Thipaan / 2015 ஜூலை 17 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை என்றும், அவரைப் பிரதமராக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிவிப்பு, இலங்கை அரசியலில் மற்றொரு சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷவின் மீள் பிரவேசத்தினால் இலங்கையின் அரசியல் களம் படுசூடாகவும் பரபரப்பாகவும் தான் இருந்து வந்தது.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருப்பது, அரசியல் களத்தைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக அதன் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த அறிவித்த நாள் தொடக்கம், நீடித்து வந்த தனது மௌனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவு கட்டியிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
மஹிந்த ராஜபக்ஷவின் வேட்புமனு விடயத்தில் அவர் காண்பித்த நீண்ட மௌனத்தின் பின்னால் ஓர் இயலாமை இருந்த போதிலும், அதை ஓர் இராஜதந்திரமாக எடுத்துக் காட்ட முயன்றிருக்கிறார்.
கடந்த வாரம் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு தனது மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்தமைக்கு முற்றிலும் இராஜதந்திரமே காரணம் என்று கூற முடியாது.
அவரை வேதனைப்படுத்திய உளக்காயங்களும் அதற்கு ஒரு காரணம்.
தான் ஊடகங்களாலும் பல்வேறு தரப்பினராலும் இரண்டு வாரங்களாக கடுமையாக விமர்சிக்கப்பட்டதை மிக வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
துரோகி, காட்டிக் கொடுத்தவன், வில்லன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் எவரும் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு தன்னையும் விமர்சிக்கத்தக்க உரிமையைக் கொண்ட ஜனநாயகத்தை தனது ஆட்சி ஏற்படுத்தியுள்ளதையும் பெருமையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எவ்வாறாயினும் விமர்சனங்கள் அவரைக் காயப்படுத்தியிருக்கின்றன என்பதை அவரது உரை தெளிவாகவே காண்பித்திருக்கிறது.
இந்த காயப்படுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரே வழி, தனது மனதில் உள்ளவற்றை வெளியே கொட்டி விடுவது தான் என்று அவர் தீர்மானித்திருக்கிறார்.
அதேவேளை, தான் கடைப்பிடித்து வந்த மௌனத்துக்கான காரணத்தை இத்தகைய சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தத் தவறினால் அந்த மௌனத்தினால் பயனோ, அதற்கான அர்த்தமோ இல்லாது போய்விடும் என்பதையும் மைத்திரிபால சிறிசேன உணர்ந்திருந்தார்.
அதனால் தான், வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், தனது மௌனத்தைக் கலைத்திருக்கிறார்.
இதன்மூலம் அவர், தனது செயல்களை நியாயப்படுத்த முற்பட்டிருக்கிறார்.
நல்லாட்சிக்கான தனது உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க முனைந்திருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷவைப் பலவீனப்படுத்த முயன்றிருக்கிறார்.
சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தாலும், தான் ஓர் அரசியல் சார்பற்றவராகவே செயற்படவுள்ளேன் என்பதை எடுத்துக் கூறியிருக்கிறார்.
இவற்றை வெளிப்படுத்துவதற்காகத் தான், மைத்திரிபால சிறிசேனவின் ஊடகச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலில் தாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை - அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார்- அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தாலும், பிரதமராக முடியாது ஆகிய மூன்று முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இது மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
மைத்திரிபால சிறிசேனவின் மீது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான கோபமும் எரிச்சலும் இருந்தாலும், அவரைப் பகைத்துக் கொள்ளாமல் அதிகாரத்துக்கு வருவதே மஹிந்த ராஜபக்ஷவின் இலக்காக இருந்தது.
மீண்டும் அரசியலுக்கு வருவதாயின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாகவே வருவேன் என்ற பிடிவாதத்தில் மஹிந்த ராஜபக்ஷ இருந்தமைக்கு, மைத்திரிபால சிறிசேனவினால் கிடைத்துள்ள பெயரைப் பயன்படுத்திக் கொள்வது தான் முக்கிய காரணம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக உள்நுழைவதற்கு பல்வேறு திருகுதாளங்களை மேற்கொண்டிருந்தாலும், மைத்திரிபால சிறிசேனவுடன் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை, இருவருக்கும் இடையில் நல்லுறவே உள்ளது என்று காட்டிக்கொள்ள முனைந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
அதற்கு உதாரணம், இந்தியாவின் ரெடிப் இணையத்தளத்துக்காக நிதின் கோகலே என்ற செய்தியாளருக்கு அளித்த பேட்டி.
இந்தப் பேட்டியில் அவர் தனக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நல்லுறவு இருப்பதாக கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
ஆனால், அப்படியான எந்த நல்லுறவும் அவர்களுக்கிடையில் இருந்திருக்கவில்லை என்பதை, வெளிச்சமாக்கியிருக்கிறது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை.
மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகைக்கு கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை வெளியிட்டு வந்த மைத்திரிபால சிறிசேனவை, மஹிந்த ராஜபக்ஷ எந்த வகையில் நட்புக்குரிய ஒருவராக நோக்கியிருக்க முடியும்?
ஆனாலும், அவர் ஊடகங்கள் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவுடன் நல்லுறவு இருப்பதாக காட்டிக் கொண்டதன் மூலம், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்களின் வாக்குகளைத் தனக்குச் சாதகமாக திருப்பிப் கொள்ள முனைந்தார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட, தனக்கு இடமளிக்கப்படும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான நம்பிக்கை இருந்திருக்கவில்லை.
கடைசி நேரத்தில் கூட ஏதாவது நடந்து விடலாம் என்ற சந்தேகம் அவரை அரித்துக் கொண்டேயிருந்தது. வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பிலியந்தலயில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருந்த போது, தினேஸ் குணவர்த்தனவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
உடனடியாக, மஹிந்த ராஜபக்ஷவிடம் அலைபேசியை காமினி லொக்குகே கொடுக்க, அவர் அதனை வாங்கி மேடையிலேயே உரையாடுகிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதான தகவல் அது. பதற்றத்துடன் உடனடியாகவே மேடையில் இருந்து இறங்கிச் சென்று விடுகிறார் மஹிந்த.
கடைசி நேரத்தில் ஏதாவது நாடகம் நடத்தப்படுகிறதா என்ற ஆழ்மனச் சந்தேகத்தின் விளைவு தான், மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறு நடந்து கொள்ளக் காரணமாகியது.
அதுபோலவே, மஹிந்த ராஜபக்ஷவை போட்டியிட விடாமல் தடுக்க மைத்திரிபால சிறிசேன எதையாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம், ஊடகங்களிடம், ஏன், ராஜித சேனாரத்ன போன்ற அவருக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் கூட இருந்தது.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதற்காக மைத்திரிபால சிறிசேன, குறுக்குவழி முயற்சிகள் எதையும் மேற்கொண்டிருக்கவில்லை.
அவ்வாறு செய்தால், அது கட்சியை உடைத்து விடும் என்ற கவலையும், அதனால் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையும், தனது பெயர் கெட்டுவிடும் என்ற கவலையும் மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை.
அவ்வாறு வேட்புமனுக் கொடுக்காது போனாலும் கூட, தனித்துப் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வந்து விடுவார் என்பது உறுதி.
எனவே, பொறுத்திருந்து - மஹிந்தவை வைத்தே, தனது ஆதரவாளர்களையும் வெற்றி பெற வைத்து விடுவதே மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமாக இருந்திருக்கிறது.
தனது முதற்கட்டத் திட்டம் நிறைவேறியதும், மௌனத்தைக் கலைத்தார் மைத்திரிபால சிறிசேன.
இப்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானவர்களின் வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது,
அவர் தனது கட்சியின் நலன் பாதிக்கப்படும் என்று தெரிந்து கொண்டே, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தநிலையில், இதுவரையில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடனேயே இயங்குவதாக காட்டிக் கொண்டு வந்த மஹிந்த ஆதரவு அணியினருக்கு, குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அவர்களின் அடுத்த அரசியல் நகர்வு கேள்விக் குறியாகியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமரறாக நியமிக்கமாட்டேன் என்ற பகிரங்க வாக்குறுதியைக் கொடுத்திருக்கும் மைத்திரிபால சிறிசேன விடயத்தில், அவர்கள் அலட்சியமாக இருக்க முடியாது.
ஏனென்றால், வெறும் 47 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து, இன்று வரை அவரைப் பதவியில் வைத்திருப்பவர் அவர்.
அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.
எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெற்றாலும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக வருவது என்பது எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை.
மஹிந்தவை விடவும் மூத்த தலைவர்களை பிரதமர் பதவிக்கு நியமிக்கலாம் என்று மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அத்தகைய கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தால் மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் பிளவு வரும்.
அதேவேளை, ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசை அமைக்கலாம் என்ற தெரிவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதை மறந்து விடக் கூடாது. இத்தகைய நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் கடிவாளம் எப்போதும், மஹிந்த ராஜபக்ஷவை பயமுறுத்திக் கொண்டி
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago