2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயகப் போராளிகளின் வருகை

Thipaan   / 2015 ஜூலை 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகமொன்றின் விடுதலைக்காக போராடியவர்கள் காட்சி மாற்றங்களில் போக்கில் 'முன்னாள் போராளிகள்' ஆனதும், அவர்களை அதே சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்கிற நிலைப்பாட்டில் கையாள்வது உலகம் பூராவும் தொடரும் வழக்கம்.

இதற்கு தமிழ்ச் சூழலும் விதிவிலக்கானது அல்ல. இயல்பு வாழ்க்கைக்கு முன்னாள் போராளிகளுடனான ஊடாடல்கள் சிக்கல்களை உருவாக்கும் என்கிற தன்மையை முன்னிறுத்திக் கொண்டு 'விலக்கி வைத்தல்' என்கிற நிலைப்பாட்டின் பக்கம் மக்கள் அதிகமாக நகர்ந்து விடுகின்றார்கள். இதுதான், தமிழ் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களின் முன்னாள் போராளிகளுக்கும் கடந்த காலங்களில் நடந்தது.

நீடித்த ஆயுதப் போராட்ட வரலாற்றையும், அதிகபட்ச தியாகத்தின் அடிப்படைகளோடும் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் அப்படியே இப்போது நடத்தப்படுகின்றார்கள். அதனை, தமிழ்ச் சமூகம் தனக்குத் தானே செய்யும் துரோகமாகவும் (கடினமான வார்த்தைப் பிரயோகமாக இருந்தாலும், தவிர்க்க முடியவில்லை) சொல்லிக் கொள்ள முடியும். 2009களோடு முடிவுக்கு வந்த ஆயுதப் போராட்டத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் என்கிற அடையாளத்தோடு தமிழ் சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

 சமூகத்தின் அனைத்து கட்டுக்களிலிருந்தும் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அது, அவர்களை நிறையவே பாதித்திருக்கின்றது. மக்களுக்காக தியாகம் புரிந்தவர்களை அந்த மக்களே நிராகரித்தல் என்பது எதிரிகள் கொடுக்கும் வலியைத் தாண்டிய ரணங்களை ஏற்படுத்த வல்லன.

ஆக, முன்னாள் போராளிகளை தமிழ் சமூகம் அடிப்படை நியாயங்களோடு உள்வாங்கவில்லை என்கிற அவப் பெயரை ஏற்றுக் கொண்டு முன்னாள் போராளிகளை முன்வைத்த அரசியல் நகர்வுகள் குறித்து பேசுகிறது இந்தப் பத்தி.

இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளைக் கடந்து விட்டது. இறுதி மோதல்களின் போது இராணுவத்தினால் பிடிக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் என்று பன்னிரெண்டாயிரத்துக்கும் அதிகமாக போராளிகள் நீண்டகால தடுப்பு, விசாரணை மற்றும் புனர்வாழ்வு(!) செயற்றிட்டங்களுக்குப் பின், சமூகத்தோடு மீள இணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களில் பலருக்கும்  வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டு இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றது. இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவினரால் முன்னாள் போராளிகள் மீதான அச்சுறுத்தல் பார்வை இன்னும் விலகவில்லை. இப்படியான நிலையில், முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளை ஒருங்கிணைந்து ஜனநாயகப் போராளிகள் என்கிற கட்சி அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.

அதன் ஒருங்கிணைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் செயற்படுகின்றார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

கனேடிய தமிழ் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த போது, 'ஜனநாயகப் போராளிகளை தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்தால் அது, தமிழ் மக்களின் வரலாற்றுத் துரோகமாகாதா?' என்கிற கேள்வி என்னிடம் முன்வைக்கப்பட்டது.

மிக நியாயபூர்வமான கேள்வி. ஆனால், அதற்கான பதிலை 'இல்லை' என்று ஒரு சொல்லில் சொல்லிவிடலாம். ஆனால், அந்த 'இல்லை' என்ற பதிலுக்குப் பின்னாலுள்ள காரணங்களை விளக்க வேண்டிய தேவையிருந்தது. அது, கீழ் கண்டவாறு அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் விரக்தி நிலையிலிருந்துதான் தமிழ்த் தேசிய அரசியலை அணுகி வந்திருக்கின்றார்கள்.

இப்போது, அந்த விரக்தியின் அளவு ஒப்பீட்டளவில் குறைந்திருக்கின்றது என்பது உண்மை.

மாறாக, ஏற்கெனவே இருக்கின்ற கட்சிகள் அல்லது புதிய அரசியல் சக்திகள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உருவாகவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் தமிழ் மக்கள் ஒருங்கிணைவது என்பது புலிகளின் பெயராலும் விமர்சனங்களைத் தாண்டிய இறுதித் தெரிவாகவுமே ஆகும். அத்தோடு, மக்கள் தங்களின் குறியீட்டு அரசியல் செய்தியைச் சொல்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமது அடையாளமாக முன்னிறுத்தி வருகின்றார்கள். அந்த நிலைமை இன்னும் 5 வருடங்களுக்காவது தொடரத்தான் செய்யும். இதைத்தான் யதார்த்தக் களம் போதிக்கின்றது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளில் நிறைய அதிருப்திகள் மக்களுக்கு உள்ளன. அந்த அதிருப்திகளை தமது பக்கம் திரும்பி மக்களுக்கான நெருங்கிய அரசியலை முன்னெடுக்கும் சக்தியொன்று தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த வாய்ப்புக்கள் இருந்த போதிலும், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் மக்களோடு அல்லது அவர்களின் மனவோட்டத்தோடு அதிக தருணங்களில் முரண்பட்டே வந்திருக்கின்றார்கள்.

அதுபோக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றங்களைக் கூறுவதை மட்டுமே பிரதான அரசியலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வந்திருக்கின்றது.

மாறாக, தமது கொள்கை, கோட்பாடு சார்ந்த அரசியலை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்க முடியவில்லை. அதற்கு ஊடகங்கள் ஒத்துழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகின்றது.

இந்தநிலை, தமிழ் மக்களை 'தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு மேல்' என்கிற நிலைப்பாட்டுக்குள் இருக்க வைத்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் சந்தேகத்தின் அளவையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் மீதும் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். எந்தெந்த தரப்புக்களினால் தமிழ்த் தேசிய கட்சிகளும் சக்திகளும் கையாளப்படுகின்றன என்கிற சந்தேகம் இப்போதைக்கு தீராது. வெளிப்படையான சந்தேகங்கள் அதிக இழப்புக்களைத் தராது என்று நம்புகின்றார்கள்.

அப்படியான நிலைப்பாட்டோடுதான் புதிய அரசியல் கட்சிகள் மற்றும் சக்திகளின் வருகையை தமிழ் மக்கள் இப்போது எதிர்கொள்கின்றார்கள். ஆக, புதிதாக அரசியலுக்கு வருகின்ற தரப்பு சடுதியாக மக்களிடம் அபிமானம் பெறுவதோ, அதன் போக்கிலான வாக்கு அரசியலில் வெற்றிபெறுவதோ இயலுமான காரியம் அல்ல. இது, முன்னாள் போராளிகளை ஒருங்கிணைந்த ஜனநாயகப் போராளிகளுக்கும் பொருந்தும்.

ஜனநாயகப் போராளிகளின் அரசியல் வருகை சடுதியாக தேர்தல் அரசியலை நோக்கி நகர்ந்திருப்பது அவர்கள் மீதான சந்தேகங்களை அதிகரித்துவிட்டிருக்கின்றது.

இந்த சந்தேகங்களைத் தீர்ப்பது அவர்களின் பிரதான பணி. ஏனெனில், முன்னாள் போராளிகளை இலங்கை அரசு கடந்த காலங்களில் எவ்வாறு கையாண்டு வந்திருக்கின்றது என்கிற அனுபவம் மக்களுக்கு உண்டு.

அந்த நிலையில், முன்னாள் போராளிகளை அரசியல் சக்தியாக ஒருங்கிணைந்தவர்கள், நீண்ட காலப் போக்கில் மக்களுடனான ஊடாடல்கள் மற்றும் பணிகள் மூலம் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதற்கு, தேர்தலுக்கு முந்திய சில வாரங்கள் போதாது. மாறாக, அது- 5 தொடக்கம் 10 வருடங்கள் அளவில் மிக இயல்பான நிலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அரசியல்.

அதுதான், எதிர்காலத்தில் முன்னாள் போராளிகள் மீதான சந்தேகங்களைத் தவிர்த்து, நம்பிக்கையை அதிகரிக்கும். அது, முன்னாள் போராளிகளை சமூகத்துக்குள் புறக்கணிக்காமல் உள்வாங்குவதற்கும் உதவும்.

ஆனால், தன்னை தமிழ்த் தேசியவாதியாக முன்னிறுத்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனுக்கு இந்த விடயங்கள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

அப்படியான நிலையில், ஏன் அவர் இவ்வாறான நிலையொன்றை தோற்றுவித்திருக்கின்றார்? முன்னாள் போராளிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்கிற கோரிக்கையை இரா.சம்பந்தனிடம் இரண்டு வருடங்களுக்கு முன்னரேயே முன்வைத்ததாக அவர் கூறியிருக்கின்றார்.

ஆனால், அதை அவர் அந்தத் தருணத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கவில்லை. மாறாக, பொதுத் தேர்தலொன்று வந்திருக்கும் நிலையில் அவசர ஜனநாயகப் போராளிகள் கட்சியை மக்களிடம் முன்மொழிந்திருக்கின்றார்.

இது, அவசியமற்ற ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த இடத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முன்னாள் போராளிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாடு தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், சந்தேகங்களைத் தீர்க்காத வரை குறித்த தீர்மானத்தை தீர்க்கமாக வலியுறுத்தும் நிலைப்பாட்டிலும் தமிழ் மக்கள் இல்லை. அப்படியான நிலையில், ஜனநாயகப் போராளிகள், தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வாய்ப்புக்கள் இல்லை.

இதில் இன்னொரு பக்கமும் உண்டு. அதாவது, ஜனநாயகப் போராளிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களினால் தோற்கடிக்கப்பட்டால் அது, விடுதலைப் புலிகள் என்கிற குறியீட்டு அரசியல் சக்தியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று அடையாளத்தை சர்வதேச ரீதியில் வழங்குவதற்கு ஏதுவாக அமையும்.

தமிழ் மக்களின் நிலைப்பாடு புலிகள் நிராகரிப்பு இல்லை என்கிற போதிலும், சர்வதேசம்- புலிகளின் அதிர்வை தமிழ் மக்களின் அனைத்து தளங்களிலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிடுகின்றது. அதன்போக்கில் ஜனநாயகப் போராளிகளை கையாள்கின்றதோ? என்கிற சந்தேகமும் இயல்பாக எழுகின்றது.

இவற்றையெல்லாம் கடந்து வாக்கு அரசியலின் போக்கில் ஜனநாயகப் போராளிகளின் வருகை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சன வாக்குகளை சிதறடிக்கும். இதனால், நேரடியாகப் பாதிக்கப்படப்போவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை கொண்ட தமிழ்த் தேசிய வாக்குகளின் அளவுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியைத் தீர்மானிக்கும். அப்படியான நிலையில், ஜனநாயகப் போராளிகள் சுயேட்சைக் குழுவாக களம் காணுவது அந்த வாக்குகளைப் பிரிக்கும். இது, ஒரு விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான நிலையே.

முன்னாள் போராளிகளை சமூகத்துக்குள் இயல்பாக உள்வாங்குவதும், அவர்களின் முன்னேற்றம் குறித்தும் அக்கறை கொள்வது தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் கடமை. அதுபோல, முன்னாள் போராளிகளும் மிக தீர்க்கமான எண்ணங்களோடு மக்களின் இயல்பாக சந்தேகங்களைத் தீர்த்து வைத்துவிட்டு அரசியல் களம் காணுவதுதான் எதிர்கால போக்குக்கு நல்லது. மாறாக, எந்தவொரு தருணத்திலும் முன்னாள் போராளிகள் கையாளப்படும் கருவிகளாக இருந்துவிடக் கூடாது. அது, அவர்களை தமிழ்ச் சமூகத்துக்குள் இருந்து இன்னமும் விலக்கி வைத்துவிடும்!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .