2025 மே 19, திங்கட்கிழமை

நீதித்துறையின் பிரச்சினை தீர்ந்துவிட்டதா...?

Menaka Mookandi   / 2013 ஜனவரி 22 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்றத்தினால் பிழையானதாக தீர்ப்பளிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரதம நீதியரசர் நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்க நீதித் துறையினருக்கு சட்டம் இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று நாம் கடந்த வாரம் கூறினோம். ஆனால் அவ்வாறு கேள்வி எதையும் எழுப்பாமலே சட்டத்துறை, புதிய பிரதம நீதியரசராக  மொஹான் பீரிஸை ஏற்றுக்கொண்டது.

புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாக்க பதவி நீக்கம் செய்யப்படுமுன் சட்டத்தரணிகள் பலரும் நீதிபதிகளும் கூறி வந்தனர். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் அது சரி தான். ஆனால் புதிய பிரதம நீதியரசர் ஒருவரை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது  எந்தளவு நடைமுறைச் சாத்தியமக்கும் என நாம்; அப்போது கேள்வி எழுப்பினோம்;.

இப்போது ஜனாதிபதி புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமித்திருக்கிறார். நாம் ஊகித்ததைப் போலவே சட்டத்துறையில் எவரும் அவரை நிராகரிக்கப் போவதாக தெரியவில்லை. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்போதே புதிய நீதியரசரை வரவேற்பதற்கான சம்பிரதாயபூர்வ வைபவத்தை மட்டும் பகிஷ்;கரிப்பதாக கூறியது. முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்படு முன்னராவது அச்சங்கம் புதிய பிரதம நீதியரசரை பகிஷ்கரிப்பதாக கூறவில்லை.

நாம் கடந்த வாரம் கூறியதைப் போல் சட்டம் எதைக் கூறினாலும் யாப்பு எதைக் கூறினாலும் ஆட்சியாளர்களின் விருப்பப் படியே காரியங்கள் நடைபெறுகின்றன. அவர்களின் விருப்மே சட்டமாகிறது. முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்றோ பொய்யானவை என்றோ எம்மால் கூற முடியாது. ஆனால் அவர் முறையாக பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் ஒரு சட்சிக்கு இருக்கும் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் நீதியரசர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்களாயின் நீதியரசர்கள் ஆ;சியாளர்களுக்குப் பயந்து நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதுதான் இங்குள்ள பிரச்சினை. ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு பதிலாக மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராகியது அல்ல பிரச்சினை. நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படக் கூடிய ஒரு முறை நாட்டில் இல்லாமையே பிரச்சினையாகும்.

அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்த போதிலும் அரசாங்கத்தின் சில தலைவர்களினது மனச்சாட்சியும் தற்போதைய முறை தவறானது என்று அவர்களுக்கு குத்திக் காட்டுகிறது போலும். ஷிராணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையை மேலும்; ஆராய்வதற்காக தாம் சுயாதீனமானதோர் குழுவை நியமிக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனால் தான் கூறியிருக்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் முறையை பின்னர் மாற்றியமைக்கலாம் என்றும் ஆனால் இப்போதைக்கு தற்போதுள்ள முறைப்படி ஷிராணிக்க எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் குற்றப் பிரேரணைப் பற்றிய சர்ச்சை உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஷிராணிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியிருந்தார்.

நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்றும் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடி அந்த அவசியத்தையே வலியுறுத்துகிறது என்றும் ஷிராணி பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் கூறியிருந்தார். இவை அனைத்தும் அரசாங்கத்தின் தலைவர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடே.

ஆனால் மனச்சாட்சி அவர்களை குறை கூறினாலும் அகம்பாவமும் பதவி ஆசையும் அவர்களுக்கு இந்த நிலையை மாற்ற இடமளிக்குமா என்பது சந்தேகமே. இலங்கையில் தற்போது அமுலில் உள்ள நீதியரசர்களுக்க எதிரான குற்றப் பிரேரணை முறை ஆட்சியாளர்களுக்கு சாதகமானதாகும். இந்த முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தால் ஜனாதிபதி ஒருவருக்கு எந்த ஒரு நீதியரசரையும் பதவியில் இருந்து நீக்க முடியும்.

சுருக்கமாக கூறுவதாயின் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் ஜனாதிபதியும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் ஜனாதிபதியின் விருப்பப்படி எந்தவொரு நீதியரசரையும் பதவி நீக்கலாம். குற்றப் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் அதனை நிறைவேற்றல் ஆகிய அனைத்தும் அப்போது வெறும் சம்பிரதாயங்களே.

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் ஜனாதிபதியும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இல்லாத போது மட்டும் ஜனாதிபதியால் அவ்வாறு தமது விருப்பப்படி நீதியரசர்களை பதவி நீக்கம் செய்ய முடியாமல் போய் விடலாம். தாம் நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதாகவே எந்தவொரு ஜனாதிபதியும் கூறுவார். ஆனால் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த ஜனாதிபதி தான் விரும்ப மாட்டார்?

தற்போது அமுலில் உள்ள நீதியரசர்களுக்க எதிரான குற்றப் பிரேரணை முறையிலுள்ள சர்ச்சைக்குறிய நாடாளுமன்ற தேரிவுக் குழுவினால் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் முறையை 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவே அறிமுகப் படுத்தினார். ஆதில் உள்ள அநீதியான அம்சங்கள் அப்போதிருந்தே எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சிகள் அந்த முறையை மாற்றியமைக்க முன் வருவதில்லை. எப்போதும் எதிர்க்கட்சிகளே இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும் என்கின்றன. அக்கட்சிகளும் ஆளும் கட்சியாக வந்த போது அவையும் இந்த முறையை தமது அரசியலுக்காக பாவிக்கின்றன. எனவே தான் இந்த அநீதியான முறை இன்னமும் நிலைத்திருக்கிறது.
2000ஆவது ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க செய்ததைப் போல் வேறுகாரணங்களை முதன்மைப் படுத்தி அரசியலமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதோடு இந்த விடயத்தையும் அதில் உள்ளடக்கினால் சிலவேளைகளில் இந்த முறை மாறும்.

ஏனெனில் அவ்வாறான நிலைமைகளின் கீழ் சிலவேளை நீதித்துறையை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களின் மனங்களில் இருந்து தளர்ந்து இருக்கலாம். 2000ஆவது ஆண்டில் அது தான் நடந்தது. அவ்வாறின்றி சந்திரிகா மட்டும் நீதித்துறையை காலில போட்டு மிதிக்க விரும்பாதவரல்ல.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X