2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று கேட்கப்படும் மிகப் பிரதானமான கேள்வி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சேர்ந்தியங்குவதற்கு நீங்கள் மறுப்பது ஏன்? என்பதுதான்.

அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட முடியாமைக்கு ஒரே காரணம் - அதனை எட்டும் நோக்குடன் ஜனநாயக வழிமுறையில் அரசு முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய மறுத்து வருவதுதான் - என்ற பிரசாரத்தை அரசு தரப்பு முழு அளவில் முன்னெடுத்து ஒவ்வொருவரையும் அப்படி நம்பவைப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் கண்டுள்ளது. அதனால் இத்தகைய ஒரு கேள்வி தமிழ்க் கூட்டமைப்பினரை நோக்கி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததே.

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தற்போதைய ஸ்தம்பித நிலையை அடைந்தமைக்கான உண்மையான காரணங்களை இந்த நாட்டின் மக்களுக்கு விளக்கவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. இதற்கு 2010ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இடம்பெற்ற நிகழ்வுகளை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியமாகின்றது.

ஜனவரி 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு - கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களிலும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெளிவான மக்கள் ஆணையைப் பெற்றபோதிலும் வடக்கு - கிழக்கில் அவர் வெல்லவேயில்லை என்பது நினைவு கொள்ளத்தக்க அம்சமாகும்.

அதேசமயம், நுவரெலியா மாவட்டத்திலும் கொழும்பு மாநகரசபைப் பிரதேசத்திலும் கூட அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதும் உண்மை. அடிப்படையில் அவருக்குக் கிட்டிய ஆணை சிங்களப் பெரும்பான்மையிடமிருந்து கிடைத்ததுதான். பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களைத் தாம் மீட்டார் என்று அவர் உரிமை கோரிய பின்னணியில் கிடைத்த பெறுபேறுதான் இது.

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது சம்பந்தமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு முன் வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2010 ஏப்ரலில் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தது.

அதன் பின்னர் இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கு இரண்டு குழுக்களை ஸ்தாபிக்க 2010 நவம்பரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் ஜனாதிபதி இணங்கியிருந்த போதிலும், ஷநீண்டகால நல்லிணக்கம்| குறித்து ஆராய்வதற்கு மட்டும் அரசு பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு குழு 2011 ஜனவரியில் நியமிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இது தொடர்பில் அனுப்பட்டிருந்த அழைப்புக் கடிதத்தில் மற்றைய தரப்பும் உறுப்பினர்கள் ஷஇலங்கை அரசின் பிரதிநிதிகள்| என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக 2011 ஜனவரி 10ஆம் திகதியிலிருந்து  அந்த வருடம் முழுவதும் 18 சுற்றுப் பேச்சுக்கள் நடந்தன.

தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் தனியான குழு ஒன்று உருவாக்கப்படாத நிலையில், அரசு தரப்பு பிரதிநிதிகளின் அழைப்பின் பேரில், உடனடிக் கவனத்துக்குரிய பின்வரும் விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுப்பியது.

1) நாட்டுக்குள் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியமர்வும் புனர்வாழ்வும்.
2) உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதலும், வடக்கு கிழக்கில் செயற்படும் துணை இராணுவப் படைகளின் ஆயுதங்களைக் களைதலும்.
3) அரசியல் கைதிகள் மற்றும் தடுப்புப் காவலில் உள்ளோர் பற்றிய விடயங்கள்.

பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் முகாம்களிலேயே உள்ள நிலையிலும், மேலும் பல பத்தாயிரக்கணக்கானோர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருக்கும் சூழலிலும் மீள்குடியமர்வு நடவடிக்கை என்பது நத்தை வேகத்திலேயே முன்நகருகின்றது.

தங்களுடைய சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டவர்கள் கூட பொருத்தமான தங்குமிட வசதிகளின்றி தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே விடப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடு ஏதும் ஏற்படவேயில்லை. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ள போதிலும், வடக்கிலும் சம்பூர் உட்பட கிழக்கிலும் ஏனைய பல பிரதேசங்கள் இன்னமும் பொது மக்களுக்குத் தடைசெய்யப்பட்டனவாகவே உள்ளன. பலாலியிலும் கூட குடாநாட்டுக்குக் குறுக்கான நீண்ட முட்கம்பி வேலி தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேசத்தில் இருந்து 26 வருடங்களாக இடம்பெயர்ந்திருக்கும் சுமார் 28 ஆயிரம் பொதுமக்கள் மீளக்குடியமர முடியாது நேரடியாகத் தடுக்கப்பட்டுள்ளனர்.

துணை இராணுவக் குழுக்கள் தண்டனை விலக்களிப்பு சிறப்புரிமையோடு தொடர்ந்து செயற்படுவதுடன் கடத்தல், கப்பம் கோரல் மற்றும் படுகொலைகளைக் கூட முன்னெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இது கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அண்மையில் அரசினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதில் உள்ள சிறப்புப் பெறுபேறு குறியீட்டுச் சுட்டியின் படி இது ஆறு மாத காலத்தில் நிறைவு செய்யப்படவேண்டுமாம்!

எவரேனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உறவினர்கள் அது பற்றிய விடயத்தை வவுனியாவில் விசேடமாகக் குறிப்பிடப்பட்ட ஓரிடத்தில் அது பற்றி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என 2011 பெப்ரவரி 3ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது  சுற்றுப் பேச்சின் போது அரசு தரப்புப் பிரதிநிதிகள் எழுத்தில் உறுதி தந்தனர்.

அரசினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தலா ஒரு பிரதிநிதி நேரடியாக வவுனியாவுக்குச் சென்று இதனை ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கான குறைந்த பட்சம் மூன்று வௌ;வேறு திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் அந்த விஜயங்கள் எப்போதும் கடைசி நேரத்தில் அரசு தரப்பினால் இரத்துச் செய்யப்பட்டமையோடு அது நடக்கவேயில்லை. இன்றுவரை அது இடம்பெறவேயில்லை. தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் பற்றிய உண்மையான தகவல்கள் தொடர்ந்தும் மறைக்கப்பட்டுள்ளதோடு அவை, அவர்களின் இரத்த உறவுகளுக்கும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டுள்ளன.

2009 மேயில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் -
- தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள கலாசார, மத இடங்களை துஷ்பிரயோகம் செய்து, சேதப்படுத்தி, அழித்தல்.
- மக்களின் வாழ்வில் இராணுவத் தலையீட்டையும் இராணுவ மயப்படுத்தலையும் அதிகரித்தல்
- வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலையே மாற்றியமைக்கும் விதத்தில் அங்குள்ள காணிகள் அபிவிருத்தித் தேவைக்கு என்ற மேம்போக்கான காரணத்தைக் காட்டி வெளியாட்களுக்குத் தாரைவார்த்தல்.
- வடக்கு, கிழக்கில் உள்ள பாரம்பரிய அடையாளப் பிரதேசங்களை மாற்றியமைத்தல்.

போன்றவை தொடர்பான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவை எல்லாம் தமிழ் மக்களின் எதிர்கால நலனில் மீளத்திருத்தியமைக்கவே முடியாத மோசமான - தீங்கான - பின் விளைவுகளை ஏற்படுத்தவல்லன.

இத்தகைய விடயங்கள் தொடர்பில் அரசிடம் செய்யப்பட்ட முறையீடுகளுக்கு தகுந்த நிவாரணமோ பரிகாரமோ கிட்டவேயில்லை. அது, இவ்விவகாரங்களில் அரசு உரிய கவனிப்புக் காட்டவேயில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

யாழ். மாவட்டத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கத் தவறியுள்ள அதேநேரத்தில், அந்த மக்களின் பிரசன்னம் இல்லாமையைப் பயன்படுத்தி நடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியே முன்னெடுக்கப்படுகின்றது. இதன்மூலம் அந்த மக்களின் வாக்குரிமையையும் ஜனநாயக வலுவையும் பறிக்கும் போக்கே முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது சந்திப்பின்போதே எழுத்து மூலமான ஒரு விடயத்தை அரசுப் பிரதிநிதிகள் முன் வைத்தது. அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் குழு மற்றும் நிபுணர்கள் குழு ஆகியவற்றின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது - 2006 ஜூலையில் - ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரையே அது. இது பற்றி எனது முன்னைய கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். அதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும்.

அரசு தரப்பின் அழைப்பின் பேரில் இரண்டாவது சுற்றுப் பேச்சில் அது குறித்து மேலும் விளக்கமளிக்கப்பட்டது.

மீண்டும் அரசு தரப்பின் அழைப்பின் பேரில் 2011 மார்ச் 18ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சின் போது விரிவான யோசனைத் திட்டம் ஒன்றை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்தது. அது, ஆட்சியலகின் கட்டமைப்பு, மத்திக்கும், அதிகாரப் பரவலாக்கல் அலகுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ள துறைகள், செயற்பாடுகள், நிதி மற்றும் வரி அதிகாரங்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க, நின்று நிலைக்கக் கூடிய தீர்வு ஒன்றை எட்டுவதற்கான ஏனைய விடயங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது.

இந்த யோசனைத் திட்டம் தொடர்பாக அரசின் பதிலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டி நின்றது. அவ்வாறு பதில் தருவதாக அரசு தரப்பில் உறுதி கூறப்பட்டபோதிலும் பல மாதங்களாகப் பதில் வரவேயில்லை. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்தாய்வுத் திட்டம் தொடர்பில் அர்த்தமுள்ள அல்லது பயன்தரத்தக்க கலந்தாலோசனை ஏதும் கூட இடம்பெறவேயில்லை. இது, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதில் அரசுக்கு நேர்மையான பற்றுறுதி ஏதும் கிடையாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

நல்லிணக்கத்துக்கு மூல அடிப்படையான அரசியல் செயற்பாட்டில் தான் ஈடுபட்டிருப்பதாக உலகுக்குக் காட்டிக்கொள்ள முயலும் அரசு, அதேசமயத்தில் உண்மையில் அதற்கு மாறாக, புரட்டுத்தனமான ஏமாற்று நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருக்கின்றது.

ஆகவே, எதிர்காலத்தில் ஏதேனும் பேச்சுக்களில் ஈடுபடுவதாயின் அதற்கு வழிசெய்யும் விதமாக பின்வரும் மூன்று விடயங்களில் தனது அர்த்தமுள்ள நிலைப்பாட்டை வரையறை செய்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசு வெளிப்படுத்தவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.
1) ஆட்சியலகின் கட்டமைப்பு.
2) மத்திக்கும் அதிகாரப் பரவலாக்கல் அலகுக்கும் இடையில் வேறுபடுத்தப்பட்டிருக்கும் விடயங்களும் செயற்பாடுகளும்.
3) வரி மற்றும் நிதி அதிகாரங்களும்.

ஆனால், அரசோ இதைச் செய்வதை விடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனைகளை முன்வைத்து, காலக்கெடுக்களை விதித்து செயற்படுகின்றது என வெளியே சென்று வழமைபோல குற்றம் சுமத்திப் பிரசாரம் செய்கின்றது.

பேச்சுக்கள் முறிந்தமையை அடுத்து ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவரைச் சந்தித்தார். இரண்டு உடன்பாடுகள் அந்தச் சந்திப்பின் போது எட்டப்பட்டன.

முதலாவது - எமது யோசனைத் திட்டத்துக்கு அரசு பதில் திட்டம் தரத் தவறிய சூழலில், அதற்கான மாற்றீடாக ஏற்கனவே அரசு தரப்புக்களால் முன்வைக்கப்பட்டிருந்த முன்னைய ஐந்து யோசனைத் திட்டங்களைப் பேச்சு மேசைக்குக் கொண்டுவருவது.

இந்த உடன்பாடு செப்டெம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் பதிவேட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் அறிக்கையாகப் பின்வருமாறு பதியப்பட்டிருக்கின்றது:-

''ஜனாதிபதியுடன் நான் மேற்கொண்டிருந்த சந்திப்பின் தொடராக இந்தக் கூட்டம் இடம்பெறுகின்றது. அரசின் யோசனைத் திட்டத்தை முன்வைப்பதில் தமக்குள்ள இக்கட்டுக்களை அவர் விளங்கப்படுத்தினார். அது வெளியே கசியுமானால் அதில் ஏற்ற நேர்சீராக்கலைச் செய்வதில் கஷ்டம் என்பதை நான் கவனத்தில் கொள்கிறேன். என்றாலும் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட வேறு பல ஆவணங்கள் இருக்கின்றமையால் அவற்றின் அடிப்படையில் பேசலாம் என்றேன். அவை:- மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் யோசனை, அரசமைப்புக் சீர்திருத்தங்களுக்கான அரசின் 1995, 1997, ஓகஸ்ட் 2000 யோசனைத் திட்டங்கள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர் குழுக்களின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை, நிபுணர் குழுவின் அறிக்கை ஷஏ| என்பன. இந்த அடிப்படைகளில் பேச்சுக்களைத் தொடர்வதானால் எங்களுடைய (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய) யோசனைத் திட்டத்துக்கு அரசு தரப்பின் பதில் யோசனை முன்வைக்கப்படாமலேயே பேச்சுக்களைத் தொடரலாம் என ஜனாதிபதி என்னிடம் இணக்கம் தெரிவித்தார்''

இரண்டாவது உடன்படிக்கை குறித்தும் அதே கூட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்புப் பேச்சுக்களில் இணக்கம் எட்டப்பட்டதும் (i) அந்த இணக்கப்பாடு அரச யோசனைத் திட்டமாக அல்லது அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் யோசனைத் திட்டமாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு எடுத்துச் செல்லப்படலாம் என்றும் (ii) நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு பங்குபற்றும் என்றும் அந்தக் கூட்ட அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு இணக்கப்பாடுகளின் அடிப்படையில்தான் -

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான நகல் வரைவுக் குறிப்புத் தொடர்பான தனது கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்ததுடன் அவற்றை அரசு உள்வாங்கி 2011 ஒக்டோபர் 10ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துக்கொண்டது.

இரு தரப்புப் பேச்சுகளின்போது தனது பதிலை வழங்குவதாகக் கூறிவிட்டு அரசு அதிலிருந்து பின்வாங்கிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த முதல் விட்டுக்கொடுப்பு - சகாயம் - இதுவாகும்.

இந்த நேர்சீராக்கலுக்குப் பின்னர் இரு தரப்புப் பேச்சுக்கள் மீள ஆரம்பித்தன. 2011 டிசெம்பர் மாதத்தில் மூன்று கூட்டங்கள் நடந்தன. காணி அதிகாரங்களைப் பரவலாக்குவது குறித்து அவற்றின்போது கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் 2012 ஜனவரி 17, 18, 19ஆம் திகதிகளில் மூன்று கூட்டங்களுக்குத் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த மூன்று கூட்டங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமுகமளித்தபோதிலும் அரச பிரதிநிதிகள் குழு வருகைதரத் தவறிவிட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக இரு தரப்புப் பேச்சுக்கள் தொடர்வதாயின் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவேண்டும் என்று - முன்னர் உடன்பாடு காணப்பட்டு கூட்ட அறிக்கையில் பதிவுசெய்யப்பட்ட விடயங்களுக்கு முரண்பாடாக - அரசு வலியுறுத்தத் தொடங்கியது.

இந்த முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2012 ஜனவரி 27ஆம் திகதி அரசு பிரதிநிதிகள் குழுவின் மூன்று அங்கத்தவர்களைச் சந்தித்துப் பேசி மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்தார்.

இதன்படி - இரு தரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் சமயம், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர்களை நியமிக்கும் என்றும், இரு தரப்பு பேச்சுக்களின் போது கணிசமான அளவுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே நாடாளுமன்றத் தெரிவுக் குழு கூட்டப்படும் என்றும் உடன்பாடு காணப்பட்டது.

இது எழுத்தில் சுருக்கமாக வரையப்பட்டு ஜனாதிபதியின் இணக்கம் பெறப்படுவதற்காக 2012 ஜனவரி 31ஆம் திகதி அரசு குழுவிடம் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பதில் ஏதும் மீளவேயில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியதாகும்.

மூன்றாவது முயற்சி 2012 மேயில் எதிர்க்கட்சித் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரும் பிற ஐ.தே.க. தலைவர்களும் ஜனாதிபதியையும் ஏனைய பல அமைச்சர்களையும் சந்தித்தனர். அப்போது, முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெறவேயில்லை என்றும், அதுவரை நடைபெற்றவை எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுக்கள் மட்டுமே என்றும் கூறப்பட்டதாம்!

பேச்சுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன் முதலில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றுப் பேச்சுக்குப் பின்னரும் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்ட ஒவ்வொரு கூட்டு அறிக்கையிலும் கூட மற்றைய தரப்பு பிரதிநிதிகள் குழு ஷஅரச பிரதிநிதிகள் குழு| என்றே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு புதிதாக இணக்கம் காணப்பட்டது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி.யுடன் மேலும் நடத்தும் பேச்சுக்களைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உரிய பெயர்களை எதிர்க்கட்சித் தலைவர் நியமித்து அறிவிப்பார் என முடிவாகியது. பல்வேறு நகல் வடிவங்கள் பரிமாறப்பட்டதன் பின்னர் நிகழ்ச்சி நிரலின் வரிவடிவத்துக்கு இணக்கம் காணப்பட்டது. அந்த உடன்பாடு எட்டப்பட்டதும் எதிர்க்கட்சித் தலைவர் உரை ஒன்றை எழுத்தில் தயாரித்து, அதன் பிரதிகளை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்கியதோடு அதனை 2012 மே 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தமது அறிவிப்பாகவும் சமர்ப்பித்தார். எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்படும் அந்த நிகழ்ச்சி நிரல் யோசனை நாடாளுமன்றத்தில் அரசினால் வழிமொழிந்து உறுதிப்படுத்தப்படும் என முன்னர் இணங்கப்பட்டிருந்த போதிலும் அத்தகைய உறுதிப்படுதல் ஏதும் நாடாளுமன்ற அவையில் வெளிப்படுத்தப்படவேயில்லை!

இதுவே, அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கள் மற்றும் நடாளுமன்றத் தெரிவுக் குழு விவகாரங்களில் உண்மையான நிலைவரமாகும். மேற்படி எல்லாவற்றுக்கும் ஆவண ரீதியான சான்றுகள் உள்ளன. அப்படியிருந்தும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு முடியாத தனது இயலாத் தன்மைக்குத் தவறான தகவல்களை வெளிப்படுத்தும் தனது பிரசாரம் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குற்றம்சாட்டுகின்றது அரசு.

இவற்றை எல்லாம் மறந்துவிட்டு வெறுங்கையுடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் நுழையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கும் அசட்டுத்தனமான நிலையில் அரசு இருக்கின்றது. இந்த அழைப்பு, அடிப்படையில் நேர்மையான ஒன்று அல்ல. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றுவதற்கான தந்திரமாகும்.

13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, அதற்கு அப்பாலும் செல்வதன் வாயிலாக அதிகாரப் பரவலாக்கத்தை அர்த்தமுள்ளதாக்கி, அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றைத் தான் எட்டவுள்ளதாக பெரிய அளவில், பொதுவாக சர்வதேச சமூகத்திடமும், விசேடமாக இந்தியாவிடமும் அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி கூறிவருகின்றபோதிலும் அரசின் உள்நோக்கம் 13ஆவது திருத்தத்தை முற்றாக இல்லாததாக்கி விலக்கிக் கொள்வதே என்பதுதான் எமது சந்தேகமாகும். இது, இப்போது பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரின் வெளிப்படுத்துகை மூலம் உறுதியாகியுமிருக்கின்றது. இந்த இலக்கை அடைவதற்கு அரசின் வாகனம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுதான் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அதனால்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் நுழைவதற்கு முன்னர் புரிந்துணர்வு இணக்கம் எட்டப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடாப்பிடியாக வற்புறுத்தி நிற்கின்றது.

சிலர் சாதுரியமாக ஒரு கேள்வியை எழுப்புகின்றார்கள்:- நாடாளுமன்றத் தெரிவுக் குழு என்பது கனகச்சிதமாக ஜனநாயக நடவடிக்கை அல்லவா? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தீர்வு ஒன்றை தரக்கூடிய நடவடிக்கை ஒன்றில் பங்குபற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு மறுக்கமுடியும்?

சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்தத் தேசத்தைப் பின்னடைவுக்குள் தள்ளியது பெரும்பான்மை வாதம் என்ற தெளிவான நிலைப்பாடுதான் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். தனித்துப் பெரும்பான்மை ஆட்சி என்பதுதான் இந்த நாட்டின் பல சிறுபான்மைத் தரப்புக்களை வலிமையற்றவர்களாக்கியது.

1947 தேர்தலில் வாக்களித்த மக்களின் ஒரு பிரிவினரிடமிருந்தே அவர்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் அதே தேர்தலின் மூலம் முதலாவது நாடாளுமன்றத்துக்கு ஜனநாயகப் பெரும்பான்iயுடன் வந்த தரப்பினால் பறிக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

அதன் பின்னர் சிங்களம் மட்டும் மற்றும் ஏனைய பல அத்தகைய சட்டங்கள் இதே - ஜனநாயக நடைமுறைகள் மூலமாக - பெரும்பான்மையினரின் விருப்பமாகத் திணிக்கப்பட்டன.

எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராகத் தமிழர்கள் இருந்தபடியால்தான் 1972 மற்றும் 1978 அரசமைப்பு உருவாக்கல்களின் போது அவர்களைப் புறக்கணித்துவிட்டு அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இத்தகைய புறமொதுக்கலும் வெளியேற்றமும்தான் தனித்துச் செல்லும் நோக்கத்துக்கும் வன்முறைப் பிணக்குக்கும் மூலகாரணமாயின.

ஆனால் புரிந்துணர்வும் புதிய ஆரம்பமும் அவசியமானால் கடந்த கால இத்தகைய தவறுகள் மீள இடம்பெறக்கூடாது. ஷபெரும்பான்மையினரின் முடிவு| என்ற ஒரே உள்நோக்கு இலக்கை எட்டும் பொறிக்குள் சிக்கிக்கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்ணை மூடிக்கொண்டு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்லமுடியாது.

பெரும்பான்மைவாதப் போக்கு என்ற பிரச்சினையை பெரும்பான்மை அணுகுமுறை என்ற வழிமுறை மூலம் தீர்க்க முடியாது. அத்தகைய பெரும்பான்மைவாதப் பிரச்சினை முன்னர் பல உடன்பாடுகள் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்டமை மூலமாக (பண்டா - செல்வா, டட்லி - செல்வா) மேலும் கூர்மையடைந்திருக்கின்றது. அது இப்போது மீண்டும் திரும்பவும் நடக்கின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவு செய்ய அரசு தயாரில்லை என்றால், இப்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மட்டும் அது நேர்மையாகச் செயற்படும் என எப்படி நம்பமுடியும்.?

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Saturday, 20 October 2012 04:28 AM

    கடந்தகாலத்தை பார்த்து மஹிந்தைக்குரிய சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டிட வேண்டாம். மஹிந்தையினால் தர முடியாத எந்த தீர்வையும் இந்த ஜென்மத்திலும் வேறெந்த சிங்கள தரப்பும் தந்துவிட போவதில்லை. மஹிந்தைக்கு மட்டுமே பேரினவாதம் காவடி தூக்கி கொண்டிருக்கிறது. அடிக்க அடிக்க அம்மியும் நகரும். உங்கள் பிரச்சினைகளை, தேவைகளை, குறைபாடுகளை, உள்ள குமுறல்களை எப்படி சொல்லனுமோ அவர் உள்ளம் எப்படி சொன்னால் அதனை உள்வாங்கி கொண்டு அதன்பால் கவனம் செழுத்துமோ அதற்குரிய காரியங்களை மக்களின் நன்மை கருதி இறுதி முயட்சியாக செய்வதை விடுத்து அவரை விட்டு வெகுதூரம் இன்னும் இன்னும் விலகி போவதால் எந்த நன்மையும் வந்துவிட போவதில்லை???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X