2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கில் பலிக்காத கணக்குகள்!

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிதாக தலையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. கிழக்கு மாகாணசபையில் என்ன நடக்குமென்று பந்தயம் கட்டுமளவுக்கும் நிலைமைகளுமில்லை. ஆளும் ஐ.ம.சு.முன்னணி – மு.காங்கிரஸ் கூட்டிணைவில்தான் ஆட்சியொன்று அமையும். அதற்கான சாத்தியங்களும் பின்புலங்களும்தான் அதிமாகத் தெரிகின்றன.

இரண்டுவிதமான கூட்டிணைவின் மூலம் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளமையை நீங்கள் அறிவீர்கள். முலாவது: த.தே.கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் மற்றும் ஐ.தே.கட்சி ஆகியவை இணைந்து ஆட்சியொன்றை அமைத்தல். இரண்டாவது: ஐ.ம.சு.முன்னணி மற்றும் மு.காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்தல். இதில், தே.சு.முன்னணியும் ஒட்டிக் கொள்ளும். இவற்றில் இரண்டாவது கூட்டணி அமைவதற்குரிய நிகழ்தகவுகள்தான் மிக அதிகமாக உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் வகையில்; 'மத்திய அரசாங்கத்தில் மு.காங்கரஸ் இருந்து கொண்டு, கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முடிவு எடுப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும்' என்று மு.காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார். இவர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.கா. சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆனாலும், கிழக்கு மாகாணத்தில் ஆட்சிமைப்பதற்கு தம்முடன் இணையுமாறு மு.காங்கிரஸை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வற்றுபுறுத்தி வருகிறது. அப்படி இணைந்தால், முதலமைச்சர் பதவியினை மு.கா.வுக்கு சுழற்சி முறையில் வழங்கத் தயார் என்றும் சொல்கிறது. மு.கா. இதற்கு இணங்காது போனால், அது – வரலாற்றுத் துரோகமாகி விடும் என்று த.தே.கூட்டமைப்பு அச்சமூட்டுகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், த.தே.கூட்டமைப்புடன் இணைவதை விடவும் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதுதான் மு.கா.வின் கணக்கில் லாபமாகும். தவிரவும், இன்றைய நிலையில் பிணக்கு அரசியலை விடவும் இணக்க அரசியலிலேயே மு.கா. ஆர்வம் காட்டி வருகிறது. அதேவேளை, கிழக்கில் த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து கொண்டால் மத்திய அரசாங்கத்திலிருந்து அந்தக் கட்சி விலக வேண்டியேற்படும். எனவே, ஒன்றை இழந்து இன்னொன்றைப் பெறுவதை விடவும், இரண்டையும் வைத்துக் கொள்வதையே மு.கா. விரும்பும். அதனால், கிழக்கில் மு.கா.வின் ஆதரவு ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்குத்தான் கிடைக்கும்.

திறந்து சொன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது லாபத்தினை முன்னிறுத்தியே கிழக்கு மாகாணசபையில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு மு.காங்கிரஸைக் கோரிக்கை விடுக்கின்றது. ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதைத் தவிர்த்து த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைவதென்பது மு.கா.வுக்கு நஷ்டமாகும்! அரசியல் என்று வரும்போது, இந்த லாப - நஷ்டக் கணக்கினை மு.கா. நிச்சயம் பார்க்கும். 'சரி, நமக்கு லாபமில்லாது விட்டாலும் பரவாயில்லை, த.தே.கூட்டமைப்பின் நலனுக்காக ஆதரவு வழங்குவோம்' என்று மு.கா. யோசிப்பதற்குரிய கள நிலைவரமும் இங்கு இல்லை! காரணம், அப்படி விட்டுக் கொடுக்குமளவு தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு இங்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பது கசப்பான உண்மையாகும்!

முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தையும், அவர்களுக்கான தேசியத்தினையும் த.தே.கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், முஸ்லிம் சமூகத்தை 'தமிழ் பேசும் மக்கள்' என்கிற பொதுமைக்குள் வைத்துத்தான் த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவம் இற்றைவரை பேசிவருவதையும் முஸ்லிம் சமூகம் கடுமையான வெஞ்சத்துடனேயே பார்க்கிறது. கடந்த தேர்தல் மேடையொன்றில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போதுளூ 'முஸ்லிம்களின் தேசியத்தினை ஒளித்து மறைத்துப் பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்' என்று கூறியதை மேற்சொன்ன வெஞ்சத்துக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஆக, அரசியல் அரங்கில் தமிழ் - முஸ்லிம் உறவுக்குரிய அடித்தளமே இன்னும் இடப்படாததொரு நிலையில்தான், த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து கிழக்கில் ஆட்சியமைக்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதுதான் யதார்த்தம்!

இந்த நிலையில், ஐ.ம.சு.முன்னணியுடன் மு.கா. இணைந்து ஆட்சியமைத்தால் அது வரலாற்றுத் துரோகமாக அமைந்து விடும் என்று த.தே.கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள். இவ்வாறான துரோகங்கள் வரலாறு முழுக்க நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தாமும் ஒரு தரப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தமிழ்த் தரப்பினால் தட்டிக் கழிக்கப்பட்டதையும்,  அதை த.தே.கூட்டமைப்பின் இதே தலைமைகள் ஆமோதித்து நின்றதையும் முஸ்லிம் சமூகம் தமக்கிழைக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் துரோகமாகவே இன்றுவரை பார்க்கிறது.

இப்படி எழுதுவது யாருக்கும் கசக்கக் கூடும். அல்லது, என்மீதும் இந்த எழுத்தின் மீதும் இனவாதச் சாயத்தை யாராவது எடுத்து விசிறவும் கூடும். அவ்வாறான விபத்துகளும் ஆபத்துக்களும் இப்படி எழுதுவதால் ஏற்படும் என்பதை நான் மிக நன்றாக உணர்கிறேன். ஆனாலும், இதை எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை! 'முன்னங்கை நீண்டால்தான் முழங்கை நீளும்' என்பார்கள். முழங்கை நீளும் போது முன்னங்கை நீண்டே ஆகவேண்டும்! ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ் - முஸ்லிம் அரசியல் அரங்கில் முன்னங்கையும் நீளவில்லை, முழங்கையும் நீளவில்லை!

இது இவ்வாறிருக்க, கிழக்கில் ஐ.ம.சு.முன்னணிக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாயின், சில பேரம் பேசுதல்கள் இடம்பெறும். நிபந்தனைகளும் கோரிக்கைகளும் மு.கா.வினால் முன்வைக்கப்படும். ஆனால் அவை வெறும் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையாக மட்டும் இருந்து விடக்கூடாது! இதன்போது முஸ்லிம் சமூகத்தின் கனவாகவுள்ள முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றெடுத்தல் வேண்டும். கிழக்கில் நிலவும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை கோர வேண்டும். நிருவாக ரீதியான பிரச்சினைகள் குறித்துப் பேசுதல் வேண்டும். குறிப்பாக, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மாவட்ட செயலாளரொருவரைக் கேட்டுப் பெறுதல் வேண்டும். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதற்குரிய உறுதி மொழிகளை பெற்றெடுக்க வேண்டும். இப்படி, தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தே – மு.கா. தனது பேரம் பேசுதலைத் தொடங்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது!

சரி, முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தால், அதில் யார் அமர்த்தப்படுவார் என்பது இங்கு முளைக்கும் அடுத்த கேள்வியாகும். அப்படியொரு நிலைவரம் உருவாகுமாயின் - அந்தப் பதவியினை அநேகமாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஹாபீஸ் நஸீருக்கே மு.கா. தலைவர் கொடுப்பார் என்பதே நமது அனுமானமாகும். ஹக்கீம் - ஹாபீஸ் நஸீர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம், ஹபீஸ் நஸீரை மு.கா. தலைவர் சில காலமாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றமை என்று – நமது அனுமானத்துக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களைக் கூறலாம்!

இந்த அனுமானம் பலிக்குமாயின், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது இரண்டாவது முறையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சென்றடையும். இந்நிலையானது – ஏனைய மாவட்டங்களில் ஒருவகையான அதிருப்தியினை ஏற்படுத்திவிடவும் கூடும். 

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, மு.கா.வைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியினை ஹக்கீம் ஒருபோதும் பெற்றுக்கொடுப்பதற்கு விரும்பவே மாட்டார் என்கிறார்கள் எதிரணியினர். குறிப்பாக, கிழக்கில் மு.கா.வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவது ஹக்கீமுடைய தலைமைத்துவத்துக்கு ஆபத்தாக அமைந்து விடலாம் என்று ஹக்கீம் அச்சப்படுகிறார். அதனால், முதலமைச்சர் பதவியை ஹக்கீம் மு.கா.வைச் சேர்ந்த எவருக்கும் பெற்றுக் கொடுக்க மாட்டார் என்று தேர்தல் பிரசார மேடைகளிலேயே எதிர்த்தரப்பினர் கூறியதையும் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.

உண்மையாகவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸுக்குப் பெற்றுக் கொடுத்தல் என்பதில் மு.கா. தலைவரின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கும், எதிர்த்தரப்பினர் தெரிவித்துவரும் மேற்படி விடயத்திலுள்ள உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கும் ஓரிரு நாட்கள் நாம் காந்திருந்தே ஆகவேண்டும்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐ.ம.சு.முன்னணியை கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் களத்தில் மு.காங்கிரஸ் தோற்கடித்தமை மு.கா.வுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். இப்போது 'ஆட்சியமைப்போம் வாருங்கள்' என்று அழைக்கும் ஐ.ம.சு.முன்னணியிடம் பேரம் பேசி - தோற்றுப் போன எதிராளியை தன்முன்னால் மு.கா. மண்டியிட வைத்திருக்கிறது - இது மு.கா.வுக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகவும் தெரிகிறது!!

You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 12 September 2012 06:51 AM

    எந்த மாதிரி முடிவை ஹிக்கீம் எடுத்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் பலமான எதிர்கட்சியாக இருப்போம். அதைவிட இந்த மாகாண சபை தேர்தல் எங்களை பொருத்தவரை சிலரை இங்கு இருந்து வெளியே அனுப்பவேண்டும். அதை மக்கள் ஆதரவுடன் 95 % செய்து முடித்துவிட்டோம். இதை விட எங்களுடைய உரிமை விடுதலை பயணத்தில் செல்ல இருக்கிறது. இதில் நாங்கள் இந்த மாகாண சபையில் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டியதும் இல்லை. மீண்டும் இங்கு துரோக அரசியல் செய்வது நாங்கள் அல்ல.. கிழக்கில் தேர்தலில் பள்ளி சமந்தமாக பேசி வாக்கு கேட்ட ஹிக்கீம் இன்று எங்களுக்கு மத்தியில் அந்த அமைச்சு பதவி மாகணத்தில் இந்த பதவி என்று பேசுகிறார் என்று முஸ்லிம் நண்பர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். உங்களுடைய அரசியல் கட்டுரையை ஒருமுறை பார்ப்பது நல்லது.

    Reply : 0       0

    M.Thowfeek Tuesday, 18 September 2012 05:45 PM

    மஹ்ரூப் நீங்கள் சொன்னது 100% சரி.

    Reply : 0       0

    alm.faizar Monday, 17 September 2012 04:47 AM

    மஹ்ரூப் நீங்கள் சொன்னது 100% சரி.

    Reply : 0       0

    ss Sunday, 16 September 2012 09:27 AM

    தமிழர்கள் ஒன்று சேர வேண்டும்....இதுவே எதிர் காலத்திற்கும் நல்லது, மொழியால் இணைவோம்.

    Reply : 0       0

    kuhan Friday, 14 September 2012 03:49 PM

    ஆளும் கட்சியில் இருக்கின்ற எவராவது இதுவரை தமிழர்களின் தனி இன அடையாளத்தை ஏற்றுக் கொள்வதாகவோ, அல்லது சுயநிர்ணயம் உள்ளதாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை.
    ஆளும் கட்சியில் இருக்கின்ற எவராவது இதுவரை முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தை ஏற்றுக் கொள்வதாகவோ, அல்லது முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணயம் உள்ளதாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை
    இது செய்ய வேண்டியது த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அல்ல ஜ.ம.சு கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ.
    அததான் சொல்லுறம் சேர்ந்து கேட்பம் என்று

    Reply : 0       0

    Minwar Friday, 14 September 2012 01:09 PM

    த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அல்லது அந்தக் கட்சியில் இருக்கின்ற எவராவது இதுவரை முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தை ஏற்றுக் கொள்வதாகவோ, அல்லது தமிழர்களைப் போன்று முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணயம் உள்ளதாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. த.தே.கூட்டமைப்புக்கு இப்போது அரசுக்கு எதிரான ஒரு ஆட்சியை கிழக்கில் அமைக்க வேண்டும். வழமை போல் முஸ்லிம் தரப்பை தமது தேவைக்காகப் பயன்படுத்த நினைக்கின்றார்கள். மப்ரூக்கின் கட்டுரை அப்பட்டமான உண்மையாகும்.

    Reply : 0       0

    Kuhan Friday, 14 September 2012 09:12 AM

    கிழக்கில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணங்கி போவதே சிறந்த தீர்வாக இருக்கும்.

    Reply : 0       0

    ஜனநாயகன் Friday, 14 September 2012 07:31 AM

    நன்றாக எழுதியுள்ளீர்கள் மஹ்றுப் அவர்களே, முஸ்லீம்களின் தேசியக் கொள்கைகள் என்று எல்லாம் கதைக்குறீங்க. அமைச்சர் ஹக்கீம் ஆட்சியிலுள்ளவர்களால் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகிறது என்று தேர்தல் மேடையில் கூறிவிட்டு மன்னிப்பு கேட்டார் மறந்து விட்டீர்களா?

    Reply : 0       0

    குமார் Wednesday, 12 September 2012 08:33 AM

    இப்படி வெற்று கமெண்ட் எழுதாமல் அப்படி என்ன தமிழ் சமூகத்தால் விளங்கிக்கொள்ள முடியாத யதார்த்தம் இந்த கட்டுரையில் உள்ளதென விளங்கபடுத்தலாமே?

    Reply : 0       0

    ramzeenmramees Wednesday, 12 September 2012 08:21 AM

    இதுக்கு பேசாம முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடயே தேர்தல்ல போட்டி போட்டிருக்கலாம்... சும்மா முஸ்லிம்கள திசை திருப்புற வேல...

    Reply : 0       0

    AJ Tuesday, 11 September 2012 10:48 AM

    இங்கு தமிழ் தேசிய க கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தங்களோட வந்து இணைத்து ஆட்சி அமைக்குமாறு இங்கு யாரும் வற்புறுத்தவில்லை. அதே நேரம் யாரும் இங்கு துரோம் பற்றி பேச வில்லை. எதையும் எழுத முன்னர் ஒரு தரம் பார்ப்பது நல்லது. அதிக ஆசனம் பெற்ற கட்சிகள் என்ற வகையில் அரசு மற்றும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுப்பது சாதாரணம். அதன் இங்கு நடந்து இருக்கிறது. வருவதும் வராமல் இருப்பதும் அது முஸ்லிம் காங்கிரஸ் பொருத்தது.

    Reply : 0       0

    aj Wednesday, 12 September 2012 06:50 AM

    அடுத்து தேர்தல் முடிந்து முஸ்லிம் தமிழர் உறவில் அடுத்த படி நோக்கி செல்வத்துக்கு கிடைத்த சந்தர்ப்பமாகவே நாங்கள் இதை பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு ஐயா அவர்கள் விடுத்தார். இது அவரின் கடமை. அதை ஏற்பது, ஏற்காமல் இருப்பது இருப்பது ஹிக்கீம் அவர்களின் உரிமை. இங்கு யாருக்கும் ஏதும் பிரச்சனை இல்லை. அதை உங்கள் சிறுபிள்ளை தனமான கட்டுரை சுட்டிக்காட்ட மறந்துவிட்டது. மீண்டும் மீண்டும் தமிழர் முஸ்லிம் பற்றி துரோம்கம் பேசுகிறார்கள் என்று எழுதுவது யாருக்கும் அழகு இல்லை.

    Reply : 0       0

    aj Wednesday, 12 September 2012 06:48 AM

    பேசாத ஒன்றை எழுதி மேலும் இரு இனங்களுக்கும் இடையில் விரிசலை ஏற்பாடு முயற்சி செய்கிறிர்கள் என்று என்ன தோன்றுகிறது. அடுத்தது தேர்தல் முடிந்து. பல பள்ளி அரசியல் அதுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் மற்றும் உலமா கட்சி தொடக்கம் பலர் முஸ்லிம் காங்கிரஸ் துரோகம் செய்ய போகிறது வாக்களித்த மக்களுக்கு என்று தினமும் சொல்லிக்கொண்டு நிக்கிறார்கள்.1/2

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 12 September 2012 06:21 AM

    இங்கே அரச கட்சியில் கேட்ட முஸ்லிம்கள் அகில இலங்கை காபிர்கள்,முனாபிக்குகள், காட்டி கொடுபோர், சமூக துறோகிகள் என உச்ச கட்ட வார்தை பிரயோகங்களால் துவேசிக்கபட்டிருந்தும் கூட கிழக்கு மாகாண முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்திருப்பது உலமாக்களின் இஸ்லாதின் பேரில் இயற்றபட்ட பூச்சாண்டி பிரசாரமும் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. ஆக இவ்வளவு கேவலமான பிரச்சரதிட்கும் மத்தியில் அரச தரப்பு 7 முஸ்லிம் பிரதிநிதித்துவதை பெற்றிருப்பது பெரும் வெற்றியாகும்.

    Reply : 0       0

    Hazeer Wednesday, 12 September 2012 05:15 AM

    குமார், நீங்க நன்ட்ராகவே ஜோக் அடிக்கிரீங்க.
    மப்ரூக் சொல்வதன் யதார்த்தத்தை இன்னும் தமில் சமூகம் புரிந்துகொள்ள வில்லை என்பதே அஜ் என்பவரினதும் குமாரினதும் குறிப்புகளின் வெளிப்பாடாகும் .

    Reply : 0       0

    manithan Wednesday, 12 September 2012 01:59 AM

    இந்த மாகாண சபையின் முழுமையான அதிகாரத்தை ( 13 வது திருத்த சட்டம் ) அமுல்படுத்துவதற்கு தமிழ் தரப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே சிறந்தது..
    எந்த தரப்பும் எந்த தரப்புடனும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம்.. அது துரோகம் ஆகாது.. அது அவரவரது உரிமை..
    எவரையும் நம்பி முடிவு எடுப்பதை விட.. எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவை எடுப்பதுவே சிறந்தது..

    Reply : 0       0

    kamran Tuesday, 11 September 2012 01:46 PM

    You are totally wrong. There is third way also.
    3. UPFA+ TNA can form the council.

    Reply : 0       0

    குமார் Tuesday, 11 September 2012 01:04 PM

    திரு மப்ரூக் அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் , யாரும் தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களை திணிக்க முற்படவில்லை அதற்கான அவசியமும் இல்லை. தமிழ் பேசும் மக்கள் அல்லது சிறு பான்மை மக்கள் என்ற முறையிலேயே தமிழர்கள் முஸ்லிம்களுடன் ஒரு இணக்கப்படிட்கு வர விரும்புகின்றனர்.

    Reply : 0       0

    aj Tuesday, 11 September 2012 10:56 AM

    முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் என்று பேசி வந்தது எல்லோரும் அறிந்தே இங்கு முதலமைச்சர் பதவிக்கே வெட்டு குத்து.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X