2025 மே 19, திங்கட்கிழமை

ஆட்சியாளர்களின் விருப்பமே எங்கும் சட்டம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 13 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுறையின் வேலைக்காரி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு 1949ஆம் ஆண்டு திரையிடப்பட்ட 'வேலைக்காரி' திரைப்படத்துக்காக அண்ணாதுறையே எழுதிய கதை வசனங்களில் ஓரிடத்தில் இவ்வாறு கூறப்படுகிறது. 'சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு, ஆனால் அது ஏழைக்கு எட்டாத விளக்கு.'

சட்டம் செல்வந்தர்களுக்கேயொழிய ஏழைக்கு உதவாதது என்பதே அதன் அர்த்தமாகும். அவ்வாறாயின் செல்வந்தர்கள் அல்லது சமூகத்தில் வாழும் பலம் வாய்ந்தவர்களே மோதிக்கொள்ளும் இடத்தில் சட்டம் என்ன செய்யும்? நியாயமாக நடந்து கொள்ளுமா? அநேகமாக அது நியாயம் வழங்கும். ஆனால் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டால் நியாயமோ... இல்லையோ... அது ஆட்சியாளர்களின் பக்கத்தையே சார்ந்து நிற்கும். அதை தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

மற்றொரு அறிஞரும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவஞானியுமான கால் மார்க்ஸ், அவரது நண்பர் பிரெட்ரிக் எங்கௌ;ஸுடன் சேர்ந்து வெளியிட்ட 'கம்யூனிஸ்ட் பிரகடனத்தில்'  சட்டதை;தைப் பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். 'உங்களது (முதலாளித்துவ வாதிகளினது) சட்டக் கலையானது சகலருக்குமான சட்டமாக்கப்பட்ட உங்களது வர்க்கத்தின் விருப்பமே தவிர வேறொன்றுமல்ல. உங்களது அந்த விருப்பத்தின் தன்மையானது உங்களது வர்க்கத்தின் பொருளாதார நிபந்தனைகளாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது.'

இது அண்ணாவின் கருத்தை விட தெளிவாக இன்றைய இலங்கையில் நடைபெற்றுவரும் முக்கிய அரசியல் விடயங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. சட்டக் கலையானது சகலருக்குமான சட்டமாக்கப்பட்ட ஆளும் வர்க்கத்தின் விருப்பமே தவிர வேறொன்றுமல்ல என மார்க்ஸ் கூறுகிறார்.

சட்டமானது ஆளும் வர்க்கத்தின் விருப்பம் என்பதற்கு பதிலாக சட்டமானது ஆளும் கட்சியின் அல்லது அதிகாரத்தில் உள்ள குழுவின் விருப்பம் என்று கூறுவதே இன்றைய நிலைமைக்கு மேலும் பொருத்தமாகிறது. சட்டமானது அதிகாரத்தில் உள்ளவர்களது விருப்பமாக இருப்பதனாலேயே கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசராக இருக்கும் போதே எவ்வித தடையுமின்றி அவரது வீட்டின் முன் முகாமிட்டுக் கொண்டு கூச்சலிட ஒரு சிலருக்கு முடிந்தது.

சட்டத்துறைக்கு தலைமை தாங்கும் பிரதம நீதியரசருக்கே அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. சட்டமானது அதிகாரத்தில் உள்ளவர்களது விருப்பமாக இருப்பதனாலேயே உயர்நீதிமன்ற வளாகத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் செய்த சட்டத்தரணிகளையே தாக்க குண்டர்களால் முடிந்தது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்தது. ஆனால் நாடாளுமன்றம் அந்த தீர்ப்பை நிராகரித்தது.  நீதிமன்றத்தின் தீர்ப்புக்களே அதிகாரத்தில் உள்ள குழுவின் முன் செயலற்றுப் போகின்றன. ஏனெனில் நீதிமன்ற தீர்ப்பு அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு மாறாக இருந்தது.

நவம்பர் மாதமே இந்தக் குற்றப் பிரேரணை முதன் முதலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மூலம் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்க வேண்டும் என்றே கூறப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையும் அதுவே என்றும் அதில் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்படவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியல்லவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கூறியிருந்தனர்.

ஆனால் அதனையும் அரசாங்கத்தின் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை. இப்போது ஜனாதிபதி, கலாநிதி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்திருக்கிறார். எதிர்க் கட்சியினர் கூறுவது உண்மையாக இருந்தால் முறையாக பிரதம நீதியரசர் குற்றவாளியாக காணப்படாதது மட்டுமல்லாது முறையான பிரேரணை நிறைவேற்றப்படாது கலாநிதி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டும் உள்ளார். அதுவும் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பமே.

அடுத்து என்ன நடக்கப் போகிறது? புதிய பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சில மூத்த சட்டத்தரணிகள் நீதிபதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளை உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதற்கும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தீர்வை கண்டுபிடித்துள்ளார். தெரிவுக்குழு சட்டபூர்வமானதல்ல என்று வழங்கப்பட்ட தீர்ப்பை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின் மூலம் மாற்றி அமைக்க முடியும் என அவர் கூறியிருக்கிறார். அது உண்மை தான். அவ்வாறு செய்வதற்கு இந்த நீதித்துறையே முன்னுதாரணம் வழங்கியிருக்கிறது.

இனிமேல் அரச தொழில்களில் ஈடுபடுவதில்லை என்று சத்தியக் கடதாசி மூலம் உறுதியளிக்குமாறு 2008ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் திறைசேரிச் செயலாளராகவிருந்த பீ.பீ.ஜயசுந்தரவை பணித்தது. பின்னர் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப 2009ஆம் ஆண்டு அதே நீதிமன்றம் அந்த உறுதிமொழியை வாபஸ் பெற ஜயசுந்தரவுக்கு இடமளித்தது.

அந்த இரண்டாவது தீர்ப்பில் கையொப்பமிட்டவர்களில் ஷிராணி பண்டாரநாயக்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசுதேவ நாணயக்காரவின் மனுவொன்றை அடுத்தே முன்னைய தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே நாணயக்கார இரண்டாவது தீர்ப்பின் போது மூச்சு விடவில்லை. அதுவும் ஆட்சியாளர்களின் விருப்பமாகவிருந்தது.

அது மட்டுமல்லாது அப்போது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க இரண்டாவது தீர்ப்பில் கையொப்பமிட்ட ஷிராணி பண்டாரநாயக்க இப்போது அதே அரசாங்கத்தின் விருப்பத்திற்கிணங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடிப்படைகள் மாறாதிருக்க தீர்ப்புக்களை மாற்றுவதை எதிர்த்து எதுவும் கூற சர்வதேச ரீதியிலும் எவருக்கும் முடியாது. ஏனெனில் சர்வதேச ரீதியிலும் இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது.

இஸ்ரேலின் அரசியல் தத்துவமான சயனிஸம் என்பது இனவாதமே என ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. ஆனால் அதே ஐ.நா. 1991ஆம் ஆணடு டிசம்பர் மாதம் அந்தத் தீர்மானத்தை ரத்துச் செய்யும் மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது அமெரக்காவின் விருப்பத்திற்கிணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என பல சட்டத்தரணிகளும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் அது எந்தளவு நடைமுறைச் சாத்தியம் என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.

பாதுகாப்பற்ற நிலையில் இனி கலாநிதி பண்டாரநாயக்க நீதிமன்றத்திற்குப் போவாரா என்பது சந்தேகமே. தாமே இப்போதைக்கும் பிரதம நீதியரசர் என்று கூறி தமக்கு பாதுகாப்பாக நீதிமன்றத்திற்குச் சென்று கடமைகளில் ஈடுபட உதவுமாறு அவர் பொலிஸாரிடமும் முப்படையினரிடமும் கேட்டுக்கொண்டாலும் அவர்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்க முன்வருவார்களா?

இதுவரை அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றினார்கள் தான் ஆனால் இப்போது? அதுவும் ஆட்சியாளர்களின் விருப்பத்தற்கு இணங்கவே நடக்கக்கூடும். பாதுகாப்புத் துறையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்தால் நிலைமை மாறும். ஏனெனில் ஆயுதத்திலேயே உண்மையான இறைமை இருக்கிறது. படையினர் எப்பக்கம் என்பது தெரிந்த விடயமே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X