2025 மே 19, திங்கட்கிழமை

ஆப்பிழுத்த குரங்கு போல அலறப்போகும் அரசாங்கம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.சஞ்சயன்

1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கும், அதன்மூலம் 1988ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கும் மீண்டும் போதாத காலம் வந்திருக்கிறது. இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற வாதம் தென்னிலங்கையில் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

அண்மையில் பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் இந்தத் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று வெளியிட்ட கருத்தை அடுத்து, தம்மைச் சிங்கள இனத்தின் காவலர்களென வெளிப்படுத்திக்கொள்ளும் சிங்களத் தேசியவாதக் கட்சிகள் கிளர்ந்தெழுந்துள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மட்டுமன்றி, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவரத்தன கூட இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த வழக்குத் தான், 13ஆவது திருத்தத்துக்கு எதிரான குரல்களை மீண்டும் உயர்த்தி விட்டுள்ளன. மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலம் என்பதால், எல்லா மாகாணசபைகளிலும் திவிநெகும சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெறவேண்டும் என்று உயர்நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தது.

ஆனால் அரசாங்கேமோ, வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர், வடக்கு மாகாணசபையின் சார்பில் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மாகாணசபை ஒன்று தெரிவு செய்யப்படாத நிலையில், அதன் சார்பில் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்று விளக்கமளிக்குமாறும் கோரியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது. இதையடுத்து மேலும் பல கட்சிகளும் அமைப்புகளும் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

ஆனாலும், அரசதரப்புக்கும் சிங்களத் தேசியவாத சக்திகளுக்கும் கோபம் என்னவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தான். இதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் 13ஆவது திருத்தத்துக்கும் எதிராக சிங்களத் தேசியவாதிகளால் வெளியிடப்பட்டு வரும் கருத்துகளில் கடுமையான இனவாதம் கொப்பளிக்கிறது.

13ஆவது திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்காது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கை ஆட்சி செய்யும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று இனவாதத்தின் உச்சத்துக்கே போயுள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச.

இது என்ன நடக்கக் கூடிய காரியமா? அப்படி நடந்து விட்டால் கூட, அதில் என்ன தவறு உள்ளது? அரசாங்கம் சொல்வது போல, “ஒரே நாடு, ஒரே மக்கள்“ என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எப்படி அதிலிருந்து விலகி இரண்டாம் பட்சமாக முடியும்?

கிழக்கில், தமிழர்களின் விருப்பங்களைப் புறக்கணித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்க முடியும் என்றால், தெற்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆட்சி செய்யக் கூடாது? இப்படிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், இப்போதுள்ள பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கில் ஆட்சியைப் பிடிக்குமா என்ற விவாதம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுமே என்ற பயமும், அப்படி நிகழ்ந்தால் மாகாணசபைகள் மீது தாம் நினைத்த மாத்திரத்தில் கை வைக்க முடியாது என்ற ஆதங்கமும் தான்.

அதிகாரங்கள் தமிழரின் கைகளில் செல்வதை அரசாங்கமும் சரி, சிங்களத் தேசியவாத சக்திகளும் சரி துளியளவும் விரும்பவில்லை.

வடக்கு மாகாணசபையை அமைப்பதற்கு முன்னதாக, மாகாணங்களின் அதிகாரங்களைக் குறைத்து விடும் அரசதரப்பின் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கட்டை போட்டதும் தான் இந்தச் சீற்றம் எழுந்துள்ளது.

மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போது, அதற்கு எதிராக நின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஜேவிபியும் போன்ற கட்சிகளும் சரி, இப்போது அதை எதிர்க்கின்ற விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற எல்லா தேசியவாதக் கட்சிகளுமே, அந்த மாகாணசபைகளின் அதிகாரங்களை ருசித்துப் பார்த்தவை தான். 1988இல் நடந்த முதலாவது மாகாணசபைத் தேர்தல்களைப் புறக்கணித்த இந்தக் கட்சிகள் ,பின்னர் அதே மாகாணசபைகளின் ஆசனங்களுக்காக அடிபட்டுக் கொண்டன. இது தமது கொள்கைக்கு முரணானது என்று எந்தக் கட்சியுமே மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கவில்லை.

ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைப் பெற்றுவிடப் போகிறது என்றதும் தான், அவர்களுக்கு இது கசப்பானதாகத் தெரிகிறது. பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ் இதனை வெளிப்படையாகவே கூறியும் உள்ளார்.

இப்போது மாகாணசபைகளுக்கும் 13ஆவது திருத்தத்துக்கும் எதிராக சிங்களத் தேசியவாத சக்திகள் தூண்டிவிட்டுள்ள நெருப்பு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், இது நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியளவுக்கு சக்தி வாய்ந்தது. அரசாங்கத்துக்குள்ளேயே இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள் இது ஆபத்தான காரியம் என்று எச்சரித்துள்ளனர். இதனால், அமைச்சரவைக்குள் இரண்டு கருத்து நிலவுகிறது.

ஆனால், 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான கருத்தே அமைச்சரவைக்கு ஓங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ராஜபக்ஷ் குடும்பமும் இதன் பின்னணியில் இருப்பதை மறந்து விடமுடியாது.

கோட்டாபய ராஜபக்ஷ்வின் சொல்லுக்கு ஆடுகின்ற அமைச்சர்களே அதிகம். அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முனையமாட்டார்கள்.

எனவே, அமைச்சரவைக்கு இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று நடந்தால் கூட அதில் இடதுசாரிகள் என்று சொல்லக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் தான் எதிர்த்து நிற்பார்கள். இதற்கிடையில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்த வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச அவசர கடிதம் ஒன்றையும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ளார்.

திவிநெகும சட்டமூலம் முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையிலேயே அதற்கு அடிப்படைத் தடையாக உள்ள மாகாணசபைகளையே இல்லாதொழிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

ஆனால், இது ஒன்றும் அவ்வளவு இலகுவாக நடந்து விடக்கூடிய காரியமல்லை. ஏனென்றால், இது இலங்கைக்கு அப்பாலும் தொடர்புடைய விவகாரம். இந்த அரசியலமைப்புத் திருத்தம் உருவாகக் காரணமே இந்தியா தான்.

1987இல் ஜே.ஆருடன் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி செய்து கொண்ட உடன்பாடு தான் இதற்கு வழிவகுத்தது.

தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஒரு கட்டமைப்பாகவே, மாகாணசபைகளை உருவாக்க அப்போதைய உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டது. அப்போது இந்த மாகாணசபைகள் அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இப்போதைய சூழலில் அதிகாரப் பகிர்வுக்கான ஓர் அடித்தளமாகவே இது காணப்படுகிறது.

13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பேச கூட்டமைப்பு தயாராக இல்லாவிட்டாலும், இதுவும் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதில் அது உறுதியாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இன்னமும் கூட 13ஆவது திருத்தமே இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு என்று கருதுகிறது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் 13ஆவது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காமலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலும் இருந்து வரும் அரசாங்கம், இந்தியாவிடம் பலமுறை ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது. அதுதான் 13ஆவது திருத்தத்துக்கு மேலான அதிகாரங்கள் என்ற வாக்குறுதி.

ஆனால், 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வது பற்றிப் பேசிய அரசாங்கம், மாகாணசபைகள் வசமுள்ள காணி அதிகாரங்களையும் பறிக்கின்ற திவிநெகும சட்டமூலத்தையே கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சி வெற்றிபெற்றால், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக, பொலிஸ் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கூட அரசாங்கம் அடுத்ததாக எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய பின்னணியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு தற்காலிகத் தடையொன்றைப் போட்டுள்ளது. இது அரச தரப்புக்கும் சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவின் எதிர்ப்பை மீறி அரசாங்கத்தினால் 13ஆவது திருத்தத்தை ரத்துச்செய்ய முடியுமா என்ற வாதங்கள் எழுந்துள்ளன. அவ்வாறு செய்தால் மீண்டும் இந்தியப்படை இலங்கைக்குள் வரும் என்று எச்சரித்துள்ளார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

அத்தகைய சூழல், அதாவது இந்தியா தனது படைகளை அனுப்பும் நிலை ஏதும் இப்போது இல்லை என்பது வெளிப்படையான விடயம். அப்படியானதொரு நிலையில், இந்தியா தனது படைகளை அனுப்பும் அளவுக்குப் போகாது விட்டாலும், அதன் கடுமையாக எதிர்ப்பை இலங்கை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த எதிர்ப்பு நேரடியானதாகவும் இருக்கலாம், மறைமுகமானதாகவும் அமையலாம்.

அத்தகைய ஓர் ஆபத்தான காரியத்தை எதிர்கொள்ள அரசாங்கம் துணியுமா என்பது கேள்வி. அதேவேளை, இப்போது அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் வரப்போகிறது. கொஞ்சம் அடங்கிக் கிடந்த சிங்களத் தேசியவாத சக்திகளை அது தட்டியெழுப்பி உசுப்பி விட்டு விட்டது. அவர்கள் இனிமேல் சும்மாயிருக்கமாட்டார்கள். உச்சாணிக் கொம்பில் இருந்து ஆடப்போகிறார்கள்.

2002இற்குப் பிற்பட்ட போர்நிறுத்த காலத்திலும், போர் உச்சத்தில் இருந்த காலத்திலும் நோர்வே, ஐ.நா. தூதரகங்கள் எதிர்கொண்டதைப் போன்ற போராட்டங்களை, இந்தியத் தூதரகம் வரும் காலங்களில் சந்திக்கலாம்.

அதுபோலவே, சிங்களப் பேரினவாதிகளை அடக்கவும் முடியாமல் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாத திரிசங்கு நிலை ஒன்றை அரசாங்கம் விரைவில் எதிர்கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல, இந்த சிங்களத் தேசியவாத எழுச்சியானது, தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளின் மீதுள்ள நியாயத் தன்மையையும் சர்வதேச சமூகத்துக்கு உணர்த்தும் அரிய வாய்ப்பாகவும் அமையப் போகிறது.

You May Also Like

  Comments - 0

  • kuhan Monday, 22 October 2012 09:43 AM

    சிங்களப் பேரினவாதிகளின் பின்னனியில் உள்ளவர்கள், அரசு ஆடச் சொன்னால் இவங்க ஆடுவாங்க, அடங்க சொன்னால் இவர்கள் அடங்கிவிடுவார்கள். இதனால் பெரிய பிரச்சனை வராது.

    Reply : 0       0

    aj Monday, 22 October 2012 11:20 AM

    நல்ல கட்டுரை.
    இந்த நாட்டில் இருக்கும் பிரச்சினையே இது தான். அதாவது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பொய்யான தமிழர் எதிர்ப்பு பிரசாரத்தை பண்ணுவதே சிங்கள அரசியவாதிகள் காலம் காலம் செய்துவந்தார்கள். இப்போதும் கூட எல்லோரையும் அழித்து விட்டுடோம் என்ற மமதையில் சிங்கள பேரினவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. வெறும் பேச்சிக்கு ஒரு நாடு, ஒரு இனம் என்று சர்வதேசத்தை ஏமாத்தி கொண்டு இங்கு கடும் சிங்கள போக்கை தொடர்ந்தும் காட்டிகொண்டு இருக்கிறது. தெற்கை தமிழர் ஆளுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் பொய் பிரசாரம் திட்டமிட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இதை அரசோட ஒட்டி இருக்கும் தமிழ் தலைமைகள் உணரவேண்டும்.

    Reply : 0       0

    aj Monday, 22 October 2012 11:25 AM

    சிங்களம் எல்லாம் மறந்து ஓரணியில் நிண்டு முழுவீச்சுடன் எங்களுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. நாங்கள்...? குறிப்பாக அரசு குழலாக இருக்கும் அமைச்சர்கள்...? இப்போது உங்களுக்கு இந்த பதவி இருப்பதால் சந்தோசம் அடையலாம். ஆனால் நாளை உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் இருக்கும் இடம் தெரியாமல் போக போவது உண்மை. இப்போது அறிவுடன் நடந்துகொண்டால் இதில் இருந்து எங்களை நாங்கள் பாதுகாக்கலாம். இன அழிப்பு முடியவில்லை. பேரினவாதம் பல வழிகளில் எங்களை அளித்துக்கொண்டு இருக்கிறது. இன்றே நாங்கள் விழித்துக்கொண்டு செயல்படுவோம்...

    Reply : 0       0

    குமார் Tuesday, 23 October 2012 08:54 AM

    அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு தமிழ் தலைவர்கள் என்று யாரும் இல்லை மாறாக‌ தமிழ் துரோகிகளே உள்ளனர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X