2025 மே 19, திங்கட்கிழமை

தேவை: சுய பரிசோதனை!

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரம் இலங்கை விஜயம் செய்த இந்திய கலாசார அமைச்சர் குமாரி செல்ஜா இரண்டு முக்கிய விழாக்களில் பங்கு பெற்றார். ஓன்று, 'கபிலவஸ்து ரிலிக்ஸ்' என்று கூறப்படும் புத்தரின் நினைவு பொருளை தன்னுடன் எடுத்து வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தது. மற்றொன்று, மன்னாரில் பாடல்பெற்ற தலமான கோவிலை இனப்போரின் அதிர்வுகளுக்குப் பின்னர், இந்திய அரசு ஆதரவுடனான சீரமைப்புப் பணிகளை தொடக்கி வைப்பது. முதலாவது, பௌத்த மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை தீர்த்து வைக்கும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சி. இரண்டாவது, இந்திய அரசே, தமிழர் பகுதிகளில் இனப்போருக்கு பின்னரான புனரமைப்பு பணிகளை கண்டறிந்து முன்னெடுத்த வகையில் ஓர் பங்காகும்.

இலங்கையிலுள்ள தமிழர்கள் ஆகட்டும், அல்லது பௌத்தர்களாகட்டும், இரு இனத்தவருமே இந்தியாவுடனான தங்களது இனம், மதம், மொழி மற்றும் கலாசார உறவுகளை வெளிப்படையாகவே பேசி மகிழ்பவர்கள். இதில் தமிழ் நாட்டிலுள்ள கோவில்களுக்கு இலங்கை தமிழ் மக்கள் ஒரளவிற்கு சென்று தங்களது பல்வேறு நேர்த்தி கடன்களை செய்து வருகிறார்கள். சிங்கள - பௌத்த மக்களுக்கு வட இந்தியாவில் உள்ள புண்ணிய இடங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதே தங்களது வாழ்வின் மிகப் பெரிய நேர்த்திக் கடனாக இருந்து வந்துள்ளது. இலங்கையிலுள்ள முஸ்லிம் இனத்தவர்களுக்கு மக்காவே போற்றுதற்குரிய வழிபாடு தலம். அவர்களும் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். இலங்கை வாழ் கிறிஸ்தவர்களும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மத தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

'கபிலவஸ்து வழிபாட்டு பொருட்களை' பௌத்த மதத்தினர் போற்றிய அளவிற்கு, மன்னார் கோவில் பணிகள் குறித்து தமிழ் பத்திரிகைகள் செய்தி வெளியிடவில்லை என்பதே உண்மை. இந்த இரு நிகழ்வுகளையும் ஒரே தட்டில் வைத்து பாhக்கக்கூடாது தான். ஆனால், இது இந்தியா சார்ந்த விடயம் மட்டுமல்ல. ஏன், இங்குள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோரின் மத நம்பிக்கை குறித்த விடயம் மட்டுமல்ல. அவற்றிற்கும் அப்பால் சென்று, பொதுவாகவே மதம் குறித்த மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை குறித்த படிப்பினை என்று கூட சொல்லலாம். இந்த ஆழ்ந்த உணர்வுகளின் தாக்கத்தை சரியாக புரிந்து கொண்டால், இன அரசியல் குறித்த மக்களின் மனநிலைiயும் புரிந்து கொண்டு, அறிவு பூர்வமாக செயல்பட்டு, அனைத்து மக்களுக்கும் ஏற்புடைய தீர்வு திட்டம் ஒன்றை செயல்படுத்த முடியும்.

பொதுவாகவே, சிங்களவர்களுக்கு மொழியை விட மதத்தின் மீதான நம்பிக்கை அதிகம். இலங்கை தமிழ் மக்களுக்கோ, மத நம்பிக்கை தனிநபர் விடயமாகவும், அதோடு தொடர்புடையாக கருதப்படும் மொழிப் பற்று அதிக அளவிலும் போற்றப்பட்டு வருகிறது. இறைவன் அளித்த மொழி என்ற வகையில் இறைவனை போற்றி துதிக்கும் பல்லாயிரக் கணக்கான பாடல்களும் பதிகங்களும் பதிக்கப்பட்டதும் தமிழ் மொழியில் தான். தற்கால சரித்திரம் என்ற வகையில், கல்வியோடு இணைந்த வேலை வாய்ப்பு என்று வந்த பின்னரே மொழி ஓர் அரசியல் கருவியாக உருவெடுத்தது.

'சிங்களம் மட்டும்' என்ற அரசின் மொழிக் கொள்கை உருவானதை அடுத்து, தமிழும் இறைவனின் மொழி என்ற அந்தஸ்தில் இருந்து ஒரு படி இறங்கி, அரசு பணிகளுக்கு மட்டுமல்ல, அது குறித்த அரசியலுக்கும் பயன்பட்டது. 'இனப் பிரச்சினை', 'இனப்போர்' என்றெல்லாம் கூறி வந்தாலும், பல்வேறு கருத்துகளும் வாக்குவாதங்களும் மொழி அளவிலேயே இன்றைக்கும் இருந்து வருகிறது. உதாரணத்திற்கு, பிராந்தியங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 'பொலிஸ் அதிகாரம்' குறித்த பிரச்சினையில் தொங்கி நிற்பதும் கூட, தமிழ் மக்களுக்கு அரசுடனான தங்களது அலுவல்களை தங்களுக்கு அறிந்த மொழியில் செயல்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கமே அடிப்படை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் போது, பிராந்தியங்களுக்கு பொலிஸ் அதிகாரம் என்ற வகையில் முடிவுகள் எடுக்கப்படுமேயானால், அதனால் அரசியல்வாதிகளுக்கு பயன் ஏற்படலாம். தமிழ் மக்களுக்கு, அதிலும் வடக்கு மாகாணத்திற்கு வெளியே வாழும் தமிழர்களுடைய அன்றாட, அரசு சார்ந்த பிரச்சினைகளுக்கு இது முடிவு ஆகாது. அவர்களுடைய கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் தமிழ் மக்கள் அதிக சரியான எண்ணிக்கையில் பணியில் அமர்த்தப்பட்டால் மட்டுமே அவர்களது பிரச்சினைக்கு விடிவுகாலம் பிறக்கும்.

இன்னும் சொல்லப் போனால், அரசியல் ரீதியாக மட்டும் செயல்படாமல், தமிழ் தலைமை, தங்களது மக்களின் அன்றாட தேவைகளை உணர்ந்து, அறிந்து, அதனோடு ஒட்டிய தீர்வு தீர்மானங்களையே முன்வைக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படாத எந்த ஓர் அரசியல் தீர்வும் இந்த பிரச்சினையை பிறிதொருகாலத்தில் தட்டி எழுப்பவே செய்யும். முடிந்த முற்றுப்புள்ளியாக அமையாது. அந்த வகையில் பதிமூன்றாவது தீர்வு திட்டத்தை கூட இன்றைய தமிழ் மக்களின் சூழ்நிலைக்கு மட்டுமல்ல, அவர்களது தேவைகளுக்கும் ஏற்ப மாற்றி அமைக்கக் கோரும் வகையிலேயே தமிழ் அரசியல் தலைமை சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

கடவுள், கல்வி, கலாசாரம் என்பதற்கும் அப்பால் சென்று, அன்றாட தேவைகளுக்கு ஏற்ப கல்வி அறிவு பெற்று தங்களது தகுதிகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்பை அடைந்து வந்துள்ளமை தமிழர்களின் முன்னேற்றத்திற்கு, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில்; வழிவகை செய்து வந்துள்ளது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னரே, 'சிங்களம் மட்டும்' மற்றும் பல்கலைகழக கல்விக்கான 'தரவரிசைப் படுத்தல்' ஆகியவையே இனப் பிரச்சினைக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன. அதற்கு 2500 ஆண்டு காலத்திய சரித்திரம் கட்டியம் கூறியது, கலவரமூட்டியது.

இன்று கூறுவதில் அர்த்தமில்லை. என்றாலும், வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தில் மிக எளிதில் புலமைத்துவம் பெற்ற தமிழ் மக்களால், தாங்கள் நினைத்திருந்தால் அன்றாடம் தாங்கள் கேட்டு பழகிய மொழியான சிங்களத்தில் செயலறிவை பெற்றிருக்க முடியாதா? அவ்வாறான செயலறிவு பெற்றிருந்தால், அவர்களால் அரசு பணி மற்றும் அரசியல் ஆகிய தளங்களில் முன்னில் இருந்திருக்க முடியாதா? ஆனால் தமிழாள் சிங்களம் கற்றால்; மட்டும் சிங்கள பேரினவாதிகள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. மாறாக அதுவே கூட அவர்களது ஆதங்கத்திற்கும் அரசியலுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால், அதன் தர்க்கமும் தாக்கமும் வேறு நிலைகளில் இருந்திருக்கலாம். இனப் போராக மாறியிராமல் இருக்க வாய்ப்புகள் கூட இருந்திருக்கலாம்.

இனப்போர் மற்றும் அதற்கு பிந்தைய தற்போதைய காலகட்டத்தில், தமிழ் மக்கள் உண்மையிலேயே எதிர்பார்க்கும் அரசியல் தீர்வின் பல்வேறு அலகுகள் குறித்து வெளிப்படையாகவும் தொடர்ந்தும் தமிழ் சமுதாயத்தினுள் பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்ச்சைகள் நடத்தப்பட வேண்டும். கடந்த கால தமிழ் சமூகம் நன்றாகவே வாழ்ந்து சென்றிருக்கிறது. நிகழ்காலம் தன்னை தொலைத்துக் கொண்டுள்ளது. எதிர்கால தமிழ் சமூகம் எதிர்பார்ப்து என்ன? அது குறித்து நிகழ்கால தமிழ் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அலசல்களும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் தலைமை தனக்கான அரசியல் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

மாறாக, கடந்த காலத்தை முன்னிறுத்தி, நிகழ்காலம் செயல்படுமேயானால், தமிழ் சமூகத்தின் எதிர்காலமும் இருண்ட காலமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. காரணம், அதுவே கடந்த காலம் வெளிச்சம் போட்டு காட்டும் உண்மை. போருக்கு பிந்தைய காலகட்டத்தில், உயர்கல்வி அறிவு, அது பெற்று தரும் சிறப்பான வேலைவாய்ப்பு, அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைதியான சூழல் ஆகியவற்றையே இன்றைய தமிழ் இளைஞர் சமூகம் எதிர்பார்ப்பதாக ஓர் எண்ணம் உருவாகி வருகிறது. அந்த எண்ணவோட்டம் உண்மை என்றால், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் சமூக கண்ணோட்டத்தை இனப் பிரச்சினையோ அல்லது இனப் போரோ மாற்றி அமைத்திடவில்லை என்ற எண்ணமே உருவாகிறது. அவ்வாறானால், அவர்களுக்காக தமிழ் தலைமைகள் சாதித்தது என்ன, தற்போது சாதிக்க நினைப்பது என்ன? என்பன போன்ற கேள்விகளும் எழுகிறது. இதற்கான பதிலை தமிழ் சமூகம் 'சுய பரிசோதனை' மூலமே காணமுடியும்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X