2025 மே 19, திங்கட்கிழமை

தெரிவுக் குழுவிற்கு மேல் ஒரு தெரிவுக்குழு?

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரி மாளிகையில் கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவின் பதவி நீக்கம் குறித்த விவகாரத்தில் நாடாளுமன்ற தெரிவு குழுவின் அறிக்கையை ஆராய்ந்து தனக்கு அறிவுரை வழங்க மற்றொரு குழுவை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விடயம். காரணம், பிரதம நீதியரசர் விவகாரம், அவரது தரப்பு தவிர்த்து மற்ற அனைத்துத் தரப்பினராலும் அரசியல் ரீதியாகவே அணுகப்பட்டது, பத்திரிகைகளில் அலசப்பட்டது.

அந்தவிதத்தில் சட்ட நுணுக்கங்களும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை அசைத்துப் பார்ப்பதுமான இந்த விடயத்தில் அரசு தரப்பு அதிக எண்ணிக்கை உள்ள நாடாளுமன்ற குழுவிற்கு அப்பாலும் சென்று ஜனாதிபதி அறிவுரை கேட்க விழைவது நல்ல முன்னுதாரணமாக கூட அமையலாம். காரணம், தலைமை நீதிபதி உட்பட்ட மூத்த நீதிபதிகளை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பது நாட்டில் இதுவொன்றும் முதல் முயற்சி அல்ல. கடைசியாக இருக்கவும் வாய்ப்புகள் குறைவே.

பிரதம நீதியரசர் ஷிராணி பதவி விலக வேண்டும் என்று முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே முதலில் குரல் எழுப்பியது என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால், அதன் அடிப்படையில் தான் தெரிவு குழு அமைக்கப்பட்டதா என்பது விவாதத்திற்கு உரிய விடயம். மாறாக, 'திவி நெகும' விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் ஆளும் கட்சியின் முயற்சிக்கு காரணம் என்று பத்திரிகைகள் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன. இது குறித்து ஜனாதிபதியை சந்தித்த பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.

அதுபோன்றே இத்தகைய நடவடிக்கையில் நாடாளுமன்ற தெரிவு குழுவின் செயல்பாட்டையும் முன்பு பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசு அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் வீரக்கோன் விடயத்தில் கையாண்டது என்பதையும் அவர் நினைவுகூர்த்துள்ளார். அந்த வரன்முறையை தான் கையாண்டது எந்தவிதத்தில் தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதில் பிரச்சினையே, ஜனாதிபதி ராஜபக்ஷ தன்னையும் தனது தலைமையிலான அரசையும் தங்களுக்கு முன் பதவி வகித்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது தான். அவ்வாறு ஒப்பிடும் பட்சத்தில், எவ்வளவோ முன்னுதாரணங்களையும் அவர் ஒப்பிடவேண்டிவரும். அதுபோன்றே, எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று, தலைமை நீதிபதி விவகாரத்தில் நாடாளுமன்ற தெரிவு குழுவை அமைத்ததாக அவர் கூறுவாரேயானால், அவர் பதவியில் தொடர்வது தொடக்கம் எத்தனையோ விடயங்களில் எதிர்க்கட்சி(கள்) தங்களது கருத்தை தெரிவித்திருக்கின்றன. எதிர்ப்பை நிலைநாட்டியுள்ளன. அவற்றிற்கெல்லாம் செவிமடுக்காத ஜனாதிபதி இந்த ஒரு விடயத்தில் மட்டும் அவர்களது கருத்துக்கு தான் மதிப்பு கொடுத்தது போன்ற கருத்தை தெரிவித்திருப்பது இடறுகிறது.

அதே சமயம், இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் ஆளும் தரப்பினரைப் போலவே அரசியல் அடிப்படையிலேயே அமைந்தது வருந்தத்தக்கது. ஒரு வாதத்திற்காகவே எடுத்துக் கொண்டாலும், ஆளும் தரப்பின் ஆளுமையில் இருக்கும் நாடாளுமன்ற தெரிவு குழு தலைமை நீதிபதியின் தரப்பு ஏற்றுக்கொள்ளும் செயல்முறையை கடைப்பிடித்திருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? எது எப்படியோ, பிரதம நீதியரசரின் கணவருக்கு அளிக்கப்பட்ட பதவி, மற்றும் அது குறித்த வழக்கை நீதிபதி ஷிராணி தலைமை ஏற்ற நீதிபதி குழுவே விசாரிக்க தொடங்கியது போன்ற விவகாரத்தில் தனக்கு எந்தவித பங்கும் இல்லை என்பது போன்ற கருத்தை அரசும் ஜனாதிபதி தரப்பும் அரசியல் ரீதியாகவேனும் நிலை நிறுத்தி உள்ளன. ஆனால், அதுவே முடிந்த முடிவு ஆகிவிடாது.

இனப்பிரச்சினை எங்கே போகிறது?
தலைமை நீதிபதி பதவி நீக்கம் பிரச்சினைக்கு பல மாதங்களுக்கு முன்னரே, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக நாடாளுமன்ற தெரிவு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியும் அரசும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்துள்ளது. இது குறித்து சர்வதேச சமூகத்தையும் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் கோரி வந்துள்ளது. இது குறித்து அரசு கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வந்துள்ளன.

இந்த முயற்சிகளின் காரணமாக நாடாளுமன்ற தெரிவு குழுவில் பங்காற்றுவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்யும் பட்சத்தில், அந்த குழுவின் அறிக்கையையும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதுபோன்ற ஒரு உயர் குழுவின் முன்னால் வைத்து அதன் அறிவுரைப்படி நடக்கப் போவதாக அறிவித்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்க முடியும்? இனப்பிரச்சினை விடயத்தில் அதுபோன்ற ஒரு குழுவில் உறுப்பினர்களாக யாரெல்லாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது குறித்த சந்தேகங்களும் கவலைகளும் இப்போதே கூட்டமைப்பு தலைமைக்கு தோன்றினால், அது இயல்பானதே. அவர்களை பொறுத்த வரையில் சர்வதேச சமூகம் பின்னர் ஏற்றுக்கொண்ட 'கற்றுக் கொண்ட பாடங்கள்' குழுவின் உறுப்பினர்களையே சந்தேக கண்களுடன் தான் பார்த்தார்கள். அவர்களது ரிப்போர்டை இன்றளவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கூட்டமைப்பிற்கும் தமிழ் சமூகத்திற்கும் இதுபோன்ற கவலைகள் தோன்றுவதற்கான காரணங்களும் இல்லாமல் இல்லை. சரியோ, தவறோ கடந்த தசாப்தங்களில், தமிழ் சமூகமும் அவர்களது அரசியல் தலைமையும் இலங்கை அரசு எப்போதுமே கொடுத்த வாக்கை காப்பாற்றாது என்று தங்களை தாங்களே நம்ப வைத்துக் கொண்டுள்ளனர். அது போன்றே, பேரினவாத குழுக்களுக்கும் அப்பாற்சென்று சிங்கள அரசியல் தலைமைகள் ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு தமிழ் சமூகத்திற்கு பட்டை நாமம் சாத்தவே முயன்று வந்துள்ளனர் என்ற எண்ணமும் ஆழ பதிந்துள்ளது.

இதுபோன்றே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட குழுக்களுக்கும், அரசியல் முயற்சிகளுக்கும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற சிங்கள கட்சிகளே முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளன என்றும் தமிழ் அரசியல் தலைமை முழுமையாக நம்புகிறது. ஜனாதிபதி சந்திரிகாவின் முயற்சிகளுக்கு பின்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நாடாளுமன்றத்தினுள் உண்மையிலேயே தீ வைத்ததை மறந்துவிட முடியாது. அதுபோன்றே, தானே அமைத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி குழுவின் முடிவுகளை பொது விவாதப் பொருளாக ஆக்குவதற்கு கூட ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை என்பதும் உண்மை.

இரண்டில் ஒன்று
'திவி நெகும' பிரச்சினையால் தான் கூட்டமைப்பு பிரதம நீதியரசர் விவகாரத்தில் மற்ற எதிர்கட்சிகளுடன் அரசை எதிர்க்கிறது என்ற எண்ணம் உருவாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இனப்பிரச்சினையில் சிறிய சிங்கள கட்சிகளில் சில அரசு தரப்புடன் நின்றால் அதனை கூட்டமைப்பால் ஏற்றுக் கொள்ளமுடியுமா என்பதையும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். அது ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை ஒத்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த கால அசைவுகளை வைத்துப் பார்க்கும்போது, அதிகார பகிர்வு விவகாரத்தில் ஆளும் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அதுவே பிரச்சினை குறித்து தெரிவு குழு அமைக்கப்பட்டால், அங்கு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த பிரச்சினையில் அரசில் பங்கு வகிக்கும் மொத்தம் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சிகள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை ஆதரிக்கும் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த பின்னணியில் அவர்களது அறிவுரைக்கு செவிமடுத்து கூட்டமைப்பு தெரிவு குழுவில் சேர்ந்தால் அதன் முடிவுகள் குறித்து தனக்கு அறிவுரை கூற ஜனாதிபதி மற்றொரு 'தெரிவு குழு' ஒன்றை அமைத்தால், அதன் அறிவுரைகளை கூட்டமைப்போ அல்லது இந்த சிறிய கட்சிகளோ ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவ்வாறானால், ஜனாதிபதி கூறும் 'சூப்பர்' தெரிவு குழு குறித்து தனது கருத்துக்களையும் கூட்டமைப்பு தற்போதே ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டும்.

அதே சமயம், தற்போது தமிழ் அரசியல் தலைமையை இனப்பிரச்சினை விடயத்தில் ஆதரித்துவிட்டு 'சூப்பர் குழு' போன்ற விடயங்களில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் செய்யாது என்று கூறவும் முடியாது. 'சந்திரிகா தீர்வு திட்டம்' குறித்த அந்த கட்சியின் செயல்பாடே இந்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அதுபோன்றே, எதிர்கால தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தெரிவு குழுவும் அரசும் அளிக்க முன்வரும் தீர்வு திட்டத்தை விட அதிகமான அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கவிருப்பதாக கூட ஐக்கிய தேசிய கட்சி ஆசை காட்டலாம்.

எது எப்படியோ, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதிகார பகிர்வு பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படவில்லை என்றால் அதுவே மீண்டும் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. காரணம், தமிழர்களின் வாக்கு. ஜனாதிபதி ராஜபக்ஷவை பொறுத்தவரையில் சிங்கள மக்களும் பேரினவாதிகளும் கூட ஏற்றுக்கொள்ளும் வகையில், தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான ஒரு தீர்வு திட்டத்தையே முன் வைக்க விரும்புவார். கடந்த தேர்தலில் தான் பெற்ற 57 சதவீத வாக்குகளில் அடுத்த தேர்தலில் எதிர்பார்க்கப்படும் குறைவை சரிகட்ட அவருக்கு தமிழர் வாக்குகள் தேவைப்படும்.

இந்த ஒரு காரணத்திற்காகவேனும் தமிழ் வாக்குகள் ஜனாதிபதி பக்கத்திற்கு போகாமலிருப்பதற்கான யுக்திகளை ஐக்கிய தேசிய கட்சி உட்பட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை தடாலடியாக ஆதரித்த கூட்டமைப்பு அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் எழுதிக்கொடுத்து, கையெழுத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பாரா, அதற்கான அரசியல் சூழ்நிலை நாட்டில் இருக்கிறதா? என்பதையும் இப்போதாவது எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழர்களை பொறுத்தவரையில் இனப்பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாகவே தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதனால் சிங்கள வாக்காளர்களிடையே ஆழ்ந்த பிரிவுகள் மட்டுமே தோன்றும். அதனால் தமிழ் சமூகம் எந்த விதத்திலும் பயன் அடையப் போவதில்லை. மாறாக, தங்களை தேர்தல் களத்தில் பகடைகாயாக ஆக்கிக் கொள்ளாமல், இப்போது கொஞ்சம், எப்போதும் கொஞ்சம் எந்த விதத்தில் அதிகார பரவல் முறையை பரவலாக்கி பெற்றுக் கொள்வதே சிறந்த அரசியல் யுக்தி என்ற வகையில் தமிழ் சமூக-அரசியல் தலைமைகள் எதிர்நோக்க வேண்டும். அதுவே காலம் சொல்லும் செய்தி. காலம் கடந்த செய்தியும் கூட.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X