2025 மே 19, திங்கட்கிழமை

போர் வெற்றிக் கொண்டாட்டங்களும் நல்லிணக்கணமும்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        -கே.சஞ்சயன்

"இராணுவ வெற்றியைக் கொண்டாடுவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டிய நேரம் இது.  இனங்களுக்கு இடையில் உள்ள எல்லா வேறுபாடுகளையும், களையும் வகையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போதே தொடங்கப்பட வேண்டும்."

-இது அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட - 2011ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான லைபீரிய மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் லேமா ரொபர்ட்டா குபோவீ  வெளியிட்ட கருத்து.

போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கம் அந்த இலக்கை அடைந்துள்ளதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அந்த போரின் வெற்றியைக் கொண்டாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் காட்டப்படும் அக்கறை, அந்தப் போருக்கான அடிப்படைக் காரணங்களை களைவதில் காட்டப்படவில்லை.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் முடித்து வைக்கப்பட்ட போரை அரசாங்கம் இரண்டு விதமாக அழைக்கிறது. முதலாவது- பயங்கரவாதத்துக்கு எதிரான போர்.

இரண்டாவது, மனிதாபிமானப் போர் நடவடிக்கை. இதனைப் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

அரசாங்கத்தின் இந்தக் கருத்தை தமிழர் தரப்பில் உள்ள பெரும்பாலானவர்களால் ஏற்க முடியவில்லை என்பதே உண்மை.

ஏனென்றால், இது பயங்கரவாதத்துக்கு எதிரான போராக மட்டும் இருந்திருந்தால், அந்தப் போருக்கு அப்பால் வாழ்ந்த பெருமளவு மக்களால் உயிர் பிழைத்திருக்க முடியும். இழப்புகள், அழிவுகளில் இருந்து தப்பிக்கொள்ள முடிந்திருக்கும்.

பெருமளவில் பொதுமக்களையும் பலியெடுத்த இந்தப் போருக்கு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று முத்திரை குத்துவது, பொதுமக்களையும் பயங்கரவாதிகளாகவே அடையாளப்படுத்துகிறது.

இன்னொரு பக்கத்தில் இதனை மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்றும் அரசாங்கம் சொல்கிறது.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக மட்டுமே அது இருந்திருந்தால், தமிழ்மக்களின் உயிர்களுக்கு உச்சக்கட்ட மதிப்புக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் போரில் தமிழ்மக்கள் எதிர்கொண்ட இழப்புகளும், கொடுத்த விலையும் மிகமிக அதிகமானது.

இதனால் தான், விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட போர் என்ற அரசாங்கத்தின் கருத்தை, தமிழர்களில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

உண்மையில் இந்தப் போரை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலில் இருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான போராகவே கருத வேண்டும்.

இந்தப் போர்க்களத்தில் தமிழர்களின் உயிர்கள் மதிக்கப்படவேயில்லை. அப்படி மதிக்கப்பட்டிருந்தால், பேரழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கட்டத்தில் மனிதாபிமான போர் என்பது சரியானதா என்ற கேள்வி எழுகின்றது. போர் எப்படி நடத்தப்பட்டது, அதில் தமிழர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டதா என்பதெல்லாம் ஒரு புறத்தில் இருக்கட்டும்.

இந்தப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட, தமிழர்கள் நியாயமாக நடத்தப்படுகின்றனரா என்ற கேள்விக்கு விடைதேடுவது முக்கியம்.

போர் முடிந்த பின்னர் வெற்றி கொண்டாடப்பட்ட விதம், தமிழர்களுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்தது.

முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்களில் ஒரு பகுதியினர் காயங்களோடு மருத்துவமனைகளில் நிறைந்திருக்க - எஞ்சியோர் பசியோடும் பட்டினியோடும் மாற்று உடைகள் கூட இல்லாமல் முகாம்களுக்குள் அடைபட்டிருந்த போது – சரணடைந்தவர்களின் கதி தெரியாமல் உறவினர்கள் கதறிக் கொண்டிருக்க, தப்பியவர்கள் யார், மாண்டவர்கள் யார் என்று தெரியாமல் உறவினர்கள் உறக்கமின்றிப் புலம்பிக் கொண்டிருந்த போது தான், பெரியளவில் வெற்றிக் களிப்புக் கொண்டாட்டங்கள் அரங்கேறின.

இன்னொரு நாட்டிடம் அகப்பட்டுக் கிடந்த  சுதந்திரத்தை மீளப்பெற்றது போன்று அரசாங்கம் அதனைக் கொண்டாடியது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெற்றது ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

அதேவேளை, இன்னொரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அதை தமது வெற்றியாக அவர்களால் பார்க்க முடியவில்லை என்பதே அந்த உண்மை.

காரணம், அந்தப் போர் தமக்கு எதிராகத்  தொடுக்கப்பட்டதென்ற உணர்வே தமிழர்களில் பெரும்பாலானோரிடம் இருந்தது. அந்தளவுக்கு போரினால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

நாட்டின் ஒரு புறம் வெற்றிக்களிப்பில் மிதக்க,  இன்னொரு பக்கத்திலோ ஒப்பாரி ஓலங்கள் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

அரசாங்கம் வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டதாகப் பிரகடனம் செய்த போதிலும், போரின் முடிவு அதைச் சாட்சிப்படுத்தவில்லை. தமிழர்களின் அவலங்களுக்காக அந்த வெற்றிக்களிப்பு மனமிரங்கவும் இல்லை. நிறுத்தப்படவும் இல்லை.

