Thipaan / 2015 ஜூலை 16 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பெர்லின் சுவரின் வீழ்ச்சியின் பின்னர் 'புதிய உலக ஒழுங்கு' என அழைக்கப்பட்ட அமெரிக்கத் தலைமையிலான ஒரு-மைய உலகம் தனது மரணத்தை மெதுமெதுவாக எட்டுகிறது.
எந்த விளையாட்டிலும் சிறந்ததொரு வீரரின் காலம் முடிதலும் அடுத்தவரின் மேலெழுச்சியும் இயல்பானதே. அரசியல் விளையாட்டும் அவ்வாறானதே. அதிலும் குறிப்பாக சர்வதேச அரசியல் அரங்கு காலங்காலமாக அவ்வாறே இருந்துள்ளது. சோவியத் ரஷ்யாவின் தோல்வியுடனும் உடைவுடனும் தோன்றிய 'புதிய உலக ஒழுங்கு', விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்யா உலக அரங்கில் தன்னை ஒரு பிரதான அரங்காடியாகத் தனது மீள்வருகையை அறிவிக்கும் போது அதிர்வது தற்செயலல்ல.
ஒருவகையில் சர்வதேச அரசியலை விளங்குதற்கான முரண்நகை என்றும் இதை அழைக்கலாம்.
பொருளாதார வல்லரசாகும் வாய்ப்புள்ள வளரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகியவற்றின் கூட்டமைப்பான பிரிக்ஸ் (டீசுஐஊளு) கடந்த வாரம் ரஷ்யாவில் நடத்திய மாநாடு உலக அரங்கில் ரஷ்யாவின் வகிபாகத்தின் முக்கியத்தை மீள வலியுறுத்தியது.
பிரிக்ஸ் மாநாட்டின் முடிவில் சாத்தியமாகிய இரு விடயங்கள் ரஷ்யா உலக அரங்கில் தன்னைத் திடமாக நிலைநிறுத்துவதற்கான அடிப்படைகள் அமைய உதவியிருக்கிறது. முதலாவதாகப், புதிய அபிவிருத்தி வங்கியின் உருவாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகள் நீடித்த இப் பேச்சுக்களின் முடிவில் 50 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொடக்க முதலீடாகக் கொண்டு இவ் வங்கி தோன்றுகிறது. அது குறித்துப் பேசிய ரஷ்ய ஜனாதிபதி புட்டின், 'நாங்கள் எமது வளங்களை எமக்குள் பகிர்வதனூடு பிறரில் தங்கியிராத அபிவிருத்தியை நோக்கி நகர இவ் வங்கி உதவும். குறிப்பாகப் போக்குவரத்து, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வலுவைப் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இவ் வங்கி பங்களிக்கும்' என்று தெரிவித்தார்.
இரண்டாவதாக, 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு நாணயமாற்று நிதியம் ஒன்றை அமைக்க பிரிக்ஸ் நாடுகள் உடன்பட்டமை. இது, இந் நாடுகளில் ஒரு நாட்டுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது ஏனைய நாடுகள் தங்கள் மத்திய வங்கியின் ஊடாக நிதி உதவியைச் செய்யும் உடன்பாடாகும். சர்வதேச நாணய நிதியம் (BRICS) இவ்வாறான
கடன்களினூடு நாடுகளைச் சுரண்டிவரும் நிலையில், இந் நிதியத்தின் வரவு முக்கியமாகிறது. உக்ரேன் நெருக்கடியைத் தொடர்ந்து ரஷ்யாவைத் தண்டிக்கும் நோக்குடன் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்தாண்டு ரஷ்யாமீது விதித்த பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருக்கையில் இவ்வாறான ஒரு நிதியத்தின் தோற்றம் ரஷ்யாவுக்குப் பயனுள்ளது.
அப் பொருளாதாரத் தடைகள் உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவைப் பணியவைக்கும் நோக்குடையவை. ஆனால், இக்காலத்தில் தனது பொருட்களுக்கான புதிய சந்தைகளையும் தனது தேவைகளுக்கான புதிய நாடுகளையும் உருவாக்குவதன் மூலம் ரஷ்யா இப்பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் ஐரோப்பியச் சந்தைகளிலும் அவற்றின் பொருளாதாரத்திலும் தங்கியிராமையை நிறுவுவதில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் முன்னிற்கிறார்.
இன்று உலகில் 60 சதவீதமான மத்திய வங்கிகள் அமெரிக்க டொலர்-மைய நாணய-நிதிய வர்த்தகத்தில் ஈடுபடுவதால் தவிர்க்கவியலாமல் அமெரிக்காவில் தங்கியிருக்க நேருகிறது. முதற் கட்டமாக, அதை மாற்றியமைப்பது அவசியம் என ரஷ்யா கருதுகிறது.
இதனடிப்படையில் அது சீனாவுடன் பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பை அதிகரித்ததோடு சீனாவுடனான வர்த்தகத்தைச் சீன யுவான் (ரென்மின்பி) நாணயத்தில் நடத்த இணங்கியுள்ளது. சீனா பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ளநிலையில், உலக வர்த்தகத்தின் மைய நாணயமாக அமெரிக்க டொலரின் நிலைப்புக்கு முடிவுகட்ட முயல்கிறது. இதன் முதற் கட்டமாக கடந்தாண்டு ரஷ்யாவும் சீனாவும் முப்பது ஆண்டுகட்கான எண்ணெய், எரிவாயு உடன்படிக்கையிற் கைச்சாத்திட்டன. அதன் கொடுக்கல் - வாங்கல் அமெரிக்க டொலர்களில் அல்லாமல் உள்நாட்டு நாணயத்தில் இடம்பெறுவது முக்கிய அம்சமாகும்.
அதேவேளை 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சீன-ரஷ்ய வர்த்தகம் 2014இல் ஒன்பது மடங்கால் அதிகரித்துள்ளது. ரஷ்ய வங்கிகள் அயல் வர்த்தகத்தை சீனாவின் நாணயமான யுவானில் செய்யும் வசதிகளைச் செய்துள்ளன.
ரஷ்யாவின் மிகப் பெரிய வங்கியாகிய செபர் வங்கி நாணயக் கடிதங்களைச் சீன யுவானில் வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நீண்டகாலத்தில் அமெரிக்க டொலரில் தங்கியிராத நிலையை உருவாக்கும் ஏற்பாடுகளே.
பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அழுத்தங்களைப் பிரயோகிக்க அமெரிக்காவுக்கு இயலுமாவதற்கு அமெரிக்க டொலரில் தங்கியிருத்தல் முக்கியம். அதனாலேயே அதை 'டொலர் பயங்கரவாதம்' என ஒருசாரர் அழைக்கின்றனர்.
இம்முறை, பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் வளரும் செல்வாக்கை கோடிட்டு நிற்கிறது. குறிப்பாக இம் மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து முன்னெடுக்கும் முனைப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்காவை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும் அதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தன்னை உலக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாக்குகிறார்.
அதற்குப் பொருளாதார வல்லரசான சீனா துணையாகும் போது ரஷ்யாவின் மீள்வருகை கவனிப்புக்குரியதாகிறது.
அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் உறவுகள் சீர்குலைந்துள்ளதால், ஆசியாவுடன், குறிப்பாகச் சீனாவுடன், வலுவான ஓர் உறவை விருத்தி செய்ய ரஷ்யா விரும்புகிறது. கடந்த வருடம், சீனா, ஜேர்மனியின் இடத்தில், ரஷ்யாவின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியானது.
இவ்வளவு காலமும் ரஷ்ய பொருளாதாரம் அதிகஞ் சார்ந்திருந்த எரிபொருள் ஏற்றுமதிகளிற் கணிசமான அளவு ஐரோப்பிய ஒன்றியத்துக்கானது. இதனாலேயே ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடை ரஷ்யாவைப் பெரிதும் பாதித்தது. ஆனால், ரஷ்ய-சீன எரிசக்தி உடன்படிக்கை இந் நெருக்கடிக்குத் தீர்வை வழங்கியிருக்கிறது. இது நீண்டகாலத்தில் ரஷ்யாவுக்குப் பயனுள்ளது. ரஷ்ய எரிசக்தி வளங்களைச் சீனா சார்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெயினதும் திரவமாக்கிய புதைபடிவ எரிபொருள் இறக்குமதியாளராக இருந்த அமெரிக்காவை, 2013இல் சீனா முந்தியது.
இவ்விரு நாடுகளுக்கிடையிலான எரிசக்தி உடன்படிக்கைக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. எரிபொருள் இறக்குமதிக்குச் சீனா பயன்படுத்தும் கடல்வழிப் பாதைகளைக் கட்டுப்படுத்தி அமெரிக்கா தன்னைச் சுற்றிவளைக்கும்; அபாயத்தைத் தவிர்க்கும் நோக்குடனும் ரஷ்யாவிலிருக்கும் எரிபொருள் வளங்களை பெறச் சீனா விரும்புகிறது.
இவ்வகையில் அமெரிக்காவுக்கெதிரான மூலோபாயக் கூட்டாளிகளாக ரஷ்யாவும் சீனாவும் இணைகின்றன. இதன் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் தமது நிதி ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கத்திய முதலீட்டுச் சந்தைகளில் தமது பங்கேற்பைக் கட்டுப்படுத்தும் தடைகள் காரணமாக ரஷ்ய வங்கிகள் சீனாவுக்குள் விரிவுபட முயல்கின்றன.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கி லண்டன் பங்குச் சந்தையிலிருந்து சிங்கப்பூருக்கு மாறிவிட்டது. இதற்கிடையில் அமெரிக்க டொலரில் வர்த்தகத்தை நிறுத்தும் திட்டத்தை ரஷ்யாவும் சீனாவும் மெதுமெதுவாக நடைமுறைப் படுத்துவதானது ஏற்கெனவே பலவீனப்பட்ட அமெரிக்க டொலரை மேலும் வலுவிழக்கச் செய்யும்.
இது உலகப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனாவும் ஒன்பதாவதாக ரஷ்யாவும் உள்ளன என்பது இதன் தாக்கத்தை விளங்கப் போதுமானது.
ரஷ்யா முன்னிற்கும் இச் செயற்பாடுகள் பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு மிகக் பெரிய சவாலை உருவாக்கியுள்ளன. அதற்கப்பால் ரஷ்யாவினுடைய வெளியுறவுக் கொள்கையும் அமெரிக்காவுக்குச் சவால் விடுகிறது.
ரஷ்யா, உலக அரங்கில் தனது மீள்வருகையை 2008இல் ஜோர்ஜிய யுத்தத்தின் போது வெளிப்படுத்தியது. தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்காவின் சீண்டல்களை அனுமதிக்கப் போவதில்லை எனச் சர்வதேச அரங்குக்குக் காட்டுமுகமாக ஜோர்ஜிய யுத்தத்தில் ரஷ்யப் படைகள் செயற்பட்டன.
அதைத் தொடர்ந்த கடந்த ஏழு ஆண்டுகளில் ரஷ்யா தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. ஈரானுக்கு அதன் ஆதரவு குறிப்பிடத்தக்கது.
உக்ரேனில் ரஷ்ய சார்பு ஜனாதிபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்க ஆதரவுடன் நடந்தேறியதும் அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1950களின் பிற்பகுதியில் உக்ரேனின் பகுதியாக்கிய கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததும் அமெரிக்க-ரஷ்ய மோதலை நேரடியாக்கியதோடு கெடுபிடிப்போரின் நினைவுகளை மீட்டன.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகள் மூலம் உக்ரேன் தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாட்டை மாற்ற முயன்றன. ஆனால், அது இன்றுவரை வெற்றியளிக்கவில்லை.
இப் பின்னணியில் அமெரிக்கா தனது படைகளை மெதுமெதுவாக ரஷ்யாவை அண்டிய பகுதியை நோக்கி நகர்த்துகிறது. அமெரிக்க ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் மிகப் பெரிய எதிரியாக ரஷ்யாவை அறிவிக்கிறார்கள்.
இச்சூழலில் பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து ஷங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை ரஷ்யா கடந்த வாரம் நடாத்தியதன் பூகோள முக்கியம் கவனிப்புக்குரியது. ஆசியாவில் தனது இருப்பை மீள உறுதிசெய்யும் நோக்குடன் ரஷ்யா இவ்வமைப்பை அணுகுகிறது.
ரஷ்யா அதன் உறுப்புநாடுகளான கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடனும் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ள பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகியவற்றுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணுகிறது. இதன் மூலம் தனது எல்லைகளைக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் பொருளாதார-அரசியல் ரீதியில் கூட்டிணைவுக்குத் தலைமையேற்க ரஷ்யா முன்னிற்கிறது. 'புதிய உலக ஒழுங்குக்கு' இது நல்லதல்ல. அதை அமெரிக்கா நன்கறியும்.
இப் பின்புலத்திற் கடந்த வாரம் நடந்த இவ்விரு மாநாடுகளும் விளாடிமிர் புட்டின் என்ற போர்வீரனை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளதுடன் பூகோள, மூலோபாய ரீதிகளில் ரஷ்யாவின் தவிர்க்கவியலாமையை வெளிப்படுத்தியுள்ளன.
கிரேக்கத்தை மையப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிகள் ஒரு புறமும் டொலர் வலுவிழப்புடன் இணைந்த அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி மறுபுறமும் நிகழ்கையில், ரஷ்யாவின் மீளெழுச்சி இன்னொரு திசைவழியைக் காட்டுகிறது.
ஒரு முரண்நகையாக, பிரான்சிஸ் புக்குயாமா அறிவித்த 'வரலாற்றின் முடிவை' இப்படியும் நோக்கலாம்: கீரைக் கடைக்கே எதிர்க்கடை தேவை எனும்போது அமெரிக்காவுக்கு இருக்கக் கூடாதா?
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago