2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

தமிழ்க் கட்சிகளின் முதுகெலும்பு முறிந்து போனதா?

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்
 
13ஆவது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் விவகாரம் தான் இப்போது நாட்டின் முக்கியமான விவாதப் பொருளாகியுள்ளது. வடக்கு மாகாணசபைக்கு நடைபெறப்போகும் தேர்தலை விடவும், அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த 13ஆவது திருத்தச்சட்டத்தின் மீது தான், சிங்களத் தேசியவாதிகளுக்கு கூடுதல் வெறுப்பாக உள்ளது.
 
மாகாணசபைகளை உருவாக்கிய 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு 25 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை மாகாணசபைகளின் அதிகாரங்களையும் அதன் மூலம் கிடைத்த நலன்களையும் நன்றாக ருசித்த கட்சிகளும், அரசியல்வாதிகளும் தான், இப்போது அதற்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர்.
 
வடக்கு மாகாணசபையும், அதனை நிர்வகிக்கத் தெரிவு செய்யப்படும் அரசாங்கமும், இந்த நன்மைகளைப் பெற்றுவிடக் கூடாதே என்ற ‘பரந்த மனப்பாங்கே(?)‘ இந்த எதிர்ப்புக்குக் காரணம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதானால், தமிழர்களின் கையில் அதிகாரம் போய்விடக் கூடாதே என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது.
 
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் தான், இந்த அதிகாரப்பறிப்பு- 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் ஏற்கனவே இறங்கி விட்டது. அமைச்சரவையில் இதுகுறித்த தீர்மானங்களும் எடுக்கப்பட்டு விட்டன.
 
கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பான கடுமையான வாக்குவாதங்கள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ.குணசேகர, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் யோசனைக்கு எதிராக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இருந்தாலும், சிங்கள பௌத்த தேசியவாதம் பேசும், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் பக்கம் தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ போன்ற பெரும்பாலானவர்கள் இருந்துள்ளனர் என்பதை, அந்த அமைச்சரவைத் தீர்மானமே உறுதி செய்கிறது.
 
அதாவது 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்கும் அல்லது பலவீனப்படுத்தும் நடவடிக்கைக்கு முற்றிலும் ஆதரவான நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது. இந்தநிலையில், இந்தத் திருத்தச் சட்டத்தினால் தமிழ், முஸ்லிம்களின் நலன்களே அதிகளவில் பாதிக்கப்படும் என்ற போதிலும், தமிழ், முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அமைச்சரவையில் உள்ள ரவூப் ஹக்கீமைத் தவிர வேறு யாருமே வாய் திறக்கவில்லை.
 
காரணம், அதாவுல்லா போன்ற அமைச்சர்கள் அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்கள். அவர்கள் இந்த யோசனைக்கு எதிராக வாய் திறக்காததில் ஆச்சரியம் இல்லை.
 
மாகாணங்களுக்கு அதிகாரம் தேவை என்று கூறிக்கொள்ளும் ஈபிடிபியின் பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தாவும், மலையக மக்களின் பிரதிநிதியாக உள்ள இதொகாவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சரவையில் எந்த எதிர்ப்பையுமே காட்டவில்லை. அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்காமல் போனதற்குக் காரணம், அவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காதது தான். இவர்கள் இருவரும் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காது போனதற்கு எத்தகைய வலுவான காரணத்தைக் கூறினாலும், அது தமிழ் மக்களால் மன்னிக்கப்பட முடியாத ஒரு விடயம் என்பதே பொதுவான கருத்து.
 
அமைச்சரவையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பிபிசி தமிழோசைக்கு அளித்திருந்த பேட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மிகச் சாதாரணமான முறையில், தான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், ஆனாலும் அங்கு நடந்தவற்றை அறிந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
 
13ஆவது திருத்தச்சட்டத்தின் ஓர் அதிகாரம் பறிக்கப்படுவதற்கான தீர்மானம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இன்னொரு அதிகாரத்தைப் பறிப்பது குறித்து தெரிவுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
 
தெரிவுக்குழுவில் தமது கருத்தை முன்வைப்பதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நழுவிக்கொள்ள முயன்றார். அதேவேளை, இந்த நிலைமைக்கு கடந்தகாலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்ட தமிழ் தலைமைகளும் காரணம் என்று குற்றம்சாட்டவும் அவர் தவறவில்லை. அந்த தமிழ்த் தலைமைகளுக்குள் கடந்த 20 ஆண்டுகளாக யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் நடத்தும் தம்மையும் அவர் உள்ளடக்கினாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
 
கடந்தகாலத்தில் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டதாக தமிழ்த் தலைமைகள் மீது பழியைப் போட முனைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதியாக நின்று, 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் நழுவியது மறந்து போனது எப்படி?  அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தான் வேண்டும் என்றில்லை, தமிழர்களின் பிரதிநிதியாக தனது கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வர மறுப்பதைச் சுட்டிக்காட்டி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கிண்டலடிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு, அமைச்சரவையில் அதே சந்தர்ப்பம் தனக்கு கிடைத்தபோது நழுவ விட்டதற்கான காரணத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
 
அதுபோலவே, ஆறுமுகன் தொண்டமானும் மலையக மக்களின் பிரதிநிதியாக 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பா விட்டாலும், தமது கருத்தையேனும் அமைச்சரவையில் கூறியிருக்கலாம். அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், அமைச்சரவையில் 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்த போது, உடனடியாக நாடு திரும்பினார் அவர்.
 
தனது பாலஸ்தீனப் பயணத் திட்டத்தை கைவிட்டு, உடனடியாகவே நாடு திரும்பிய ரவூப் ஹக்கீமின் முன்பாக, இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டே- உள்நாட்டில் இருந்து கொண்டே- தவறிவிட்ட தமிழ்த் தலைமைகள் எங்கே நிற்கின்றன? 
 
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நிலை இன்றில்லை. தேவையா - இல்லையா என்று தெளிவாக தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. ஏனென்றால், தமிழ் பேசும் மக்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, 13ஆவது திருத்தச்சட்டம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவதற்காக நாடாளுமன்றத்துக்கு வரப்போகிறது. இந்தநிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை எடுக்காமல் நழுவிக்கொள்ள முடியாது.
 
அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் விளைவாக பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமது சுயத்தையே இழந்து போய் நிற்கின்றன என்பது வெளிப்படையாக விடயம். அதனை 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல சந்தர்ப்பங்களில் உணர முடிந்தது.
 
சுயமாக எதையும் செய்ய முடியாமல், எந்த முடிவையும் எடுக்க முடியாமல் பல கட்சிகளும் தலைவர்களும் பலவீனப்பட்டுப் போயுள்ளனர். அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும், சில கட்சிகள், துணிந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை எதிர்க்கவும் துணிந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
 
எவ்வாறாயினும் தமிழர்களினதோ, முஸ்லிம்களினதோ அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒன்றா, பிரச்சினைக்கான தீர்வாக அமையுமா என்ற விவாதங்களுக்கு அப்பால்- எஞ்சியிருக்கும் ஒரே அதிகாரப்பகிர்வுப் பொறிமுறையான 13ஆவது திருத்தத்தையேனும் பாதுகாத்துக் கொள்வதோ முதன்மையான பிரச்சினையாக உள்ளது. ஏனென்றால், 2009 இற்குப் பின்னர், எந்தவொரு தீர்வையும் பேரம் பேசிப் பெறுகின்ற பலம் தமிழர்களிடம் இல்லாமல் போய் விட்டது.
 
எனவே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி சொல்வது போல, இருப்பதையேனும் தக்கவைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். இத்தகைய நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் தம்மை இந்த மக்களின் பிரதிநிதிகளாக வெளிப்படுத்தும் தலைவர்கள், இந்த விடயத்தில் ஒளிவுமறைவின்றி நடந்து கொள்வதையே மக்கள் விரும்புவர்.
 
ஒருவேளை, 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பாதுகாக்கும் ஆர்வம் தமக்கு இல்லையென்றாலும் கூட, அதையும் வெளிப்படையாகவே கூறிக் கொள்வது தான் சிறந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .