2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ரிசானா விடயத்தில் மௌனம் ஏன்?

Menaka Mookandi   / 2013 ஜனவரி 14 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை' என்ற நிலைமை எம் அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில், அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக? எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அதிகாரத்தில் அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. 

ரிசானா என்ற சிறுமி, கொல்லப்படுவதற்காக விமானம் ஏறி சவூதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையைப் போக்கத்தான் அவள் சென்றாள். சென்ற இடத்தில் அவளை அறியாமல் ஏற்பட்ட ஒரு சம்பவம்... அதற்கு கிடைத்த தண்டனை மரணம்.

'சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லாஹ்வுக்குரியது என்று நம்ப வேண்டும். சட்டம் இயற்றுவதற்கான உரிமை ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, குழுவுக்கோ சார்பாக இல்லாமல் பொதுவாக அமைய வேண்டும் என்பதே இஸ்லாத்தில் மிக எளிமையான ஒரு உண்மை. இந்த உண்மை, ரிசானா விடயத்தில் எந்தளவுக்கு பயன்பட்டுள்ளது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

ரிசானாவுக்கு சவூதி அரேபியாவில் அமுலிலுள்ள இஸ்லாமிய ஷரீ-ஆ சட்டத்தின் பிரகாரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ரிசானாவின் பெற்றோர், ஊர்க்காரர்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய சமூகமும் ஏற்றுக்கொள்வதாகவே அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், சவூதியில் அமுலிலுள்ள சட்டம், இஸ்லாமிய ஷரீ-ஆ சட்டம் என்று கூறப்பட்டாலும் அது முழுமையான ஷரீ-ஆ சட்டம் அல்ல என்றும் அந்நாட்டில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகக் கூறப்பட்டாலும் அதுவும் உண்மையல்ல என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த சந்தேகங்களுக்கு பதிலளித்துள்ளார் ஏபிஎம்.இத்ரீஸ், ரிசானா விடயத்தில் எழுந்துள்ள சந்தேகங்களும் அதற்கான பதில்களும் பின்வருமாறு:
 
கேள்வி:  இஸ்லாமிய ஷரீ-ஆ சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனை, அது ஒரு காட்டுமிராண்டித் தனமான சட்டமாகத் தெரிந்தாலும் தனது வாழும் உரிமை பறிக்கப்படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை கொல்வதிலிருந்து தடுக்கும் என்கிறார்களே?

பதில்: 'கொலைக்கு கொலைதான்' என்ற வார்த்தையை நாம் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. கொலைக்கு கொலைதான் என்றால் அது கொலை என்று முதலில் இஸ்லாமிய ஷரீ-ஆ நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறது. நடந்தது தற்கொலையாக இருக்கலாம். சந்தர்ப்ப வசத்தால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம். சுவாசக் குழாய்க்குள் பால் போய் அடைத்ததால் இறந்திருக்கலாம்.

கொக்குச் சுடப்போனவர் தவறி காட்டுக்குள் இருந்த மனிதரை தெரியாமல் சுட்டிருக்கலாம். இவ்வாறு எண்ணற்ற மரணங்களின் வகைகள் இருக்கின்றன. திட்டமிட்டு குற்றஞ் செய்ய வேண்டும் என்று நினைத்து குற்ற மனத்தோடு செய்யப்பட்ட கொலையா என்பது இஸ்லாமிய ஷரீ-ஆவில் முக்கியமான விடயப் பொருளாக ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து நவீன சட்ட அறிஞர்களான அப்துல்காதர் அவ்தா, அஹ்மத் ஷர்கா போன்ற பல முஸ்லிம் நியாயவியல் அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

இவை இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் என்ற வாதம் பிழையானது. 'அத்தஷ்ரிஉல் ஜினாயீ' என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய குற்றவியல் நூலை படித்த யாரும் கொலைக்குக் கொலை என்று எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்க மாட்டார்கள்.

குறைந்தது இலங்கையின் சட்டத்தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி வீரமந்திரி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் போன்றோரின் இஸ்லாமிய நியாயவியல், குற்றவியல் குறித்த ஆங்கில நூல்களையாவது குறைந்தபட்சம் வாசித்தவர்கள் கூட எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் தண்டனை என்று முடிவெடுக்க மாட்டார்கள்.

கேள்வி:  இஸ்லாமிய ஷரீ-ஆவைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ முடியுமா?


