-கே.சஞ்சயன்
தனக்கும், சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை இந்தியா கேட்டுள்ளது. புதுடெல்லி சென்றிருந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும் இந்தியா இதையே தான் கூறியது. கொழும்பு வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இதையே தான் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளார்.
கடந்தமாதம் புதுடெல்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசியபோது, 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை கொடுத்த வாக்குறுதி மீது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனமாக்கும் முயற்சிகளில் இருந்து பின்வாங்காத நிலையில், தான் இந்தியா மீண்டும் மீண்டும் வாக்குறுதியை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியை மதித்து நடக்கப் போவதில்லை என்பதையும், நிலைமை தனது கையை விட்டுப் போகத் தொடங்கி விட்டது என்பதையும், இந்தியா புரிந்து கொண்டு விட்டது என்பதையே, வாக்குறுதி தொடர்பான அதன் வலியுறுத்தல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
13ஆவது திருத்தச்சட்டம் இப்போது ஒரு பிராந்திய விவகாரமாக மாறுகின்ற சூழலை அவதானிக்க முடிகிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தை எப்படியாவது ஒழித்து விடவேண்டும் என்பதே, அரசதரப்பில் உள்ள, பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட கடும் கோட்பாட்டாளர்களின் பிடிவாதமாக உள்ளது.
உடனடியாக இதனை ஒழித்து விடுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம், எப்படியாவது இதனைப் பலவீனப்படுத்தியாக வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது.
ஆனால் 13ஆவது திருத்தச்சட்டத்தை இலங்கைப் பிரச்சினைக்கு, தான் முன்வைக்கும் தீர்வாகக் கருதுவதால், இந்தியாவுக்கு இது ஒரு பெரிய மானப் பிரச்சினையாக உள்ளது. இப்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கை ஒழித்தால் அல்லது பலவீனப்படுத்தினால், இந்தியாவுக்கு இரண்டு சிக்கல்கள் ஏற்படும்.
ஒன்று இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு இருந்த தார்மீகப் பொறுப்புகள் இல்லாமல் ஆக்கப்பட்டு விடும். அதனால், பிராந்திய ரீதியாக இந்தியாவின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்படும். இரண்டாவது, விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு உதவிய இந்தியா, ஈழத் தமிழர்களின் நலன்களை முற்றிலுமாக உதாசீனப்படுத்தி, அவர்கள் மீது பழிதீர்த்துக் கொண்டு விட்டது என்ற கருத்து வலுப்படும்.
விடுதலைப் புலிகளுக்குப் பின்னர், இலங்கைத் தமிழர் விவகாரங்களில் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இந்தநிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தி, தமிழர்களை எந்த அதிகாரமுமின்றி முடக்குவதற்கு இந்தியா துணை போகுமேயானால், இந்திய அரசின் மீது பெரும் பழிதான் சுமத்தப்படும். ஏனென்றால், போரின்போது, விடுதலைப் புலிகளை அழித்த பின்னர், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தது. அந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறிய நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் பலவீனப்படுத்துவதை, இந்தியாவினால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பல்வேறு விடயங்களில் இலங்கை அரசுடன் இந்தியா விட்டுக் கொடுப்புடன்- சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்ட போதிலும், 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இந்தியாவினால் அவ்வாறு நடந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிராந்திய அல்லது பூகோள அரசியல் நலன்களை முன்னிறுத்தி - இந்தியா இந்த விடயத்தில் இலங்கையுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது.
ஏனென்றால், இந்த விடயத்தில் மன்மோகன்சிங் அரசாங்கம் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டால், அது காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்களுக்குச் செய்த மிகப்பெரிய அநீதியாகவே பார்க்கப்படும். அதுவும், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை இந்தியா எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தகையதொரு சமரச முடிவு எடுக்கப்படுமானால், அது மிகப்பெரிய அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகதாகவே கருதப்படும்.
அதைவிட, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்வைக்கும் உயர்ந்தபட்சத் தீர்வாக 13ஆவது திருத்தச்சட்டமே உள்ள நிலையில், அதை இலங்கை அரசு நிராகரிக்கும்போது இந்தியாவின் மீது இயல்பாகவே ஓர் அழுத்தம் ஏற்படும்.
அதாவது தமிழர் பிரச்சினைக்கான மாற்றுத் தீர்வு என்ன என்பதை, வெளிப்படுத்த வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும். அத்தகைய நெருக்கடி, இந்தியாவை 1987இற்கு முந்திய நிலைக்குக் கொண்டு செல்லும்.
எனவே, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதே, இந்தியாவுக்கு இன்று மிகவும் வசதியானது.
எனவே, இந்தியா திரும்பத் திரும்ப வாக்குறுதிகளை நினைவுபடுத்தியும், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று எச்சரித்தும் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகிறது. ஆனால், இந்தியாவினது இந்த நினைவூட்டல்களையோ, 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தப்படுவது தொடர்பான அதன் கவலைகளைப் பற்றியோ, இலங்கை அதிகம் கரிசனை கொண்டதாகவே தெரியவில்லை.
அவ்வாறு இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால், 13ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பான எந்த நகர்வையும் அது மேற்கொள்வதைத் தவிர்த்திருக்கும். குறிப்பாக, தெரிவுக்குழு தொடர்பான நகர்வுகள் குறைந்தபட்சம் சில நாட்களுக்கேனும் பிற்போடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை.
சிவ்சங்கர் மேனன், இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டிய சில மணிநேரங்களிலேயே தெரிவுக்குழுக் கூட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. அதற்கும் அப்பால், தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு வருவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிவ்சங்கர் மேனனிடம் முன்வைத்திருந்தார்.
இதிலிருந்து இந்தியாவுக்கு தனது நிலை என்ன என்பதும், இலங்கை அரசின் நிலை என்ன என்பதும் நன்றாகவே விளங்கி கொண்டிருக்கும். அதாவது, இந்தியா வரைந்துள்ள கோட்டுக்குள் இலங்கை இனிமேலும் நிற்கப்போவதில்லை என்பது இந்தியாவுக்கு விளங்காமல் போயிருக்காது.
இந்தநிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தைப் பாதுகாக்க, இந்தியா என்ன செய்யப் போகிறது? எத்தகைய வழிமுறையைக் கையாளப் போகிறது? என்பன அரசியல் அரங்கில் மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக எழுந்திருக்கிறது.