2025 மே 19, திங்கட்கிழமை

திவிநெகும சட்டமூலமும் நீதித்துறையும்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச திவி நெகும சட்ட மூலம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தெடர்பான பல விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளது. நீதித்துறையின் சுதந்திரம், அதிகார பரவலாக்கல், குறிப்பாக வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசாட்சியில் தாராளத் தன்மை ஆகிய பல விடயங்கள் இப்போது இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டு வருகின்றன.

அதேவேளை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பல தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிரப்பதாகவும் தெரிகிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிகார பரவலாக்கலை ஆதரிப்பதும் இந்த சட்ட மூலம் அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு முரணாக இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுமே இதற்குக் காரணமாகும்.

கடந்த ஜூலை 27ஆம் திகதியே இந்த சட்ட மூலம் வர்த்தமாணியில் வெளியிடப்பட்டது. பின்னர் அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஆயினும் அதனை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதன் சட்டபூர்வத் தன்மை நீதிமன்றத்தில் கேள்விக்குறியாக்கப்பட்டமையே அதற்குக் காரணமாகும்.

சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் அரசியலமைப்பின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை ஒத்துள்ளதால் மாகாண சபைகளின் அனுமதியின்றி அச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பதே சட்ட மூலத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான வாதமாகும்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் சில விடயங்கள் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேறு சில விடயங்கள் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் அரசியலமைப்பில் வெவ்வேறு பட்டியல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மாகாண சபைகளால் சட்டமியற்றப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய பட்டியல் “மாகாண சபை பட்டியல்” என்று அழைக்கப்படுகிறது. திவி நெகும சட்ட மூலத்தில் உள்ள சில விடயங்கள் இப் பட்டியலிலுள்ள சுமார் 15 விடயங்களோடு சம்பந்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். எனவே மாகாண சபைகளின் கருத்தறியாமல் இச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது.

எனவே தான் சட்ட மூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அது ஏற்கனவே நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட மூலமொன்று மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு அனுப்புவதாயின் அது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படு முன்னரே அவ்வாற மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

எனவே, அரசாங்கம் சட்ட மூலத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டது. அதன் பின்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - சட்ட மூலத்தை மாகாண சபைகளுக்கு அனுப்பினார்.

நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற சபைகளில் உறுப்பினர்கள் பிரச்சினைகளை முறையாக ஆராய்ந்த பின்னர் அவ் விடயங்கள் தொடர்பாக வாக்களிப்பதற்காகவே அச் சபைகளில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் விவாதங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால் வழமையாக நடப்பது வேறு. வழமையாக அரசியல் கட்சிகள் விவாதங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கின்றன. அந்த முடிவுகளுக்கு ஏற்ப அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். விவாதத்தின் போது எதிர் தரப்பினர் முன் வைக்கும் வாதங்களை கேட்டு உறுப்பினர் ஒருவரில் மன மாற்றம் ஏற்பட்டாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் தமது கட்சியின் பொது நிலைப்பாட்டுக்கு மாறாக வாக்களித்தால் அவரது கட்சி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். கட்சி அவரது கட்சி அங்கத்துவத்தை ரத்துச் செய்து சம்பந்தப்பட்ட சபையின் அவரது உறுப்புரிமையையும் இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கும். ஆயினும் அதுவும் ஜனநாயகம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் திவி நெகும சட்ட மூலம் மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்ட போதும் அது தற்போதுள்ள சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் தற்போதுள்ள சகல மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அல்லது அக் கூட்டணியின் தலைமையிலான கூட்டுக்களே ஆளும் கட்சியாக செயற்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையிலும் அவ்வாறானதோர் கூட்டே ஆளும் கட்சியாக இருக்கிறது. அந்தக் கூட்டில் ஐ.ம.சு.கூவிற்கு புறம்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் ஐ.ம.சு.கூ. தவிர்ந்த ஏனைய கட்சிகள் சிறுபான்மை மக்களுக்காக அமைக்கப்பட்ட சிறுபான்மையின தலைமையுள்ள கட்சிகளே. அக் கட்சிகள் அதிகார பரவலாக்கலை பூரணமாக ஆதரிக்கின்றன. ஆயினும் திவி நெகும சட்ட மூலத்தில் மாகாண சபைகளுக்கான விடயங்களும் சம்பந்தப்பட்டு இருக்கின்றன என்ற விடயத்தை கவனியாது அக் கட்சிகளின் உறுப்பினர்கள் அதனை அங்கீகரிப்பதற்காக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இந்த விடயத்தில் ஆகக் கூடுதலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகளில் சுயாதீனமாக முடிவு எடுக்கக்கூடிய நிலையில் அக் கட்சி இருப்பதாக பலர் நினைப்பதே அதற்குக் காரணமாகும். அதேவேளை சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு தெற்காசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை சந்தித்து, அரசாங்கம் அதிகார பரவலாக்கல் முறையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

வட மாகாண சபையின் அங்கீகாரத்தை சட்டமூலத்திற்கு பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பதே இப்போது அரசாங்கத்தின் முன்னுள்ள பிரச்சினையாகும். ஏனெனில் வட மாகாண சபை என்ற பெயரில் நிர்வாக அமைப்பொன்று இருந்த போதிலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையொன்று இல்லை. அம் மாகாண சபைக்கு தேர்தலை நடத்தவும் அரசாங்கம் தயங்கி வருகிறது. வட மாகணத்தில் நிலக் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்றும் எனவே அங்கு மாகாண சபைத் தேரதலை நடத்த முடியவில்லை என்றும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அதே மாகாணத்தில் போருக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிரதேச சபைத் தேர்தல் ஆகியன நடைபெற்றன. எனவே அரசாங்கத்தின் வாதத்தை பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்த நிலையில் வட மாகாணசபைக்குப் பதிலாக திவி நெகம சட்ட மூலலத்திற்கு வட மாகாண ஆளுநரின் அங்கீகாரத்தை பெற்றால் அது மாகாண சபையின் அங்கீகாரத்திற்குச் சமமாகும் என அரசாங்க தரப்பில் இருந்து ஒரு கருத்து வெளியானது. இதுவரை வட மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பணிகள் ஆளுநரின் அங்கீகாரத்துடனேயே நடைபெற்று வருகின்றன. எனவே இந்த சட்ட மூலத்திற்கும் ஆளுநனரின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வது போதுமானது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆனால், இந்த கருத்து வெளியான உடன் உஷாராகிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஆளுநனரின் அங்கீகாரத்தை மாகாண சபையின் அங்கீகாரமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர். இந்த விடயம் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதாக அமைவதால் அதற்கு அதிகாரம் உள்ள ஒரே நீதிமன்றமான உயர் நீதிமன்றத்திற்கு அம் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.

அண்மைக்காலமாக நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றி சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரத்ன இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். நீதித்துறை பல்வேறுபட்ட மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுள திலக்கரத்ன கல்கிசையில் வைத்து குண்டர்களின் தாக்குதலுக்கும் இலக்கானார். எனவே திவி நெகும சட்ட மூலம் தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கும் என்று பலர் சிந்திப்பதாக தெரிகிறது. ஆனால் இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் பலமானதோர் நீதித்துறையை பாதிக்கப்போவதில்லை. அதேவேளை இவற்றினால் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் மாறிவிடும் என்று கூறுவதும் நீதித்துறையை அவமதிப்பதாகும்.

திவி நெகும சட்டமூலத்தின் மூலம் சமுர்த்தி அதிகாரசபை, உடரட்ட (மலைநாட்டு) அதிகாரசபை மற்றும் தக்ஷின (தெற்கு) அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு திவிநெகும திணைக்களம் உருவாக்கப்படும். அந்த மூன்று நிறுவனங்களின் கீழ் உள்ள சுமார் 5000 கோடி ரூபா நிதியானது திவி நெகும தினைக்களத்தில் கீழ் கொண்டு வரப்படும். அதேவேளை சட்ட மூலத்தின் படி திணைக்களத்தின் விவகாரங்கள் ரகசியங்களாகவே இருக்கும். எனவே இது பெருமளவில் ஊழலுக்கு வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இப்போது சட்ட மூலத்தின் தலைவிதி முற்றாக நீதித் துறையின் கையில் தான் இருக்கிறது. நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் பலர் அதனை நீதித்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளோடு சம்பந்தப்படுத்தி வியாக்கியானம் செய்யலாம். அவை உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X