2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

60 கேள்விகளை எழுப்பும் 20

Thipaan   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்தைப் பற்றி சில நாட்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தெரிவித்த அச்சத்தை குறைகூற முடியாது.

ஏனெனில், அரசியலமைப்புச் சட்டமொன்று அல்லது அரசியலமைப்புத் திருத்தமொன்று நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதில் குறைகள் இருந்தால் அதனை மீண்டும் திருத்துவதென்பது இலகுவான காரியமல்ல. ஏனெனில், அதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தமது சம்மதத்தை தெரிவிக்க வேண்டும்;.

ஓர் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பதென்பது அரிதான விடயம். இலங்கை வரலாற்றில் ஒரே ஒரு முறை தான் தனியொரு கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குப் பலம் கிடைத்திருக்கிறது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே அவ்வாறு பலம் பெற்றிருந்தது.

1970 ஆண்டு, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கும் அப் பலம் கிடைத்திருந்த போதிலும் அது ஒரு கூட்டரசாங்கமே. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் அப்பலம் இருந்த போதிலும் அரசியல் இலஞ்சம் கொடுத்;து ஏனைய கட்சிகளின் எம்.பி.க்களை அரசாங்கத்துடன் சேர்த்துக் கொண்டே அந்த பலத்தை அவர் பெற்றக் கொண்டார்.

எனவே, அரசியலமைப்புத் திருத்தம் என்றால் மிகப் பாரதூரமான விடயமாகும். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் தேர்தல் சீர்த்திருத்தத்தின் போது சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டால் அந்த பாதிப்பு நீண்ட காலமாக நீடித்திருக்கக்கூடிய பாதிப்பாகவே அமையும்.

ஆனால், கடந்த வாரம் வரை இந்த விடயத்தில் யானையை விவரித்த குருடர்களைப் போல் தான் அரசியல்வாதிகள் நடந்து கொண்டார்கள். இன்னமும் சிலர் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். ஒரு குருடன் யானையின் காலை தடவிப் பார்த்து யானை, உரலைப் போன்றது என்றான்.

மற்றொருவன் யானையின் வாலைத் தடவிப்; பார்த்து யானை தும்புத்தடியைப் போன்றது என்றான். மூன்றாவது குருடன் யானையின் காதைப் பிடித்துப் பார்த்து இது சுளகைப் போன்றது என்றான் என அக் கதையில் கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த வாரம் வரை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்பது நாட்டை அல்லது தமது இனத்தை பாதிக்கப் போகிறது என ஊகித்துக் கொண்டு ஓர் அரசியல்வாதி அதனை எதிர்த்தார்.

மற்றொரு அரசியல்வாதி, அது நாட்டுக்கு அல்லது தமது இனத்துக்கு நல்லது என ஊகித்துக் கொண்டு அதனை ஆதரித்தார். ஆனால், 20 ஆவது திருத்தத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒருவருக்கும் அதனை விவரிக்க முடியாமல் இருந்தது.

இதனை மிக தெளிவாக எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் கடந்த 9ஆம் திகதி, மேல் மாகாண சபையில் இடம்பெற்றது. இந்த சம்பவம் இடம்பெறும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தது.

அவ்வாறிருக்க கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதைய 225ஐ விட அதிகரிக்கவே கூடாது என அமைச்சரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அது, ஐ.தே.கவின் கருத்தாகவும் இருந்தது. அது தான், அதுவரை இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே ஆவணமாகியது.  

அவ்வாறிருக்க மறுநாள் 9 ஆம் திகதி மேல் மாகாண சபை கூடிய போது, 20 ஆவது திருத்தத்தை ஆதரிக்க வேண்டும் என ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர் இசுர தேவப்பிரிய, சபையில் பிரேரணையொன்றை முன்மொழிந்தார். அவர் அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.தே.கவின் பிரேரணையையா ஆதரிக்க வேண்டும் என்கிறார் என்ற கேள்வி அப்போது எழுந்தது.

அப்போது, 20 ஆவது திருத்தம் என்றால் என்ன, எதனை ஆதரிக்கச் சொல்கிறீர்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல கேள்வியொன்றை எழுப்பினார். அதற்கு எவரும் பதிலளிக்கவில்லை. ஆனால், அது தொடர்பான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களும் ஏதேதோ பேசிவிட்டு அமர்ந்தனர்.

ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐ.தே.க. கூறியது.

ஆனால், தேர்தல் சீர்த்திருத்தத்துக்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தை கலைக்கக் கூடாது என ஸ்ரீ.ல.சு.க வற்புறுத்தியது.

தற்போது ஜனாதிபதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவும் அவ்வாறே கூறியது. தாமும் தமது 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்குள் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்ததால் ஜனாதிபதியும் அதற்கு இணங்கினார்.

ஆனால், நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட சட்ட வாசகங்களை உள்ளடக்கிய ஓர் ஆவணம் இருக்க வேண்டும். இப்போதைக்கு அது தேவையில்லை என்று கூறும் ஆளுங்கட்சியான ஐ.தே.க.விடம் அந்த ஆவணத்தை தயாரிக்குமாறு கூறுவது அர்த்தம் இல்லை என்று நினைத்ததனாலோ என்னவோ ஜனாதிபதி அந்தப் பொறுப்பை எதிர்க் கட்சியான தாம் தலைமை தாங்கும் ஸ்ரீ.ல.சு.க.வின் எம்.பி.க்கள் நான்கு பேர் அடங்கிய குழுவொன்றிடம் கையளித்தார்.

அந்தக் குழுவும் ஓர் ஆவணத்தை தயாரித்தது. அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இலிருந்து 255 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தது. அதேவேளை, ஹெல உறுமயவும் மற்றொரு ஆவணத்தை தயாரித்தது. எவ்வாறு நடந்ததோ தெரியாது, அதிலும் அதே எண்ணிக்கை தான் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அமைச்சரவையின் பிரேரணை கடந்த 8ஆம் திகதி நிறைவேறியது.

அந்த பிரேரணைக்கு அமைவாக சட்டத் திருத்தத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஸ்ரீ.ல.சு.க., ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டது.

இது தொடர்பான மற்றொரு சட்ட நகலை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை அங்கிகரித்தது. திங்கட்கிழமை அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதாகவும் அறிவித்தது. அதன் படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 237 ஆகப் போகிறது.

ஆனால், இதனை சிறுபான்மைக் கட்சிகள் பல ஏற்றுக் கொள்ளவில்லை. அமைச்சரவையில் பெரும்பான்யைக் கொண்ட ஐ.தே.க.வும் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஹெல உறுமயவும் தமது பழைய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.

அவ்வெல்லாக் கட்சிகளும் இந்த பிரேரணை அடங்கிய சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு குழு நிலைக்கு வந்த போது தத்தம் நிலைப்பாடுகளை சட்டமாக்கிக் கொள்ள காத்திருக்கின்றன.

இதேவேளை, தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைகளின் கலப்பு முறையொன்று அமுலுக்கு வருவதாக இருந்தால், வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.

எனவே, அரசாங்கம் தமது ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாது 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டால் தாம் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அவர், கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.

கலப்பு முறையாக இருந்தாலும் தற்போதைய பிரேரணைகளின் படி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நியமித்தே தேர்தல் நடைபெறப் போகிறது. எனவே, தொகுதிவாரியாக சிந்தித்தே வாக்காளர்கள் வாக்களிக்க முற்படுவார்கள்.

வெற்றி பெறக்கூடிய வேட்பாளருக்கே மக்கள் வாக்களிக்க முற்படுவதால், முஸ்லிம்கள் கூடுதலாக இல்லாத ஒரு தொகுதியிலுள்ள மு.கா. ஆதரவாளர் ஒருவர், அத் தொகுதிக்கான மு.கா. வேட்பாளருக்கு அல்லாது மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

ஆனால், அவர் அடிப்படையில் மு.கா ஆதரவாளர். எனவே, தமது கட்சிக்கு வாக்களிக்க அவருக்கு வேறு வழியிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் மு.கா இரண்டு வாக்குச் சீட்டுக்கள் வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை விடுக்கிறது போலும். அவ்வாறு இல்லாவிட்டால் அது வடக்கு மற்றுமு; கிழக்குக்கு வெளியே சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம் என அக்கட்சி வாதிடுகிறது.

ஐ.தே.க வினால் கடந்த 8ஆம் திகதி முன்மொழியப்பட்டு அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்ற பிரேரணையின் படியும் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்ற பிரேரiணையின் படியும் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையான 168ஐ விட குறைகிறது. 8ஆம் திகதி பிரேரணையின் படி அது 125 ஆகும். அது 145 ஆக வேண்டும் என்றே அமைச்சரவை, வெள்ளிக்கிழமை அங்கிகரித்தது.

தேர்தல் தொகுதிகளின் நிலப்பரப்பு, சனத்தொகை ஆகியவற்றை கருத்திற் கொண்டே தற்போதைய தொகுதிகளின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றின் பரப்பளவு அதிகரிக்க வேண்டும்.

எனவே, புதிதாக அவற்றின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதனால் பல தேர்தல் தொகுதிகளின் இனப் பரம்பல் வேறுபடலாம் என்றும் அதனால் சமூகங்களிடையே புதிய பிரச்சினைகள் உருவாகலாம் என்றும் ஸ்ரீ.ல.சு.க. வாதிடுகிறது.

இது பாரதூரமாக கவனத்திற் கொள்ள வேண்டிய வாதம் என்பதில் சந்தேகமே இல்லை. தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் புதிய எல்லை நிர்ணயத்தின் போது போரினாலும் புலம்பெயர்வாலும் சனத் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ள வட மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகள் குறையலாம்.

ஆனால், மறுபுறத்தில் தேர்தல்; தொகுதி எல்லைகள் என்பன நிரந்தரமானவையல்ல. 1970ஆம் ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளே தற்போது இருக்கின்றன. அதற்குப் பின்னர் பல தொகுதிகளில் சனத் தொகை வித்தியாசங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மாற்ற வேண்டிய தேவை சில பகுதிகளில் ஏற்பட்டும் இருக்கலாம். அப்போதும் ஸ்ரீ.ல.சு.க., கூறுவது போன்ற சமூகப் பிரச்சினைகள் உருவாகலாம்.

ஆனால், எல்லைகள் புதிதாக நிர்ணயிக்கப்படாவிட்டாலும் தேர்தல் தொகுதிகளில் ஏற்படும் சனத் தொகை வித்தியாசத்தாலும் அதே பிரச்சினைகள் உருவாகலாம். உதாரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் கொழும்பிலுள்ள முஸ்லிம் சனத் தொகை ஓரளவு குறைந்து, அம் மக்கள் கொலன்னாவ தொகுதியில் குடியேறியிருக்கிறார்கள்.

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கையில் தான் எல்லோரும் தேர்தல் சீர்திருத்தத்துக்காக அவசரப்படுகிறார்கள். இச் சீர்திருத்தத்துக்காக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு சுமார் 10 ஆண்டுகள் எடுத்து சில ஆலேசனைகளை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. 20 ஆவது திருத்தம் என்று நாளுக்கொரு திருத்தமும் கட்சிக்கொரு திருத்தமுமாக முன்வைக்கப்படுகிறது. அமைச்சரவையும் நாளுக்கொன்றை செய்து கொண்டு இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தத்துக்கென்று ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஜனாதிபதி, இன்று நியமிக்கிறார்.

அது தொடர்பான ஐ.தே.கவின் ஆலோசனையை நாளை அங்கிகரிக்கிறார். அதற்கிடையே செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலையும் நடத்தி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. எனவே, நாடாளுமன்றத்தை கலைக்கும் முன் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றவும் ஜனாதிபதியும் பல கட்சிகளும் அவசரப்படுகின்றன. இந்த அவசரம் இருப்பதை விட பல பிரச்சினைகளை தோற்றுவித்தாலும் தோற்றுவிக்கக் கூடும்.          
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .