Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூலை 23 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இது தேர்தல் காலமாக இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் எதற்காக போட்டியிடுகின்றன என்பதை அக் கட்சிகளும் கூட்டணிகளும் இன்னமும் நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. அதனைக் கூற அவற்றுக்கு சந்தர்ப்பம் வரவும் இல்லை. ஏனெனில் அவை வேறு விடயங்களை முக்கியமாக கருதிச் செயற்படுகின்றன.
இப்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள் வருகையே அரசியல் களத்தில் பிரதான தலையங்கமாக பேசப்பட்டு வருகிறது. மஹிந்தவுக்கு போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பம் வழங்கியமை சரியா? மஹிந்தவை பிரதமராக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா? ஜனாதிபதியால் அதனைத் தடுக்க முடியுமா? இதுபோன்ற பிரச்சினைகளே இப்போது ஆராயப்பட்டு வருகின்றன.
ஒரு வகையில் அதிலும் நியாயம் இருக்கிறது என்றும் வாதிடலாம். ஏனெனில், மஹிந்த மீண்டும் பதவிக்கு வருவதாக இருந்தால் அது நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். தற்போது நாட்டில் நிலவும் அமைதி பறந்துவிடக் கூடும். மீண்டும் ஒருவித பதற்ற நிலைமை அவருக்கு எதிரானவர்கள் மத்தியிலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் உருவாகக் கூடும்.
மஹிந்தவுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து அது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவியில் அமர்த்தியவர்களாலும் பல ஊடகங்களினாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மஹிந்தவின் ஆட்சியை கவிழ்ப்பதில் அவருக்கு ஆதரவளித்தவர்களை அவர் காட்டிக் கொடுத்ததாகவும்; குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஆனால், அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்த ஜனாதிபதி, கடந்த வாரம் வாயைத் திறந்தார். தமது எதிர்ப்பை புறக்கணித்தே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பு வழங்கியது என்றும் மஹிந்த தொடர்பிலான தமது அபிப்பிராயத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் ஜனாதிபதித் தேர்தலில் போலவே இம்முறையும் மஹிந்த தோல்வியடைவார் என்றும் ஐ.ம.சு.கூ வெற்றி பெற்றாலும் தாம் அவரை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் சோர்வடைந்து இருந்து, பின்னர் அவருக்கு வேட்பு மனு வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் மேற்படி உரையினால் அதிர்ந்து போனார்கள். மீண்டும் அவர்களது முகங்களில் ஒருவித விரக்தியைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதியின் உரைக்கு தாம் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறும் ஐ.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் கூட்டத்தின் போது பதிலளிப்பதாக ஊடகங்களிடம் மஹிந்த கூறியிருந்தார். ஆனால், அன்று அநுராதபுர கூட்டத்தின் போது மஹிந்த எதுவும் புதிதாக கூறவில்லை. அவரது பழைய பல்லவியையே கேட்கக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த தம்மைப் பார்த்து திருடன் என்று ஆட்சியாளர்கள் கூறுவதாக அவர் அங்கு கூறியிருந்தார்.
தம்மை பிரதமராக்கப் போவதில்லை என ஜனாதிபதி கூறியதையிட்டு அவர் எதனையும் கூறவில்லை. முன்னாள் பிரதம் நீதியரசர் சரத் என். சிலவாவே அக் கூட்டத்தின் போது அதற்கு பதிலளித்து இருந்தார். அரசியலமைப்பின் படி பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி அல்ல என சில்வா கூறினார்.
இது மக்களை குழப்பும் தர்க்கமேயல்லாமல் வேறொன்றும் இல்ல. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என ஜனாதிபதியினால் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார் என்றே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜனாதிபதிதான் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர். பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை வென்றவர் என ஜனாதிபதியினால் கருதப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறும் போது தவறான முடிவாக இருந்தாலும் ஜனாதியின் கருத்தே இங்கு சட்டமாகிறது என்பது தெளிவாகிறது.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஜனாhதிபதி நியமித்தார். சில்வாவின் வாதத்தை நிராகரிக்க அந்த முன்னுதாரணமே போதுமானதாகும்.
அவ்வாறு ரணிலை நியமிப்பதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அப்போது சில்வா அது பிழையெனக் கூறவில்லை. பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி அல்ல என்றோ அல்லது பெரும்பான்மை பலம் இல்லாத கட்சியொன்றின் தலைவரை பிரதமராக நியமிக்க முடியாது என்றோ அவர் கூறவில்லை. மாறாக அவர் அப்போது மைத்திரிபாலவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
சரத் என். சில்வா, சர்ச்சைக்குரிய விதத்தில் நடந்துகொள்வதில் வல்லவர். அதேவேளை தமது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் பிரசித்தி வாய்ந்தவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தவர்களில் அவரும் ஒருவர். 2005ஆம் ஆண்டு ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கின் போது தாம் மஹிந்தவை காப்பாற்றியதனாலேயே மஹிந்த - நாட்டுக்கு இந்தத் தீங்கை விளைவிக்க முடிந்தது என்றும் அந்தத் தீர்ப்பை வழங்கியமைக்கு நாட்டு மக்களிடம் தாம் மன்னிப்புக் கோருவதாகவும் அப்போது சில்வா கூறினார்.
ஒரு நீதிபதி தம்முன் இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்க வேண்டும். அது அவரது தனிப்பட்ட விருப்ப வெறுப்புக்கு எதிராக இருந்தாலும் ஒரு நேர்மையான நீதிபதிக்கு வேறு வழியில்லை. அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. தம் முன் இருக்கும் சாட்சியங்களின் அடிப்படையிலன்றி தமது விருப்பத்துக்கு தீர்ப்பு வழங்கினால் மட்டுமே அவர் அதைப் பற்றி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறாயின் சில்வா என்ன செய்திருக்கிறார்?
மஹிந்தவை சிறையிலடைத்து, அவரை ஜனாதிபதியாவதை தடுத்து, நாட்டுக்கு ஏற்பட்ட அநீதியைத் தடுக்க முடியவில்லை என்பதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட சில்வா- இப்போது அதே மஹிந்தவை ஆட்சிபீடமேற்ற முயற்சிக்கிறார்.
சட்டமா அதிபராகவிருந்த சில்வாவை சந்திரிகாவே பிரதம நீதியரசராக நியமித்தார். ஆனால், சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் அவருக்கும் சந்திரிகாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருந்தது. அது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தை ஒரு வருடத்தால் குறைத்துவிட்டது.
சந்திரிகா, 1999ஆம் ஆண்டு இரண்டாது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் 2000ஆம் ஆண்டே இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பிக்கப்படவிருந்தது. அதன் படி 2006ஆம் ஆண்டே அவரது இரண்டாவது பதவிக் காலம் முடிவடையவிருந்தது.
அப்போது மஹிந்தவின் ஆதரவாளர்களாகவிருந்த ஜாதிக ஹெல உறுமய இந்த விடயத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. அப்போது சில்வாவும் மஹிந்தவை ஆதரிக்கும் நிலையிலேயே இருந்தார். எனவே, 1999ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்திரிகா, அதேயாண்டு சத்தியப்ப பிரமாணம் செய்தார் என்ற அடிப்படையில் அவரது பதவிக் காலம் 2005ஆம் ஆண்டு முடிவடைவதாக தீர்ப்பு வழங்கினார். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே ஜனாதிபதியாவதற்கு மஹிந்தவுக்கு சரத் என் சில்வா சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
மஹிந்தவையும் எதிர்த்து மஹிந்தவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அது முடியுமா என்று உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்க, அவரால் முடியாது என்றும் கடந்த வருடம் சில்வா வாதாடினார். இப்போது பிரதமரை ஜனாதிபதி நியமிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என தாம் நினைக்கும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு சட்டப்படி உரிமை இருக்கிறது. ஆனால், நடைமுறையில் அவர் அவ்வாறு பிரதமர் ஒருவரை நியமித்ததன் பின்னர் அந்தப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு அவர் நீக்கப்படலாம். அப்போது ஜனாதிபதியின் கருத்து பிழையென நிரூபிக்கப்பட்டு விடுகிறது. எனவே, உண்மையிலேயே பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படி ஒருவரை பிரதமராக நியமிப்பது ஜனாதிபதியின் கௌரவத்துக்கு நல்லது.
இந்தியாவில் ஜனாதிபதியின் இந்த அதிகாரம் பரீட்சிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் செயற்பட முடியும். அங்கு தேர்தலின் பின்னரோ அல்லது பிரதமர் ஒருவர் பதவியில் இருந்து விலகியதன் பின்னரோ புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அந்த பிரதமர் விடயத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நடைபெறும். அதில் வெற்றிபெற்றால் மட்டுமே பிரதமர் தமது பணிகளை தொடரலாம்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூ வெற்றி பெற்றால் மஹிந்தவை பிரதமராக நியமிக்காமல் இருக்க ஜனாதிபதிக்கு முடியுமா என்பது சந்தேகத்துக்குரிய விடயமே. ஏனெனில் மஹிந்தவுக்கு வேட்பு மனு வாய்ப்பை வழங்கும் விடயத்தில் ஜனாதிபதி செய்வதறியாத நிலைக்குத் தள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்குதல் ஏற்பட்டதென்றால் ஐ.ம.சு.கூ வெற்றிபெற்றால் மஹிந்தவுக்கு ஆதரவான நெருக்குதல் அதுபோல் பல மடங்காக அதிகரிக்கும். அதனை புறக்கணித்து ஜனாதிபதி, மற்றொருவரை பிரதமராக நியமித்தால் ஐ.ம.சு.கூ அந்தப் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க முடியும்.
ஐ.ம.சு.கூ.வின் கீழ் மைத்திரிபாலவின் ஆதரவாளர்களும் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதியின் கடந்த வார உரையை அடுத்து அதைப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடவிருந்த போது, நீதிமன்ற இடைக்காலத் தடை மூலமாக அதனைத் தடுத்த கொட்டிகாவத்தை-முல்லேரியாவ பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன சோலங்கஆரச்சி, அதற்கு உதாரணமாகும். மஹிந்தவின் அநுராதபுரக் கூட்டத்துக்கு ஐ.ம.சு.கூவின் கீழ் அம்மாவட்டத்தில் போட்டியிடும் துமிந்த திஸாநாயக்க வரவில்லை. அவரும் மைத்திரி ஆதரவாளராவார்.
தேர்தலில் ஐ.ம.சு.கூ பெரும்பான்மை பலத்தைப் பெற்றாலும் அதிலுள்ள மைத்திரி அதரவாளர்களின் எண்ணிக்கையும் ஐ.தே.க.வின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையும் மஹிந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் மஹிந்தவை புறக்கணிக்க ஜனாதிபதியால் முடியும்.
ஐ.ம.சு.கூ பெரும்பான்மை ஆசனங்களை வென்றால் மட்டுமே இந்தக் கேள்விகள் எழும். ஆனால், அவ்வாறு ஐ.ம.சு.கூவின் மஹிந்தவின் குழு பெரும்பான்மை பலத்தைப் பெறுமா? கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த சுமார் 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சுமார் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். சில அரசியல்வாதிகள் மாறினாலும் அந்த வாக்காளர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதாக இன்னமும் தெரியவில்லை.
ஆனால், இது பொதுத் தேர்தல் என்பதால் சில பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரபல்யம் காரணமாக வாக்காளர்கள் சிலர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக இந்த விடயம் மஹிந்தவுக்கு ஓரளவு சிறுபான்மை வாக்குகளை பெற்றுக் கொடுக்கவும் கூடும்.
உதாரணதாக மலையகத்திலும் ஹிஸ்புல்லாஹ்வின் காரணமாக காத்தான்குடியிலும் அதாவுல்லாவின் தொகுதியான அக்கரைப்பற்றிலும் ஐ.ம.சு.கூ., ஜனாதிபதித் தேர்தலில் பெறாத சில வாக்குகளை பெறும். தனிப்பட்ட வேட்பாளர்களின் ஈர்ப்பின் காரணமாக சில மாவட்டங்களில்; ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க.வினால் பெறாத வாக்குகளை பெறக்கூடும்.
அதேவேளை, வேட்பாளர் தெரிவின் போது ஐ.ம.சு.கூ சிறுபான்மையினரை புறக்கணித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக ஏனைய பிரதான கட்சிகள் குருநாகல் மாவட்டத்தில் சிறுபான்மை வேட்பாளர்களை போட்டியில் நிறுத்தியிருக்கின்ற போதிலும், ஐ.ம.சு.கூ பட்டியலில் எவரும் இல்லை. முழு முஸ்லிம் சமூகமுமே மஹிந்தவை எதிர்க்கும் போது அவரை ஆதரித்த அப்துல் சத்தாரின் மாவட்டமும் குருநாகல் மாவட்டமே என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.
மேலும், சில மாவட்டங்களிலும் ஏனைய பிரதான கட்சிகள் சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் போது ஐ.ம.சு.கூ அவ்வாறு செய்யவில்லை. புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியையே மஹிந்த தமது துருப்புச் சீட்டாக பாவிக்கப் போகிறார். ஆனால், அந்தப் போரின் போது உளவுத்துறையில் அரச படைகளுக்கு பேருதவியாகவிருந்த கருணா எனப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஐ.ம.சு.கூ.வினால் புற்கணிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் விடயத்தில் தாம் சில பிழைகளை விட்டதாகவும் தாம் அதனை திருத்திக் கொள்வதாகவும் மஹிந்த அண்மையில் கூறியிருந்தார். ஆனால், இம்முறை ஐ.ம.சு.கூ வேட்பாளர் பட்டியல்களைப் பார்க்கும் போது எவ்வகையிலும் சிறுபான்மையினரின் வாக்குகள் தமக்கு கிடைக்காததால் அந்த வாக்குகளை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்ற எண்ணத்தில் அந்தப் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகிறது!
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago