2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ் சமூகமும் தலைமை நீதிபதியை நீக்கும் முயற்சியும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 05 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லதோ, கெட்டதோ, இலங்கையில் தமிழ் சமூகத்திற்கு எதிலும் பங்கு இல்லை என்று யார் சொன்னார்கள்? ஏன், தற்போது அரசியல் ஆக்கப்பட்டுவிட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகவை பதவி நீக்கும் முயற்சியில் கூட தமிழ் 'சமூகத்தின்' பங்களிப்பு இருக்கிறது என்று யாராவது சொன்னால் அதனை முக்கியமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுக்க முடியாது. 'திவி நெகும' சட்டம் குறித்த அதிகார பகிர்வு பிரச்சினையை கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிராவிட்டால் இந்த பிரச்சினையே தோன்றியிராதோ என்னவோ?

என்ன செய்வது, குற்றாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் மழை பெய்கிறது. சம்மந்தமே இல்லாத விடயத்தில் நீதிபதி சிராணி பதவி நீக்கம் செய்யப்பட்டாலும் அதற்கான பழியில் பங்கை தமிழ் சமூகம் மீது சிலர் நாளை திணித்தால், அதனை பார்த்து சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால். நீதிபதி சிராணி விடயத்தில், அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவே முக்கியமானது. இன்றைய நிலைமைப் படி, அவர்கள் இதுபோன்ற விடயங்களில் அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அது தான் பிரச்சினையே.

நீதிபதி சிராணியை பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதற்கான காரணங்களையும் அரசு தரப்பு நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷயிடம் மனு சமர்ப்பித்துள்ளது. அவை வெளிவரும் வரை அந்த காரணங்கள் வெளியே தெரியாது. பத்திரிகை செய்திகளை வைத்து பார்க்கும் போது என்னவோ, 'திவி நெகும' சட்ட முன்வரைவு குறித்து, கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள்; உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவே அந்த காரணங்களுக்கு பின்னால் தொக்கி நிற்கும் காரியமாகும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதற்கு அப்பால் சென்றால், 'திவி நெகும' சட்டமே தமிழ் சமுதாயத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இனப்பிரச்சினை குறித்த அரசியல் தீர்வு சம்மந்தப்பட்ட விடயமாகும். பதின்மூன்றாவது அரசியல் சட்டதிருத்தத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பலவும் பல காலகட்டங்களில் மத்திய அரசு தனதாக்கி கொண்டுவிட்டது. அதுதவிர காவல்துறை மற்றும் நிலம் (காணி) குறித்த அதிகாரங்கள் மாகாணங்களுக்கு முதலில் இருந்தே வழங்கப்படவில்லை. இந்த பின்னணியில், 'திவி நெகும' சட்டம் மிச்சம் இருக்கும் மாகாணங்களின் அதிகாரங்களையும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே சிங்கள அரசியல் கட்சிகள் பலவற்றாலும் காணப்படுகிறது.

இந்த சட்டத்தை ஜேவிபி உட்பட்ட அரசியல் கட்சிகள் அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்துள்ளன. கூட்டமைப்போ, அந்த காரணங்களுக்கும் அப்பால் சென்று, தேர்ந்தெடுக்கப்படாத மாகாண சபை இல்லாத தமிழ் பெரும்பான்மை வடக்கு மாகாணத்தில், அந்த சபையின் பணிகளை ஆளுநர் நிர்வகிக்க முடியாது என்ற வகையில் உயர் நீதிமன்றத்தை அணுகியது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மாகாணங்களுக்கு அதிகார பகிர்வு அளித்த பதின்மூன்றாவது திருத்தம் அவற்றில் ஏதாவது மாறுதலை செய்ய மத்திய அரசு நினைத்தால், அதற்கான நாடாளுமன்ற சட்ட திருத்தங்கள் மாகாண சபைகளின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.


இந்த பின்னணியில் கூட்டமைப்பின் உயர் நீதிமன்ற மனு - தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, வடக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல, தேசிய அரசியல் மற்றும் தேசிய கட்சிகளுக்கும் முக்கியமானதாகி விட்டது.

'திவி நெகும' சட்டம் மீதான தீர்ப்பில் உயர் நீதிமன்றம் - கூட்டமைப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்டால், வடக்கு மாகாண தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற அரசியல் நிர்ப்பந்தம் அரசிற்கு ஏற்படும். எப்போது வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுநர் நிர்வகிக்க முடியாது என்ற நிலைமை தோன்றுகிறதோ, அப்போதே மாகாண சபை இல்லாத மாகாணம், மாகாணமே அல்ல என்ற அரசியல் சட்ட நிலைமை தோன்றிவிடும். இதற்கான ஒரே தீர்வு, மாகாண சபை இல்லாத வடக்கு மாகாணத்தில் உடனடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே.

இதில் இருந்து முளைவிடும் இன்னொரு அரசியல் ரீதியான அரசியல்சாசன பிரச்சினையும் பிற்காலத்தில் எழுவதை தவிர்க்க முடியாது. எப்போது மாகாணத்தின் அதிகாரங்களை மாகாண சபை மூலமே நிர்வகிக்க முடியும் என்ற நிலைமை தோன்றிவிட்டால், அதன் காரணமாகவே, மத்திய அரசின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் மாகாண சபைகளை கலைப்பதற்கும் அங்கு இஷ்டத்திற்கு புதிய தேர்தல்கள் நடத்துவதும் கட்டுப்படுத்தப்படும். இதுவே பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் கை வைக்கும் வகையில் அமைந்து விடும்.

இந்தியா உட்பட்ட ஜனநாயக நாடுகள் பலவற்றிலும், மத்திய அரசிற்கு, அரசியல்சட்ட ரீதியாக அதிக அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், அரசியல் நெறிமுறை அல்லது நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் அவை பிற்காலத்தில் வெகுவாக சுருக்கப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மாநில அரசுகளை 'டிஸ்மிஸ்' செய்வதற்கும், மாகாண சபைகளை கலைப்பதற்கும் அரசியல் சட்டத்தின் கீழ் மத்திய அரசிற்கு மட்டற்ற அதிகாரங்கள் உள்ளன.

என்றாலும், முன்னாள் கர்நாடக மாநில முதல்வர், மறைந்த பொம்மை அவர்கள் தொடுத்த வழக்கில் கடந்த 1994ஆம் ஆண்டு, இந்திய உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் இத்தகைய அதிகாரங்கள் வெகுவாக சுருக்கப்பட்டு உள்ளன. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் இந்தியாவின் மத்திய அரசில் இடம்பெற்று வந்திருந்தாலும், அவை எதுவுமே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற விதத்தில் அரசியல் சட்டத்தை திருத்த எந்த விதத்திலும் முயற்சி செய்யவில்லை. இன்று, இந்த விடயத்தில் உச்சநீதி மன்றம் அளித்த 'பொம்மை வழக்கு' தீர்ப்பே இந்தியாவில் செல்லுபடியாகும் சட்டம். அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகள் அல்ல.

தற்போது 'திவி நெகும' சட்டம் குறித்த சர்ச்சையை கூட்டமைப்பு எப்படி உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதோ, அதே முறையில் பதிமூன்றாவது சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்துவது குறித்த பிற பிரச்சினைகளையும் அந்த கட்சியும் தமிழ் சமூகமும் நீதிமன்றத்தின் முன் எடுத்துரைத்திருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையில் தற்போது உறுப்பினர்களை பெற்றிருக்கும் அந்த கட்சிக்கு இப்போது இது குறித்து வியாக்கியானம் செய்யவும் விமர்சனம் செய்யவும் உரிமை மட்டுமல்ல, கடமையும் இருக்கிறது. ஆனால், இனப்போர் முடிந்து, விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆளுமை இல்லாமல் ஆன பிறகும் கூட, அந்த கட்சி தொடர்ந்து பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே அணுகி வந்துள்ளது.

இதற்கு, 1972ஆம் ஆண்டின் 'முதலாவது குடியரசு அரசியல் சட்டத்தின்' கீழ் பின்வாங்கப்பட்ட சிறுபான்மையிருக்கான 'சோல்பரி பாதுகாப்பு கவசம்' குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் காரணமாகும். அன்று தொடங்கி, பின்னர் 2006ஆம் ஆண்டில் வடக்கு - கிழக்கு இணைப்பு குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உட்பட்ட பல்வேறு வழக்குகளை கூட்டமைப்பும் தமிழ் சமுதாயமுன் இனரீதியாக மட்டுமே கண்டுவந்துள்ளது. ஏன். இன்று வடக்கு மாகாண சபை விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து உயர் நீதிமன்றம் சென்றுள்ள கூட்டமைப்பும், அதில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் அரசு கட்சியும், அதே பதிமூன்றாவது சட்டதிருத்தத்தின் அடிப்படையில் பிற பிரச்சினைகளையும் நீதிமன்றத்தை அணுகாததும் தற்போதைய தமிழ் அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாகும்.

இந்த நிலை மாற வேண்டும். இரு தரப்பினரிடையேயும், மாறி வருகிறது என்றே தற்போது எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறு மாறுமேயானால், கூட்டமைப்பு முனைந்து அரசியல் மூலம் பெற விரும்பும் அரசியல் தீர்வை, நீதிமன்றத்தின் மூலமே பெற முடியுமானால், அதுவே பிரச்சினைக்கு பரவலான சிங்கள அரசியல் ஆதரவையும் பெற்று தர முடியும். இன்று தத்தம் அரசியல் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலை கைதிகளாக இருக்கும் சிங்கள மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள் வீரத்தையும் விவேகத்தையும் ஒரு சேர புகட்டிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

அதுவே தமிழ் சமூகத்திற்கு கிடைக்கும் முதல் வெற்றி மட்டுமல்ல, அவர்கள் கடக்க வேண்டிய முதல் படியும் கூட.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X