2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஷெயிட் அல் ஹுசேன் நம்பிக்கையை காப்பாற்றுவாரா?

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான கருத்து வெளிவந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், பக்கச்சார்பின்றி நடந்துகொள்வார் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகச் செயற்படுவார் என்றும் கடந்த வாரம் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.

அவர் இத்தகைய கருத்து வெளியிட்டதற்கு, கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நவநீதம்பிள்ளை மீதிருந்த வெறுப்புத்தான் காரணம்.

இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியான 2008ஆம் ஆண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியை பொறுப்பேற்ற நவநீதம்பிள்ளை, போர் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையும்வரை அப்பதவியை வகித்து வந்தார்.

இலங்கையை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியமானதொரு காலகட்டம். அதுபோலவே, சர்வதேச மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கும் இது சவாலான, முக்கியமானதொரு காலகட்டம்.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இலங்கையில் உச்சக்கட்டப் போர் இடம்பெற்ற - போருக்குப் பின்னர் உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டங்களை உள்ளடக்கியிருந்தது. எனவே, இவை பற்றிய கரிசனைகள், கவலைகளையெல்லாம் அவர் அவ்வப்போது எழுப்பத் தவறவில்லை.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒவ்வொரு தடவை சுட்டிக்காட்டியபோதும் கண்டித்தபோதும் அரசாங்கத்திடமிருந்து நவநீதம்பிள்ளை கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

நவநீதம்பிள்ளை, தென்னாபிரிக்கத் தமிழராக வேறு இருந்துவிட்டதால், அவரையும் மிக இலகுவாக புலி என்றும் புலிகளுக்கு சார்பானவர் என்றும் அரசாங்கம் வர்ணித்தது.

இலங்கை போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும் என்றும் அதற்கு சர்வதேச விசாரணையே ஒரே வழி என்றும் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வந்தவர் நவநீதம்பிள்ளை. அதனாலேயே, நவநீதம்பிள்ளை மீது இலங்கை அரசாங்கத்துக்கு அத்தனை கோபம்.

நவநீதம்பிள்ளை, ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தியபடியே தனது பதவிக்காலத்துக்குள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும்; போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க வழிவகை செய்துவிட்டார்.

அவர் தனது பதவியை விட்டு விலகும்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன.
இந்த விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை கூட, எதிர்வரும் 8ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தனது பதவிக்காலத்தில் இலங்கை அரசாங்கத்தை ஆட்டிப்படைத்த ஒருவராகவே நவநீதம்பிள்ளை விளங்கினார். அதனால்தான், அவரை கடைசிவரையில் இலங்கை அரசாங்கம் கடுமையாக விமர்சித்துவந்தது.

இப்போது அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதைக் கொண்டாடும் ஒரே நாடு என்றால், அது இலங்கையாக மட்டுமே இருக்கமுடியும். அந்தளவுக்கு இவருக்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு பெரும் விரிசல் இருந்துவந்தது.

இப்போது நவநீதம்பிள்ளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இல்லை. புதிய ஆணையாளராக, செப்டெம்பர் 3ஆம் திகதி நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்செயலர் முன்பாக முறைப்படி பதவியேற்றுள்ளார் ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன்.

இவர் மீது இலங்கை அரசாங்கம் அதிக நம்பிக்கை வைத்திருப்பதற்கும் பக்கச்சார்பின்றிச் செயற்படுவார் என்று குறிப்பிட்டதற்கும் நவநீதம்பிள்ளை அளவுக்கு இலங்கைக்கு எதிராகச் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.

ஆனால், இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்ற அளவுக்கு இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன் கடும்போக்குடன் நடந்துகொள்ளமாட்டார் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றே கூறவேண்டும்.

இலங்கை அரசாங்கம், குற்றஞ்சாட்டுகின்ற அளவுக்கு நவநீதம்பிள்ளையின் மீது வேறெந்த நாடும் அவரை பக்கச்சார்புடையவர் என்று குறை கூறவில்லை.

இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு, இலங்கை விவகாரத்தில் அவர் முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள் மட்டும் காரணமல்ல.

இலங்கை அரசாங்கம் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாகவே நிராகரிக்க வழியில்லாத நிலையில், அந்தக் குறைபாட்டை மறைப்பதற்கும் நவநீதம்பிள்ளை மீதான விமர்சனத்தை பயன்படுத்திக்கொண்டது.

ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அதைத்; துணிவுடன் எதிர்கொண்டு, பொய்யென்று நிரூபித்து, தன்னை நிரபராதியாக வெளிப்படுத்துவது ஒரு விதம்.

அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தவரை கேவலப்படுத்தியோ, பொய்யர் என்றோ வெளிப்படுத்தி, அவர் கூறியதால் அந்தக் குற்றச்சாட்டும் பொய்யானதே என்று சாதிப்பது இன்னொரு விதம்.

இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை துணிவுடன் எதிர்கொண்டு, அவையெல்லாம் வெறும் பொய்யென்று நிரூபிக்க முனையவில்லை.

மாறாக, நவநீதம்பிள்ளையை பொய்யராக்கி, அந்தக் குற்றச்சாட்டுகளை பலவீனப்படுத்த எத்தனித்தது. இதனால்தான், இலங்கை அரசாங்கத்தால் ஜெனீவா சமர்க்களத்தில் வெற்றி பெறமுடியாது போனது.

போர் முடிவுக்கு வந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இலங்கை அரசாங்கம், நியாயமானதொரு விசாரணையை நடத்தி சுதந்திரமான, நம்பகமான அறிக்கையொன்றை வெளிப்படுத்தியிருந்தால், நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை உலகம் செவிமடுத்திருக்காது.

அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியதால், அதன் நேர்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதனால்தான், இலங்கை அரசாங்கம் சொல்வதையெல்லாம் ஏற்க மறுத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளித்தன.

இந்தக் கட்டத்தில் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளும் வெளியுலகில் எடுபடவில்லை.
அதாவது நவநீதம்பிள்ளையின் நேர்மையை கேள்விக்குட்படுத்தி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்யும் இலங்கை அரசாங்கத்தின் உத்தி பெரிதும் தோல்வி கண்டுவிட்டது.

ஆனாலும், அரசாங்கம் அதனை உள்நாட்டில் மிகத் தாராளமாகவே பயன்படுத்திக்கொள்கிறது. அதன் மூலம் சிங்கள மக்களை திருப்திப்படுத்தியும் வருகிறது. அதாவது, நவநீதம்பிள்ளைதான், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறார். அவர் இந்தப் பதவியை விட்டுப் போய்விட்டதால், இனிப் பிரச்சினையில்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைகிறது அரசாங்கம்.

அரசாங்கத்தின் இந்த நம்பிக்கையை புதிதாக பதவியேற்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன் காப்பாற்றிக்கொள்வாரா என்ற கேள்வி எப்போதோ எழத் தொடங்கிவிட்டது.

ஏனென்றால், இலங்கையை பொறுத்தவரையில் ஒரு மோசமான அரசியல் கலாசாரம் உள்ளதை எவரும் மறுக்கமுடியாது. அதாவது விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவமோ, அத்தகைய விமர்சனங்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்ளும் திறனோ இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.

இந்தக் குறைபாடு, ஐ.நா. வுடனான இலங்கையின் உறவுகளிலும் நவநீதம்பிள்ளையுடனான உறவிலும் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது.

இப்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன் பதவியேற்றுள்ள நிலையில், எல்லாமே ஒரே இரவில் மாறிவிடுமென்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தால், அது முட்டாள்தனத்தின் உச்சம் என்றே கூறவேண்டும்.

நவநீதம்பிள்ளை அளவுக்கு இலங்கை விவகாரத்தில் அதிக ஈடுபாட்டையும் கடும்போக்கையும் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன் வெளிப்படுத்துவார் என்று மிகையான எதிர்பார்ப்பை கொண்டிருக்கமுடியாது. அதற்காக, நவநீதம்பிள்ளையின் நிலைப்பாடு குறித்த அரசாங்கத்தின் கருத்துடன் அவர் உடன்படுவார் என்றும் எதிர்பார்க்கமுடியாது.

நவநீதம்பிள்ளை, இலங்கை விவகாரத்தில் அதிக ஈடுபாடும் கடும்போக்கும் காட்டியதற்கு முக்கியமான காரணம், அவரது பதவிக்காலத்தில்தான், இலங்கையில் கடுமையான போரும் அதன் போதான கொடுமையான நிகழ்வுகளும் அரங்கேறியிருந்ததாகக் கூறப்படுகிறது.  அந்தப் போரில் பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா.வும் தவறிவிட்டதான குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நவநீதம்பிள்ளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக பதவியிலிருந்த நிலையில், அதனைத் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு அவருக்கு அதிகமிருந்தது.  அதை விட, மிகப்பெரும் அழிவுகளுக்கு ஐ.நா.வும் காரணமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டொன்று இருக்கும் நிலையில், அதற்கு பரிகாரம் தேடிக்கொள்ளும், பாவத்தை கழுவிக்கொள்ளும் மனோநிலையும் அவரிடம் இருந்திருக்கலாம்.

இவை, இலங்கை விவகாரத்தில் அதிக ஈடுபாட்டை அவர் வெளிப்படுத்த முக்கியமான காரணங்கள் என்று கருதலாமே தவிர, அவர் தனியானதொரு மறைமுக நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்பட்டதாக ஒருபோதும் கருதமுடியவில்லை.

இப்படியான நிலையில், புதிய ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன் இலங்கை அரசாங்கத்துடன் எத்தகைய உறவை வைத்துக்கொள்ளப் போகிறார் - கடும்போக்குடன் நடந்துகொள்வாரா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அவர் பக்கச்சார்பின்றி செயற்படுவார் என்றும் இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொள்வார் என்றும் வெளிப்படுத்தப்படும் நம்பிக்கைகள், எந்தளவு காலத்துக்கு நிலைக்கும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஏனென்றால், நவநீதம்பிள்ளை மாறியவுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அணுகுமுறைகளும் அடியோடு மாறிப் போகுமென்று கருதமுடியாது. அது ஒருபோதும் சாத்தியமில்லாத விடயம். அவ்வாறு நடந்தால்தான் அது பக்கச்சார்புத்  தன்மையைத்தான் வெளிப்படுத்தும்.

ஏற்கெனவே நவநீதம்பிள்ளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதுதான் புதிய ஆணையாளரின் பணியே தவிர, அவரால் தனக்கென புதிய வழியை தேடிக்கொள்ள முடியாது. அந்த வகையில் பார்க்கப்போனால், புதிய ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹுசேன், நவநீதம்பிள்ளையின் அணுகுமுறைகளை அடிப்படையாக வைத்தே செயற்பட வேண்டும்.

அதிலும் முக்கியமாக, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்த விசாரணைகள் நடந்துவருகின்றன. அதனை தடுத்து நிறுத்தவோ, தவறாக வழிநடத்தவோ புதிய ஆணையாளரால் முடியாது.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த வாய்மொழி அறிக்கையை, புதிய ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், எதிர்வரும் 8ஆம் திகதி  தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது அமர்வில் சமர்ப்பிக்கவேண்டும்.

அந்த அறிக்கை வெளியானதன் பின்னரும், புதிய ஆணையாளர் மீது அரசாங்கம் நம்பிக்கையை வெளிப்படுத்துமா என்று பார்க்கவேண்டும்.
ஏனென்றால், அந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தால், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிடும்.

அதாவது, புதிய ஆணையாளரும் பக்கச்சார்புடையவர், நவநீதம்பிள்ளையின் வழியில் செல்கிறார் என்று புராணம் படிக்கத் தொடங்கிவிடும்.
அதேவேளை, மீறல்கள் குறித்த அதிகளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமானதொரு அறிக்கையை ஐ.நா. விசாரணைக்குழு சமர்ப்பிக்குமென்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது.

எனவே, அந்த அறிக்கையும் அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் நகர்வுகளும் புதிய ஆணையாளருக்கு மிகவும் சோதனையாக அமையும்.
அவர், இலங்கை அரசாங்கத்தின் மீது எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்த முனைந்தாலும், அடுத்த கணமே அவரையும் அரசாங்கம், புலியாகவோ அல்லது பக்கசார்புடையவர் என்றோ விமர்சிப்பதற்கு நேரம் எடுக்காது.

எனவே, இளவரசர் ஷெயிட்  அல் ஹுசேனுக்கு இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு ஓரிரு வாரங்கள்தான் கிடைக்கப் போகின்றன. அதற்குப் பின்னரும்,  இலங்கை அரசின் நம்பிக்கையை அவர் பேணிக்கொண்டால் அது ஆச்சரியமானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .