2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ராஜினாமா; முதல்வர் ஜெயலலிதாவின் சரவெடி நடவடிக்கைகள்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 03 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜெயக்குமார் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அ.தி.மு.க.) உள்ள மூத்த அமைச்சர்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது. இதுவரை அமைச்சர்களாக இருந்தவர்கள் திடீர் திடீரென்று கடந்த காலங்களில் மாற்றப்பட்டார்கள். ஆனால் இப்போதுதான் சபாநாயகர் ஒருவரே தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சபாநாயகர் தன் பிறந்த நாளை கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி கொண்டாடினார். அதற்கு வாழ்த்துப் பெற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அதற்கு பதில் தன் வீட்டிலேயே பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடினார். பொதுவாக அமைச்சர்களோ, முக்கிய கட்சி நிர்வாகிகளோ பிறந்த நாள், திருமண நாள் போன்ற நேரங்களில் தங்கள் தலைவரான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெறுவது வழக்கம். அவர் ஆளுங்கட்சியில் முதல்வராக இருந்தாலும் சரி, எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி அப்படித்தான் நடக்கும். ஆனால் இந்தமுறை தன் பிறந்த நாளுக்கு முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சபாநாயகர் ஜெயக்குமார் என்று செய்திகள் வரவில்லை. போட்டோக்களும் பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை.

பிரியாணி போட்டது பிரச்சினை?
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு முதல்வர் அலுவலகம் இருக்கும் தமிழக தலைமைச் செயலகத்திற்கு சபாநாயகர் அழைக்கப்பட்டாராம். இது பற்றிக் கூறும் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், "சபாநாயகர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்திற்குள் நுழையும் போது காரை விட்டு இறங்கும் இடத்திலிருந்து தன் அலுவலகம் போகும் வரை அவருக்கு வணக்கம் போட்டவர்களுக்கு புன்னகையுடன் பதில் வணக்கம் போட்டுக் கொண்டே சென்றார். ஆனால் திரும்பி வரும் போது யாரையும் பார்க்கவில்லை. தனக்கு வணக்கம் செலுத்தியவர்கள் பக்கம் கூட திரும்பவில்லை. அப்படியே காரில் ஏறிச் சென்று விட்டார். ஆகவே அன்றே ஜெயக்குமார் தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று தெரியும்" என்கிறார். இப்படி அதிரடியாக ஜெயக்குமார் தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு முக்கியகாரணம் அவர் கொண்டாடிய பிறந்த நாள் விழா. அன்றைய தினம் ஏகப்பட்ட தொண்டர்களுக்கு பிரியாணி போட்டு அசத்தினார். 14இற்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஜூனியர் அமைச்சர்கள் முதல் மூத்த அமைச்சர்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக நிதியமைச்சராக இருக்கும் மூத்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமே ஜெயக்குமாருக்கு "பொக்கை" கொடுத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார் என்று தகவல். சில கட்சி நிர்வாகிகள் ஜெயக்குமாரின் 54ஆவது வயதைக் குறிக்கும் வகையில் "தங்கபரிசுகள்" கொடுத்தார்கள் என்றும் மாநில உளவுத்துறை பொலிஸார் அக்கட்சி தலைமைக்கு சொல்லியிருக்கிறார்கள். அதை விட முக்கியமாக சபாநாயகர் தொகுதியில் எங்கு பார்த்தாலும் பிறந்த நாள் வாழ்த்துப் போஸ்டர்கள். சில போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகளில் சபாநாயகர் ஜெயக்குமார் படம் போட்டே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லியிருந்தனர். அதுதான் அவரது பதவிக்கு உலை வைத்தது. அது மட்டுமின்றி அவரை நம்பியிருந்த மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 12இற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அரசியலில் மட்டுமின்றி, தமிழக அளவிலேயே சபாநாயகரின் நீக்கம் பரபரப்பாகி விட்டது.

தலைமை உத்தரவை மீறியது?
சில வாரங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஓர் அறிக்கை விடுத்திருந்தார். கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாரும் தங்கள் போட்டோவை போட்டு போஸ்டர் அடிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் போட்ட உத்தரவை சபாநாயகர் பதவியில் இருப்பவரே மீறியது மற்ற அமைச்சர்கள் மத்தியில் கூட அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. ஆனால் ஜெயக்குமார் ஆதரவாளர்களோ, "சபாநாயகர் கட்சிக்கு அப்பாற்பட்டவர். அந்தப் பதவிக்கு வந்தவுடன் கட்சிசார்பற்றவர் ஆகிறார். ஆகவே கட்சி நிர்வாகிகளுக்குப் போடும் உத்தரவுகள் எப்படி சபாநாயகர் பதவியிலிருப்பவருக்குப் பொருந்தும்" என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் கட்சிக்கட்டுப்பாடு என்பது ஒரு புறமிருக்க, ஜெயக்குமார் முதல்வர் வளர்க்கப்பட்ட தலைவர். 1991இலிருந்து அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர். ஜெயக்குமார் என்ற பெயர் முதல்வரின் அண்ணன் பெயர். அவர் தற்போது உயிருடன் இல்லை. அதனால் இந்த ஜெயக்குமார் என்ற பெயரைப் பார்த்ததும் முதல்வருக்கு ஒரு சென்டிமென்ட். ஆகவே தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் பட்டியல் என்றாலும், அமைச்சர்கள் பட்டியல் என்றாலும் ஜெயக்குமார் பெயர் இடம்பெற்றிருக்கும். மின்சாரத்துறை அமைச்சர் பதவியில் எல்லாம் இருந்தார். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவு பட்டு நின்றது. ஒன்று தற்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அணி. அதற்கு சேவல் சின்னம். இன்னொன்று மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் தலைமையிலான அணி. அந்த அணிக்கு இரட்டைப் புறா சின்னம். அந்த நேரத்தில் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அணியில் நின்றவர்களில் ஜெயக்குமாரும், செங்கோட்டையனும் முக்கியமானவர்கள். அந்த செங்கோட்டையன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜெயக்குமார் இப்போது சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகரை "நம்பிக்கையில்லாத்" தீர்மானம் மூலமாகத்தான் நீக்க முடியும். ஆகவேதான் ஜெயக்குமார் ராஜினாமா செய்துள்ளார்.

பீதியில் சிக்கியுள்ள மூத்த அமைச்சர்கள்?
பொதுவாக அ.தி.மு.க.வில் இப்போது வேறு ஒரு பீதி அனைவருக்கும் இருக்கிறது. "யாரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதனால் தலைமையின் கோபத்திற்கு உள்ளாகி பதவியை இழந்து விடுவோம்" என்பதுதான் அந்த பீதி. குறிப்பாக இந்தமுறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனேயே தலைமையின் நோக்கம் கட்சிக்குள் பிரபலமாக இருப்பவர்களை ஓரங்கட்டி வைக்க வேண்டும் என்பதுதான்! அமைச்சரவை பட்டியல் இந்த அடிப்படையில்தான் தயாரிக்கப்பட்டது என்றே கட்சியின் மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்றகள். அவர்களில் ஒருவர், "தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளைத் தெரிந்த செங்கோட்டையன் வலு இல்லாத விவசாயத்துறை அமைச்சராக்கப்பட்டார். பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையாக மாற்றப்பட்டு, பதவி பறிக்கப்படும் முன்பு கடைசியாக வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் வருவாய்த்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், கட்சியில் அவர் வகித்த தலைமைக் கழகச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளை சமாளிக்கும் பதவி இந்த தலைமைக் கழக செயலாளர் பதவி. அதேபோல் ஒருமுறை முதல்வராகவே இருந்த ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நிதி அமைச்சர் என்பது முதல்வரின் நிழலில் இருக்கும் பதவி. மூன்றாவதாக மீனவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு உள்ள ஜெயக்குமார் சபாநாயகர் பதவியில் அமர்த்தப்பட்டார். இது அரசியல் சார்பற்ற பதவி என்பதால் கட்சியின் அரசியல் நிகழ்வுகளில் அவர் தலையைக் காட்ட முடியாது. இந்த மூவரும்தான் கட்சிக்குள் அந்த நேரத்தில் மாநில அளவில் பிரபல்யம். அவர்கள் மூவருமே தொடக்கத்திலேயே கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு இல்லாத, அப்படியே தொடர்பு இருந்தாலும் எதுவும் பெரிதாக உதவ முடியாத பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்து அமைச்சரவையை உருவாக்கி மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் எங்கள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா" என்கிறார் அவர். ஆனால் இப்படியொரு காலகட்டத்தில்தான் சசிகலாவிற்கும்- முதல்வர் ஜெயலலிதாவிற்கும் கருத்து வேறுபாடு முற்றியது. முதல்வர் பதவியைப் பிடிக்க மறைமுகமாக முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பல உறவினர்கள் பல்வேறு வழக்குகளி்ல் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் வெளியில் வந்து விட்டனர். சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டு விட்டார். ஆனாலும் கட்சிக்குள் களையெடுக்கும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சசிகலா வெளியே இருந்த போது கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்ற அமைச்சர் செங்கோட்டையன், சசிகலா கட்சியில் இணைந்ததும் நீக்கப்பட்டார். இப்போது ஜெயக்குமார் சபாநாயகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா செய்த சபாநாயகர்கள்
தமிழக சபாநாயகர்களும் சில நேரங்களில் ராஜினாமா செய்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற வரலாற்றை எடுத்துக் கொண்டால், புலுசு சாம்பமூர்த்தி. 1937 முதல் 1942 வரை முதல் சபாநாயகராக இருந்தவர். பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்தவர் ஜே.சிவசண்முகம் பிள்ளை. இவர் 1946 முதல் 1955 வரை அப்பதவியிலிருந்தார். அவர்தான் முதலில் 1955இல் தன் பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகர் தேர்தலுக்கு வித்திட்டார். பிறகு நடைபெற்ற தேர்தலில் கோபால மேனன் வெற்றி பெற்று ஒரு வருடம் சபாநாயகராக இருந்தார். ஆனால் மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த போது, அவர் தொகுதி கேரள மாநிலத்திற்குள் போய் விட்டது. அதனால் அவரும் ஒரே வருடத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பிறகு வந்த யு.எல்.கிருஷ்ணா ராவ். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் 1962 வரை இருந்தது. அப்போது அக்கட்சியின் சார்பில் கடைசி சபாநாயகராக இருந்தவர் எஸ். செல்லபாண்டியன்.

ஒரே நேரத்தில் இரு நம்பிக்கையில்லாத் தீர்மானம்
அடுத்ததாக திராவிட முன்னேற்றக் கழகம் 1967இல் ஆட்சிக்கு வந்தது. அதன் முதல் சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் ஐந்து மாத காலம் மட்டுமே சபாநாயகராக இருந்தார். இன்றைய "தினத்தந்தி" பத்திரிகையின் அதிபராக இருந்தவர். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முதலாக தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்த தி.மு.க.வின் சார்பில் இருந்த சபாநாயகரான இவர் குறைந்த காலம் அப்பதவியில் இருந்தவர். ஆனால் அமைச்சராவதற்காக அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்ட போது சட்டமன்றத்திற்குள் பெரும் சர்ச்சை நிலவியது. ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கும், சபாநாயகருக்கும் மோதல் வெடித்தது. அதனால் அப்போது இரு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஒன்று தி.மு.க. அரசின் மீது. இன்னொன்று சபாநாயகராக இருந்த மதியழகன் மீது. இந்த இரு தீர்மானங்களில் முதலில் மதியழகன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. அதனால் அவர்தான் சட்டமன்ற தீர்மானம் மூலம் நீக்கப்பட்ட ஒரே தமிழக சட்டமன்ற சபாநாயகர். அதேபோல் ஒரு நேரத்தில் இரு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் அப்போதுதான்!

பொலிஸ் நுழைந்த சபாநாயகர் காலம்
எம்.ஜி.ஆர் முதலமைச்சரானதும் அவர் தேர்வு செய்த முதல் சபாநாயகர் முனு ஆதி. இது நடைபெற்றது 1977இல்! எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. ஜா- ஜெ அணியாக பிளவு பட்டது. யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்ற போராட்டத்தில் இரு அணியைச் சார்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் பெரும் மோதல் சட்டமன்றத்திற்குள் ஏற்பட்டு, முதன் முதலில் பொலிஸ் சட்டமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் காலத்தில்தான்! இதன் பிறகு 1991இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா. பிறகு தி.மு.க. சார்பில் சபாநாயகராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் காலத்தில்தான் தமிழக சட்டமன்றத்தின் வைர விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பார்த்தால் தமிழக சட்டமன்றத்தின் 17ஆவது சபாநாயகராக இருந்தவர் தற்போது பதவியை ராஜினாமா செய்திருக்கும் ஜெயக்குமார். இவரது காலத்தில் சட்டமன்றத்தின் வைர விழா இந்த மாதக் கடைசியில் நடக்க இருந்தது. ஆனால் அதற்குள் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆகவே சி.பா. ஆதித்தனாருக்குப் பிறகு 44 வருடங்கள் கழித்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்றால் அது ஜெயக்குமார்தான்!

சசிகலா, செங்கோட்டையன்- இப்போது ஜெயக்குமார்
சசிகலா, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளி்ட்டோரின் மீது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கை அக்கட்சிக்குள் உள்ள மற்ற மூத்த அமைச்சர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மூத்த அமைச்சரான ஓ. பன்னீர்செல்வம் இப்போதே கட்சி நிர்வாகிகளை தனியாக சந்திப்பதை தவிர்த்து வருகிறார். ஏதாவது நிகழ்ச்சிக்கு அழைத்தால், "முதலில் நீங்கள் போஸ்டர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தாருங்கள்" என்று உறுதிமொழி வாங்கியே நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கிறார். இருந்தாலும் "பதவி பறிப்பு" என்று அ.தி.மு.க. சீனியர்கள் மற்றும் கட்சியில் பிரபல்யமாக உள்ளவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி, எப்போது தங்கள் தலையில் விழுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். "நாங்களும் தலைவர்கள்தான்" என்ற நோக்கில் கட்சியினர் யாரும் செயல்படக்கூடாது என்பதே சபாநாயகர் ஜெயக்குமார் ராஜினாமா மற்றும் மற்ற சரவெடி நடவடிக்கைகளில் எதிரொலிக்கிறது. ஆனால் இது வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சியினரை தேர்தல் களத்தில் சந்திக்க எந்த விதத்தில் உதவும் என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது.

புதிய சபாநாயகர்
இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தின் புதிய சபாநாயகர் தேர்தல் இம்மாதம் 10ஆம் திகதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளராக தற்போது தமிழக சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக இருக்கும் தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்பதை விட அமைச்சராகவும் இருந்த அனுபவம் உள்ளவர். தனபால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து சபாநாயகராக தேர்வு ஆகிறார். இந்த மாவட்டங்கள் அ.தி.மு.க.விற்கு அதிக எம்.எல்.ஏ.க்களை கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அமைச்சராக இருந்த செங்கோட்டையன், முன்பு நிதியமைச்சராக இருந்த பொன்னையன் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியிலிருந்து தனபால் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 234 பேர். அதில் அ.தி.மு.க.விற்கு 152 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் தனபால் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள தமிழக ஆளுநர் ரோசைய்யா வருகின்ற 10ஆம் திகதி சபாநாயகர் தேர்தலுக்காக சட்டமன்றம் கூடும் என்று அறிவித்துள்ளார். இதுவரை மூன்று முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால், ஐந்து வருட கால ஆட்சிக்குள் இரண்டாவது சபாநாயகர் வருவது இந்த முறைதான் நடக்கிறது!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X