பதில்:  இஸ்லாமிய ஷரீ-ஆ என்பதற்குள் பலவகையான சொல்லாடல்கள் அறபு மொழியில் பயன்பாட்டில் உள்ளன. 'அல்பிக்ஹு', 'இஜ்திஹாத்', 'அத்தஸ்ரிஉல் ஜினாயீ' இவை ஒவ்வொன்றுக்கும் தனியான பரப்பெல்லைகளும் இயல்முறைகளும் காணப்படுகின்றன. ஷரீ-ஆ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லாடலாகும். ஆனால் தமிழ் மொழிச் சூழலில் ஷரி-ஆ என்பது பல உள் ஆய்வு பிரிவுகளைக்கொண்ட ஒரு சட்டவாக்கத் தொகுதியாக நோக்கப்படுவதில்லை. அதற்குள் நடைபெறும் வாதவிவாதங்கள் அவ்விவாதங்கள் இறுதியில் எட்டப்படும் முடிவுகள் கொண்ட ஒரு செறிவான சொல்லாடலாகும்.

இங்கு ஷரீ-ஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்ற சொல்லாடல்கள் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறன என்பது முக்கியமானது. அச்சொல்லாடல்களை நான் புரிந்து கொண்ட வகையில் சொல்வதானால், ஒரு பண்பாட்டின் சமூக நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை, அதனுடைய சமூக வழக்காறுகளை மற்றப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் கேள்விக்குட்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் பின்னால் பலவகையான அரசியல் இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே படித்தானதாக, வகைப்பட்டதாக நாம் நோக்கத் தேவையில்லை.

பழங்குடித் தன்மையிலிருந்து விடுபடாத, மனிதாபிமானமற்ற வழக்காறுகளும் நெறிமுறைகளும் மற்றொரு பண்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்ற போது அத்தகைய விமர்சனங்கள் எழ வாய்ப்புமுள்ளது. குறிப்பிட்ட பண்பாடு மட்டும்தான் உன்னதமானது, அந்த பண்பாடு கடைப்பிடிக்கும் அனைத்து நெறிமுறைகளும் புனிதமானவை, எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பண்பாட்டு ஆதிக்கம் அல்லது அடையாள உருவாக்கம் மற்றவைகளை அச்சத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்க முடியும். அந்தக் கோணத்திலிருந்தும் விமர்சனங்களைப் பார்க்க முடியும்.

உதாரணமாக, ஆடை விடயத்தை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கறுப்பு நிற அபாயா அணிந்தால்தான் உண்மையான ஷரீ-ஆத் கூறும் இஸ்லாமியப் பெண்ணாகக் கருத முடியும் என்று நாம் வலியுறுத்தும் போது பல தசாப்தங்களுக்கு முன் நமது தாய்மார்கள், பெண்கள் மூதாட்டிகள் அவ்றத்தை மறைத்து அணிந்த 'சேலை' போன்ற ஆடைகளை நாம் இஸ்லாம் அல்ல என்று மறுத்துவிடுகிறோம்.

குறிப்பிட்ட பூகோள, புவியல் சூழலில் வாழும் மக்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஆடைகளை, அதன் நிறங்களை, வடிவங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. இப்படித்தான் மற்ற விடயங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போது நாம் ஷரீ-ஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்பதை இஜ்திஹாத் – மறுவாசிப்பு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் அதன் விளக்கம் வேறு வகையாக அமையும். ஷரீ-ஆத்தில் இஜ்திஹாத் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாத்தை பிரதான இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் இறையியல் சார்ந்த விடயங்கள், சமூகவியல் சார்ந்த விடயங்கள் எனப் பிரிக்கலாம்.

இறையியல் சார்ந்த விடயங்களிலும் கூட அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய வேளைகளில் பல்வேறு இஜ்திஹாதுகளை இறையியல் சார்ந்த வசனங்கள் எதிர்கொண்டதை நாம் காண முடியும். இறையியல் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த விடயங்களை கொச்சைப் படுத்துவது, நிந்திப்பது, பொதுவான நோக்கில் பொதுவான உலக சமூகங்களின் பண்பாடுகளின் அறங்களின் படி தவறானதுதான். ஆனால், சமூகவியல் சார்ந்த விடயங்களில் இஸ்லாம் தாராளமாக மாற்றுக் கருத்துக்களுக்கும் மறுவாசிப்புக்களுக்கும் தனது வரலாற்றுப் போக்கில் நெகிழ்ந்து கொடுத்தே வளர்ந்து வந்துள்ளது.

ஷரீ-ஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆனும் நபிகளின் மொழியையும் சிந்தனைகளையும் கொண்ட ஹதீஸ்களும் மட்டும் அல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக் காலம் இஸ்லாமியப் புலமைத்துவ வாதிகள், புத்துயிர்ப்பாளர்கள் வழங்கிய வியாக்கியானங்களும் சாராம்சப்படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும். எனவே ஏற்கனவே ஷரீஆ சொல்லப்பட்டுவிட்டது, அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்று சொல்ல முடியாது. முஸ்லிமின் நோக்கில் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் புனிதமாகக் கருதப்படலாம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் புனிதமானவை அல்ல.

வியாக்கியானங்கள் கால, இட, சூழ்நிலைகளுக்கேற்ப, சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டுச் செல்ல முடியும். பழங்குடி முறையிலிருந்து நிலச்சுவாந்தர் முறைக்கு ஒரு சமூகம் மாற முடியும். நிலச்சுவாந்தர் முறையிலிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு மாற முடியும். முதலாளித்துவத்திலிருந்து ஜனநாயக சமூகங்களாக மாற்றம் பெறலாம். இந்த ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுக்கக்கூடிய நிலமைகளுக்கேற்ப தீர்வுகளைப் பேசக்கூடிய உயிரோட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் மூலம் ஷரீஆ மறுவாசிப்புக்குட்படுகிறது. மறுவாசிப்பு என்பது புனிதப் பிரதிகளை மற்றொரு வகையில் வாழவைப்பதுதான். அது அழிப்பது அல்ல.

ஆனால் மைய நீரோட்டத்திலிருக்கும் வைதீக நிலைப்பட்ட இறுக்கமான நிறுவன நோக்குக் கொண்ட இஸ்லாமிய கருத்தியல் அடிப்படைவாதம் தான் இந்த வாசிப்புக்களுக்கும் புதிய இஜ்திஹாதுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. உஸ்மானிய சாம்ராஜியத்திற்குப் பின்னர் அறபு இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஷரீஆத் துறையில் குறிப்பாக நியாயவியல், பொருளியல் (முஆமலாத்), சிறுபான்மைக்கான நியாயவியல் என்றெல்லாம் பல துறைகளில் ஆங்காங்கே புதுவகையான இஜ்திஹாத் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் வலுவான தரப்புக்கு மத்தியில் அவை சென்று சேரவில்லை. வலதுசாரி உலமாக்களும் முதலாளித்துவம் சார்பான சேகு

  Comments - 0

  • mohan Monday, 14 January 2013 02:07 PM

    ஐயா உங்கள் கருத்து ஒரு புதிய ஆரம்பம். நாங்கள் இனிமேலும் மதங்களின் பெயரால் தவறுகளை மூடி மறைக்காமல் மனச்சாட்சி படி செயல்படுவோம். சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, கருணை மேம்பட பாடுபடுவோம்

    Reply : 0       0

    நஜிமிலாஹி Monday, 14 January 2013 04:57 PM

    ரிசானாவின் விடயம் பல படிப்பினைகளை உள்வாங்கியுள்ளது. பல வடிவங்களில் முஸ்லிம் சமூகத்தை சிந்திக்கவும், செயற்படவும் வைத்துள்ளது. எமது சமூகவியல் மற்றும் சட்டவியல் மறுவாசிப்பை எட்டியுள்ளது. இஸ்லாமிய சட்டத்துறை என்ற முகத்தை காட்டி தண்டனைகள் கேள்விக்குட்படுத்தும் விதமாக அமைவதும் அதனைப் பற்றி விவாதிப்பதை மறுக்கும் விடயமானது மேலும் இஸ்லாம் பற்றிய தவறான புரிதலையே ஏற்படுத்தும். எனவே, கருத்துக்களையும், சிந்தனைகளையும் இ்ஸ்லாம் வரவேற்றுள்ளதோடு அதற்கான சூழலையும் ஏற்படுத்தி கொடுக்கச் சொல்கின்றது.

    Reply : 0       0

    ariff Tuesday, 15 January 2013 04:17 AM

    றிஸானா சம்பந்தமாகவும், இஸ்லாம் சம்பந்தமாகவும்,கொம்பு முளைத்த தற்கால அரபிகள் சம்பந்தமாகவும் கடந்த பல காலமாக உலகம் முழுக்க வந்து கொண்டிருக்கும் கட்டுரைகளில், உருப்படியான,தரமான ஒரே ஒரு கட்டுரை இதுதான். தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு முதலில் எனது நன்றிகள். கட்டுரையாளரை கட்டி இழுத்து வந்து, தொடர்ந்து எழுதி, இஸ்லாம் மீதான கறையை நீக்கி, அரபிகள் மீதான மாயையை அகற்ற வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

    Reply : 0       0

    mansoor a. cader Tuesday, 15 January 2013 09:23 AM

    ரிஸானாவின் துயரம் ஷரீஆ தொடர்பான மீள் வாசிப்பிக்களை நியாயப்படுத்தி இருக்கிறது. நமது அறிவாளிகள் “ரகத், விர்லாட்டுதல், கூட்டுப்பிரார்த்தனை, குனூத் ஓதுதல், தல்கீன் முதலிய' அறிவார்ந்த விடயங்களில் அடிபிடி படுவதை விட இப்படியான 'சில்லறை' விடயங்களுக்காக ஷஹீதானாலும் தப்பில்லை. ஒரு அறிவார்ந்த ஆரம்பம் கம்பீரத்துடன் தலை காட்டத் தொடங்யுள்ளது இப்போதைக்கு ஒரு ஆறுதல்தான்.

    Reply : 0       0

    Ahmed Rifth Tuesday, 15 January 2013 05:37 PM

    ரிஸானா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அதன் பின்புலத்தை அந்த வழக்கு நடந்த விதத்தை யாருமே இஸ்லாமிய மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து மக்களுக்கு சொல்லவில்லை என்ற ஆதங்கம் கடந்த தினங்களில் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தது. மாஷால்லாஹ்! உங்கள் மூலம் அது தீர்ந்தது. ஜஸாகல்லாஹு ஹைரன்.

    இதில் மிக மன வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், நாமெல்லாம் இன மத பேதமின்றி இந்த செய்தியை கேட்டு மிகவும் கவலையுற்றிருக்கும் இந்த நேரத்தில் ரிஸானா பிறந்த இடமான மூதூரில் ஜம்மியதுல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவை எடுத்துள்ள முடிவில் இது முற்றிலும் ஷரியா சட்டத்துக்கு உட்பட்ட தீர்ப்பு என்றும் இதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றளிக்கிறது.
    சிறு பிள்ளைக்கும் தெரியும் அநியாயம் இவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு? எங்கே இதனை விமர்சித்தால் சவூதியில் இருந்து வரும் காசு நின்றுவிடும் தமது வாழ்வாதாரம் வக்கற்று போய்விடும் எனப் பயந்தார்களோ என்னமோ..

    Reply : 0       0

    Mutabi3 Tuesday, 15 January 2013 06:28 PM

    மன்னிக்க வேண்டும் மன்சூர் அவர்களே. சகோ. இத்ரீஸ் அவர்கள் இஸ்லாமிய ஷரீஆ பற்றி இன்னும் நிறைய விளங்க வேண்டி இருக்கிறது. கொலைக்குப் பழி வாங்குவதில் வாழ்க்கை இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வது உங்கள் வேலை அல்ல என்று நான் நம்புகிறேன்

    Reply : 0       0

    Mutabi3 Tuesday, 15 January 2013 06:41 PM

    ""நடந்தது தற்கொலையாக இருக்கலாம்"" ????????????????

    Reply : 0       0

    முஸ்டீன் Tuesday, 15 January 2013 08:08 PM

    எல்லாம் சரி வாழ்த்துக்கள்
    01. சவுதி முல்லாக்களை நோக்கி தைரியமாக விரல் நீட்டும் நாம் நம்மூர் முல்லாக்களுக்கு எதிராக எப்போது விரல் நீட்டுவது?
    02. ரிசானாவின் கொலை ஒரு புதிய திருப்பம்தான். எதிர்கால ரிசானாக்களையும் இப்போது சவுதியில் அடிமை சேவகம் செய்யும் பல்லாயிரம் ரிசானாக்களையும் எப்படிக் காக்கப்போகிறோம்?
    03. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், தஃவா வியாபாரிகளும் இன்னும் கள்ள மௌனம் காப்பதன் அரசியல் என்ன?
    04. எங்கே நமது அரசியல் வாதிகள் மன்னிக்கவும் அறிக்கை வாதிகள்? அவர்களின் நியாயப்படுத்தல்களை எப்படி நோக்கப் போகிறோம்?
    05. இப்போது நாம் தொண்டை கிழியக் கத்தும் இந்த நியாயங்களை சவுதி அதிகாரத்தின் காதில் ஓங்கி உரைப்பதங்கு யார் தயார்?

    Reply : 0       0

    முஸ்டீன் Tuesday, 15 January 2013 08:15 PM

    06. இணைய தளங்களிலும், ஆங்காங்கே கூட்டம் கூடி தமது மேதாவித்தனத்தை தனத்தை நிருபித்துக் கொண்டிருக்கும் ஆலிம் ஷாக்களும் அறிஞர் குலாமும் களத்தில் குதிப்பதற்குத் தயாரா?
    07. தஃவா கம்பனிகள் (இஸ்லாமியப் பிரச்சார இயக்கங்கள்) எல்லாம் ரிசானாவின் கொலை தொடர்பாக மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் பகிரங்கமாகப் பதில் தருவார்களா?
    08. இப்படியே கட்டுரை எழுதியும் கவிதை எழுதியும், பேட்டி கொடுத்தும், கதை எழுதியும், ப்ரேகிங் நியுஸ் கொடுத்தும் ஒன்றை மட்டும் சாதிக்கலாம் இப்படி ஒரு பக்கம் இருக்கிறத என்பதை தெரியப்படுத்தலாம் ஆனால் இவை ஒன்றும் சவுதிக்காரனுக்குத் தெரியப் போவதில்லை சோ அடுத்த கட்டம்???
    (கொலைக் குற்றச்சாட்டின் வலி என்னவென்பது எனக்கும் தெரியும் அப்படியொரு குற்றச்சாட்டை தைரியமாக எதிர் கொண்டவன் நான் என்ற வகையில்)
    இறுதியாக
    இப்போது எழுதுபவர்களிலும், பேசுபவர்களளிலும், பலர் களத்திற்கு வரவே மாட்டர்.

    Reply : 0       0

    Thulip Wednesday, 16 January 2013 04:32 PM

    மதம் என்பது மக்களை நல்வழிபடுத்தும் ஒரு பாதை ஆகும். ஆனால் தற்போதை மதவாதிகள் தமது மதி வெறிக்காக மதம் உருவாகிய நோக்கத்தையே மாற்றியமைக்க தயாராக உள்ளார்கள். ரிசானா என்ற இந்த குழந்தையின் மீது மேற்கொள்ளபட்ட கொடுமையைக்கூட கண்டனம் செய்ய அவர்களின் மதவெறி தடுக்கிறது.இதில் வேதனையான விடயம் அக்குழந்தைமீது சாட்டப்பட அபாண்டமான பழியைக்கூட சில மதவாதிகள் ஏற்றுகொள்ள தயாராக உள்ளதுதான். சாதாரணமான அறிவுரீதியாக சிந்திக்குகம் எவருக்கும் நடைபெற்றது ஒரு விபத்தே ஒழிய கொலை அல்ல என்பது புரியும். இதை புரிந்து கொள்ள நுண்ணறிவு தேவையில்லை. சாதாரண அறிவே போதுமானது.

    Reply : 0       0

    appunihi@yahoo.com Thursday, 17 January 2013 01:58 PM

    kolaikku kolai theervakathu. ungal karuththukkalai nan mathikkinren. Aanal
    Mullivaaikkalil koththu koththaka pala kulanthaikal udpada palar kollappaddapothu unkal karuththukkal enge ponathu. Vedi koluththi santhosappaddavarkale Sinthiyungal

    Reply : 0       0

    Rahmath Ali Sunday, 20 January 2013 08:34 AM

    இதை வாசிப்பவர்கள் சவுதியில் அமுலில் இருப்பது குர்ஆன் கூறிய ஷரிஆ அல்ல என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். வழக்கு விசாரனையும் தீர்ப்பும் தவறானவை என்பதை கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார். இதற்குப் பின்பும் சவுதிக்கு வக்காளத்து வாங்குவது முறையல்ல. தீர்ப்பிலும் விசாரணைகளிலும் தவறு உள்ளது என்று தெரிந்த பினபும் மீண்டும் மீண்டும் அதனை விமரிசிக்கக் கூடாது என்று வாதாடுவதும் குற்றம்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .