2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: தி.மு.க. செயற்குழு

A.P.Mathan   / 2013 மார்ச் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தி.மு.க. செயற்குழு இன்று திங்கட்கிழமை நடந்து முடிந்திருக்கிறது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் இலங்கை தமிழர் பிரச்சினையில் "பொதுவாக்கெடுப்பு", "போர்க்குற்ற விசாரணை" போன்றவற்றை முன்னிறுத்தி இந்தியாவே தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. சபையில் கொண்டுவர வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் மற்ற சில நாடுகளே கலந்துகொள்ளாத நிலையில், இந்தியா அந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவில் "ஏன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட்டு விலகினோம்" என்பதை விளக்குவதே முக்கிய நோக்கமாக தி.மு.க. தலைவர்களுக்கு இருந்திருக்கிறது. வழக்கமாக செயற்குழுவில் பேசும் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தமுறை சிறப்புறை ஆற்றவில்லை. அதற்கு பதில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் மட்டும் பேசியிருக்கின்றனர். 16 தீர்மானங்களையும் கட்சியின் தீர்மானக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய செயற்குழு வழிமொழிந்திருக்கிறது.

இந்த தி.மு.க. செயற்குழுவிற்கு பின்னால்தான் தி.மு.க.வின் அடுத்த கட்ட "செயல் திட்டம்" இருக்கிறது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவம் பெறுகிறது. கடந்த 19ஆம் திகதி காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு தி.மு.க.விற்கு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிப் பேசும் "அரிய சுதந்திரம்" இப்போது கிடைத்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்காக ஒரு கட்டத்திற்கு மேல் தீவிரமாக பேசினால் சோனியா காந்தி கோபித்துக் கொள்வாரோ என்ற நிலை தி.மு.க.விற்கு 2004 முதல் 2009 வரை இருந்தது. போரின் உச்சகட்டத்தில் மனிதசங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், சட்டமன்றத்தில் போர் நிறுத்த தீர்மானம் என்று பல்வேறு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்தாலும், ஏதோ ஓர் இனம் புரியாத நெருக்கடியில் அக்கட்சி சிக்கிக் கொண்டே தவித்தது. குறிப்பாக "ஆட்சி" என்ற கட்டிலில் 2006 முதல் 2011 வரை அமர்ந்திருந்த தி.மு.க.விற்கு இலங்கை தமிழர் பிரச்சினை காங்கிரஸுடன் மேலும் நெருங்கிச் செல்வதற்கான தடையாகவே இருந்தது.

தி.மு.க.வின் இந்த தர்மசங்கடம் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஆதரவு களத்தை அமைத்துக் கொடுத்தது. எப்போதும் "அளவுடன்" தி.மு.க.வை குறை கூறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்தமுறை தி.மு.க.வை கடுமையாகவே விமர்சித்து வந்தன. காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி தொடர்ந்த ஒரே காரணத்தை மனதில் வைத்து இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை தீவிரமாக சாடின. அதற்காக "நான் ஒரு கம்யூனிஸ்ட்" என்றும் "தி.மு.க.வையா இப்படி விமர்சிப்பது" என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதியே கம்யூனிஸ்டுகளிடம் சில நேரங்களில் அறிக்கை விட்டு "ஆறுதல்" தேட வேண்டிய சூழ்நிலை எழுந்தது. அதேபோல் இலங்கை தமிழர்களுக்காக போராடும் தமிழர் அமைப்புகள் தி.மு.க. ஆட்சியிலிருந்த வரை "காங்கிரஸை எதிர்த்து மட்டும்" பிரசாரம் செய்து, தமிழகத்தில் அக்கட்சியை தனிமைப்படுத்தின. ஆனால் தி.மு.க. மாநிலத்தில் ஆட்சியை விட்டு இறங்கியதும், அந்த அமைப்புகளின் யுக்தி வேறு வகையில் அமைந்தது. தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையுமே அந்த அமைப்புகள் தாறுமாறாக விமர்சிக்கத் தொடங்கின. ஒருகாலத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையில் "முன் எச்சரிக்கையாகவே" கருத்துச் சொன்ன முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இந்தமுறை தி.மு.க.வை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த பிரச்சினையில் "அட்டாக்" பண்ணியது. "துரோகம் செய்தது தி.மு.க." என்ற பிரசாரத்தை இந்த கட்சிகள் எல்லாம் ஜெட் வேகத்தில் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றன. இலங்கை தமிழர் பிரச்சினையில் "இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை", "இலங்கை போர்குற்றங்களை விசாரிக்க வேண்டும்" என்றெல்லாம் காரசாரமான தீர்மானங்களை சட்டமன்றத்திலேயே கொண்டு வந்தது அ.தி.மு.க. மற்ற கட்சிகளையும் வியக்க வைத்தது. ஆகவே தி.மு.க.வை பொறுத்தமட்டில் "இலங்கை தமிழர் பிரச்சினையில்" ஓல் ரவுண்ட் நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தது. அதில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து காங்கிரஸிலிருந்து கழற்றிக்கொள்ள வேண்டும் என்ற முடிவை முதலில் எடுத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதனால்தான் முதலில் அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா ஓட்டுப் போட வேண்டும் என்றார். பிறகு அந்த தீர்மானத்தில் ஓட்டுப் போட்டால் மட்டும் போதாது சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றார். கடைசியில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்தபோது புதிதாக மூன்றாவது கோரிக்கை ஒன்றையும் வைத்தார். அதுதான் இந்திய நாடாளுமன்றத்தில் "அமெரிக்க தீர்மானத்தில் இன்னென்ன திருத்தங்கள் கொண்டு வரப் போகிறோம்" (இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, காலவரம்பிற்குட்பட்ட விசாரணை) என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம். இது காங்கிரஸ் கட்சியை முன்னும் போக விடாமல், பின்னும் வர விடாமல் செய்வதற்கு போடப்பட்ட "கடிவாளம்" என்றே சொல்ல வேண்டும்.

ஏனென்றால், இந்த கோரிக்கை வைப்பதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் "எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" என்று பாகிஸ்தானை கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தருணம் அதுதான். அப்படியிருக்கையில் அதே இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்ற போரின்போது "இனப்படுகொலை" நடந்தது என்றும், அதற்கு "சர்வதேச விசாரணை வேண்டும்" என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும்? ஆகவே, நிறைவேற்ற முடியாத கோரிக்கையை வைத்து, காங்கிரஸிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற முடிவிற்கு கருணாநிதி முன்கூட்டியே வந்து விட்டார் என்பதே இந்த தீர்மானங்களை வலியுறுத்தியதன் முக்கியப் பின்னணி. ஏனென்றால் காங்கிரஸுடன் இருந்ததால், இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களிடம் மட்டுமின்றி, தி.மு.க. தொண்டனிடமே "அன்பாப்புலர்" ஆகி விடுவோம் என்ற அச்சம் தி.மு.க. விற்கு ஏற்பட்டது.

மத்திய அரசுக்கு தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிய தி.மு.க. பிறகு தன் மத்திய அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய வைத்தது. அப்படி தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்த 17 மணி நேரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோர் வீட்டில் சி.பி.ஐ. (இந்திய புலனாய்வு அமைப்பு) போய் நின்றது. "கார் இறக்குமதி" செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு என்று கூறி நடத்தப்பட்ட விசாரணையில் அப்படி இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் சில அழகிரி அல்லது ஸ்டாலின் வீட்டில் நிற்கின்றன என்று தகவல் கிடைத்து அதனால் ரெய்டு செய்தோம் என்றது சி.பி.ஐ. ஆனால் இந்த ரெய்டு காங்கிரஸை கதி கலங்க வைத்தது. ஏற்கனவே சி.பி.ஐ. மீது "காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்" என்ற குற்றச்சாட்டை நாட்டின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி சுமத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ரெய்டால் அந்த குற்றச்சாட்டு மேலும் தீவிரமாகும் என்று நினைத்த காங்கிரஸ் கட்சி "டேமேஜ் கன்ட்ரோல்" முயற்சியில் இறங்கியது. நிதியமைச்சர் ப.சிதம்பரம்தான் முதலில் அந்த ரெய்டை கண்டித்தார். பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கண்டித்தார். தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபில் கண்டனம் செய்தார். ஏன் பிரதமர் மன்மோகன்சிங்கே "இந்த ரெய்டு துரதிர்ஷ்டவசமானது" என்று அறிக்கை விட்டார். அரசின் புலாய்வு அமைப்பு செய்த ரெய்டு மீது ஆளுங்கட்சியே இவ்வளவு சீரியஸாக கண்டித்தது சுதந்திர இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கும். இப்படி ஸ்டாலின் மீதான ரெய்டை காங்கிரஸ் அமைச்சர்கள் கண்டித்ததை ஒரு பொஸிட்டிவ் அம்சமாகவே கருதுகிறது தி.மு.க.

