2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியா: யாருக்கு வேண்டும் இடைத்தேர்தல்?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கான ஆதரவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் விலக்கி கொண்டதை தொடர்ந்து, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு இடைத்தேர்தல் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசிலிருந்து மற்ற எந்த கட்சியும் விலக முயலாததை தொடர்ந்து, அந்த கேள்வி இன்னும் சிறிது காலத்திற்கேனும் தொடர்ந்து கேள்வியாகவே இருக்கும். இடைப்பட்ட காலத்தில், அரசின் ஸ்திர தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்தாலும், அவையும் கேள்விகளாகவே இருக்கும் என்பதே தற்போதைய நிலைமை.

மன்மோகன் சிங் அரசில், அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 205 இடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸுக்கு 19 இடங்கள், பின்னர் தமிழ் நாட்டில் இருந்து திமுக-விற்கு 1இல் இடங்கள் என்ற கணக்கில் செல்கிறது. திரிணாமுல் மந்திரிசபையில் இருந்து விலகி ஆட்சிக்கான ஆதரவையும் விலக்கிக் கொண்ட பிறகு, காங்கிரஸ் தலைமைக்கு பிறது, கூட்டணியில் திமுக-வே இரண்டாவது பெரிய கட்சி. அதற்கு எதிராக, தமிழ் நாட்டில் ஆளும் கட்சியாகவும் மத்தியில் எதிர் கட்சியாகவும் செயல்படும் அஇஅதிமுக-விற்கு ஒன்பது இடங்களே உள்ளன. கட்சி மாறினால், ஆட்சி மாறுவதில் உள்ள சிக்கல்களுக்கு இது ஒரு 'சாம்பிள்' மட்டுமே.

கடந்த ஆண்டு தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, முதலமைச்சர் ஜெயலலிதா, அடுத்ததாக அஇஅதிமுக தலைநகர் டெல்லியை குறிவைக்க வேண்டும் என்று கூறிவருகிறார். அதன் பொருள், முடிந்தால் அவர் முதல்வராக வேண்டும், அல்லது கடந்த 1998-99 காலகட்டத்திற்கு பின்னர் அஇஅதிமுக-வின் ஆதரவுடனேயே அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் கருதுகிறார். இந்த ஒரு காரணத்திற்காகவே, பிரதமர் பதவிக்கு அவரை ஆதரிக்கவோ, அவரது ஆதரவை பெறுவதற்கோ பிற கட்சிகள் அனைத்துமே தயக்கம் காட்டும். வாஜ்பாய் அரசிற்கான ஆதரவை அதிரடியாக அவர் பின்வாங்கியதும், முதல்வர் பதவியில் அமரும் போதெல்லாம் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் அவர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பொதுவாகவே ரசிக்கப்படுவதில்லை.

திமுக-வை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிரடி தோல்வி அளித்த 'ஷாக்'-கில் இருந்து அந்த கட்சி முற்றிலுமாக விடுபடவில்லை. விலைவாசி உயர்வு, சிறு வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசில் பங்கு வகிக்கும் திமுக-வால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியவில்லை. மாநிலத்தில், மணிக்கணக்கில் தொடரும் மின்வெட்டு, கூடம்குளம் பிரச்சினையில் ஜெயலலிதா அரசின் குழப்பமான முடிவுகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலைமையில் வழக்கமாக காணப்படும் அஇஅதிமுக அரசுகளின் தெளிவான போக்கு தற்போது இல்லாமை ஆகியவை அந்த கட்சியின் ஆதரவை அசைத்துப் பார்க்கிறது என்று திமுக கருதுகிறது.

ஆனால், இவையெல்லாம் இன்னமும் 'திமுக ஆதரவு' நிலையாக மாறிவிடவில்லை என்றும் கட்சி தலைமை நினைப்பதாக தோன்றுகிறது. இந்த பின்னணியில் மக்களவை தேர்தலை சந்திக்க அந்த கட்சி இன்னமும் தயாராகவில்லை. முக்கியமாக, திரிணாமுல் காங்கிரஸ் விலகிய பிறகு, ஆளும் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி என்று பெற்றுள்ள அந்தஸ்தை திமுக இழப்பதற்கு அவசியமோ, அவசரமோ இல்லை. தனது உள்கட்சி பிரச்சினைகளில் இருந்து தமிழ் நாட்டு வாக்காளர்களை திசை திருப்பவே திமுக நாடகமாடியது என்று அஇஅதிமுக மக்களிடையே பிரசாரம் செய்தால், அதனை இல்லை என்று நிரூபிக்கும் நிலைமையில் அந்த கட்சி இல்லை என்பதும் உண்மை.

ஓர் அணி, இரு கட்சி
தமிழ் நாட்டில் இருந்து, திமுக-வும், அஇஅதிமுக-வும் மத்தியில் ஒரே அணியில் இருந்து செயல்படும் வாய்ப்புகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். எழுபதுகளில் ஒரு முறை, எண்பதுகளில் ஒரு முறை, தொண்ணூறுகளில் ஒரு முறை என்று மூன்று முறை, முன்னாள் ஒடிசா மாநில முதலமைச்சர், காலம்சென்ற பிஜூ பட்நாயக், தமிழ் நாட்டில் உள்ள இரண்டு திராவிட கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்து, தோல்வியே அடைந்தார். இன்று, அவரது மகனும் ஒடிசா மாநில முதலமைச்சருமான நவீன் பட்நாயக், தனது தந்தையின் பெயரில் பிஜூ ஜனதா தளம் என்று தனி கட்சி தொடங்கி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவரது கட்சிக்கு மக்களவையில் 14 இடங்களே உள்ளன. மாநில அரசியவை மனதில் வைத்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்த அந்த கட்சி, ரஜினிகாந்த் பாணியில் 'என் வழி, தனி வழி' என்று அரசியல் செய்ய தொடங்கியும் சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் முலாயம் சிங் யாதவ் தலைமையில் உள்ள சமாஜ்வாதி கட்சி (22 இடங்கள்), மற்றும் முன்னாள் முதல்வர் மாயவதி தலைமையில் எதிர்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் (21) மத்திய அரசிற்கு மந்திரி சபையில் பங்கு பெறாமல் 'வெளியில் இருந்து' அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளன. காரணம், அவர்கள் இருவருமே மக்களவை தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. அந்த இரு கட்சிகளின் தலைவர்களுமே பிரதமர் பதவிக்கு குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள்.

முலாயம் சிங்கிற்கு கடந்த மாயாவதி ஆட்சியின் ஊழல்களை மேலும் வெளியே கொண்டு வருவதுடன், புதிய நலத்திட்டங்களையும் முன்வைத்து முதலமைச்சரான தனது மகன் அகிலேஷ் யாதவின் அரசுக்கான ஆதரவு இன்னமும் பெருகினால் மட்டுமே தனக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்ற எண்ணம். அதற்காக கால அவகாசம் தேவை. மாயாவதிக்கோ, அகிலேஷ் யாதவ் அரசின் மீதான மக்களின் 'மாயை' மாறுவதற்கு கால அவகாசம் தேவை.

சோனியாவிற்கு 'சீட்' இல்லை?
வேடிக்கை என்னவென்றால், கடந்த சட்டசபை தேர்தலில், மத்தியில் ஆளும் காங்கிரஸ், இந்த இரண்டு கட்சிகளையும் விட மிக குறைந்த இடங்களே பெற்றது. இன்னும் சொல்லப் போனால், காங்கிஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரது நாடாளுமன்ற தொகுதிகளின் கீழ் வரும் சட்டப்பேரவை இடங்களையே அந்த கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. வெறும் தேர்தல் கணக்கை வைத்து மட்டும் பார்க்கும் போது, சோனியா, ராகுல் ஆகிய இரு தலைவர்களுமே எதிர்வரும் 2014 மக்களவை தேர்தலில் தங்களது தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள இந்த இரு கட்சிகளில் ஒன்றின் ஆதரவை பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. காங்கிரஸுக்குப் பின்னர் மாநிலத்தில் ஆட்சியை பிடித்த தேசிய கட்சியான பாரதீய ஜனதா கூட கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டது. மக்களவையில் 80 இடங்கள் உள்ள உத்தர பிரதேசத்தில் நிலைமை இப்படியென்றால், பிற மாநிலங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

தலைவர் இல்லாத பாஜக
எப்போதுமே காங்கிரஸ் கட்சியை 'குடும்ப கட்சி' என்று பாரதீய ஜனதா மட்டம் தட்டி வந்திருக்கிறது. ஆனால், 50 ஆண்டுகளாக வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் உழைத்து வளர்த்த கட்சியால், மத்தியில் ஆட்சியை பிடித்த போதும் மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களையே பிடிக்க முடிந்தது. அவற்றிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்காவது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்த மாநில கட்சிகள் புண்ணியம் கட்டிக் கொண்டன. பதவியில் இருந்த காலம் முழுவதும் தங்களுக்கு அடுத்த கட்டத்தில் இரண்டாம் நிலை தலைவர்களை தேசிய அளவில் உருவாக்க அவர்கள் (வேண்டுமென்றே?) தவறி விட்டார்கள்.

எனவே, இப்போது பாரதீய ஜனதாவில் வெற்றிவாய்ப்புள்ள பிரதமர் வேட்பாளர் இல்லை. ஆனால், ஆட்சியை பிடித்தால், பிரதமராகும் ஆசையில் உள்ள ஏராளமான தலைவர்கள், அடுத்தவர்களை கவிழ்க்க உள்கட்சி குழப்பங்களை இப்போதே அரங்கேற்றி வருகிறார்கள். இதன் காரணமாகவே, அண்மையில் நடைபெற்ற பாரதீய ஜனதாவின் தேசிய குழு கூட்டத்தில் கட்சி தலைவர் நிதின் கட்காரிக்கு பதவி நீடிப்பு கொடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை பதவிக்கு அமர்த்தும் போது, அடுத்த பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் வரையில் மட்டுமே கட்காரி பதவியில் இருப்பார் என்ற எண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போதாது என்று, தான் பிரதமராக ஆகாவிட்டாலும் கூட, பாரதீய ஜனதாவின் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அந்த பதவிக்கு வந்து விடக்கூடாது என்று முனைப்புடன் செயல்படும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா கட்சியின் பீஹார் மாநில முதல்வர் நிதீஷ் குமார். பாரதீய ஜனதாவுடன் உறவு வைத்தால் முஸ்லிம் வாக்கு வங்கியை இழந்து விடுவோம் என்று முலாயம் சிங் பயப்படுகிறார். ஆனால், நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் தோன்றினாலே தன் வாக்கு வங்கிக்கு ஆபத்து என்று நிதீஷ் குமார் கருதுகிறார். அவருக்கும் பிரதமர் பதவியின் மீது குறி உள்ளது.

உள்கட்சி சண்டைகள்
இது தவிர, மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையேயான கூட்டணி குழப்பங்கள், மற்றும் இரு கட்சிகளுக்குள்ளேயும் நிலவும் கருத்து வேறுபாடுகள் என்று அந்த கட்சி தலைவரும் மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவாரே பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது. பின்னர், அவரது உறவினரும் மாநில துணை முதல்வருமான அஜீத் பவாரும் அது போன்றே பதவி விலகும் நாடகத்தை அரங்கேற்றினார். எதிர் கூட்டணியான பாஜக - சிவசேனா ஆகிய கட்சிகளிடையேயும் உறவு சிறப்பாக இல்லை.

அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் இருந்து தான், கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகப்படியான இடங்களை பெற்றது. அங்கு, மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டியின் தனி கட்சி, காங்கிரஸ். தெலுங்கு தேசம் என்ற இரு முக்கிய கட்சிகளையும் தூக்கி சாப்பிட்டு விட்டதோ என்ற எண்ணத்தை இடைத்தேர்தல் முடிவுகள் தோற்றுவித்துள்ளன. போதாதற்கு 'தனி தெலுங்கானா' பிரச்சினையும் வேறு. அடுத்துள்ள கர்நாடகாவிலோ, உட்கட்சி பூசல்களும் ஊழல் புகார்களும் ஆளும் பாரதீய ஜனதாவிற்கு எதிரான எண்ணத்தை தோற்றுவித்துள்ளது. அதே சமயம், அதனை தேர்தல் ரீதியாக முதலெடுப்பதற்கு, எதிர் அணியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளமோ இன்னமும் எந்த விதமான முஸ்தீபும் எடுக்கவில்லை.

கதை இவ்வாறு இருக்கும் போது, மம்தா பானர்ஜி எதற்காக மத்திய அரசுக்கு எதிராக திரும்பி உள்ளார். எண்பதுகளில் கருணாநிதி, தொண்ணூறுகளில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு ஆகியோர், அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விடக்கூடாது எந்த கணக்கில் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தனர். ஆனால், தங்களுக்கு பின் அரசியல் வாரிசுகள் இல்லை என்ற நிலையில், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற தலைவர்கள், பிரதமர் பதவியே தங்களது தேர்தல் சாதனையின் கடைசி படி என்ற விதத்திலேயே கடந்த பல ஆண்டுகளாக அரசியல் செய்து வந்துள்ளனர்.

மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் உள்ள 48 மக்களவை இடங்களில், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் அதிகப்படியான இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம், எதிர்பார்ப்பு. அவ்வாறு, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் என்று மும்முனை போட்டி ஏற்படுமேயானால், தனக்கு அதிகப்படியான இடங்கள் கிடைக்கும் என்பது அவரது கணக்கு. அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதற்காக மத்திய அரசில் இருந்து அதிரடியாக விலகவேண்டிய கட்டாயம். அதற்கு தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்கள் பிரச்சினை ஏதாவது தேவைப்பட்டது. அவ்வளவு தான்.

குழப்பும் கணக்கு, குழம்பாத கட்சிகள்?
இந்த பின்னணியில் தான், 'சமையல் எரிவாயு பிரச்சினை' மற்றும் 'சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு' போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்திற்கு கொள்கை அளவில் எலியும் பூனையுமான பாரதீய ஜனதாவும் இடதுசாரி கட்சிகளும் தனித்தனியே ஆதரவு அளித்தது. மம்தா பானர்ஜியை தொடர்ந்து, சரத் பவாரோ, கருணாநிதியோ மன்மோகன் தலைமைக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவு செய்யும் நிலைமைக்கு அவர்களது கட்சி தொண்டர்களால் தள்ளப்பட்டால், மாற்று அரசு அமைப்பதற்கு, தாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று அவர்கள் சமிக்ஞை செய்தார்கள். அதாவது, 1989-ஆம் ஆண்டு, இந்த இரு அணியினரும் வி.பி.சிங் அரசுக்கு ஆதரவு அளித்த முறையையே இப்போதும் தொடரலாம் என்பது எண்ணம்.

இதை உணர்ந்தே, போராட்டத்திற்கு முன்னரே அடுத்த மக்களவை தேர்தலுக்கு 'மூன்றாவது அணி' என்று பேசிய முலாயம் யாதவ் அதனை அடுத்த நாளே மாற்றி, எந்தவொரு மாற்று அணியும் தேர்தலுக்கு பின்னரே அமையும் என்று அறிவித்தார். இடைப்பட்ட நேரத்தில், திமுக-வோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியோ மத்தியில் ஆளம் கூட்டணியை விட்டு விலகாது என்பது தெளிவான பிறகு, மாற்று அரசு குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்று அவர் கருதினார். அதுபோன்றே, குறுகிய காலத்திற்கு மாற்று அரசு அமைத்தாலும், 2014ஆம் தேர்தலில் அணி திரள்வோரின் அரசியல் சாயம் வெளுத்து விடும் என்ற பயமும் அவர்களது தற்போதைய நிலைப்பாட்டிற்கு மற்றொரு காரணம்.

மக்களவையில் மொத்தமுள்ள 542 இடங்களில், காங்கிரஸ் (205), பாஜக (104) என்று மொத்தம் 319 இடங்களை தற்போது இரண்டு தேசிய கட்சிகளும் தக்க வைத்துக் கொண்டுள்ளன. காலியாக உள்ள இரண்டு இடங்கள் தவிர்த்து, மீதமுள்ள 223 இடங்களை 37 கட்சிகள் பங்கு வைத்துள்ளன. இவற்றில் ஒற்றை உறுப்பினர் கட்சிகள் 12. அது தவிர, சமாஜ்வாதி (22) அல்லது பகுஜன் சமாஜ் கட்சி (21) ஒரு புறமும், திமுக (18) அல்லது அஇஅதிமுக (9) மறுபுறமுமாக கணக்கிட்டாலே 223, குறைந்த பட்சம் 30 இடங்கள் (21 + 9) வரை குறைந்து, 193 ஆக மாறிவிடும். போததற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 19 இடங்கள் அல்லது இடதுசாரி கட்சிகளின் 24 இடங்களில் ஏதாவது ஒன்று தான் அரசின் வசம் இருக்கும் என்ற கணக்கையும் சேர்த்துக் கொண்டால், அப்புறம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

இந்த கணக்கிலும் தற்போது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கூட்டணிகளில் உள்ள அனைத்து கட்சிகளும் அடங்கும். ஆனால், அவர்களில் பலரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு ஒரே அணியில் இருக்கவும் மாட்டார்கள். இத்தகைய அணியில், தன்னைத் தவிர வேறு யாரையும் பிரதமராக கருதவும் மாட்டார்கள். இத்தனையும் கடந்து ஆட்சி அமைத்தாலும், அடுத்த சுமார் ஒன்றரை ஆண்டுகளில் பொது தேர்தலை சந்திப்பதை தவிர்க்கவும் முடியாது. அதற்கு முன்பாக கூட்டணி குழப்பங்களில் இருந்து தப்பவும் முடியாது.

இப்போது புரிந்ததா, யாருக்கு வேண்டும் இடைத் தேர்தல்?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X