2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆளும் கட்சிக்குள் கிளர்ச்சி

Thipaan   / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும் எனக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டதென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, கடந்த புதன்கிழமை மறைமுகமாக கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஐ.ம.சு.கூ வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளிப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தேசிய சுதந்திர முன்னணியும் ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளதாகவும் ஏற்கெனவே அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தையும் காஸ் விலையையும் குறைத்துள்ளதாகவும் இம் முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் மேலும் விலை குறைப்புக்கள் வரும் என்றும் எனவே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியிருந்தார்.

வரவு-செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது என்பது தான் அவரது கூற்றின் அர்த்தமாக இருப்பின், அது அரசியல் நாகரிகத்தைப் பற்றிய பெரும் பிரச்சினையொன்றை சுட்டிக் காட்டுகிறது. ஒரு நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரவு-செலவுத் திட்டத்தை, ஓர் அரசியல் கட்சியின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு சமர்ப்பிப்பதானது அரசியல் நாகரிகத்துக்;கு முரணானதாகும்.

அது மட்டுமல்லாது இம் முறை வரவு-செலவுத் திட்டமானது ஐ.ம.சு.கூ.வுக்குள் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள பிரேரணைகளுக்கும் வரவு-செலவுத் திட்டத்துக்;கும் இடையே பாரிய முரண்பாடு காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.

உதாரணமாக, மத்திய அரசாங்கத்தில் இருக்க வேண்டிய அமைச்சர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 25ஆக வேண்டும் என்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை ஆகக் கூடியது 35ஆக இருக்க வேண்டும் என்றும் ஹெல உறுமயவின் பிரேரணையொன்றில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, அந்த அமைச்சர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கும் போது அது விஞ்ஞானபூர்வ அடிப்படையொன்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

நாகரிகமான அரசியலை ஏற்கும் எவரும் இந்த ஆலோசனையை நிராகரிக்க மாட்டார். ஆனால், வரவு- செலவு திட்டத்தின் மூலம் அந்தப் பிரேரணையின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஜனவரி மாதத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஹெல உறுமயவின் பிரேரணைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் ஜனவரி மாதத்துக்;கு பின்னரான காலப் பகுதிக்கான இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் ஆகக் கூடியது 25 அமைச்சுக்கள் தான் இருக்க வேண்டும்.

ஆனால், வரவு-செலவுத் திட்டம் அவ்வாறு அமையவில்லை. எனவே ஹெல உறுமய இந்த வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக இருந்தால் அது எந்த அடிப்படையில் என்பதை அக் கட்சி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியிருக்கும்.

வழமையாக எந்த அரசாங்கமும் வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது மதுபானங்கள் மூலம் பெரும் வருமானத்தை எதிர்ப்பார்க்கும். ஆனால் கசினோ, சூது மற்றும் விபசாரம் ஆகியவற்றையும் மதுபானங்களையும் தடைசெய்ய வேண்டும் என ஹெல உறுமய தமது பிரேரணைகள் மூலம் கேட்டுள்ளது. இதுவும் அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தோடு முரண்படுகிறது.

அரசாங்கத்திலுள்ள இரண்டு கட்சிகள் இது போன்ற பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளன. நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றைய கட்சியாகும்.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரேரணைகள், அரசாங்கத்துக்;கு அவ்வளவு பிரச்சினையாகப் போவதில்லை. அவை ஹெல உறுமயவின் பிரேரணைகளைப் போன்று துல்லியமானவையல்ல, தெளிவானவையுமல்ல. அவற்றை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்;கு நிபந்தனை விதிக்கவுமில்லை.

எனவே, சரி நான் ஏற்றுக் கொண்டேன் என்று ஜனாதிபதி கூறினால் போதும். வீரவன்ச தம் பாட்டில் மேடைகளில் விளாசித் தள்ளிவிடுவார். தேர்தலின் பின்னர் அவற்றை நிறைவேற்றாவிட்டாலும் வீரவன்ச பிரச்சினைபடுத்தப் போவதில்லை.

ஆனால், ஹெல உறுமயவின் பிரேரணைகள், அரசாங்கம் செய்ய வேண்டியவற்றை துல்லியமாக சுட்டிக் காட்டுகின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அவற்றை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூற முடியாதவாறு, அவற்றை நிறைவேற்றினால் தான் தேர்தலின் போது ஒத்துழைப்போம் என்று அக் கட்சி கூறுகிறது. இது உண்மையான மிரட்டலாக இருந்தால் அரசாங்கத்துக்;கும் ஹெல உறுமயவுக்கும் இடையிலான பிளவு நிச்சயமாகும்.

கடந்த 19ஆம் திகதி மஹரகமையில் நடைபெற்ற ஹெல உறுமயவின் 11ஆவது தேசிய மாநாட்டின் போதே இந்தப் பிரேரணைகள் அறிவிக்கப்பட்டன. அதற்கு நான்கு தினங்களுக்கு முன்னர் அக் கட்சியின் தவிசாளரான அத்துரலியே ரத்ன தேரரின் தலைமையிலான பிவித்துரு ஹெட்டக் (தூய நாளை) தேசிய சபையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்திய அதன் மாநாட்டின் போது, இதே போன்றதோர் ஆலோசனைத் தொகுதியொன்றை முன்வைத்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது ஆலோசனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியுறச் செய்வதற்காக, தாம் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பிரிதொரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதாக, அந்தக் கூட்டத்தின் போதும் ரத்ன தேரர் கூறினார். 

அவரது ஆலோசனைகளும் ஹெல உறுமயவின் ஆலோசனைகளைப் போலவே தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கின்றன. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த ஆலோசனைகளும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமது ஆலோசனைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்த இரண்டு அமைப்புக்களும் வலியுறுத்துவதானது, அரசாங்கத்துடன் இணைந்திருந்த அக் கட்சிகளுக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

அதேவேளை, அவற்றை நிறைவேற்ற தேவையான மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பலம் இப்போது அரசாங்கத்திடம் இருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த உடன் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தால் இந்தப் பிரேரணைகளை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கம் இழக்கலாம். இப்போதே செய் என்று கூறுவதே புத்திசாலித்தனமாகும் என அவ் அமைப்புக்கள் நினைக்கிறது போலும்.

ரத்ன தேரர் உள்ளிட்ட ஹெல உறுமயவின் தலைவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை தமது பிரேரணைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்தனர். அப்போது அவற்றை நிராகரிக்காது ஜனாதிபதி அவற்றைப் பரிசீலிப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றிடம் ஒப்படைப்பதாக கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி அவற்றை நிராகரிக்காவிட்டாலும் அவற்றை நிறைவேற்றப் போவதில்லை என்பது தெளிவானதாகும். ஏனெனில், அவற்றை அவரால் நிறைவேற்ற முடியாது.

உதாரணமாக நாடாளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்;கும் பொறுப்புக் கூறும் ஜனாதிபதி ஒருவர் தான் இருக்க வேண்டும் என்ற ஹெல உறுமயவின் ஆலோசனையை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்றே பிவித்துரு ஹெட்டக் அமைப்பு கோருகிறது. இதனையும் ராஜபக்ஷ ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

பிரிவினைவாதம் மட்டுமல்லாது பிரிவினைவாதப் போரொன்றே நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், 2005ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த ராஜபக்ஷ, போர் முடிவடைந்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பிரிவினைவாத கருத்துக்கள் இன்னமும் சிலரிடம் இருப்பதால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய முடியாது என்று கூறுகிறார்.

புலம் பெயர் தமிழர்களும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் தாம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக அவர், அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறியது தெரிந்ததே.

எனவே, இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் கருத்துப் படி பிரிவினைவாதிகளின் கோரிக்கையாகும். எனவே, ரத்ன தேரரும் புலி என்று சில நாட்களில் ஆளும் கட்சியினர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிவித்துரு ஹெட்டக் அமைப்பின் ஆலோசனைகளின் படி, ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனே அவர் அரசியல் கட்சியொன்றின் அங்கத்துவத்தை பெறும் உரிமையை இழக்கிறார். நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியான அவர், அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியும். ஆனால், ஆளும் கட்சி உட்பட எந்தவொரு கட்சியையும் வழிநடத்தும் உரிமையை அவர் இழக்கிறார்.  மஹிந்த ராஜபக்ஷ இதனை விரும்புவாரா?

அதேபோல், ரத்ன தேரரின் ஆலோசனைகளின் படி, ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்ற உடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் தகுதியையும் இழக்கிறார். அதாவது ஒருவர் ஒரு முறை தான் நாட்டில் ஜனாதிபதியாக முடியும்.

இந்த ஆலோசனை ஒருவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற உடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் தகுதியையும் இழக்கிறார் என்ற, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் முன்வைக்கப்பட்டு தற்போது நாட்டை கலக்கிக் கொண்டு இருக்கும் கருத்தை நினைவூட்டுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சரத் என். சில்வாவே பிவித்துரு ஹெட்டக் அமைப்பின் ஆலோசனைகளை வரைந்துள்ளார்.

தமது ஆலோசனைகளை நிறைவேற்றினால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவதாக ரத்ன தேரர் கூறுகிறார். அவ்வாறு சந்தர்;ப்பம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியாக மாட்டார்.  அதனை ராஜபக்ஷ விரும்புவாரா?

அதேவேளை, தமது ஆலோசனைகளை நிறைவேற்றியதற்காக, ஒருவர் ஒரு முறை தான் ஜனாதிபதியாகலாம் என்ற தமது கொள்கைக்கே மாறாக ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்குவது என்பது நாகரிகமானதா என்பதும் கேள்விக்குறியே.

குறிப்பாக, தனி நபர் ஒருவரின் தேவைக்காகவே 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் நாட்டில் தற்போது நிலவுவது தனியொரு குடும்பத்தின் ஆதிக்கம் என்றும் நாட்டில் ஊழல் மலிந்திருப்பதாகவும் நாட்டில் சகல துறைகளும் சீரழிந்துள்ளதாகவும் கூறிக் கொண்டு ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்று கூற ஹெல உறுமயவுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்று ஒருவர் கேட்கலாம்.

25 பேர் கொண்ட அமைச்சரவையை அமைக்க வேண்டும் என்ற ஹெல உறுமயவினதும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பினதும் ஆலோசனையை நிறைவேற்ற ஜனாதிபதி முற்பட்டால், 2001ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் நெருக்குதலால் 20 பேரைக் கொண்ட அமைச்சரவையுடன் 'நன்நடத்தை அரசாங்கம்' ஒன்றை உருவாக்கிய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்நோக்கிய நிலைமையையே ராஜபக்ஷவும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தப் பிரேரணை மிகவும் முற்போக்கான பிரேரணை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதனை நிறைவேற்றப் போனால் தற்போது அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளின் அதிகாரத்தால் பல சிறப்புரிமைகளை அனுபவிக்கும் பலர் அவற்றை இழக்க வேண்டிவரும். அவர்கள், ராஜபக்ஷவை கைவிடவும் கூடும். 2001ஆம் ஆண்டும் அதுவே நடந்தது. அன்று எஸ். பி. திஸாநாயக்க, ஜீ.எல்.பீரிஸ் உட்பட 12 பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்ததால் அரசாங்கம் கவிழ்ந்தது.

அதிகார பரவலாக்கலைப் பற்றி ரத்ன தேரரின் ஆலோசனைகளில் எதுவும் கூறப்படவில்லை என விமல் வீரவன்ச கூறுகிறார். ஆனால், அத் தேரர் தவிசாளராகவிருக்கும் ஹெல உறுமயவின் ஆலோசனைகளில், மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச சூழலில் மாகாண சபை முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருவது யதாரத்தபூர்வமானதல்ல என கடந்த வருடம் ஹெல உறுமய கூறியிருந்தது. அதற்கு அமையவே தற்போது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது போலும்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும். பிரதமர், எதிர்க கட்சித் தலைவர், ஜனாதிபதியின் பிரதிநிதி மற்றும் பலவேறு துறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நிபுணர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையொன்றை அமைக்க வேண்டும் என்பனவும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பின் மிக முக்கிய ஆலோசனைகளாகும்.

இவற்றை நிறைவேற்றாவிட்டால் நாம் வேறு வழியைப் பார்த்துக் கொள்வோம் என்ற ஹெல உறுமயவினதும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பினதும் எச்சரிக்கையானது, அரசாங்கத்துக்;கு மட்டுமன்றி அவ் அமைப்புக்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

எவர் எவ்வளவு உன்னதமான கொள்கைகளை முன்வைத்தாலும அந்த நாகரிக அரசியலை ஆதரிக்காது பணம், அதிகாரம் மற்றும் பதவி ஆகியவற்றின் பின்னால் ஓடவே அரசியல்வாதிகள் மக்களை பயிற்றுவித்துள்ளனர்.

அம் மக்கள், ஹெல உறுமயவினதும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பினதும் ஆலோசனைகளைப் பார்த்து அவர்களை ஆதரிக்க முற்படுவார்களா என்பது சந்தேகமே. அதனாலேயே ஹெல உருறுமயவினதும் பிவித்துரு ஹெட்டக் அமைப்பினதும் எச்சரிக்கை அவ் அமைப்புக்களுக்கே சவாலாக அமையப் போகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .