2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனிவாவில் இலங்கைக்கு கைகொடுக்குமா இந்தியா?

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே.சஞ்சயன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பூகோள கால மீளாய்வில் - இலங்கை நிலை குறித்து நவம்பர் 1ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. நவம்பர் 1ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கையிடம் கேள்விகளை எழுப்ப 99 நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு நாட்டுக்கும் 72 செக்கன்கள் மட்டுமே உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. பல நாடுகள் எற்கனவே கேள்விகளைக் கையில் கொடுத்தும் விட்டன. இதனால், இந்த கூட்டத்தில் இலங்கைக்குப் பலத்த சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

ஏனென்றால், பல்வேறு நாடுகளும் எழுப்பவுள்ள கேள்விகள் சிக்கலானவை. இதில் அமெரிக்கா தான் அதிகளவிலான விவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. வடக்கில் மாகாணசபைத் தேர்தல் தாமதம், சாட்சிகள், பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் சட்டமூலம், சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல், ஊடகவியலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசை விமர்சிப்போருக்கு எதிரான அச்சுறுத்தல்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கான செயற்றிட்டத்தில் பரிந்துரைகள் அனைத்தும் உள்ளடக்கப்படாததற்கான காரணம், அவற்றின் நிலை என்று அமெரிக்கா எழுப்பும் கேள்விகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

அதேவேளை, போரின்போது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சுதந்திரமான விசாரணைகளின் மூலம் இலங்கை அரசாங்கம் எப்போது பொறுப்புக்கூறப் போகிறது என்று கனடா எழுப்பும் கேள்வியும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விசாரிக்க இலங்கை இராணுவம் நியமித்த விசாரணை நீதிமன்றத்தின் நிலை குறித்த பிரித்தானியா எழுப்பியுள்ள கேள்வியும் சிக்கலானவை.

இவை தவிர அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டியுள்ளது.

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனிவா சென்றுள்ளது.

இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் நவம்பர் 5ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

இந்த மீளாய்வை மேற்கொள்ளும் பொறுப்பில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் முடிவு தமக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், இப்போது இந்தியா தமக்குப் பின்னால் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே பீரிஸ் அவ்வாறு கூறியுள்ளார்.

எனினும், அவரது இந்தப் பதில், ஜெனிவா மீளாய்வுக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது இந்தியா எமக்குப் பின்னால் தான் நிற்கிறது என்ற அவரது பதில், ஜெனிவா மீளாய்வுக் கூட்டத்தை மனதில் கொண்டதாகவே படுகிறது.

நவம்பர் 5ஆம் திகதி வாக்கெடுப்பில் இலங்கைக்கு சார்பாக இந்தியா நடந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு, புதுடெல்லியிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.

கடந்த மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரின் போது, இந்தியா கடைசி வரை முடிவை வெளியிடாமல் எப்படி மௌனமாக இருந்ததோ அதுபோலவே இப்போதும் இருக்கிறது. அப்போதும் கூட இலங்கை அரசாங்கம், இந்தியா கைவிடாது என்று கடைசி வரை உறுதியாக நம்பிக் கொண்டிருந்தது. இலங்கையின் அரச தலைவர்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படையாகவே கூறியிருந்தனர். அதனால் தான், பெருத்த ஏமாற்றத்தை அரசாங்கம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர், இலங்கையின் நிலைமைகளில் பெரியதான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இத்தகைய நிலையில் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது  கேள்விக்குரியதாகவே உள்ளது.

இப்போது மனித உரிமைகள் விவகாரங்களுக்கு அப்பால், இனப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு பற்றிய சர்ச்சைகளும் வலுப்பெற்றுள்ளன. அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ளதும், 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளும் கூட ஜெனிவாவில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

போர் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் கையைப் பிசைந்தபடி நிற்கிறது அரசாங்கம். இத்தகைய நிலையில், ஜெனிவா போர்க்களம் என்பது அரசாங்கத்துக்கு சிக்கலானதும் சிரமானதுமாகவே இருக்கும்.

வரும் 1ஆம் திகதிய விவாத அமர்விலும், 5ஆம் திகதிய வாக்கெடுப்பிலும் இலங்கை அரசு சமாளித்துக் கொண்டு விட்டாலும், பிரச்சினை என்பது முடிந்துவிடப் போவதில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மீண்டும் வரப்போகிறது.

கடந்த மார்ச் மாதம் 19ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக - அந்தத் தீர்மானத்தின் கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்ற அறிக்கை 22ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை திருப்திகரமான அறிக்கையைக் கொடுக்கின்ற அளவுக்கு இலங்கை அரசாங்கம் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. போர்க்குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல், அரசியல்தீர்வு என்று ஏகப்பட்ட விவகாரங்களில் அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எதையுமே செய்யவில்லை. இந்தநிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்வது ஒன்றும் அரசாங்கத்துக்கு சுலபமான காரியமாக இருக்காது.

பெரும்பாலான விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து விடுவித்து விட்டோம், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்தி விட்டோம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை வெளியிட்டு விட்டோம் என்று அரசாங்கம் மூன்று விடயங்களை மட்டும் கையில் வைத்திருக்கின்றது.

ஆனால், இந்த மூன்றுமே ஓட்டை நிறைந்த படகுகள் என்பது தான் முக்கியம். இந்த ஓட்டைப் படகுகளை நம்பித் தான், ஜெனிவா என்ற ஆற்றைக் கடக்க அரசாங்கம் முனைகிறது. இது ஆபத்தான பயணம் என்பது அரசுக்குத் தெரியாததல்ல. ஆனாலும், உதவிக்கு வரும் என்று இந்தியா மீது இன்னமும் அது நம்பிக்கை வைத்துள்ளது ஆச்சரியம் தான்.

இந்தியா இதுபோன்ற சமயங்களில் உதவினாலும் கூட, தான் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள், கடப்பாடுகளை மறந்து விட்டு, ஜெனிவாவில் இந்தியா கைகொடுக்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை.

என்றாலும் அரசாங்கம் தனது பக்கத்தில் உள்ள தவறுகளைக் களைவதற்குப் பதில், அதே தவறைத் தான் மீண்டும் மீண்டும் செய்ய முனைகிறது. இதன் விளைவுகள் ஜெனிவாவில் எவ்வாறு எதிரொலிக்கும் என்பதை மிக விரைவாகவே அறிந்து கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Wednesday, 31 October 2012 10:41 AM

    நிச்சயமாக இந்தியா இலங்கைக்கு உதவபோவது இல்லை. இந்திய எதிர்ப்பும் இந்திய தேசிய கொடிகள் தெருவில் எரிக்கபட்டு இந்திய சொத்துக்கள் தாக்கி அழிக்கப்படும் நிலையோடு இந்த வருடம் கடந்து செல்லும் நிலமையையே ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கையில் உருவாக்கும்???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X