகத்துடனும் மட்டுமே. அந்த பிரச்சினைகளின் ஆழம் தமிழ் மக்களை பாதிக்கும். ஆனால் அதன் அழுத்தம் தங்களது விருப்பத்திற்கு ஏற்பவே அவர்களுக்கு ஓர் அரசியல் கருவியாக பயன்படும். இது தானே நிதர்சனமான உண்மை.

இனப்போர் முடிந்த இந்த காலகட்டத்தில், உயிருக்கும் உடமைக்கும் பயந்து, வெளிநாடுகளில் உயிர் பிச்சை கேட்டு, தஞ்சம் புக வேண்டிய அவல நிலையில் இலங்கை தமிழ் சமுதாயம் தற்போது இல்லை. அது தமிழ் இனத்தின் மானத்திற்கும் மரியாதைக்கும் கூட விடப்பட்ட அறை கூவல். வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்ல விரும்பி மாட்டிக் கொண்ட தமிழர்களிடையே அரசினால் விரும்பப்படாத தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எவருமோ இருந்ததாக செய்திகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இனப் போர் முடிந்த சமயத்தில் கானாடா நாட்டு கடற்படையினரால் நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் மட்டுமே சில விடுதலை புலிகள் இயக்க போராளிகள் இருந்ததாக செய்திகள் தெரிவித்தன. அதற்கு பின்னர், அத்தகைய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது தங்கள் நாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்ல முயற்சி செய்து மாட்டிக்கொண்டுள்ள தமிழர்கள் அனைவருமே வேலைவாய்ப்பு கருதியே வருவதாக அந்த அரசாங்கள் கருதுகின்றன. 'பொருளாதார அகதிகள்' என்று முத்திரை குத்தப்படும் அவர்களுக்கு புகுந்த இடத்தில் மட்டும் என்ன உரிமையோ, மரியாதையோ கிடைத்து விடப் போகிறது? இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை இல்லை என்று கூறும் அவர்களது தலைமைகள், போகிற நாடுகளில் மட்டும் அவர்களுக்கு அத்தகைய உரிமைகள் கிடைத்து விடாது என்று கூற மறுக்கின்றன.

உண்மையிலேயே அவர்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே மேலைநாடுகளுக்கு செல்ல முயலகிறார்கள் என்றால், ஏன் தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகள் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? ஒட்டை விழுந்த படகுகளில், அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும், நடுக்கடலில் தங்களது உயிருக்கு என்ன பாதுகாப்பு என்று எல்லாம் அவர்கள் ஆலோசித்து இருந்தால், அவர்களுக்கு இந்திய முகாம்களில் வாழ்க்கையின் அருமை புரிந்திருக்கும். இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதை தேடி அவர்களே செல்லும் போது, அவர்கள் எப்படி மேலை நாடுகளில் அரசியல் தஞ்சம் குறித்து பேச முடியும்?

இனப்போர் முடிந்த காலகட்டத்தில் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்த அப்பாவி தமிழ் மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி விமானம் மூலம் மேல்நாடுகள் சென்றதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகின. அப்போதும் சரி, பின்னரும் சரி, நாட்டில் சொச்சமிருக்கும் தமிழ் மக்களை எப்படியாவது 'நாடு கடத்துவது' தான் அரசின் குறிக்கோள் என்ற விதத்தில் பிரசாரம் கூட நடந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

என்றாலும், இனப்போர் இறப்புகள் மற்றும் புலம் பெயர்தல் ஆகிய காரணங்களால் இலட்சோப இலட்சம் தமிழர்கள் தற்போது நாட்டின் மக்கள் தொகையில் இல்லை. இதனால், இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் வரும் தசாப்தங்களில் வெகுவாக குறையும். அத்தகைய சூழ்நிலையில் தற்போது, மேலைநாடுகளுக்கு நூற்று கணக்கில் செல்ல முயற்சிக்கும் தமிழர்களின் முயற்சி, தொடர்ந்து வெற்றி பெற்று வந்தால், அதனைத்தானே சிங்கள பேரினவாதிகள் விரும்புவார்கள்? அதன் பிறகு, உரிமை குறித்தும் தனிநாடு குறித்தும் யார் பேசுவார்கள்? யாருக்காக பேச வேண்டும்?

கள்ளத் தோணியில் செல்ல, இரண்டு இலட்சம் ருபாய் வரை செலவு செய்யத் தயாராய் இருக்கும் இந்த நபர்கள், அதனையே முதலீடாக வைத்து தங்களது ஊர்களிலேயே தெருவோர கடைகளையோ வேறு சிறு முதலீடுகளையோ செய்யலாம். அவர்களில் ஒரு சிலராவது ஒன்று சேர்ந்து அத்தகைய கூட்டு முயற்சிகளில் ஈடுபடலாம். அவர்களது உரிமைகள் குறித்து வாய்கிழிய பேசும் புலம் பெயர்ந்த தமிழ் தலைமைகள் அவர்களுக்கு சிறு தொழில் முயற்சிகள் குறித்து அறிவுரைகள் கூறலாம், தொழிற் கூடங்கள் கட்டும் அவர்களது முயற்சிகளில் முதலீடு செய்யலாம்.

அது போன்றே, உள்நாட்டில் தமிழர் உரிமை குறித்து குரல் எழுப்பும் அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகளும் கூட அவர்களது கள்ளத் தோணி முயற்சிக்கு எதிராக அறிவுரை கூறலாம். மற்றபடி ஆதரவு அளிக்கலாம். மாறாக, அவர்கள் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டாலோ அல்லது நடுக்கடலில் தத்தளித்தாலோ மட்டுமே அவர்கள் அது குறித்து குரல் எழுப்புவர்களேயானால், அது தமிழர்கள் உயிருக்கு விலை பேசும் கீழ் தர அரசியாகவே இருக்கும்.

இந்த நிலைமை மாறவேண்டும். ஆனால், மாறுமா?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X