2025 மே 19, திங்கட்கிழமை

இனப் பிரச்சினை: தமிழ் நாட்டின் 'கரிசனை'?

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசு முக்கியஸ்தர்கள் முன்னறிவிப்பின்றி வரக்கூடாது என்பதில் தொடங்கி, இன்று வட இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்த மதத்தவர்கள் மீது தாக்குதலில் இறங்கி, பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோரைக் கூட தமிழ் நாடு வேண்டப்படாதவர்களாக ஆக்கி வருகிறது. இதற்கிடையில், தமிழ் நாட்டில் அமைந்துள்ள இந்திய இராணுவ பள்ளிகளில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், மத்திய அரசிற்கான அறிவுரைகளும், மற்றும் சிறு கட்சிகள் மற்றும் குழுக்களின் போராட்டங்கள் வேறு. இவை அனைத்தும், இலங்கை அரசிற்கு எதிரான நிலைமையை இந்தியாவில் ஏற்படுகிறதோ இல்லையோ, இந்தியாவிற்கும் எதிரான நிலைப்பாடுகளை இலங்கையில் பலவாறாக தோற்றுவித்து வருகிறது.

தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் இத்தகைய நிலைப்பாடு, இரு நாடுகளுக்கும் அவற்றின் மக்களுக்கும், குறிப்பாக இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் எந்தவிதத்திலும் பயன் அளிக்கப்போவதில்லை. மாறாக, அவர்கள் மத்தியில் அனாவசிய பயத்தையே ஏற்படுத்தப்போகிறது. ஆனால், இதனை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைமைகள் உணர்ந்ததாக இல்லை. அவர்களுக்கு இலங்கை பிரச்சினை குறித்த அறிவுறுத்தல்கள் கூறிவருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் ஒன்றில் அறிவீலிகளாகவே இருக்கிறார்கள். அல்லது, இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை விட்டுவிட்டு, அவர்களையே பிரச்சினை பொருட்களாக மீண்டும் ஆக்கிவிட்டு, அதனால் ஏற்படும் கொடுமைகளிலும், குழப்பங்களிலும் குளிர்காய விரும்புகிறார்கள். அது போன்றே, தங்களது மறக்கப்பட்டுவரும் குறிகோள்களுக்கு புத்துயிர் ஊட்ட விரும்புகிறார்கள்.

இதில், குறிப்பிடத்தக்க ஒரு விடயம் உள்ளது. இலங்கை அரசிற்கும், அரசின் அங்கங்களான அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் தனி மனிதர்கள், இவர்கள் எவரையுமே எதிர்த்து, அந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களோ அல்லது அவர்களது அரசியல் தலைமைகளோ இதுபோன்ற எந்தவித அறிக்கைகளையும் விடவில்லை. சூடுபிடித்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட தேர்தல் முறைகேடுகள் குறித்து பேசிவரும் தமிழ் தலைவர்கள் கூட, தேர்தலுக்குப் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது பற்றி மட்டுமே பேசிவருகிறார்கள். அந்த இரு கட்சியினரும் கூட, 'வாக்கு வங்கி' அரசியலின் ஒரு பாகமாக தங்களது அரசையோ, சிங்கள அரசியல்வாதிகளையோ எதிர்த்து எந்த ஓர் அறிக்கையும் விடவில்லை. சிங்கள பேரினவாதத்துடன் சேர்ந்து பேசப்படும் அரசியல்வாதிகளும் தமிழர்கள் குறித்தோ, இந்தியா குறித்தோ எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களை இதுவரை கூறிவிடவில்லை.

இனப்பிரச்சினையை பொறுத்தவரை, அண்மையில் திமுக தலைமை முன்னின்று நடத்திய 'டெசோ' மாநாட்டில், இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளோ, தமிழ் தலைவர்களோ, இவர்களில் எவருமே கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, இனப்பிரச்சினை குறித்து தமிழ் நாட்டில் கடந்த சில தசாப்தங்களாக நடந்துவரும் போட்டி அரசியலில் தாங்கள் சிக்கிக் கொண்டு விடக்கூடாது என்பது குறித்த பயம். அவர்கள் பயந்தது போலவே, கடந்த தசாப்தங்களில், திமுக தலைவர் கருணாநிதி, இலங்கை தமிழர்களை பிரித்தாளப் பார்த்தாரா? என்ற தமிழ் தேசிய அமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் கேள்வி எழுப்பி உள்ளார். அது குறித்து கருணாநிதி நீண்ட அறிக்கையை பதிலாக தந்து உள்ளார்.

இதுபோன்ற அரசியல் அலசல்கள், இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண இலங்கையில் உள்ள தமிழர் தலைமைக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு விவாதம். இன்னும் சொல்லப் போனால், தமிழ் நாட்டு அரசியலுக்கு மட்டுமே சம்மந்தப்பட்ட ஒரு விடயம். அல்லாது, இது உலக தமிழ் தலைமை குறித்த சர்ச்சையை எழுப்பி உள்ளது என்று யாராவது கருதினால், அவர்கள் இன்னமும் கடந்த தசாப்தங்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள், வாழ விரும்புகிறார்கள் என்பதே உண்மை. அது, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களாக இருக்கலாம். அல்லது, புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் மக்களில் ஒரு பகுதியினராக கூட இருக்கலாம். அல்லது, கொள்கை ஒரு பக்கம், அது குறித்த அரசியல் மறு பக்கம் என்று இந்த இருபாலாரும் சேர்ந்து கிளப்பும் குழப்பமாக கூட இருக்கலாம். ஆனால், இதில் எவற்றிலும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களோ, அவர்களது அரசியல் தலைமைகளோ பங்கு பெறவில்லை என்பதே கண்கூடான உண்மை.

'டெசோ' மாநாட்டில் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் கலந்து கொள்ளாததற்கு இரண்டாவது காரணம், தாங்கள் இலங்கை அரசுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வதற்கு எந்தவித இடர்பாடும் வந்துவிடக் கூடாது என்பது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவலை. அவர்களை பொறுத்தவரையில் என்று இருந்தாலும் ஒன்றுபட்ட இலங்கையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வகையில், இலங்கை அரசாங்கத்திற்கும் நாடடில் உள்ள சிங்கள மக்களுக்கும் எரிச்சலும் சந்தேகமும் ஊட்டும் எந்தவித செயல்பாட்டிலும் இறங்கி விடக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள்.

அந்தவிதத்தில், கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் வாக்களிப்பு நடைபெற்ற போது ஜெனிவா நகர் சென்று, வாக்களிப்பில் பங்குபெறும் நாடுகளின் அரசியல் தலைமை மற்றும் இராஜரீக அதிகாரிகளை கண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கருத்தை கூட்டமைப்பு தலைமை நிராகரித்தது. மாறாக பின்னர் யாழ்பாணத்தில் நடந்த 'மே தினம்' விழாவில் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், இலங்கை தேசிய கொடியை தனது கையில் எடுத்து தனது மக்கள் முன்னர் உயர்த்தி பிடித்தார். அதாவது, ஒன்றுபட்ட இலங்கையில் மட்டுமே தாங்கள் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பதை அவர் வெளிப்படையாகவே உணர்த்தினார். அவரது செய்கை, இலங்கைக்கு அப்பால் இருந்து இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மாற்று கருத்துக்கள் கொண்டிருந்த குழுக்களுக்கு விடப்பட்ட சமிக்ஞையும் கூட.

இந்த பின்னணியில், இலங்கை மற்றும் சிங்கள - பௌத்த மக்களின் மீது தமிழ் நாட்டில் தோற்றுவிக்கப்பட்டு வரும் காழ்ப்புணர்ச்சி, இலங்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது. தற்போதே, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வாக்கு, சிங்கள - பௌத்த பேரினவாதிகளைப் போன்றே, நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளையும் சாதாரண மக்களின் எண்ணங்களையும் பாதித்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. தமிழ் நாட்டில் கூடம்குளம் அணுமின் நிலையம் குறித்த இலங்கையின் கவலைகளை வெளியிடும் பத்திரிகை செய்திகள் எங்கேயோ, 'இந்திய எதிர்ப்பு' என்ற கருத்தோட்டக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாகவே எண்ண வைக்கிறது.

இது போன்றே, தலைநகர் கொழும்பில் இந்திய கலாசார மையத்திற்கு விலைபேசப்பட்ட நிலத்தை, அதன் உரிமையாளர் ஒரு சீன கம்பெனிக்கு விற்றார். இது குறித்து இந்தியா கவலை அடைந்ததாக தெரிவித்த பத்திரிகை செய்திகள், உண்மைக்கு புறம்பாக. தனது சந்தேகங்களை தெரிவிக்க மத்திய அரசு, இந்தியாவிற்காக இலங்கை தூதுவரை 'சம்மன்' செய்து, தெரிவித்ததாகவும் கூறியது. ஒரு வெளிநாட்டு தூதுவரை 'சம்மன்' செய்வது என்பது போன்ற அடிப்படையற்ற, அதே சமயம் இராஜரீக குழப்பங்களை விளைவிக்கும் வகையிலான பத்திரிகை செய்திகள், விரும்பத்தகாத விளைவுகளுக்கு வித்திட வைப்பவை. இத்தகைய முயற்சிகள், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இவற்றிற்கு எல்லாம் அப்பால் சென்று, இலங்கையில் உள்ள தமிழ் தலைமைகள், நாட்டில் உள்ள அரசியல் நிலைமை மற்றும் தங்களது இனத்தவர்களிடம் இன்னமும் உள்ள பாதுகாப்பு உணர்வை குலைத்து விடும் நிலைமையை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்திவிடக் கூடாது என்று அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தங்களது உள்ளார்ந்த இந்த உணர்வுகள் குறித்தும் தங்களது இத்தகைய முயற்சிகள் ஆகியவை சிங்கள அரசியல் தலைமை மற்றும் சாதாரண மக்களிடம் சென்றடைய வழி செய்ய வேண்டும். அது போன்றே, தாங்கள் அணைத்து செல்ல விரும்பும் புலம்பெயர் தமிழ் குழுக்களும் தவறான எண்ணவோட்டத்தை தமிழ் நாடு அரசியல் தலைமைகள் மீது திணித்து, அரசியல் முடிவகள் குறித்த தங்களது முயற்சிகளை களங்கப்படுத்தும், காணாமல் கூட ஆக்கி விடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும்.

இங்கு கேள்வியே தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் புலம்பெயர் தமிழர்களும் வேண்டுவது இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வா, அல்லது அதன் பெயரில் பிரச்சினைகளை மேலும் ஊதி பெரிசாக்கி, அப்பாவி இலங்கை தமிழ் மக்களை மீண்டும் அபலை நிலைக்கு தள்ளிவிடுவதா? இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், அந்த பதிலில் நிகழ்காலத்தின் தவறுகளின் படிவங்களே இருக்கும் என்பதை இன்றைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

You May Also Like

  Comments - 0

  • ss Sunday, 16 September 2012 09:35 AM

    என்ன கொடுமைடா இது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X