2009ம் ஆண்டுடன் வெற்றிவிழாக்கள் நிறுத்தப்பட்டு விடவில்லை. ஆண்டுதோறும் வெற்றிவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

இந்தளவுக்கும் போர் நடத்தப்பட்டது வேறோரு நாட்டுடன் அல்ல. போரிட்டதும் ஒரே நாட்டு மக்கள் தான். அதில் மடிந்து போனதும் அவர்கள் தான். இதில் கணிசமானளவு உயிரிழிவுகளை சந்தித்து தமிழர்கள் தான்.

வெற்றிக்களிப்பும் கொண்டாட்டங்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாக சொல்லப்பட்டாலும். நடைமுறையில் தமிழர்களால் அது எப்படி உணரப்படுகிறது என்று பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும்.

இன நல்லிணக்கம் பற்றிப் பேசும் போது, இது தவிர்க்கப்பட முடியாத ஒரு ஆய்வு. ஆனால் அத்தகைய பகுப்பாய்வு ஒன்றை அரசாங்கம் செய்ததாகத் தெரியவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மூன்று ஆயுதக் கிளர்ச்சிகளை சந்தித்தது.

அதில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒன்று மட்டும் தான். தெற்கில் தான்  இரண்டு முறை ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சிகள் தோன்றின.

தெற்கில் இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளுமே, மிகப்பெரியளவிலான உயிரழிவுகளுடன்  அடக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த வெற்றிவிழாக்களும் நடத்தப்படுவதில்லை.

தமிழர்களின் ஆயுதக் கிளர்ச்சியை அடக்கியதை மட்டும் அரசாங்கம் கொண்டாடுகிறது. இது இனநல்லிணக்கத்துக்கு எந்த வகையிலும் உதவக் கூடியதொன்றாக இருக்க முடியாது.

இனங்களுக்கிடையிலான கசப்பணர்வுகள் மறைந்து நல்லிணக்கம் ஒன்று உருவாக வேண்டுமானால், எந்தவொரு இனமும் தாம் சிறுமைப்படுத்தப்படுவதாகவோ, இரண்டாம் நிலைப்படுத்தப்படுவதாகவோ உணரக்கூடாது. அத்தகையதொரு நிலையில் இருந்தே இன நல்லிணக்கத்துக்கு அடித்தளமிட முடியும்.

ஆனால், போர் முடிந்த பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிலையை உருவாக்க முடியவில்லை.  தமிழர்களிடம் தாம் இரண்டாம் நிலைப்படுத்தப்படுகிறோம், சிறுமைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது.

முஸ்லிம்களிடத்தில் கூட இந்த உணர்வு முற்றாக இல்லையென்று கூற முடியாது. இந்த மூன்று ஆண்டுகளில், அனைவரும் சமம் என்ற உணர்வை உருவாக்க முடியாது போனது நல்லிணக்கத்துக்கான முயற்சிக்கு பெரும் தோல்வி என்றே கூறலாம்.

தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களுக்குரிய உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் அடிப்படையில் என்ன செய்துள்ளது என்ற கேள்வி உள்ளது. இதனால் தான் அரசாங்கம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்து வருகிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவு அளித்த சர்வதேச சமூகம், நல்லிணக்கத்தையும்  அரசியல் தீர்வையும் அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், அதன் அடிப்படை நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு, நிரந்தர அமைதியை உருவாக்குவதை மையப்படுத்தியவை தான்.

அரசாங்கம் இந்த இலக்குகளில் இருந்து விலக முற்பட்டபோது தான், போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றசாட்டுகள் தீவிரம் பெற்றன என்பது கவனிக்கத்தக்கது.

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், நல்லிணக்கம், அரசியல்தீர்வு குறித்த சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

அவ்வாறு இல்லையென்றால், நோபல் பரிசாளர் லேமா ரொபர்ட்டா குபோவீ  இத்தகைய கருத்தைக் கூறியிருக்க முடியாது.

அவர் மட்டுமல்ல, விரைவில் வரப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகளும் இதனையே வலியுறுத்த முற்படுவார்கள். ஏனென்றால், போருக்குப் பின்னர், நிரந்தர அமைதியை உருவாக்கத் தவறினால், அது  இன்னொரு மோதலுக்கான ஆரம்பப் புள்ளியாகி விடும் என்ற கருத்து அவர்களிடம் வலுவாக உள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Haniff Monday, 03 September 2012 09:44 AM

    தமிழ் பேசும் இலங்கை குடிமக்கள் கற்றுக்கொள்ள வேன்டிய கருத்துக்கள். மிக அருமையாக கூறி இருக்கிறார் லேமா ரொபர்ட்டா குபோவீ. அதாவது; தெட்கில் இரண்டு ஆயுத கிளர்ச்சிகளுமே ( ஜே.வீ.பி எதிரான ) மிகப்பெரியளவிளான உயிரிழப்புகளுடன் அடக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த வெற்றி விழாக்களும் நடத்தப்படுவதில்லை.
    இன்னொரு நாட்டிடம் அகப்பட்டு கிடந்த சுதந்திரத்தை மீளபெற்றது போன்று அரசாங்கம் கொன்டாடியது பொருத்தமான‌ சொல் ( கொன்டாடுகிறது ). கருத்துக்களை தைரியமாக கூறி இருக்குறார் அம்மையார். அருமையான கருத்து. இல்லாட்டா நோபல் பரிசு சும்மா கொடுப்பாங்களா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X