.jpg)
தமிழக அரசியல் கட்சிகள் தேசிய அரசியலில் எப்படி அடியெடுத்து வைப்பது என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. டெல்லியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகிய பிறகு மாநில கட்சிகளின் "தேசிய ஆசை"க்கான காட்சிகளில் பெரும் சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க. அணியிலிருந்து விலகியுள்ள நிதிஷ்குமார், "பா.ஜ.க. வேறு பாதையில் செல்கிறது. அந்தப் பாதை எங்களுக்கு உடன்பாடானது அல்ல. எங்கள் அடிப்படை கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது" என்று தெளிவாக அறிவித்து விட்டார். அது மட்டுமின்றி, "எங்கள் மாநிலத்திற்குள் கூட்டணி இருந்தபோது ஒழுங்காக இருந்தது. வெளி மாநில தலையீடு வந்ததும் கெட்டுப்போய் விட்டது" என்று கூறி, நரேந்திர மோடியின் தலையீட்டால்தான் பீஹார் கூட்டணியில் பிரச்சினை என்று பேசியிருக்கிறார். இப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த முக்கிய கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் இப்போது நரேந்திரமோடியை தேர்தல் பிரச்சினையாக்கி விட்டார். சிறுபான்மையினரின் வாக்குகளை வைத்து அவர் இப்படி பேசியிருந்தாலும், அதுவே இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இனி முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்படும். தேர்தல் அணி உருவாகும்போது இதை மனதில் வைத்தே மாநில கட்சிகள் முடிவு எடுக்க நேரிடும். தேசிய அரசியலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்ற சிக்கலையும் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய அரசியல் என்பது இந்தியாவைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, இடது சாரிகள் தலைமையிலான அணி என்பதை சுற்றிச் சுற்றியே இதுவரை வந்து கொண்டிருந்தது. அதுவும் சமீப கால நாடாளுமன்ற தேர்தல்களில் இதுதான் நிஜம் என்ற நிலைக்கு இந்திய அரசியல் தள்ளப்பட்டது.
ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இடது சாரிகள் பலமிழந்து விட்டார்கள். உதாரணமாக கூட்டணி ஆட்சி முறை முதன் முதலில் சீரியஸாகத் தொடங்கிய 1989 வாக்கில் இடது சாரிகள் அடைந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய தினம் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுமே சேர்ந்து அகில இந்திய அளவில் உள்ள எம்.பி.க்களில் 16 எம்.பி.க்களை மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலைக்கு தேய்ந்து கொண்டே போகிறார்கள். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெறும் நான்கு எம்.பி.க்கள் மட்டுமே வெற்றி பெறும் கட்சியாக மாறிவிட்டது. அதன் வாக்கு வங்கியும் அகில இந்திய அளவில் 1.43 சதவீதம் மட்டுமே என்ற அளவிற்கு படு மோசமாக கீழே இறங்கி விட்டது. இது ஒரு புறமிருக்க, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் எந்தக் கட்சியை இப்போது ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று முதிர்ச்சியுடன் யோசித்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற தலைவர்கள் இப்போது கம்யூனிஸ்டுகளுக்கு வழி காட்டுவதற்கு இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸுடனும், பாரதீய ஜனதா கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றார்கள். பிறகு மதவாதத்தை ஒழிக்க காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். இப்போது பிரகாஷ் காரத் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்த பிறகு, "காங்கிரஸுடனும் இல்லை. பா.ஜ.க.வுடனும் இல்லை. இந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை" என்ற விநோதமான முடிவு எடுத்து அதை செயல்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொள்கை முடிவால் இடது சாரிகள் சோதனையை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் அவர்களுக்கு பெரும் நெருக்கடி. ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தலைமை பொறுப்பில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் கடைக்கோடி நாடாளுமன்ற தொகுதியாக இருக்கும் நாகர்கோயிலில் (இப்போது கன்யாகுமரி நாடாளுமன்ற தொகுதி) காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவார். அங்கிருந்து 50 கிலோ மீற்றர்களே உள்ள கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரம் தொகுதியில் நின்று கொண்டு காங்கிரஸுக்கு எதிராக வாக்கு கேட்பார். இந்த மாதிரி அணுகுமுறையெல்லாம் மதவாதத்தை கையிலெடுத்துள்ள பா.ஜ.க.வை வெற்றி பெறவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் கையாளப்பட்டவை. ஆனால் இன்று "பா.ஜ.க., காங்கிரஸும் இல்லை. அக்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை" என்பதால், இடது சாரிகள் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பலமிழந்து வருகிறார்கள். குறிப்பாக தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு மாற்றாக ஓர் அணியை அமைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இப்போது பா.ஜ.க.விலிருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் கூட முதலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பாணர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு "பெடரல் ப்ரன்ட்" என்ற ஓர் அணியை உருவாக்கலாம் என்றே யோசித்தார்கள்.
மம்தா தலைமையில் அல்லது அவரும் சேர்ந்து அகில இந்திய அளவில் தனி அணியா என்று பதறிப்போன மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மூத்த தலைவர் சீத்தாராம் எச்சூரியை உடனடியாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவை சந்திக்க வைத்தது. "தயவு செய்து நீங்கள் மம்தாவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்காதீர்கள். நாம் புது அணி உருவாக்குவோம்" என்று கூறிவிட்டு வந்திருப்பதாக தகவல்கள் அடிபடுகிறது. இப்படி பதறிப்போயும், பலமிழந்தும் போய் நிற்கும் இடது சாரிகளைப் பார்த்து எந்த மாநிலக் கட்சிகளும் இப்போது எல்லாம் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதில்லை. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ராஜ்ய சபை எம்.பி.யைப் பெறுவதற்கு படும் பாடே நன்றாக அதை படம் போட்டுக் காட்டுகிறது. இடதுசாரிகள் தலைமையில் அணி உருவாக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், மாநில கட்சிகள் தேசிய அளவில் உள்ள காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் அணி சேர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. இந்த விடயம் மற்ற மாநிலங்களுக்கு எப்படி பயன்படுகிறதோ, தமிழகத்திற்கு பயனில்லை.
காரணம் தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு 5 சதவீதத்திற்கு வந்துவிட்டது. வாஜ்பாய் காலத்தில் 8 சதவீத வாக்குகள்வரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற கட்சிகளின் வெற்றிக்கு உதவிய பா.ஜ.க. இன்றைக்கு 2 சதவீத வாக்குக்கே போராடும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆகவே இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொண்டால் தங்களுக்கு லாபமில்லை என்று தி.மு.க.வும் எண்ணுகிறது. அ.தி.மு.க.வும் அதையே நினைக்கிறது. காங்கிரஸுக்கு தமிழகத்தில் "இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சி" என்ற பிரசாரம் சூடுபிடித்து இப்போதுதான் உறங்கத் தொடங்கியுள்ளது. அக்கட்சியுடன் எந்தக் கட்சி மீண்டும் கூட்டணி வைத்தாலும் இந்த இலங்கை தமிழர் பிரச்சினை மீண்டும் தட்டி எழுப்பப்படும். இதனால்தான் "ஒட்டி இருந்த தி.மு.க. இப்போது காங்கிரஸிலிருந்து வெட்டிக் கொண்டு நிற்கிறது"! அதேபோல் நரேந்திரமோடியை முன்னிறுத்தும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் உள்ள 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட மைனாரிட்டி சமுதாய வாக்குகளை இழக்க நேரிடும் என்று அ.தி.மு.க. நினைக்கிறது. இரு சதவீதத்திற்காக 10 சதவீதத்தை இழப்பதா என்ற கேள்வியே சமீபத்தில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதாவை, "தமிழகத்தில் யாருடனும் கூட்டணி இல்லை. நாற்பதுக்கு (பாண்டிச்சேரியில் உள்ள ஒரு எம்.பி.யும் சேர்த்து) நாற்பதையும் வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறோம்" என்று அறிவிக்க வைத்தது.
டெல்லியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.விற்கு மாற்றாக அணி உருவாக்கும் சக்தி இடது சாரிகளுக்கு வராததால், இரு கட்சிகளுக்கும் மாற்று அணி உருவாகவில்லை. அதே நேரத்தில் தமிழகத்திலோ காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுடனும் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ சேருவதற்கும் மனமுமில்லை. இப்படிப்பட்ட இடியப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இரண்டு திராவிட கட்சிகளும் முதலில் நாடாளுமன்ற தேர்தல் முடியட்டும். பிறகு டெல்லியில் யார் என்பதை தேர்வு செய்வோம் என்ற நினைப்பில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் நம்பியிருக்கும் மற்ற கட்சிகள்தான் டென்ஷனில் இருக்கின்றன. குறிப்பாக உடனடி கவலை ம.தி.மு.க.வை வழி நடத்தும் வைகோவிற்கு ஏற்பட்டிருக்கிறது. தன்னை விவசாயிகள் வந்து சந்தித்து சில குறைபாடுகளை சொல்ல, "வறட்சி நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை. மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்றுதான் அறிக்கை கொடுத்தார் வைகோ. அதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற விதத்தில் சீறிப் பாய்ந்த தமிழக விவசாயத்துறை அமைச்சர் தாமோதரன், "காமலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது போல் இருக்கிறது வைகோவின் அறிக்கை என்ற கடுமையாக சாடி விட்டார். அது மட்டுமின்றி, "இந்த அறிக்கை வைகோ விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் என்பதைக் காட்டுகிறது" என்றும் கொட்டி விட்டார். இது அ.தி.மு.க.வுடன் அனுசரணையாகப் போக வேண்டும் என்ற நினைக்கும் வைகோவிற்கு விடுக்கப்பட்ட பெரும்சவாலாக நிற்கிறது.
அடுத்து இங்குள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளான சி.பி.எம். மற்றும் சி,பி.ஐ இந்த ராஜ்ய சபை தேர்தல் முடிந்தவுடன் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஏனென்றால் அவர்கள் நிறுத்தும் ராஜ்ய சபை வேட்பாளர் டி.ராஜாவை அ.தி.மு.க. ஆதரிக்கவில்லை. அதேபோல் மீதியிருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியோ இந்த இரு கட்சிகளுடனும் (தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.) கூட்டணி இல்லை என்று அறிவித்து செயல்படுகிறது. அதே கணக்கில்தான் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும், ஜவஹிருல்லாவின் மனித நேய மக்கள் கட்சியும் இருக்கிறது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நடத்தும் நடிகர் சரத்குமாருக்கும் "ஆப்ஷன்" எது என்று இன்னும் பிடிபடவில்லை. அவர் கட்சிக்குள்ளும் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நீடிப்பது பற்றி விமர்சனங்கள் எழுகின்றன. தேசிய அரசியலில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எந்தக் கட்சியுடன் அணி சேருகின்றனவோ அதை வைத்து தமிழகத்தில் இந்தக் கட்சிகள் எல்லாம் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும். இப்போது திராவிட கட்சிகளே தேசிய கூட்டணி பற்றி முடிவு எடுக்காமல் இருப்பதால், இந்த சிறிய கட்சிகளுக்கும் தலைவலியாக இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காங்கிரஸுடன்தான் 1998 வரை மாறி மாறி கூட்டணி வைத்து வந்தன. ஆனால் 1998இற்குப் பிறகுதான் இந்த இரு கட்சிகளும் மாறி மாறி பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைக்கத் தொடங்கின. ஆனால் இன்று இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்க முடியாத அளவிற்கு தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த மிரட்டலை சமாளிப்பது எப்படி என்பது புரியாமல் இரு கட்சிகளுமே முழிக்கின்றன. ஏனென்றால் தி.மு.க.வோ, அல்லது அ.தி.மு.க.வோ தமிழகத்தில் தனியாக நின்று சமீப கால நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிக் கொடியை பறக்க விட்டதில்லை. அதைவிட முக்கியமாக தமிழக மக்கள் எப்போதுமே நாடாளுமன்ற தேர்தல் என்று வந்தால் "பிரதமர் வேட்பாளர்" யார் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனென்றால் கடந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த மூப்பனார் தமிழகத்தில் தனி அணி அமைத்த போதும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனியாக நின்றபோதும் அவர்களால் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை சொல்ல முடியவில்லை. அதனாலேயே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெறவும் முடியவில்லை. ஆகவே, "யார் பிரதமர் வேட்பாளர்" என்று சொல்லி வாக்கு கேட்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும் சிக்கல் இருக்கிறது. அ.தி.மு.க.விற்கும் இருக்கிறது. அந்த சிக்கலை சமாளிக்கவே "முதல்வர் ஜெயலலிதாவே பிரதமர் வேட்பாளர்" என்ற கோஷத்தை முன்னிறுத்தி அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வின் "ஐவர் குழு" ஒரு ரவுண்ட் பிரசாரத்தையே முடித்து விட்டது. ஆனால் தமிழக வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்- அதற்கு காரணம் தேசிய அளவில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு பண்ண முடியாமல் தவிக்கும் சூழ்நிலை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு உருவாகியிருப்பதுதான்!