2025 மே 19, திங்கட்கிழமை

முதல்வர் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் தொடங்கிய யுத்தம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்திற்கும் நேரடி மோதல் உருவாகியிருக்கிறது. முதலில் இரு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும், அடுத்த நாள் இன்னும் இரண்டு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தார்கள். முதலில் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் மதுரை சுந்தரராஜனும், திட்டக்குடி தமிழழகனும்தான். இவர்களில் மதுரை சுந்தரராஜன் விஜயகாந்தின் இளம் வயதிலிருந்தே நண்பர் என்பதும், பள்ளித் தோழர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சந்தித்த இரு எம்.எல்.ஏ.க்கள் நெல்லை மைக்கேல் ராயப்பன். இன்னொருவர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அருண் பாண்டியன். இவர் சினிமா நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை சந்தித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த "நால்வர் அணி"யுடன் நிற்கவில்லை இந்த "கட்சி மாறும் பாசம்". இன்னும் பல தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை அடுத்தடுத்து சந்திக்கப் போகிறார்கள் என்ற தகவல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வருகிறது.

மின்தட்டுப்பாடு, தமிழக சட்டமன்ற வைர விழா கொண்டாட்டம் என்று சென்று கொண்டிருந்த தமிழக அரசியலில் இப்படி எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை திடீரென்று சந்தித்தது அரசியல் களத்தில் அனல் பறக்க வைத்தது. முதல்வரிடம் இந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகளை வைத்தார்கள். அதைவிட முக்கியமாக சந்தித்து விட்டு வெளியே வந்ததும், "தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது" என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார்கள். இது விஜயகாந்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜயகாந்த். கட்சி தலைவரே ஆட்சியை விமர்சிக்கும் போது, அவர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவது சற்று வித்தியாசமான காட்சி என்றாலும் தமிழகத்திற்கு புதிதல்ல. 1991-1996இல் இன்றைய முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக தமிழக முதலமைச்சாரான பிறகு அவரது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அவருக்கும், அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கும் மோதல் உருவானது. அப்போது கோவை செல்வராஜ், பேராவூரணி சிங்காரம், ஜீனத் ஷர்புதீன், ஆண்டிமடம் தங்கராஜ் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தலைமையில் ஒரு தனி அணியே (அப்போதெல்லாம் அவர்களை "ஜெயா காங்கிரஸ்" என்று பத்திரிகைகளில் எழுதுவார்கள்) அ.தி.மு.க. அரசை பாராட்டிக் கொண்டிருந்தது. இதே மாதிரி 2001-2006 காலகட்டத்தில் இதே முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த போது கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் குமாரதாஸ் அப்படியொரு பாராட்டு பத்திரம் வாசித்தார். பிறகு அவர் அ.தி.மு.க.விலேயே ஐக்கியமானார். ஏன், சென்ற தி.மு.க. ஆட்சியில் (2006-2011) தி.மு.க. தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த கோவில்பட்டி ராஜேந்திரன், மைலாப்பூர் எஸ்.வி.சேகர் (இவரும் பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது) ஆகியோர் அவரை சந்தித்து தங்களின் தொகுதி மக்கள் கோரிக்கைகளை வைத்தனர். இன்னும் சொல்லப் போனால் இவர்கள் இருவரும் அ.தி.மு.க.வில் இருந்து கொண்டே தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். ஆகவே தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்கட்சி உறுப்பினர் திடீரென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பது புதிய காட்சிகள் அல்ல! கட்சி தலைமை மீது அதிருப்தியாக இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரங்கேற்றிய நிகழ்வுகள்தான்.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இப்படி சந்திக்க வேண்டிய அரசியல் சூழ்நிலை ஏன் வந்தது? தமிழக சட்டமன்றத்தில் விஜயகாந்திற்கு 29 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியாக தே.மு.தி.க. விளங்குகிறது. ஆகவேதான் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு முன்பு கூட்டணி அமைத்த உடனேயே முதல்வர் ஜெயலலிதாவிற்கும், விஜயகாந்திற்கும் இடையேயான பனிப்போர் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நிலைமையில் மாற்றம் இல்லை. "உங்களால் நான் வெற்றி பெறவில்லை. என்னால்தான் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கிறீர்கள்" என்பது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வாதம். ஆனால் "என்னால்தான் நீங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தீர்கள்" என்பது விஜயகாந்தின் வாதம். இந்த டென்ஷன் நீடித்தது. இரு கட்சிகளுக்கும் சட்டமன்றத்திற்குள்ளேயே சச்சரவு வெடித்தது. சட்டமன்றத்திலிருந்து விஜயகாந்த் சஸ்பென்ட் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு எதிர்கட்சி தலைவரை சஸ்பென்ட் செய்த சம்பவம் பதிவானது. பிறகு "இன்பர்மேஷன் கமிஷனர்கள்" (தகவல் கோரும் உரிமை சட்டத்தினை செயல்படுத்த நியமிக்கப்படும் ஆணையர்கள்) நியமனத்திற்கான கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. தகவல் கோரும் உரிமை சட்டப்படி இது போன்ற ஆணையர்கள் நியமனத்தின் போது எதிர்கட்சித் தலைவரும் அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஐந்து தகவல் ஆணையர்களை நியமிக்கும் அது போன்றதொரு கூட்டத்திற்கு விஜயகாந்த் செல்லவில்லை. இப்படியே தொடர்ந்த மோதலின் விளைவாக, விஜயகாந்த் தன் கட்சி வெற்றி பெற்ற 29 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த தொகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக "கடும் மின்வெட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை", "டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கையைக் காணோம்", " ஊழல் பெருகிவிட்டது" என்றெல்லாம் சரமாரியாக குற்றச்சாட்டுகளை சுமத்தினர். "எங்கள் தயவில் எதிர்கட்சி தலைவராகி விட்டு, எங்களையே விமர்சிக்கிறீர்களா?' என்ற கோபம் அ.தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிப்பது விஜயகாந்த் மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியது. அந்த இமேஜை உடைக்கவே, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக முதல்வரை சந்திக்கும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் இப்படி சந்திப்பார்கள் என்பதே அரசியல் வட்டாரச் செய்தி.

இதன் விளைவுகள் என்னவாகும்? தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, திருச்சி சிவா (இருவரும் தி.மு.க.), இளவரசன், டாக்டர் மைத்ரேயன் (இருவரும் அ.தி.மு.க.), ஞானதேசிகன் (தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்திலிருந்து ராஜ்ய சபை எம்.பி) ஆகிய ஆறு இந்திய ராஜ்ய சபை எம்.பி.க்களின் பதவி காலம் வருகின்ற ஜூலை 2013இல் முடிவடைகிறது. அந்த பதவிகளுக்கு தமிழகத்திலிருந்து ஆறு பேரை தேர்வு செய்ய இந்திய ராஜ்ய சபை தேர்தல் நடக்கப்போகிறது. இவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ராஜ்ய சபை எம்.பி.யை தேர்வு செய்ய அந்தக் கட்சிக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆறு எம்.பி.க்களில் நான்கு எம்.பி.க்களை எளிதில் அ.தி.மு.க. ஜெயித்து விடும். ஏனென்றால் அக்கட்சிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அடுத்த பெரிய கட்சி தே.மு.தி.க. ஆனால் இந்தக் கட்சியிடம் உள்ள 29 எம்.எல்.ஏ.க்களுடன் மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால் மட்டுமே அக்கட்சிக்கு ஒரு ராஜ்ய சபை எம்.பி. கிடைக்கும். இப்போது அக்கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமாக இருக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டதே அதற்கு காரணம். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில், "பிரகாஷ் காரத் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர்) மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் சொல்லும் ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்வேன்" என்று வெளிப்படையாகவே அறிவித்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக சட்டமன்றத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆதரித்தால் தனது மனைவி பிரேமலதாவை ராஜ்ய சபை எம்.பி.யாக்கிவிடலாம் என்ற எண்ணவோட்டத்தில் இருந்தார் விஜயகாந்த். இப்படியொரு சூழ்நிலையில்தான் தே.மு.தி.க.விலிருந்து இதுவரை நான்கு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. தலைமையைச் சந்தித்து ஆதரவுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை அவர் கட்சியிலிருந்து பத்து எம்.எல்.ஏ.க்கள் வரை இப்படி முதல்வரை சந்தித்து பாராட்டு பத்திரம் வாசித்து விட்டார்கள் என்றால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு இருந்தாலும் பிரேமலதாவை ராஜ்ய சபை உறுப்பினராக்க முடியாது என்ற தயக்கம் விஜயகாந்திற்கு வந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

ஏனென்றால், ராஜ்ய சபை தேர்தல் வாக்குப் பதிவு என்பது ரகசிய வாக்குப் பதிவு. ஆகவே முதல்வரை சந்திக்கும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தால், அதைக்  கண்டுபிடித்து "கட்சி தாவல் சட்டத்தின்" அடிப்படையில் தண்டிக்க முடியாது. ஆகவே, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் இந்த அதிரடி அக்கட்சிக்குக் கிடைக்கக்கூடிய ஒரு ராஜ்ய சபை எம்.பி. பதவிக்கு ஆபத்தாகவே முடியும். இதற்கு முட்டுக் கொடுக்க இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று அகில இந்திய அளவில் ஒரு கொள்கை முடிவை எடுத்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், (சி.பி.எம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சி.பி.ஐ) ஒரே அணியில் தமிழகத்தில் நின்று ராஜ்ய சபை தேர்தலை சந்திக்க வேண்டும். அப்படியில்லையென்றால், விஜயகாந்துடன் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் காத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு போட்டியின்றிக் கிடைக்கும் ஒரு ராஜ்ய சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க.விற்காக விட்டுக் கொடுக்க முன் வர வேண்டும். ஆனால் தி.மு.க. விட்டுக் கொடுப்பதும், சி.பி.எம்- சி.பி.ஐ. ஒற்றுமையாக ஓரணியில் ராஜ்ய சபை தேர்தலை சந்திப்பதும் இப்போது உடனடியாக நடைபெறும் சம்பவங்கள் போல் தெரியவில்லை. அதனால் இன்றைய திகதியில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா - ராஜ்ய சபை எம்.பி.யாகும் வாய்ப்புக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக முதல்வரை சந்திப்பது பெரும் நெருடலை ஏற்படுத்தி விடும்.

ராஜ்ய சபை எம்.பி. சிக்கல் இப்படியென்றால், சட்டமன்றத்தில் விஜயகாந்திற்கு கிடைத்திருக்கும் எதிர்கட்சி தலைவர் பதவியே சிக்கலாகும் சூழல் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே தே.மு.தி.க.விற்கு அடுத்த அந்தஸ்தில் தி.மு.க. 23 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கிறது. இப்போது அ.தி.மு.க. தலைமையைச் சந்தித்துள்ள நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டால் விஜயகாந்தின் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்து பறிபோய் விடும். அதே நேரத்தில் சட்டமன்றத்தில் அடுத்த எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க. பிரதான எதிர்கட்சியாக மாறும் வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் உள்ள மொத்த எம்.எல்.ஏ.க்களில் (234) பத்து சதவீத எம்.எல்.ஏ.க்களான 24 உறுப்பினர்கள் இல்லை! தமிழக சட்டமன்றம் வைரவிழா கொண்டாடும் நேரத்தில் எதிர்கட்சி தலைவரும் இல்லை! பிரதான எதிர்கட்சியும் இல்லை! என்ற நிலைமை உருவாகும். ஆனால் அதற்கும் கூட இப்போது முதல்வரை சந்திக்கும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை வரும். முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது கட்சி மாறும் எம்.எல்.ஏ.க்கள் விடயத்தில் ஒரு புது அணுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு வர விரும்புவோரை தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுவார்கள். பிறகு அந்தத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் அப்படி ராஜினாமா செய்தவரையே மீண்டும் வேட்பாளராக்கி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வைப்பார்கள். இது மாதிரியொரு வாக்குறுதியை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தே.மு.தி.க.விலிருந்து வந்து தன்னைச் சந்திக்கும் எம்.எல்.ஏ.க்களுக்குக் கொடுத்தால், அவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள். அது மாதிரியொரு சூழ்நிலையில்தான் விஜயகாந்தின் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்படும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்டுள்ள பனிப்போர் உச்சகட்டத்திற்கு போனால் அந்த நிகழ்ச்சியும் அரங்கேறும். தமிழக சட்டமன்ற வைரவிழா நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்கட்சியே இல்லை என்ற நிலை வரலாம்.

இதற்கிடையில் திடீரென்று அதிரடி நடவடிக்கை எடுத்த விஜயகாந்த், "நானும், என் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும் தங்களை சந்தித்து தொகுதி பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டும். எங்களுக்கு அப்பாயின்மென்ட் கொடுங்கள்" என்று முதல்வருக்கு கடிதம் எழுதி, அதை தமிழக சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுத்திருக்கிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுப்பது சட்டமன்ற சபாநாயகரின் வேலை அல்ல என்றாலும் விஜயகாந்தின் இந்த மூவில் அரசியல் எதிரொலிக்கிறது. அதாவது விஜயகாந்தை சந்திக்க முதல்வர் அனுமதி கொடுத்தால், ஏற்கனவே தலைமையின் மீது அதிருப்தியடைந்து முதல்வரை நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்த நிகழ்ச்சி புஷ்வானம் ஆகும். ஒருவேளை முதல்வர் தன்னை சந்திக்க விஜயகாந்திற்கு அனுமதி கொடுக்கவில்லையென்றால், "தே.மு.தி.க.வை உடைக்க முதல்வர் பாலிடிக்ஸ் பண்ணுகிறார்" என்ற பிரசாரத்தை விஜயகாந்த் மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதை மனதில் வைத்தே விஜயகாந்த் இப்படியொரு மூவைச் செய்திருக்கிறார். அதே நேரத்தில் ஏற்கனவே முதல்வரை சந்தித்த நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் திங்கள்கிழமையன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற வைரவிழா நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவில் முதல் வரிசையில் அமர்த்தப்பட்டார்கள். அதேபோல் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியில் கலந்து கொண்ட மைக்கேல் ராயப்பன், சுந்தரராஜன் (முதல்வரை ஏற்கனவே சந்தித்த நான்கு எம்.எல்.ஏ.க்களில் இருவர்), " விஜயகாந்திற்கு திராணி இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்கட்டும்" என்று சவால் விட்டுள்ளார்கள். இந்திய கட்சி தாவல் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் செய்த யுக்தி இந்த சவால் என்றாலும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும் இடையேயான பனிப்போரில் இன்னும் பல பரபரப்புக் காட்சிகள் விரைவில் அரங்கேறும். அது மட்டுமின்றி, அந்தக் காட்சிகள் அ.தி.மு.க.விற்கு எதிரான அணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கும் என்பதே இன்றைய அரசியல் நிலவரம்.

You May Also Like

  Comments - 0

  • abdulla Sunday, 04 November 2012 07:25 AM

    குப்பை அரசியல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X