2025 மே 19, திங்கட்கிழமை

அரசையும் கோட்டாபயவையும் விமர்சிப்போருக்கு நான் ஒரு கருவியாகிவிட்டேன்: கே.பி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கடந்தவார தொடர்ச்சி)

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்ட செவ்வியின் தமிழாக்கம் - பகுதி 2)


'என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் அறிவேன். ஊடகங்களும் சில எதிரணி அரசியல்வாதிகளும் இதில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் அநேகமானவை உண்மையல்ல. அவை பெறுமதியற்றவை, அடிப்படை அற்றவை. கண்டவர்களும் அடித்துவிட்டுப்போகும் கால்பந்து போல நான் உள்ளேன். இந்த அரசாங்கத்தையும் பாதுகாப்புச் செயலாளரையும் விமர்சிக்க விரும்புபவர்களுக்கு நான் ஒரு கருவியாகிவிட்டேன்' என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி) தெரிவித்துள்ளார்.

இந்த செவ்வியின் முழு விபரம் வருமாறு,


கேள்வி: நீங்கள் ரெலோ இயக்கத்தில் இருந்தபோது குமரன் எனும் இயக்கப் பெயரை பயன்படுத்தவில்லையா?


பதில்: இல்லை. அப்படி இல்லை. முதலில் நான் ஒருபோதும் ரெலோ உறுப்பினராக இருக்கவில்லை.

கேள்வி: அப்படியா? நீங்கள் முதலில் ரெலோவில் இருந்தீர்கள் எனவும் அதன் தலைவர்களான குட்டிமணியும் தங்கத்துரையும் 1981இல் கடற்படையால் கைது செய்யப்பட்ட பின்னரே எல்.ரி.ரி.ஈ.யில் இணைந்தீர்கள் எனவும் நான் நினைத்தேன்.

பதில்: என்னைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகளில் நீங்களும் அப்படி எழுதியது எனக்கு தெரியும். நான் ஆயுதப் போராட்டத்திற்குள் பிரபாகரன் மூலமே வந்தேன். ரெலோ மூலம் அல்ல.

கேள்வி: அது எப்படி நடந்தது?

பதில்: நான் இளைஞனாக இருந்தபோது எனது சொந்த ஊரான மயிலிட்டியில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் சேர்ந்து இயங்கினேன். மயிலிட்டி, காங்கேசன்துறை தொகுதியை சேர்ந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பின் அமிர்தலிங்கம் - காங்கேசன்துறை எம்.பி. ஆகினார். நான் ஆயுதப்போராட்டம் மூலமே தமிழ் ஈழத்தை அடையலாம் என அவருடன் விவாதிப்பேன்.

ஒருநாள் அமிர்தலிங்கம் எனக்கு பிரபாகரனை அறிமுகம் செய்துவைத்தார். நாம் இருவரும் ஒரேவிதமாக சிந்திப்பதால் நாமிருவரும் பேசிக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். பின்னர் ஒருநாள் நான் பிரபாகரனுடன் மாவை சேனாதிராஜாவின் வீட்டில் நீண்டநேரம் உரையாடினேன். மாவை சேனாதிராஜா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யாக உள்ளார். அதன் பின் நான் தமிழீழ விடுதலை புலி இயக்கத்தில் உதவியாளராக சேர்ந்து பின்னர் அங்கத்தவரானேன்.

தங்கத்துரை

கேள்வி: அப்படியானால் உங்களை ஏன் ரெலோவுடன் இணைத்து பேசுகின்றார்கள்?

பதில்:
தமிழீழ விடுதலைப் புலிகளில் 1980இல் பிரிவு ஏற்பட்டது. உமாமகேஸ்வரன் - புளொட் இயக்கத்தை தொடக்கினார். பிரபாகரனுடன் தொடர்ந்தும் இருந்த நாங்கள் தங்கத்துரையின் தலைமையிலிருந்த ரெலோவுடன் கூட்டுச் சேர்ந்தோம். எனக்கு தங்கத்துரை மீது பிடிப்பு ஏற்பட்டது. அவரோடு நான் நெருங்கிப் பழகினேன். இது தான் மக்கள் நான் ரெலோவில் இருந்தேன் என நினைக்கக் காரணம். நான் எப்போதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்தான் இருந்தேன்.

கேள்வி: நீங்கள் தமிழீழ விடுதலை புலி இயக்கத்தில் சேர்ந்தபோது எவ்வாறு அழைக்கப்பட்டீர்கள்?

பதில்:
மயிலிட்டியில் எனது செல்லப் பெயர் குட்டி. அப்பெயரிலேயே என்னை இயக்கத்திலும் அழைத்தனர். நான் இந்தியாவிலிருந்தபோது சில இடங்களில் குமரன் எனும் புனைப்பெயரை பயன்படுத்தினேன். ஆனால் வெகுவிரைவிலேயே நான் கே.பி ஆகிவிட்டேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர் என்ற நிலையிலிருந்த நீங்கள், துரதிர்ஷ்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவையில் ஈடுபடும் ஒருவராக முகிழ்த்துள்ளீர்கள். இது ஒருவகையில் பிராயச்சித்தம் நோக்கிய உங்களது பிரத்தியேக பயணமாகும். இந்த முகிழ்ப்பு உண்மையில் பாராட்டுக்குரியது. ஆனால் புலி தன் வரிகளை அல்லது சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றும் என நம்பாத ஆட்கள் பலர் உள்ளனர்.

உங்களைப் பற்றி ஊடகங்களில் பல செய்திகள் வருவது உங்களுக்கு தெரியும். நீங்கள் ஈடுபடுவதாக கூறப்படும் செயற்பாடுகள் பற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. உங்களுக்கு தமிழ் புலம்பெயர்ந்தோர்களில் சில பிரிவினருடன் உள்ள உறவுகளை வைத்துக்கொண்டு புலி சார்பு ஊடகங்களிலும் புலிகளின் ஊடகங்களிலும் உங்களை கேவலமாக சித்தரிக்கின்றனர்.

நீங்கள் விரைவில் அரசியலில் மும்முரமாக ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண பத்திரிகைகள் ஊகம் வெளியிடுகின்றன. நீங்கள் அமைத்து நிர்வகிக்கும் தொண்டு நிறுவனமாக நெர்டோவும் உள்ளது. நீங்கள் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு போயிருக்கிறீர்கள். இவை சிலரால் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? இவற்றுக்கு நீங்கள் பதிலளிக்க விரும்புகின்றீர்களா அல்லது உதாசீனம் செய்யப் போகின்றீர்களா?


பதில்: இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் அறிவேன். ஊடகங்களும் சில எதிரணி அரசியல்வாதிகளும் இதில் ஈடுபடுகின்றனர். அவற்றுள் அநேகமானவை உண்மையல்ல. இவை பெறுமதியற்றவை, அடிப்படை அற்றவை. கண்டவர்களும் அடித்துவிட்டுப்போகும் கால்பந்து போல நான் உள்ளேன். இந்த அரசாங்கத்தையும் பாதுகாப்புச் செயலாளரையும் விமர்சிக்க விரும்புபவர்களுக்கு நான் ஒரு கருவியாகிவிட்டேன்.


முகிழ்ப்பு


நீங்கள் கூறியதுபோல எனது மாற்றம் உண்மையானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால் சமூகத்தில் உள்ள பலரால் இதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது ஏன் விளங்கிக்கொள்ளவோ முடியாது. பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் அழிவு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்ட பின் நான் அதையிட்டு வருந்துகின்றேன்.

மனித இனத்துக்கான சேவை மூலம் நான் நிம்மதி தேட விழைகின்றேன். இந்த அரசாங்கமும் பாதுகாப்புச் செயலாளரும் இவ்வாறான அதிசிறந்த வாய்ப்பை தந்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன். நான் உண்மையில் பாக்கியம் செய்தவன். இந்தக் கருணைக்கும் ஒரு புதிய வாழ்வுக்கான வாய்ப்புக்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்.

நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். ஊடகங்களிலும் எதிர்த்தரப்பினரதும் கடமை - கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் விமர்சிப்பதும் ஆகும். நான் இதை ஏற்றுக்கொண்டு முடிந்த அளவுக்கு நிலைமையை விளக்க தயாராக உள்ளேன். மோட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சொல்ல விரும்பவுமில்லை. ஆனால் பொறுப்பு வாய்ந்த முறையில் கேட்கும் கேள்விகளுக்கு நான் எப்போதும் பதிலளிக்க தயாராக உள்ளேன்.

நான் உங்கள் கேள்விகளை வரவேற்கிறேன். நான் இதற்கு என்னால் இயன்ற அளவுக்கு பதிலளிப்பேன். இதன் மூலம் இந்த நாட்டு மக்கள் என்னைப்பற்றி எனது வேலை, எனது திட்டங்கள், எனது அரசியல், எனது செயற்றிட்டங்கள் மற்றும் வேறு தேவையான விடயங்கள் பற்றி இந்த நாட்டு மக்கள் அறியக்கூடியதாக இருக்கும்.

எனக்கு மறைக்க வேண்டியது என எதுவுமில்லை. நெர்டோ முன்னெடுத்துள்ள பல்வேறு சேவைகளுக்கும் உதவும் மக்களை நான் எதிர்பார்த்து உள்ளேன். என்னால் நேர்மையான சந்தேகங்களை தெளிவுபடுத்தி உண்மையான நிலைவரத்தை பலரும் அறியச்செய்ய முடியுமாயின் எனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என நான் மனதார நம்புகின்றேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக இலங்கையில் ஐ.நா.வின் வகிபாகம் குறித்து? ஐ.நா.தொகுத்த ஓர் உள்ளக அறிக்கைபற்றி அண்மைக்கால ஊடக வெளிப்படுத்தல்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. நான் 2010இல் டெய்லிமிரருக்காக உங்களை பேட்டி கண்டபோது, இது தொடர்பாக நீங்கள் பல கருத்துகளை தெரிவித்தீர்கள். இந்த விடயத்தில் ஊடகங்களின் முக்கிய கவனம் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில், சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக, நான் மீண்டும் அதில் என் கவனத்தை செலுத்த எண்ணுகின்றேன். நாங்கள் மீண்டும் அந்த பழைய நிகழ்வுகளை மீட்டுப்பார்ப்போமா?

பதில்:
ஆம். இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டப்படுவதை நானும் அவதானிக்கின்றேன். பழைய விடயங்கள் மீண்டும் தோண்டப்படுகின்றன. வழமைபோலவே சில உண்மைகள் சுயலாப நோக்கில் திரித்துக் கூறப்படுகின்றன அல்லது நசுக்கப்படுகின்றன. உண்மையின் சில அம்சங்கள் தெரியப்படுப்பட வேண்டும் என்பதற்காக இதில் எனக்கு தெரிந்த யாவற்றையும் பற்றி நான் பேச தயாராக உள்ளேன்.

கேள்வி: சில வாரங்களின் முன்தான் நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இது தொடர்பாக பீ.பீ.ஸி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார். ஐ.நா.வின் உதவியுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவர நோர்வே எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும் இதற்காக உங்களை ஒஸ்லோவுக்கு கொண்டுவர அது எவ்வாறு முயன்று கொண்டிருந்தது எனவும் அவர் விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உங்களை அவ்வாறு செய்யவிடாது தடுத்தார். இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்தியதற்காக சொல்ஹெய்ம், வெளிநாட்டு தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் எனப்படும் விசுவநாதன் உருத்திரகுமாரன், சொல்ஹெய்மின் கூற்றுகளை வெளிப்படையாக மறுத்துள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து யாது?

பதில்:
எரிக் கூறியது 100 சதவீதம் உண்மை. அவ்வாறான முயற்சிகள் நடந்தன. அவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் தடுக்கப்பட்டன. இந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு இரத்தம் சிந்தப்படாமல் தடுத்திருக்கலாம். எல்.ரி.ரி.ஈ. தலைவர்களில் பலர் இன்றும் உயிரோடு இருந்திருப்பர்.

கேள்வி: அவ்வாறாயின் அந்த நேரத்தில் அவ்வாறான முயற்சிகள் நடக்கவில்லையென உருத்திரகுமாரன் ஏன் கூறவேண்டும்?

பதில்:
உருத்திரகுமாரன் 2009 பெப்ரவரியில் நடந்ததைப்பற்றியே கூறுகின்றார். அவர் வேண்டுமென்றே பெப்ரவரியின் பின் நடந்தவற்றை தெரியாதவர் போல நடிக்கின்றார்.

\
யுத்த நிறுத்தம்


கேள்வி: 2009 ஜனவரியில் தமிழீழ விடுதலை புலிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச உறவுகள் என்ற புதிய பகுதிக்கு நீங்கள் தலைவராக நியமிக்கப்பட்டீர்கள் என்பது பிரசித்தமானது. உங்களிடம் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வரும் பொறுப்பும் தரப்பட்டது. இதன் பின் என்ன நடந்தது என விபரமாக கூறுவீர்களா?

பதில்:
ஆம். நிச்சயமாக. தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவு நெருங்கிவிட்டது என்பது 2008இலேயே நிலைமையை அவதானித்தவர்களுக்கு விளங்கிவிட்டது. இராணுவம் மெதுவாக ஆனால், உறுதியாக முன்னேறிக்கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் வாயடித்தபோதும் பின்வாங்கி கொண்டிருந்தனர். ஏ - 9 பிரதான வீதியின் மேற்கிலிருந்த பிரதேசங்களிலேயே அப்போது பெருமளவுக்கு மோதல்கள் இடம்பெற்று வந்தன.

இந்த பகுதிக்குள் இராணுவத்தின் பெரும்பகுதி குவிக்கப்படுவதற்கு முன் ஒரு கௌரவமான யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவது சாத்தியமானதாக இருந்தது. ஆனால் எல்.ரி.ரி.ஈ. தலைமையாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகளாலும் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

உங்களுக்கு தெரிந்தது போலவே, 2003இன் முற்பகுதியிலிருந்து நான் எனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு நான் 'இளைப்பாற' வைக்கப்பட்டேன். உண்மையில் நான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளியிலே இருந்தாலும் நிலைமைகளை அவதானித்து அதையிட்டு கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீண்டும் என்னோடு தொடர்புகளை ஏற்படுத்தியது 2008இன் பிற்பகுதியில்தான். மக்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களினதும் போராளிகளினதும் உயிர்களை காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை நான் வலியுறுத்தியபோது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் போராளிகள் சம்மதித்தது போல தெரிந்தது. ஆயினும் பிரபாகரன் விடயங்களை இழுத்தடித்தார்.

இறுதியாக 2008 முடிவில், ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவரும் பணியாணையுடன் என்னை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச உறவுகள் பகுதிக்கு பொறுப்பாக நியமிக்க பிரபாகரன் சம்மதித்தார்.

டிசெம்பர் 2008இலேயே இந்த தீரமானம் எடுக்கப்பட்டபோதும் யுத்த நிறுத்தம் கொண்டுவரும் விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இழுத்தடித்தே வந்தது. பரந்தன், கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு ஆகியவற்றின் ஒன்றன் பின் ஒன்றான வீழ்ச்சியோடு புதிய வருடம் பிறக்க இராணுவம் கணிசமான முற்பாய்ச்சல்களை மேற்கொண்டது.

இப்போதுதான் தலைமை விழித்துக்கொண்டது. என்னை ஒழுங்கான முறையில் நியமனம் செய்தது. ஆனால், வெளிநாட்டு விடயங்களுக்கு பொறுப்பாக இருந்த காஸ்ட்ரோ (வீரகத்தி மணிவண்ணன்)  தனது பிரதிநிதியான நெடியவன் (பேரின்பநாயகம் சிவபரன்) என்பவரின் மூலம் எனது பணிகளை குழப்பி வந்தார்.

எனக்கு போதிய நிதி வளங்கள் தரப்படவில்லை. இப்படியிருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டுவர நான் என்னாலான சகலவற்றையும் செய்தேன். இதன் பொருட்டு சர்வதேச சமுதாயத்தின் பல்வகைத்தான்மையுடைய செல்வாக்கு மிக்க ஆட்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன்.

கேள்வி: இதை நீங்கள் எவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் அவர்களுடன் நேரில் தொடர்பு கொண்டீர்களா?

பதில்:
நான் ஏராளமான கடிதங்கள், தொலைநகல்கள், மின்னஞ்சல்கள் அனுப்பினேன். இயன்ற வேளையில் அவர்களுடன் நேரில் தொடர்பு கொண்டேன். வேறு பல சந்தர்ப்பங்களில் நான் எனது பிரதிநிதிகளை அனுப்பினேன். முக்கிய ஆட்களுடன் நல்ல உறவு உள்ளவர்களை வேண்டுகோள்களை செய்ய பயன்படுத்தினேன்.

அனுசரணையாளர்

கேள்வி: இதில் நோர்வேயின் வகிபாகம் எவ்வாறு இருந்தது?

பதில்:
யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான செயற்பாடு என்பவற்றுக்கு சான்றுறுதிப்படுத்திய அனுசரணையாளராக ஒஸ்லோ இருந்தது. யுத்தம் முழு அளவில் தொடங்கிய பின் நோர்வே எந்த அர்த்தமுள்ள பாத்திரத்தை வகிக்காதபோதும் அது இலங்கைபற்றி தொடர்ந்தும் விசனம் கொண்டிருந்தது. நோர்வே அதிகாரிகள் இயன்ற அளவுக்கு உயிரிழப்புகளை தடுக்க விரும்பினர். எனவே மனிதாபிமான காரணங்களுக்காக அவர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.

கேள்வி: அப்படியாயின் ஒஸ்லோ என்ன செய்தது?

பதில்:
சொல்ஹெய்ம் என்னோடு தொடர்பில் இருந்தார். ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான வழிவகைகளை ஆராயவென அமைதியான ஒரு கூட்டத்தை நடத்த நாம் தீர்மானித்தோம். 2008 பெப்ரவரி இறுதி வாரத்தில் ஓர் இரகசிய கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

கேள்வி: இந்த கூட்டம் எங்கே நடந்தது?

பதில்:
அது மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் நடந்தது. அது இரண்டு நாட்களாக நடந்தது.

கேள்வி: யார் யாரெல்லாம் பங்குபற்றினார்கள்? எரிக் சொல்ஹெய்ம் வந்தாரா?

பதில்:
இல்லை. நோர்வே அமைச்சர் என்ற உயர் நிலையில் அவர் இருந்ததால் அவர் இதற்கு வருவது முறையாக இருக்கவில்லை. அவர் ஒரு முக்கிய நோர்வே அதிகாரியை தனது பிரதிநிதியாக அனுப்பியிருந்தார். இந்த கூட்டத்தில் வேறு இரண்டு நோர்வே அதிகாரிகளும் இலங்கைக்கான நோர்வே தூதுவரும் கலந்துகொண்டனர்.

கேள்வி: அவர் யார்?

பதில்
:
அப்போது கொழும்பிலிருந்த நோர்வே தூதுவர் ரோ ஹற்றெம் ஆவார். அவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கின்றார் என நான் நம்புகிறேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர் யார்?

பதில்:
நான், எனது செயலாளரும் உதவியாளருமான அப்பு என அழைக்கப்படும் ஜோய் மகேஷ்வரன் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோர். புலம்பெயர்ந்த, முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் சிலரும் அங்கு இருந்தனர். இவர்களின் பெயர்களை  நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. முன்னர் ஒஸ்லோ ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தை தொடரின்போது உருத்திராவும் மகேஷ்வரனும் வளவாளர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.

கேள்வி: இந்த பேச்சுகளின்போது என்ன நடந்தது?

பதில்:
தமிழீழ விடுதலைப் புலிகள் எனக்கு வழங்கிய பணியாணை யுத்த நிறுத்தம் ஒன்றை கொண்டுவருதல் என இருந்தபடியால், நான் அந்த கூட்டத்தில் அதை முன்னிறுத்தி பேசினேன். பொதுமக்களின் துன்பகரமான நிலைமைபற்றி நான் அழாக்குறையாக பேசினேன். அவர்களின் உயிர்களை காப்பாற்ற ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்யும்படி நான் கெஞ்சினேன்.


ஹட்ரெம்


கேள்வி:- என்ன பதில் கிடைத்தது?

பதில்:
அது எதிபார்க்காத பதில். ஹட்ரெம், நேரடியாகவும் ஒளிவு மறைவின்றியும் பேசினார். நாம் வெளிப்படையாக பேசுவோமா என தொடங்கிய அவர் கசப்பான ஆனால், நிதர்சனமான உண்மைகளை கூறினார்.

கேள்வி: அவர் என்ன கூறினார்?

பதில்:
அவர் முதலில் அப்போதைய கள நிலவரம்பற்றி உண்மையான ஒரு மதிப்பீட்டை எமக்கு எடுத்துரைத்தார். இலங்கை இராணுவம், இராணுவ ரீதியில் உச்சத்தில் இருப்பதை அவர் தெளிவாக கூறினார். 55ஆவது படைப்பிரிவு சாலையில், 57ஆவது படைப்பிரிவு விசுவமடுவில், 58ஆவது படைப்பிரிவு தேவிபுரத்தில், 59ஆவது படைப்பிரிவு முல்லைத்தீவு நகர்புறத்தில்,  விசேட படையணி - 2 உடையார் கட்டில், விசேட படையணி - 3 அம்பலகாமத்தில், விசேட படையணி - 4 ஒட்டுச்சுட்டானில் உள்ளது என்றார்.

சுற்றிவளைக்காமல் பேசிய நோர்வே தூதுவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு சிறு நிலரப்பரப்பில் அடைக்கப்பட்டிருக்கிறது என்றும் இலங்கை இராணுவம் எந்த நேரத்திலும் உட்புகுந்து புலிகளை ஒழித்துக்கட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தோற்கடிக்கப்போவது நிச்சயம் என அவர்கள் தெரிந்திருந்த அந்த நிலைமையில் இலங்கைக்கு ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய எந்தத் தேவையுமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களின் இந்த கதிக்கு எல்.ரி.ரி.ஈயும் பொறுப்பானது என அவர் எம்மிடம் நேரடியாகக் கூறினார். எல்.ரி.ரி.ஈ.யானது மக்களை பலவந்தமாக பணயக் கைதிகளாகவும் மனிதக் கேடயங்களாகவும் வைத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். பின்னர் ஒரு விட்டுக்கொடுப்புக்கு சம்மதியாமல் எல்.ரி.ரி.ஈ. ஒரு யுத்தநிறுத்தத்தை எதிர்பார்க்க முடியாது என ஹற்ரெம் கூறினார். 'சிலவற்றை விட்டுக்கொடுத்தால்தான் சிலவற்றை பெறமுடியும்' என அவர் கூறினார்.

(தொடரும்)

பேட்டி கண்டவர்: டி.பி.எஸ்.ஜெயராஜ்

தமிழ்மொழியாக்கம்: கிருஷ்ணராஜா

படங்கள்: சமந்த பெரேரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X