2025 மே 19, திங்கட்கிழமை

'டெசோ' மாநாடு சாதித்தது என்ன?

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைமையிலான 'டெசோ' இயக்கம், சென்னையில் நடத்திய மாநாடு, இலங்கை தமிழ் மக்களின் தற்போதைய நிலைமையில் எந்தவித முன்னேற்றத்திற்கும் முடிவு கூறாமலே முடிந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இனப்பிரச்சினை குறித்து தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் மேம்போக்கான அறிவையும் அந்த மாநாடு அறுதியிட்டு வெளிக்கொணர்ந்துள்ளது.

'முதல் கோணல், முற்றும் கோணல்' என்ற விதத்தில் டெசோ மாநாடு நடத்துவது குறித்து திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த நாள் முதலே, அது குறித்த சர்ச்சைகள் தொடங்கி விட்டன. அதிலும் குறிப்பாக திமுக தலைமையிலேயே மாநாடு குறித்து ஒருமித்த கருத்து இல்லை என்பது போன்று செய்தி வெளியாகி வந்தது. அத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானோ என்னவோ, மாநாட்டு ஏற்பாடுகளுக்கு கருணாநிதி பல்வேறு கட்சி தலைவர்களையும் பொறுப்பாக்கினார்.

டெசோ மாநாடு நடத்த போவதாக கருணாநிதி அறிவித்த போது, அது ஒரு கட்சி நிகழ்ச்சி அல்ல என்றும் அவர் தெளிவாக்கி இருந்தார். மாநாடு ஏற்பாடுகளை டெசோ அமைப்பே செய்யும் என்றும் அவர் கூறி வந்தார். திமுக-வில் உள்ள டெசோ ஆதரவு தலைவர்கள் மட்டுமே மாநாட்டு ஏற்பாடுகளை கவனிப்பார்கள் என்பது போலவும் அவர் கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், மாநாடு நெருங்க நெருங்க, அது திமுக மாநாடு என்ற நிலைமை ஏற்பட்டது. இது மாநாடு ஏற்பாடுகளை கவனிக்கும் பணிக் குழுக்களின் தலைமை மற்றும் அங்கத்துவத்திலும் பிரதிபலித்தது.

ஆனால், பிரச்சினை மாநாடு ஏற்பாடுகள் குறித்து மட்டுமல்ல. டெசோ மாநாட்டை திமுக மாநாடு அல்ல என்று கருணாநிதி கூறிவந்ததற்கு முக்கிய காரணம் இருந்தது. திமுக மாநாடு என்பதற்கு அப்பால் சென்று, அதனை அனைத்து கட்சி மாநாடாக கருணாநிதி முயன்றதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு சார்பான காரணங்கள் இருந்தன. ஆனால், உள்நாட்டு அரசியலிலும் இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்த நிலைபாடுகளிலும் மாற்றம் தோன்றிய போது, அது இலங்கை என்ற வெளிநாட்டில் உள்ள தமிழர் கட்சிகளின் எண்ணத்திலும் பிரதிபலித்தது. இதன் எதிர்மறை நோக்கப்பாடும் டெசோ மாநாட்டை பாதித்தன.

டெசோ மாநாடு குறித்து கருணாநிதி முதலில் பேச்செடுத்த காலகட்டத்தில், இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அரசியல் அணி மாற்றங்கள் நேருவதற்கான வாய்ப்புகள் தோன்றின. அடுத்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்னர் அணி மாற்றங்கள், மற்றும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் பங்குபெறாத மூன்றாது அணி தோன்றும் வாய்ப்பு குறித்தும் வெளிப்படையாக மீடியாக்களில் பேசப்பட்டன.

இந்த பின்னணியில், பாரதீய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மாநாட்டில் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக-வை போலவே காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெறும் கட்சிகளும் இதில் அடக்கம். இதில், மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மற்றொரு மத்திய அமைச்சரான டாக்டர் ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு - காஷ்மீர் தேசிய காண்பரன்ஸ் போன்ற கட்சிகள் 2014 தேர்தலுக்கு பின்னரான தேசிய அரசியலை மனதில் நிறுத்தியே மாநாட்டில் பங்குபெறுவதாக வாக்குறுதி அளித்தனர்.

அவர்களும் சரி, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கூட அடுத்த மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமையுமேயானால் அதில் தங்களது பிரதமர் வேட்பாளருக்கு திமுக-வின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டனர். அவர்களை பொறுத்த வரையில் தமிழ் நாட்டு முதலமைச்சரும் திமுக-வின் எதிரி கட்சியான அஇஅதிமுக-வின் தலைவருமான ஜெயலலிதாவே, நேரமும் காலமும் சரிபட்டு வந்தால், பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்புவார் என்றே எதிர்பார்க்கின்றனர்.

இந்த கணக்கை பாரதீய ஜனதாவில் சில தலைவர்களும் போட்டுப் பார்த்திருந்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அதுபோன்றே, டெசோ மாநாட்டில் தனது எதிரிக்கட்சியான காங்கிரஸ் கட்சி நிச்சயமாக பங்குபெறாது என்பதையும் பாரதீய ஜனதா உணர்ந்தே வைத்திருந்தது. அந்த நிலையில் திமுக ஆதரவு நிலையெடுக்க அந்த கட்சியில் சில தலைவர்கள் நினைத்திருந்தால் அதுவும் உள்நாட்டு அரசியலின் ஒரு பகுதியே.

'தனி நாடு': கருத்தும் கருத்து வேறுபாடும்
திமுக-வுடனான அரசியல் கூட்டணிக்கு அச்சாரம் போடும் விதமாகவே நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் டெசோ மாநாட்டில் பங்கேற்பதாக தலையாட்டினர். ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் ஆளும் கூட்டணியில் செயல்பாடு முறை குறித்த வேறுபாடுகள் களையப்பட்டதை தொடர்ந்து டெசோ மநாட்டில் சரத் பவார் பங்குபெற்றால் அது வேறுவிதமாக சித்திகரிக்கப்படும் என்ற நிலைமை தோன்றியது.

ஆனால், அதைவிட முக்கியமானது டெசோ மாநாட்டில் 'இலங்கையில் தனி தமிழ்நாடு' குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற செய்தி, பாரதீய ஜனதா உட்பட்ட அனைத்து கட்சியினரையும் சிந்திக்க வைத்தது. அதுபோன்றே, தங்கள் முன்னில், தாங்கள் அறிந்திராத தமிழ் மொழியில் இந்திய அரசின் கொள்கையையோ, நட்பு நாடான இலங்கையின் தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதையோ எந்த கட்சியோ அவற்றின் தலைவர்களோ விரும்பவில்லை.

இத்தகைய பிரச்சினைகளை கருணாநிதி மறுபரிசீலனை செய்து, தனது மாற்று முடிவுகளை அறிவிக்கும் போது காலம் கடந்து விட்டது. சரத் பவார் ஆகட்டும், ஜனதா தள தலைவர் சரத் யாதவ் ஆகட்டும், மனத்தளவிலோ, வாக்கு வங்கி அரசியல் காரணங்களுக்காகவோ தனிநாடு என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஃபரூக் அப்துல்லாவிற்கோ தனது மாநிலமான ஜம்மு - காஷ்மீரில் தனிநாடு கோரிக்கையையும் போராட்டங்களையும் எதிர்த்து விட்டு டெசோ மாநாட்டில் வேறு விதமாக நிலைப்பாடு எடுப்பது என்பது, அவரது குடும்பத்தின் அரசியல் பாரம்பரியத்திற்கே எதிராக அமைவது.

இதுபோன்ற காரணங்களினால் பாரதீய ஜனதாவின் அரசியல் நிலைப்பாடு மட்டும் அல்லாது, தமிழ் நாடு உட்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கட்சி தொண்டர்களாலும் 'தனிநாடு' கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதுபோன்றே தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்' தமிழர்களுக்கு நல்ல அரசியல் முடிவு என்ற வகையிலேயே இனப்பிரச்சினையை அணுகி வந்துள்ளது.

ஏனோ, இந்த பின்னணியை முதிர்ந்த அரசியல்வாதியும் ராஜதந்திரியுமான கருணாநிதி நினைத்துப் பார்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது.

இலங்கை தமிழர் நிலையும் கட்சிகளின் நிலைப்பாடும்...
வேறு எது குறித்து டெசோ மாநாடு கருத்து வெளியிட்டதோ இல்லையோ, இனப்பிரச்சினையின் இன்றைய நிலை குறித்த தமிழ் நாடு கட்சிகள் அறிந்திராத பலவற்றையும் அது புடம் போட்டு காட்டியுள்ளது. இனப்போரை ஒட்டிய காலகட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ அவர்கள் உள்நாட்டில் அரசியல் செய்து வந்தார்கள். அவர்களில் விடுதலை புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் கூட தனிநாடு குறித்த இந்திய அரசின் கொள்கையின் வெளிப்பாட்டையே ஒட்டி தங்களது கொள்கைகளையும் வகுத்துக் கொண்டனர்.

இனப் போர் முடிந்த காலகட்டத்தில், அவர்களில் பலரும் புலம்பெயர் தமிழர் குழுக்களின் நிலைமைக்கு ஏற்பவே இனப் பிரச்சினை குறித்த தங்களது கொள்கைகளை வகுத்து வந்தனர் என்பதே உண்மை. அவர்களில் பலரும் இலங்கையில் தமிழர் தேசிய கூட்டமைப்பு போன்ற வலிமை வாய்ந்த அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் அவசியங்களையும் அபிலாஷைகளையும் ஒட்டி அரசியல் ரீதியாக போராடி வருகிறார்கள் என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார்கள்.

இந்த ஆண்டின் முற்பகுதியில் ஜெனிவாவில் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி பெற்றதையும் அதில் இந்தியாவின் வாக்களிப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும் தவறாகவே கணக்கு செய்தனர். மீண்டும் ஜெனிவாவில் இலங்கை குறித்து விவாதம் நடைபெற உள்ள சூழ்நிலையில், முன்பு போன்றே தமிழ் நாடு அரசியல் கட்சிகளை ஒட்டி அரசியல் செய்தால் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு எதிராக அமைந்து விடும் என்று என்னவோ எண்ணி, செயல்பட்டு வந்ததாகவே கருத இடம் உள்ளது.

இந்த பின்னணியில், டெசோ மாநாடு நடந்து முடிந்த விதம், புலம்பெயர் தமிழர் குழுக்களிடையே தமிழ் நாடு அரசியல் மட்டுமல்ல, இலங்கை தமிழர் குறித்த அறிவின்மையையே வெளிப்படுத்தி உள்ளது. அதுபோன்றே, இலங்கை தமிழர் அரசியலுக்கான அச்சாரமும் அடித்தளமும் நாட்டில் உள்ள மிதவாத தமிழ் கட்சிகளிடமே உள்ளது என்பதையும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தி உள்ளது.

எப்போது டெசோ மாநாடு நடத்த வேண்டும் என்று தீர்மானித்தாரோ, அப்போதே கருணாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பையோ, அல்லது இலங்கையிலேயே இருந்து அரசியல் செய்து வரும் பிற தமிழ் மிதவாத கட்சிகளையோ கலந்து கொண்டே முன் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து விட்டு, பின்னர் இலங்கை தமிழர் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் நினைத்தது, இலங்கை தமிழ் அரசியல் குறித்த தமிழ் நாட்டு அரசியல் தலைமைகளின் அறிவின்மையையும் வெளிப்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

உதாரணத்திற்கு, கூட்டமைப்பை பொறுத்தவரையில், 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்' சாதகமான அரசியல் முடிவை குறித்தே அந்த கட்சி பேச்சுவார்த்தை மற்றும் போராட்ட முயற்சிகளை செய்து வருகிறது. உள்நாட்டில் தேர்தல்கள் ஆகட்டும், ஜெனிவா வாக்களிப்பு உட்பட்ட சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் ஆகட்டும், அவை அனைத்துமே இந்த கொள்கை அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணி செயல்பட்டு வருகிறார்கள்.

இன்று, ஜெனிவா வாக்களிப்பில் இந்தியாவின் நிலை, அதற்கு தமிழ் நாட்டிற்கும் அப்பால் சென்று, இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் அளித்த ஆதரவு ஆகியவற்றின் பின்புலம் டெசோ மாநாடு மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, இலங்கையில் தமிழர்களுக்காக உரிமைகள் குறித்து ஆதரவு தெரிவித்த இந்தியாவின் அனைத்து கட்சிகளுமே தனி நாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்ற நிலைப்பாடு, கூட்டமைப்பில் உள்ள சில தலைவர்களுக்கும் இப்போது புரிந்திருக்கும்.

இந்த உண்மை, கூட்டமைப்பிற்குள் இந்திய ஆதரவு குறித்து புதிய விவாதத்திற்கு வித்திட்டால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. தற்போது கூட, இலங்கையில் உள்ள பத்திரிகை செய்திகள் கூறுவது தவிர, இந்திய ஆதரவு நிலைமையை எந்த தமிழ் கட்சி தலைமையும் எடுத்தது கிடையாது. கூட்டமைப்பு ஆகட்டும், இலங்கை அரசு ஆகட்டும், இந்தியாவோ, சர்வதேச சமூகமோ தங்களது நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்றே நினைப்பவர்கள்.

இதில், அரசு தரப்பு எதிர்கால உறவுகளை கருத்தில் கொண்டு தனது நிலைப்பாட்டில் சில மாறுதல்களையும் அறிவுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவாவது செய்யும். தங்களது மக்களுக்கு எதிர்காலமே இல்லை என்று கூறி, தமிழ் அரசியல் தலைமை, 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்ற விதத்திலேயே இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்துடன் 'இணக்கமான நிலைப்பாடு' எடுத்து வந்துள்ளது.

அரசியல் உத்தியாக சர்வதேச சமூகத்தின் அறிவுறுத்தல்களை தமிழ் அரசியல் தலைமை பல்வேறு காலகட்டங்களில் ஏற்றுக்கொண்டுள்ளது என்பது என்னவோ உண்மை. ஆனால், அடிப்படை கொள்கைகளில் அதே சர்வதேச சமூகம் தங்களை ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். புலம்பெயர் தமிழர் குழுக்களோ, அத்தகைய சூழ்நிலையை உருவாக்கும் வேலையில் தொடர்ந்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த பின்னணியில் தான், இலங்கை அரசும் சிங்கள பேரினவாத கட்சிகளும் பிறரும் கூட தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து சந்தேகம் கொண்டுள்ளார்கள். 'தானாக கனியாத பழத்தை அடித்து கனிய வைக்கும்' முயற்சியாக மட்டுமே புலம்பெயர் தமிழர் குழுக்களின் பணிகளை அவர்களால் காண முடிகிறது. அதனால், டெசோ மாநாடு போன்ற முயற்சிகளை அவர்கள் 'வட்டுக் கோட்டை' கண்களாலேயே காணமுடிகிறது. கூட்டமைப்பு தலைவர்கள் சிலரின் கடந்த காலம் கூட அவர்களுக்கு விடுதலை புலிகள் போன்ற போராளி குழுவின் முன் மாதிரியோ என்ற சந்தேக கண்களுடனே காண முடிகிறது.

இந்த சூழ்நிலை மாற வேண்டும். கடந்த தசாப்தங்களில், தொடர்ந்து இலங்கை அரசும் சிங்கள அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழ் அரசியல் தலைமைகளிடையே இருக்கிறது. முதல் தவறு யாருடையது என்றாலும், இலங்கை அரசும் பண்டாரநாயகா - செல்வா ஒப்பந்தத்தை ஒட்டி மட்டகளப்பில் செல்வநாயகம் ஆற்றிய உரையை இன்னமும் மறக்கவில்லை. அந்த பின்னணியில், அதே நகரத்தில், அதே மாதம் அதே திகதியில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், தமிழ் அரசு கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X