2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலை சம்பவம் சொல்லும் செய்தி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நவம்பர் 27ஆம் திகதி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 'மாவீரர் தினம்' அனுஷ்டிக்கப்பட்ட போது யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இது குறித்து, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை சர்வதேச பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. ஏன், அடுத்த மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த விவாதங்களிலும் இந்த விவகாரம் இடம்பிடிக்கலாம்.

பல்கலைகழக வளாகத்தில் 'மாவீரர் தினம்' அனுஷ்டிக்கும் முயற்சியை தடுத்தி நிறுத்த காவல்துறையினரும் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபட்டதாகவும், மாணவர்களும் ஆசிரியர்களும் தாக்கப்பட்டதாகவும் யாழ்பாணத்தில் இருந்து வரும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, வழக்கம் போலவே, தமிழ் பத்திரிகைள் தவிர்த்து, பிற இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிடவில்லை, கருத்தும் தெரிவிக்கவில்லை. இலங்கை அரசு தரப்போ, காவல்துறையோ, இராணுவமோ மறுப்பு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றே தெரிகிறது.

வருடம்தோறும் நவம்பர் 27ஆம் திகதியை 'மாவீரர் தினம்' என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தது. இந்த வருடம் அந்த திகதியில் பெரும்பாலான வடக்கு இலங்கை தமிழ் பேசும் மக்கள் சார்ந்த இந்து மதத்தின் வருடாந்திர 'கார்த்திகை தீபப் திருநாளும்' ஒன்று சேர்ந்து வந்தது, இது தற்செயலாக, திட்டமிடாமலே நிகழ்ந்த ஒன்று.

ஆனால், மேலை நாட்டவர் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி தொழுகை நடத்தும் முறையை, தமிழர்கள் கடந்த காலங்களில் விளக்கிற்கு மாற்றிய காரணத்தால், இந்த வருடத்தில் தீபத் திருவிழாவிற்கு அரசும் காவல் துறையும் 'இரட்டை அர்த்தம்' கற்பித்தனரோ என்னவோ?

மாணவர்கள் மீது காவல் துறையினர் நடத்தியதாக கூறப்படும் வன்முறை கண்டிக்கத்தக்கது. அதே சமயம், இனப்பிரச்சினை தோன்றிய காலம் தொட்டு, தமிழ் மாணவர் சமூகத்தின் பங்களிப்பும், யாழ்பாண பல்கலைகழக வளாகம் அவர்களின் தலைமை இடமாக உருமாறியதும், இன்றும் பெருமையாக பேசப்படும் விஷயம். இனப்பிரச்சினை, இனப்போரட்டமாக உருவெடுத்த காலகட்டத்தில், இளம் போராளிகளை பல்வேறு குழுக்களுக்கு அளித்த பெருமையும் யாழ் பல்கலைகழகம் உட்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கல்வி நிறுவனங்களையே சாரும்.

இனப்போர் முடிவுக்கு வந்த காலகட்டம் வரை, 'மாவீரர் தினம்' விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிடியில் இருந்த இலங்கையின் பகுதிகளிலும் சரி, அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடு - நகரங்களிலும் சரி, அந்த இயக்கத்தின் ஆதரவாளர்களே அதில் பங்கு பெற்று வந்தனர்.

தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்போரும், பிற வெளிநாடுகளில் புலமபெயர்ந்த தமிழர் வாக்கு வங்கிகளால் கவரப்பட்ட அரசியல்வாதிகளும் பங்குபெற்று வந்துள்ளனர்.  அதனால், இனப்பிரச்சினை குறித்த சர்வதேச சமூகத்தின் கவலைகளை அதே விதத்தில் காண முடியாது. அது குறித்த அரசாங்கங்களின் நியாயமான கருத்துக்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

இனப்போர் முடிந்த பின்னரே, 'மாவீரர் தினம்' விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அப்பாற்பட்டு, இலங்கையில் மட்டுமாவது தமிழர் வாழும் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த விதத்தில், அதனை விடுதலை புலிகளுடன் மட்டுமே ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டு கொண்டால், அது அவர்களது தவறு என்று மட்டும் கொள்ள முடியாது.

மாறாக, நவம்பர் 27ஆம் திகதி அல்லது, பிறிதொரு தினத்தில் இதே போன்று அமைதியான முறையில் இனப்போரின் காரணமாக இறந்துவிட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதத்தில் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டால் அதற்கு அரசும் இராணுவமும் அனுமதி கொடுத்திருக்குமா என்பதும் வேறு விஷயம்.

என்றாலும், இறந்துபட்ட தமிழ் மக்களின் நினைவை போற்றுவதற்கு பதிலாக, ஒரு சாரார் அதனையும் அரசியலாக்க கடந்த மூன்று ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள் என்பதும் உண்மை. அந்த உண்மை கசக்கிறது. அந்த விதத்தில் இறந்தவர்களின் நினைவை கொச்சைபடுத்துவது நினைத்தும் பார்க்க கூடாத விஷயம். அதனை செய்பவர்கள், அரசு அதிகாரிகளாக இருந்தாலும், சிங்கள பேரினவாதிகளாக இருந்தாலும், அல்லது தமிழர்களாகவே இருந்தாலும் அது போன்ற முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியது. இதனை, தமிழ் சமூகம் அவரவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அந்த விதத்தில், யாழ் பல்கலை வளாகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் மட்டுமே அடையாளம் காணப்பட்ட 'மாவீரர் தினம்' அனுஷ்டிக்கப்படுவதை ஆட்சியாளர்கள் சந்தேக கண்களுடனேயே பார்ப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டிய விஷயமே. அதற்கு 'முறிவு மருந்தாக' மாணவர்களோ, அல்லது அவர்களில் சிலராவது சார்ந்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது பிற இயக்கங்களோ ஏதாவது முன் முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. அது போன்றே, யாழ் தமிழ் சமுதாயமும், சமூக தலைமைகளும் கூட அந்த மாணவர்களை சரியாக வழி நடத்தினார்களா, என்பதும் புலப்படாத ஒன்று.

ஆனால், பிரச்சினை பெரிதாகி மாணவர்கள் தாக்கப்பட்ட பிறகு. அவர்களில் ஒவ்வொருவராக யாழ்ப்பாண விஜயம் மேற்கொள்வதும், அரசு குறித்தும் தமிழர்களின் பிரதிநிதிகளாக அரசில் பங்கு பெறும் ஒரு சிலரை தாக்கி அறிக்கை விடுவதும் வாடிக்கையாகி போய்விட்ட விஷயம். இதனால், அந்த மாணவர்களோ, தமிழ் மக்களோ எந்த வித பயனையும் அடையப் போவதில்லை. மாறாக, அவர்களிடையே பத்து - பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்து வந்திருந்த அரசும் காவல் துறையும் குறித்த பயமும், அதனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களும் தான் கூடியுள்ளன.

இந்த அனுஷ்டானங்களை அரசு கண்டுகொள்ளாமலே விட்டிருக்கலாம். அவ்வாறிருந்தால், இன்னும் இனப்போர் முடிவடைந்த மே 19ஆம் திகதி வரை இது போன்ற பிரச்சினைகள் தோன்றி இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், யாழ் பல்கலை மாணவர் விவகாரத்தை கவனமாக கையாளகாத காரணத்தினால், 'காவல்துறை அடக்குமுறை' என்ற பிறிதொரு பிரச்சினையையும் ஆட்சியாளர்கள் தோற்றுவித்துள்ளார்கள். இது போன்ற பின்னணியில் தான், இனப்பிரச்சினை என்ற சமூக கவலை, அரசியல் பிரச்சினையாக பரிணாமம் எடுத்து, பின்னர் இனப்போராகவும், இனத்தின் பெயராலான தீவிரவாதமாகவும் உருவெடுக்க வழிவகுத்தது. தமிழர்களை கட்டாயப்படுத்தியது. 

இன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களின் அவலமே, அங்குள்ள சமூக தலைமைகளும் தங்களை மக்களோடு மட்டும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல், அவர்களது அரசியல் தலைமையுடனும் தோள் மேல் தோள் போட்டு பணியாற்றுவதே ஆகும். மற்றவை அனைத்துமே பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தான். ஆனால். அரசும், சிங்கள பேரினவாதிகளும் கடந்த 30 - 40 ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகளை நம்பாததும், அது போன்றே தமிழர்களும் பிறரை நம்ப வைக்கு முடியாததும் ஒரு சாபகேடாக மாறிவிட்டது.

குறிப்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு பேரினவாதிகளின் வாக்கு வங்கியை இழப்பது என்பது சாத்தியமில்லாமலே போய்விட்டது. இனப்போருக்கு பின்னாலான தற்போதைய காலகட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ் அரசியல் தலைமைகளும் இது போன்ற சூழ்நிலையில் தங்களை ஐக்கியபடுத்திக்கொண்டுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வந்தது வரை அவர்கள் சொல்படி தமிழ் மக்கள் கேட்டு நடப்பது என்பது வாடிக்கையான ஓரு விஷயமாக இருந்தது.

அவர்களுக்கு பின்னால் தமிழ் அரசியல் தலைமைகள், அதற்கு எதிர்பதமாக மக்கள் சொல் கேட்டு மட்டுமே நடப்பவர்களாக உள்ளனர். இது அவர்களது ஜனநாயக கடமையாக இருந்தாலும், அவர்களுக்கு யாவருக்குமே உரிமை மட்டுமல்ல, கடமைகளும் உள்ளன.
இனப்பிரச்சினை பேசி தீர்க்கப்பட வேண்டிய விஷயம்.

அவ்வாறு நடைபெறாத காரணத்தினாலேயே, இனப்போராக முடிந்தது. இன்று, தமிழர்களுக்கு பேச்சும் பயனளிக்கவில்லை, போரும் பயன் தரவில்லை. இந்த பின்னணியில், மீண்டும் அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்களுக்கு கொம்பு சீவி விடுவதால் மட்டும். பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. மாறாக, அரசியல் தீர்வு அல்லது நீதிமன்றத்தின் துணையுடன் செய்யப்படும் முயற்சிகளே பயன் அளிக்கும் வாய்ப்பாவது உள்ளது.

மாறாக, இனப்பிரச்சினை துளிர்விட துவங்கிய காலகட்டத்தில், போர் அனுபவமே இல்லாத 15,000 பேர் மட்டுமே பங்கு பெற்றிருந்த இலங்கை இராணுவத்தில், இன்று பத்து பங்கிற்கும் அதிகமானோர்கள் செயல்படுகிறார்கள். தமிழர் தரப்பில் அன்று இருந்த மக்கள் தொகையில் முடிந்தவர்கள் எல்லாம் வெளிநாடுவாழ் தமிழர்களாக தங்களை பிரகடனப்படுத்தக் கொள்வதில் பெருமைபடுகிறார்கள். ஏன், இனப்போரின் கடைசி வருடங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தால் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பெறுவதற்காக பண உதவியுடன் அனுப்பபட்டகாக கூறப்படும் இளம் தலைமுறையினரும் கூட தாய்நாடு திரும்பி வந்ததாக தெரியவில்லை.

இனப்போருக்கு பிந்திய காலகட்டத்தில், நிலைமை இன்னமும் சீரடையவில்லை என்று கூறியே தாங்கள் குடியுரிமை பெற்ற, அல்லது மற்றபடி குடியேறிய நாடுகளிலேயே தங்கிவிட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வுகஇயும், குழப்பமான மனநிலையையும் அவர்களது பிரச்சினைகளையும் உணர்ந்து கொள்ளலாம். இந்த காரணத்தினாலும், இனப்போரில் இழந்த உயிர்களின் காரணமாகவும் இந்த இரு காரணிகளாலும் இலங்கையில் குறைந்துபட்ட தமிழ் சிறார் பிறப்புகளாலும், அறப்போராட்டமோ, அமைதி போராட்டமோ, அதற்கு கூட நாட்டில் தமிழர் எண்ணிக்கை இல்லாமலே போய்விடும் வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், உணர்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு இனப்பிரச்சினையை பாலஸ்தீனம் போன்ற பிற சர்வதேச பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பேசி குழப்பம் அடைந்தால், அதனால் சாதிக்கப் போவது எதுவுமில்லை. ஆனால். தற்போதைய யாழ் பல்கலை சம்பவம் போன்ற நிகழ்வுகளே மறந்துபட வேண்டிய நாட்களை மீண்டும் நினைவிற்கும் நிகழ்விற்கும் கொண்டு வந்தால், அடுத்த தலைமுறை தமிழ் இனமும் புலம்பெயர் தமிழ் சமூத்தின் பகுதியாகவே மாறிவிடும். பின்னர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்பட்டாலும், அதன் பலனை அனுபவிக்க தமிழ் இனமே இலங்கையில் இல்லாமல் போய்விட்டிருக்கலாம். பேரினவாதிகள் விரும்புவதும் அதை தானே!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X