அதனால்தான் இது மாதிரியொரு பரபரப்பான சூழலில் இன்றைய தினம் கூடிய தி.மு.க. செயற்குழுவில், "கடந்த 9 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. இடம்பெற்றதால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன" என்பதை தனியாக ஒரு தீர்மானமாக போட்டிருக்கிறது. இந்த செயற்குழுவில் பேசிய ஸ்டாலின், அன்பழகன் போன்றோர் கூட, " இலங்கை தமிழர் பிரச்சினையில் நம் கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் காங்கிரஸிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது" என்ற ரீதியிலேயே பேசியிருக்கிறார்கள். தி.மு.க. செயற்குழுவின் முதல் தீர்மானமும் அப்படித்தான் விளக்குகிறது. இந்த செயற்குழுவில் மத்திய அமைச்சராக இருந்து சமீபத்தில் பதவி விலகிய மு.க. அழகிரி கலந்துகொள்ளவில்லை. அதேபோல் அவரது அணியில் இருக்கும் இன்னொரு முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியனும் கலந்து கொள்ளவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அணி அமைப்பது பற்றிய வியூகம் இனி தி.மு.க.வின் செயல்திட்டங்களில் எதிரொலிக்கும். இலங்கை தமிழர் பிரச்சினையினால் தி.மு.க. என்ற கட்சி காங்கிரஸுடன் இணைந்து இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் முறையாக கடந்த நான்கு வருடங்களாக மற்ற கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக அந்தக் கட்சி பெரிதும் விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்தே விலகி நிற்க நேரிட்டது. அதை உடைத்து ஓர் உருப்படியான தேர்தல் அணியை உருவாக்க தி.மு.க. முன் முயற்சிகளை எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் இந்த செயற்குழு முன்பு, சனிக்கிழமையன்று நடைபெற்ற தி.மு.க. தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் "உழைக்கும் வர்க்கத்திற்காக எப்போதுமே பாடுபடும் கட்சி தி.மு.க." என்றும் "தமிழகத்தில் மே தின நினைவுத்தூண் அமைத்ததும், மே தினத்தன்று விடுமுறை அறிவித்ததும் தி.மு.க." என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். காங்கிரஸிலிருந்து விலகியுள்ள நேரத்தில் இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விடப்பட்டுள்ள தூது. அதே நேரத்தில் மூன்றாவது சக்தியாக இருக்கும் தே.மு.தி.க.வுடன் நட்புடன் சென்று அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற வியூகமும் தி.மு.க.விற்கு இருக்கிறது. அந்த வியூகத்திற்கு வருகின்ற ஜூன் மாதம் நடைபெற விருக்கும் ராஜ்யசபை தேர்தல் வழி வகுக்கலாம் என்பது இப்போது பரபரப்பான பேச்சு. அதற்கு முன்னோடியாக, சட்டமன்றத்தில் இருந்து ஆறு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வருட காலம் நீக்கப்பட்டதை தி.மு.க. கண்டித்து இருக்கிறது. வெளிநடப்பும் செய்திருக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை இப்போது காங்கிரஸிலிருந்து விலகியிருப்பதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு தமிழக அரசியலில் ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. அவர்கள் தற்போது அ.தி.மு.க.வுடன் நட்புடன் இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் என்று வரும் போது தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் அவர்களுக்கு மேலும் செல்வாக்கு கூடியிருக்கிறது. ஏனென்றால் காங்கிரஸுடன் தி.மு.க. இருந்தவரை, அவர்களுக்கு அ.தி.மு.க.வை தவிர வேறு கூட்டணி தெரிவு இல்லை. ஆனால் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இன்று அந்த மூன்று கட்சிகளுக்குமே இரண்டு தெரிவுகளும் இருக்கின்றன. அ.தி.மு.க.வுடனும் கூட்டணி தொடரலாம். தி.மு.க.வுடனும் கூட்டணி வைக்கலாம். அந்த "தெரிவு" பலம் சி.பி.ஐ, சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும், தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை அ.தி.மு.க.வுடன் கேட்கும் தைரியத்தை இந்த சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆகவே அடுத்த தேர்தல் அணி இனி விறுவிறுப்பாக அமைவதற்கான சூழ்நிலைகள் தமிழகத்தில் ஸ்பீடு பிடிக்கும். அதற்கான காட்சிகள் எஞ்சியிருக்கும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இலங்கை தமிழர் விவகாரத்தைப் பொறுத்தவரை தி.மு.க. அதை இனி விடாது. "காங்கிரஸுடன் ஏன் நாங்கள் உறவை முறித்துக் கொண்டோம்" என்று விளக்கம் அளித்த போதுகூட, "டெசோ அமைப்பின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும்" என்று அறிவித்து இருக்கிறார். அதையொட்டி விரைவில் தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு வெளியே பிரமாண்டமான டெசோ மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அதிலும் குறிப்பாக 1980-களில் நடத்தியது போன்று அகில இந்திய தலைவர்களை எல்லாம் அழைத்து அந்த டெசோ மாநாட்டை நடத்தவிருக்கிறது என்று சீனியர் லீடர்கள் மத்தியிலேயே பேச்சு எழுந்துள்ளது. அடுத்த டெசோ அமைப்பின் கூட்டத்தில் அதற்கான முறைப்படியான அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. அதற்கு தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்ததே காரணம். ஆனால் இப்போது வெளியே வந்துவிட்ட தி.மு.க. நடத்தவிருக்கும் டெசோ மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கருதுகிறது தி.மு.க. அதோடு மட்டுமில்லாமல் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரை இலங்கை தமிழர் பிரச்சினையின் அழுத்தத்தை அப்படியே தமிழக அரசியலில் நிலைநிறுத்துவதே அ.தி.மு.க.வின் பிரசார யுக்திகளை முறியடிக்க உதவும் என்று தி.மு.க. தலைமை கருதுகிறது. அதற்கு எந்தவிதத்திலும் அ.தி.மு.க.வும் சளைக்கவில்லை. தி.மு.க. செயற்குழு நடந்த உடனேயே, "கொமன்வெல்த் அமைப்புக் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது" என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி விட்டார்.

"மத்திய நிதியை தமிழக அரசு முறையாக செலவிடுகிறது" என்று பாராட்டியிருக்கும் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், "எப்படியாவது அ.தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரம் போட்டு விட வேண்டும்" என்று காய் நகர்த்துவது போல் தெரிகிறது. அதற்கு முன்பு அமெரிக்க தீர்மானம் பற்றிய விவாதம் எழுந்த போது கூட, "தமிழக முதல்வரும் தீர்மானத்தில் சில திருத்தங்கள் வேண்டும்" என்று கோரிக்கை வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் இலங்கை பற்றிய தீர்மானம் கொண்டு வருவது பற்றி விவாதிக்க டெல்லியில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை சபாநாயகர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால் இதுவரை காங்கிரஸ் எதிர்ப்பில் ஸ்டெடியாகச் சென்ற அ.தி.மு.க.விற்கு பல லாபங்கள் கிடைத்துள்ளன. மாநில அரசுக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு மீது சுமத்தி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தலைமை. இதுபோன்ற சூழ்நிலையில், திடீரென்று காங்கிரஸுடன் அ.தி.மு.க. கை கோர்க்குமா என்பது "மில்லியன் டாலர்" கேள்வி. ஏனென்றால் அப்படியொரு முடிவை அக்கட்சி எடுப்பதற்கு காங்கிரஸ் முன்பு போல், தமிழகத்தில் தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ "மாற்று சக்தியாக" இல்லை. அந்த அளவிற்கு வாக்கு வங்கியும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு வெறும் 5 சதவீதம்தான். இந்த வாக்கு வங்கிக்காக இதுவரை மேற்கொண்ட காங்கிரஸ் எதிர்ப்பையும், இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டிய தீவிரத்தையும் அ.தி.மு.க. குறைத்துக் கொள்ளுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஒரு புறம் டெசோ மாநாடு, சுதந்திரமான இலங்கை தமிழர் பிரசாரம் என்று தி.மு.க. புதிய அத்தியாயத்தை நோக்கி வேகமாகக் கிளம்புகிறது. மறுபுறம் அ.தி.மு.க. தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்யப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு ஏற்றாவாறு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அணி உருவாகும் என்பதே இப்போதைய நிலைமை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X