2025 மே 19, திங்கட்கிழமை

மு.கா.வின் முடிவை நிர்ணயிக்கும் நிர்ப்பந்தங்கள்

Super User   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் இரண்டு காரணிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெற்றித் தோற்றப்பாடும் இன உணர்வுமே அந்த இரண்டு காரணிகளாகும்.

தமது கொள்கைகள், சுலோகங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றால் மக்களை கவரலாம் - அக் கொள்கைகள், சுலோகங்கள் வாக்குறுதிகள் ஆகியவற்றை வாக்குகளாக மாற்றலாம்  என்று அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் அவை தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் பெரும் பங்களிப்பை வழங்குவதில்லை. அவற்றின் பங்களிப்பு மிகச் சிறியதாகும்.

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வந்தபோது மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது வாக்குறுதியளித்தார். இரண்டாவது முறை பதவிக்கு வந்து தம்மால் முடிந்த வரை காலம் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக்கூடிய வகையில் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையே கொண்டு வந்தார்.

நாட்டில் ஊழல் மோசடி மலிந்துவிட்டது என்றும் வானலாவ உயரும் விலைவாசிக்கு அதுவே காரணம் என்றும் எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. மறுபுறத்தில் போர் முடிந்த பின் மக்களுக்கு சலுகை வழங்குவதாக கூறிய அரசாங்கம், போர் முடிவடைந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் மக்களுக்கு சலுகை வழங்கவில்லை என்றும் எதிர்க் கட்சிகள் குறை கூறுகின்றன.

ஆனால், மக்கள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வெறுப்பதாக தெரியவில்லை. இன்னமும் எந்தத் தேர்தல் நடந்தாலும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியே அமோக வெற்றி பெற்று வருகிறது. எனவே தேர்தல்களின் போது தேர்தல் விஞ்ஞாபனங்களில் வரும் கொள்கைகளோ அல்லது அரசியல் கட்சிகளின் நடத்தையோ முக்கியமானதாக தெரியவில்லை.

அவ்வாறாயின் மக்கள் எதற்காக ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களிக்கிறார்கள்? மற்றொரு கட்சி நாளை பதவிக்கு வரக்கூடிய நிலைமை இருந்தால் மக்கள் இவ்வாறு ஐ.ம.சு.கூவுக்கு அலை அலையாக வாக்களிப்பார்களா? தாம் வாக்களிக்கும் கட்சி பதவிக்கு வர வேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள். அல்லது கொள்கைகள் எவையாக இருந்தாலும் பதவிக்கு வரக் கூடிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சுருக்கமாக கூறின் வெற்றி பெறும் அணியில் தாமும் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.
 
இந்த வெற்றித் தோற்றப்பாடு இப்போதைக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பிடமே காணக்கூடியதாக இருக்கிறது. எனவே தான் அரசாங்கத்தின் தலைவர்கள் எவ்வளவுதான் வாக்குறுதிகளை மீறினாலும் மக்கள் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கே வாக்களிக்கிறார்கள். ஐ.தே.க.விடமிருந்து அந்த தோற்றப்பாடு தென்படுவதில்லை. எனவே அக்கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது.

வடக்கு, கிழக்கு பகுதிகளை பொறுத்தவரை இன உணர்வே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் பிரதான சக்தியாக இருக்கிறது. இதனை விளங்கிக் கொள்ளாத சிலர் மக்கள் இன ரீதியாக பிரிந்து வாக்களித்துள்ளதாக ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் கூறுகிறார்கள். இம்முறையும் கிழக்கில் தமிழர்கள் செறிவாக வாழும் தொகுதிகளில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பெரும்பாலான மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.

ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ள போதிலும் அவற்றை அக் கூட்டமைப்போடு இணைந்து போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு அளித்த வாக்குகளாகவே கருத வேண்டியிருக்கிறது.

எதிர்பார்த்ததைப் போலவே கிழக்கு மாகாணத்தில இன வாரியான முக்கோண போட்டியே நடைபெற்றது. அதேபோல் போட்டியிட்ட மூன்று பிரதான கட்சிகளில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதுவும் எதிர்ப்பார்த்த முடிவுதான். எனினும் தேர்தலின் பின்னர் இந்த முடிவு மு.கா.வின் பெறுமதியை அதிகரித்துள்ளது. அதன் கைகளை பலப்படுத்தியது.

கிழக்கு மாகாண நிர்வாகத்தை நிர்ணயிக்கப்போவது தாமே என மு.கா. தேர்தல் காலத்திலும் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னரும் கூறியது. ஐ.ம.சு.கூவும் த.தே.கூவும் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டா என்ற அடிப்படையில் பார்க்கும் போது அது உண்மை தான். ஆனால் ஐ.ம.சு.கூவுக்கும் த.தே.கூவுக்கும் இவ்வாறே கூற முடியும். ஏனெனில் இந்த மூன்று அணிகளில் எந்த இரண்டு சேர்ந்தாலும் கிழக்கில் ஆட்சி அமைக்க முடியும்.

கிழக்கு மாகாண சபைக்காக தனித்து போட்டியிட்ட போதிலும் தேர்தலின் பின்னர் தமது கட்சி ஐ.ம.சு.கூவுடன் கூட்டாட்சி அமைக்கக்கூடும் என மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் வேட்பு மனு தாக்கல் செய்த உடன் கூறியிருந்தார். ஆயினும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆளும் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பதா என்பதைப் பற்றி தீவிரமாக சிந்தித்தே முடிவு இடுக்க வேண்டியுள்ளது என அவர் கூறியிருந்தார். இன்னமும் அது தொடர்பாக அவர் முடிவொன்றை வெளியிடவில்லை.

ஐ.ம.சு.கூவுடன் கூட்டாட்சி அமைப்பதாக மு.கா.தலைவர் முன்னர் கூறிய போதிலும் தேர்தல் காலத்தில் இரு சாராருக்கும் இடையிலான உறவு ஓரளவு பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சியினர் மு.கா. வேட்பாளர்களை தோற்கடிக்கச் செய்வதற்காக அரச வளங்களையும் அரச பலத்தையும் பாவித்தனர். பொலிஸாரும் தமக்கு எதிராக செயற்பட்டதாக மு.கா. முறையிட்டது.

மு.கா. இனவாதத்தை தூண்டுவதாக ஆளும் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். சிலர் இனவாதத்தை தூண்டி தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக ஜனாதிபதியும் கூட கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். மு.கா. ஆதரவாளர்களும் அமைச்சர் அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதால் மு.கா. - தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்குமோ என்றும் சிலர் சிந்திக்க காரணம் இருந்தது. மறுபுறத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கத் தயார் என்று கூறிய த.தே.கூ, தேர்தல் காலத்திலும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் ஆட்சி அமைக்க வருமாரு மு.கா.வை அழைத்த வண்ணமிருக்கிறது. இனவாதிகள் என மு.கா.வை தேர்தல் காலத்தில் திட்டிக்கொண்டு இருந்த ஆளும் கட்சியும் இப்போது மு.கா.வின் ஆதரவை நாடி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து மு.கா.  ஆட்சி அமைத்தால் அது 2001 பொதுத் தேர்தலை தவிர 1994ஆம் முதல் ஐ.ம.சு.கூ. அடைந்த மிகப் பெரும் பின்னடைவாக அமையும். சிலவேளை 17 ஆண்டு கால ஐ.தே.க. ஆட்சியின் சரிவு 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தென் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி அடைந்த தோல்வியோடு ஆரம்பித்ததை போல் ஐ.ம.சு.கூ. - கிழக்கு மாகாண சபையை இழந்தால் அது ஐ.ம.சு. கூட்டமைப்பின் சரிவின் ஆரம்பமாகவும் அமையலாம்.

மு.கா. உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான கூட்டாட்சியை விரும்புவார்களா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் மு.கா. - ஐ.ம.சு.கூ வுடன் போட்டியிடாமல் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்த போது மு.கா. ஆதரவாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இது மு.கா. ஆதரவாளர்களின் மனப் போக்கை காட்டுகிறது.
 
மு.கா. - தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் மு.கா. மத்திய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வைத்திருப்பதும் சிக்கலான விடயமாகிவிடும். அதனால் மு.கா. தலைவர் அரசாங்கத்தில் இருந்து விலகினால் அரசாங்கம் உடனடியாக அவருக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்பை வாபஸ் பெறும்.

அது மட்டுமல்ல. மு.கா. - தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைத்து அரசாங்கத்திலிருந்து விலகினால் அரசாங்கம் மு.காவின் சில முக்கியஸ்தர்களை விலைக்கு வாங்கும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு அரசாங்கத்தில் சேர்ந்து கொள்ளக் கூடியவர்களும் இருக்கின்றனர்.

ஒருமுறை ஐ.ம.சு.கூ அரசாங்கத்தில் இருந்து விலகிய மு.கா. தலைவர் அரசாங்கத்தின் இவ்வாறான திட்டம் ஒன்றின் விளைவாகவே மீண்டும் அரசில் சேர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. மு.கா. அரசாங்கத்தில் இருந்து விலகி சில காலம் சென்ற பின் அரசாங்கம் சில முக்கிய மு.கா. பிரமுகர்களை விலைக்கு வாங்க முயற்சித்ததாகவும் அதனை அறிந்த மு.கா. தலைவர் கட்சி உடைவதை தடுக்கும் நோக்குடன் குறைந்த பேரம் பேசும் பலத்துடன் மீண்டும் அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒருபுறம் ஆதரவாளர்களின் மனப்போக்கு, மறுபுறம் கட்சி உடையும் அபாயம். எனவே எந்த முடிவை எடுத்தாலும் மு.கா. அதனை பெரும் நெருக்கடிக்குள் தான் எடுக்க வேண்டியிருக்கிறது.

You May Also Like

  Comments - 0

  • mohamed Thursday, 20 September 2012 04:09 AM

    யதரர்தம் பலருக்குப் புரிவதில்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X