2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.ம.சு.கூ.வுடன் சேர்வதை தவிர மு.காவுக்கு இருந்த தெரிவு என்ன?

Super User   / 2012 செப்டெம்பர் 23 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                             

கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

உண்மைதான், கொள்கை எப்படிப் போனாலும் மு.காவின. நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே பலருக்கு விளங்கிக் கொள்ள முடியாதவையாகவே அமைந்தன. அவை தர்க்க ரீதியாக அமையவில்லை என்றே கூற வேண்டும்.

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும்போதே அவரது கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக ஐ.ம.சு.கூட்டணியோடல்லாமல் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இது தர்க்க ரீதியாக கிரகித்துக் கொள்ள பலரால் முடியாது போய்விட்டது.

விமல் வீரவன்ஸவும் அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும் போதே அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் திருகோணமலை மாவட்டத்தில் தனியாக போட்டியிட்டது. ஆயினும் அரசாங்கத்தில அமைச்சு பதவியை வைத்துக் கொண்டே அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடுவதில் உள்ள முரண்பாட்டுத்தன்மை முஸ்லிம் காங்கிரஸிடமே தெளிவாக தெரியலாயின. மு.கா.வின் முடிவு கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுக்கு முக்கியமானதாக அமைவதே அதற்குக் காரணமாகும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலின் போதும் அதன் நிர்வாகத்தை நிறுவும் போதும் மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டது என்பதை ஏற்கத் தான் வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் கொள்கைப் பொறுப்போடு எந்தக் கட்சி செயற்பட்டது என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில் இவ்விடயத்தில் சகல கட்சகளும்; தத்தமது பலத்தை வளர்த்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டது அல்லது வாதங்களை முன்வைத்தது.

இங்கு பலர் புறக்கணிக்கும் விடயம் ஒன்று இருக்கிறது. பல சிறிய கட்சிகளைப் போலவே மு.கா.வும் ஆளும் கட்சியின் பணயக் கைதியாக இருக்கிறது என்பதே அந்த விடயமாகும். கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஸ்தாபிப்பதிலும் இந்த விடயமே முக்கிய காரணியாக செயற்பட்டது. எனவே கிழக்கு மாகாணம் தொடர்பாக தற்போது கிடைத்திருக்கும் முடிவைத் தவிர வேறெந்த முடிவுக்கும் இடம் இருக்கவேயில்லை.

தமது கட்சி ஐ.ம.சு.கூட்டணியின் பணயக்கைதி என்பதை அமைச்சர் ஹக்கீம் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். எனவேதான், தனியாக போட்டியிட்ட போதிலும் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை நிறுவுவதற்காக தமது கட்சி ஐ.ம.சு.கூட்டணியோடு கூட்டு சேரும் என ஹக்கீம் வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் பகிரங்கமாக கூறியிருந்தார்.
தனியாக போட்டியிட்டது மு.கா.வினால் இப்போதைக்கு தனித்து செயற்பட முடியும் என்பதற்காகவல்ல. எதிர்கால தேசிய மட்டத் தேர்தல்களின் போது தேவைப்படும் பேரம் பேசும் சக்தியை வளர்த்துக் கொள்ளவும் அதனை உலகுக்குக் காட்டவுமே இந்தத் தேர்தல் மு.கா.வுக்கு உதவியது.

நாம் இதற்கு முன்னர் பல முறை கூறியதைப் போல் மு.கா. இம்முறை கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை நிறுவுவதில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நிர்வாகத்தை அமைத்து இருந்தால் சிலவேளை அது ஐ.ம.சு.கூட்டணியின் சரிவின் ஆரம்பமாகவும் அமைந்திருக்கலாம். தொடர்ந்து தேர்தல்களில் வெற்றிபெற்று வரும் ஐ.ம.சு.கூட்டணி கிழக்கு மாகாண தேர்தல் தோல்வியால் பெரும் பின்னடைவை அடைவதே அதற்குக் காரணமாகும்.

சிலர் அது 1993 ஆம் ஆண்டு தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு ஐ.க்கிய தேசிய கட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்ததைப் போலாகிவிடும் என்றும் கூறுகின்றனர். அரசாங்கத்திற்கும் அவ்வாறானதோர் அச்சம் இருக்கிறது. எனவே தான் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்துக் கொண்டு வருகிறது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசாங்கத்தின் முன்னேற்றத்தை தடுத்து, அதன் சரிவிற்கான முதற் படியை அமைத்திடும் வாய்ப்பை மு.கா. தவறவிட்டது என்றே எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. எனவே மு.கா. மீதான எதிர்க்கட்சிகளின் கோபத்தை புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் காங்கிரஸானது குர்ஆனை கைவிட்டு விட்டு மஹிந்த சிந்தனையை கையிலெடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மு.கா அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் அளித்த வாக்கைப் பெற்றுக் கொண்டு அம் மக்களை காட்டிக் கொடுத்துவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியிருந்தது. மு.கா ஆடு மாடுகளைப் போல் விலைக் கோhரப்பட்டு விலைப் போகிறது என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் கருத்தாகிறது.

ஆனால், தேர்தல் காலத்தில் மு.கா.வை கடுமையாக சாடிய அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதே புத்திசாளித்தனம் என மௌனமாக இருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தில் குர்ஆனை சம்பந்தப்படுத்திக் கொள்வது முறையல்ல. ஏனெனில் மு.கா. ஐ.தே.க. மற்றும் த.தே.கூ.வுடனும் சேர்ந்து மாகாண சபை நிர்வாகத்தை அமைத்தாலும் அதுவும் குர்ஆனின் ஆலோசனையாக அமையப் போவதில்லை. த.தே.கூ. கூறுவதும் நூறுவீதம் சரியான வாதம் அல்ல. தேர்தல் காலத்தில் மு.கா. ஆரசாங்கத்தை விமர்சித்தமை உண்மை தான். ஆனால் மக்கள் அரசாங்கத்தில் சேர வேண்டாம் என்றா மு.காவிற்கு வாக்களித்தார்கள்? தேர்தலின் பின்னர் தமது கட்சி ஆளும் கட்சியுடன் சேர்ந்து கொள்ளும் என மு.கா. தலைவர் பகிரங்கமாக கூறியிருந்த நிலையில் மக்கள் அளித்த வாக்கு தூய அரச எதிர்ப்பு வாக்கு என்று முடிவு செய்யலாமா? 

வழமையாக தேர்தல் காலத்தில் பேரம் பேசும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் சிங்கள தேசியவாத கட்சிகளும் குழுக்களும,; ஏனோ தெரியவில்லை, இம் முறை வாய்திறக்கவில்லை. எதைக் கொடுத்தாவது அரசாங்கம் மு.கா.வை வளைத்துக் கொள்ளாவிட்டால் மு.கா. த.தே.கூட்டமைப்புடன் ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள் போலும். எனவே சிறுபான்மைக் கட்சிகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டாம் என்ற அவர்களது பழைய பல்லவி இம்முறை கேட்கவில்லை.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மட்டும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை புறக்கணித்துவிட்டு மாகாண ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதாயின் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கிழக்கு மாhகாண சபைத் தேர்தலின் போது த.தே.கூ. அல்லது மு.கா.வின் ஆதரவில்லாமல் ஆளும் கட்சிக்கு எவ்வகையிலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை அவருக்கு விளங்கவில்லை போலும். அதேவேளை மு.கா.வின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காகவே அரசாங்கம் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவ்வாறு இருக்க முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதாயின் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறும் போது அது மு.கா.வின் கோரிக்கையை ஏற்றதாகிவிடும் என்றும் அவருக்கு விளங்கவில்லை போலும்.

கடந்த வாரங்களில் நாம் கூறியதைப் போல் மு.கா. அரசாங்கத்திலிருந்து பிரிந்தால் அக் கட்சித் தலைவர்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகள் எழும். அரசாங்கம் பணத்தை அள்ளி வீசி மு.கா. உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அல்லது அவர்களை மிரட்டி அரசாங்கத்தில் சேர வைத்து மு.கா.வை உடைக்கும். இது மு.கா. தலைமைக்கு தெரியும்.

எனவே மு.கா. எவ்வகையிலும் ஆளும் கட்சியுடன் சேரவே இருந்தது. ஆனால், தேர்தலின் போது தமக்கு கிடைத்த பலத்தை பாவித்து பேரம் பேசுவதற்காகவே த.தே.கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதைப் போலவும் காட்டிக் கொண்டது. மு.கா பிரிந்து போகாது என்று அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், ஹக்கீம் ஒரு முறை எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு போனவர். மறுபுறத்தில் அரசாங்கத்திலுள்ள ஏனைய இரண்டு முஸ்லிம் கட்சிகளுக்கு அரசாங்கத்திற்குள் இருக்கும் வரவேற்பும் மதிப்பும் மு.கா.விற்கு இல்லை.

ஆகவே மு.கா. சிலவேளை போய்விடுமோ என்ற சிறியதொரு பயமும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் இருந்தது. இந்த நிலையில் கூட்டு சேர்வதற்கான மு.காவின் கோரிக்கைகளை எடுத்த எடுப்பில் உதறித் தள்ள முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

மு.கா. கிழக்கு மாகாண காணிப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை முன்வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு கஷ்டமானதாக அமைந்து இருக்கும். ஆனால், கிழக்கு மாகாண முலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றே மு.கா. தலைவர் கேட்டிருந்தார். த.தே.கூ. இந்த கோரிக்கையை ஏற்று இருந்ததால் அரசாங்கத்தால் அக்கோரிக்கையை முற்றாக புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

முதலமைச்சர் பதவியை மு.கா.விற்கு வழங்குவதை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள் விரும்ப மாட்டா. அப்பதவிவை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு வழந்குவதை விரும்பினாலும் அக் கட்சிகள் அதனை மு.கா.விற்கு வழங்குவதை விரும்பமாட்டா.  அக் கட்சிகள் மு.கா.வை விட அரசாங்கத்திற்கு விசுவாசமான கட்சிகளும் கூட. எனவே முதலமைச்சர் பதவியை மு.கா.விற்கு வழங்குவதும் அரசாங்கத்திற்கு சங்கடமான நிலையை உருவாக்கும்.

அதேபோல் முதலமைச்சர் பதவியை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்குவதை மு.கா.வும் விரும்ப மாட்டா. அக் கட்சியும் அப் பதவிவை சந்திரகாந்தனுக்கு வழந்குவதை விரும்பினாலும் அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்குவதை விரும்பாது. ஏனெனில் அவ்வாறு வழங்கினால் அது கிழக்கு மாகாணத்தில் மு.கா.வின் இருப்பையே பாதிக்கும்.

அரசாங்கத்திற்கு மு.கா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பக்கம் சாராமல் தம் பக்கம் சார்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவும் வேண்டும், அதற்காக முதலமைச்சர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்கவும் வேண்டும், அப்பதவியை மு.கா.விற்கு வழங்குவதை அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கட்சிகள் விரும்புவதும் இல்லை, அக்கட்சிகளுக்கு வழங்குவதை மு.கா. விரும்புவதும் இல்லை.

இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்த விளைவாகவே இலங்கையின் மாகாண சபை வரலாற்றில் முதலாவது முஸ்லிம்  முதலமைச்சர் பதவி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரரான நஜீப் ஏ. மஜீத்தை சென்றடைந்தது. இது தற்போதைக்கு எல்லோரையும் சமாதானப்படுத்தும் தீர்வாக அமைந்து இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் தமது கட்சிக்கு முதலமைச்சர் பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் மு.கா. கூறுகிறது. ஆனால் அது நடந்தால்தான் உண்மை.

முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க முடிந்திருந்தால் அரசாங்கம் அதனையே விரும்பியிருக்கும். ஏனெனில் தமிழ் முதலமைச்சர் ஒருவர் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் நல்ல காட்சிப் பொருளாகிவிடுவார். ஆனால் ஆளும் கட்சியில் உள்ள ஒரே தமிழ் உறுப்பினரை முதலமைச்சாரக நியமிப்பது முறையல்ல என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம்.

அதேவேளை மு.கா.வும் த.தே.கூ.வும் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்தித்துவிட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X