2025 மே 19, திங்கட்கிழமை

"இந்தியா மீதான அழுத்தம் அதிகரிக்கிறது": டெசோ மாநாட்டின் பின்னணி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் பரபரப்பிற்கு இடையே டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. "ஈழம்" என்ற வார்த்தையை நீக்கி விட்டு மாநாடு நடத்தலாம் என்று முதலில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்த அதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு சென்னை மாநகர காவல்துறை மாநாட்டிற்கு தடை விதித்தது. குறிப்பாக மாநாடு நடைபெற்ற இடத்தில் இவ்வளவு கூட்டத்தை தாங்க முடியாது. ஜன நெருக்கடி வரும், அருகிலேயே அரசு மருத்துமனை இருக்கிறது என்பதெல்லாம் மாநாட்டை அந்த இடத்தில் நடத்த தடை செய்ததற்கு பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட காரணங்கள். மாநாடு நடைபெறுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது.

ஆனாலும் அதற்கு முன்பே திட்டமிட்டபடி 12ஆம் திகதி காலையில் சென்னை தி.நகரில் உள்ள "அக்கார்டு" நட்சத்திர ஹோட்டலில் டெசோ மாநாட்டின் ஆய்வரங்கம் நடைபெற்றது. அங்குதான் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றி வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகள், டெசோ மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் தீவிர ஆலோசனையில் இறங்கினர். அந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட 30இற்கும் மேற்பட்டவர்களில் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தவிர வேறு யாரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர் கூட இலங்கைத் தமிழர்களுக்காக நீதி கேட்கும் நவசமசமாஜ கட்சியைச் சேர்ந்தவர் என்பது அறிந்ததே. இவர்கள் தவிர உலகத் தமிழர்கள் என்ற வகையில் இங்கிலாந்திலிருந்து குகதாசன் குகசேனன், என்.சிவானந்த ஜோதி ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து பங்கேற்பதாக டெசோ மாநாட்டுப் பொறுப்பாளர்கள் செய்த விளம்பரத்தில் சுட்டிக்காட்டப்பட்ட 10 பிரதிநிதிகளில் ஒன்பது பேர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட ஏற்கனவே அவர்கள் தீர்மானித்தபடி மாநாட்டிற்கு வரவில்லை. அதே நேரத்தில் அகில இந்திய அளவிலிருந்து காஷ்மீர், மஹாராஷ்டிரா, பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். அவர்களில் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிக், சரத்பவாரின் கட்சியைச் சேர்ந்த கோவிந்தராவ் அடிக், முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காலையில் நடைபெற்ற ஆய்வரங்கத்தில் "டெசோ மாநாட்டை தமிழகத்தில் மட்டும் நடத்தி பிரயோஜனம் இல்லை. வட மாநிலங்களிலும், டெல்லியிலும் நடத்த வேண்டும். அதற்கு நான் உதவி செய்திடத் தயார்" என்று ஆணித்தரமாகப் பேசியவர் என்பது முக்கிய அம்சமாகும். அந்த ஆய்வரங்கம் நடைபெற்ற ஹோட்டல் முன்பு தி.மு.க. தொண்டர்கள் நின்று கொண்டு, "உலகத்தமிழர்களின் ஒரே பெரும் காவலர் கலைஞர்தான்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். டெசோ அமைப்பாளர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கப் பேரவை போன்றவை இருந்தாலும் அது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அதிரடித் திருவிழா போன்றே காட்சியளித்தது.

ஆய்வரங்கத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான தீர்மானம் - அவை பெரும்பாலும் மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானங்களும், ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்களும் அடக்கம். 14 தீர்மானங்களில் முக்கியமானது பத்தாவது தீர்மானம். அத்தீர்மானத்தின் வாசகங்கள், "இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்" என்பதுதான். இது டெசோ சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட "தீம் பேப்பர்"இல் (ஆய்வரங்க ஆலோசனை கருத்துருக்கள்) சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறே அமைந்திருந்தது. மொத்தத்தில் டெசோ மாநாட்டில் கூட்டத்தினரின் கைதட்டல் மூலம் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களும் இலங்கையில் போருக்குப் பிறகு கொடுக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைக்குழுவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானம், டெசோவிற்கான "தீம் பேப்பர்" போன்றவற்றை அடிப்படையாக வைத்தே அமைந்திருந்தது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு மதிய வேளையுடன் ஆய்வரங்கக் கூட்டம் முடிந்தது.

மாலையில் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கும் பாடல்கள் இடம்பெற்றன. அதில் "இருட்டறையில் உள்ளதடா ஈழம், அங்கு எலும்புக்கூடாய் தமிழன் இருக்கின்றானே" என்ற முதல் பாடலை தி.மு.க. தலைவர் கருணாநிதியே எழுதியிருந்தார். அப்பாடல் விழா மேடையில் முதலிலும், பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி சற்று நேரம் கழித்து வந்து மேடையில் அமர்ந்த போதும் மீண்டும் ஒருமுறை பாடப்பட்டது. மற்றபடி மேடையில் பேசியவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பற்றியும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனித உரிமைகள் பற்றியுமே அதிக அளவில் கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். இதில் பேசிய தி.மு.க. பொருளாளரும், டெசோ மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின், "சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் "ஈழக் காந்தி" என்று அழைக்கப்படும் தந்தை செல்வா" என்று நினைவு கூர்ந்தார். அது தவிர, ஈழ வரலாறு, தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக கொண்டு வரப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் எப்படி தோல்வியில் முடிந்தன, ஈழப்போரின் கட்டங்கள் எத்தனை அதனால் ஏற்பட்ட இன்னல்கள் போன்ற விவரங்களைப் பட்டியலிட்டுப் பேசினார். தந்தை செல்வா 1952இல் காங்கேசன் துறை தொகுதியில் தேர்தலில் நின்றபோது ஒரு தமிழரான நடேசபிள்ளை நின்று தோற்கடித்தார் என்று கூறிவிட்டு, "தமிழனைத் தமிழனே மோதி அழிப்பதுதானே தொடர்ந்து வரும் சரித்திரம்" என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். உலக நாடுகளும், இந்திய பேரரசும் ஈழத்தமிழர்களுக்கு உதவிட முன் வர வேண்டும் என்று இறுதியில் கோரிக்கை வைத்து தன் பேச்சை முடித்துக் கொண்டார் மு.க. ஸ்டாலின்.

அடுத்துப் பேசிய டெசோ உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், "தமிழினத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும்" என்ற கோட்பாட்டை கையிலெடுத்து செயல்பட்டனர் இலங்கை அரசாங்கத்தினர் என்று சுட்டிக்காட்டினார். நைஜீரியாவிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் மோமோ, "இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மிகவும் முக்கியமானது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அணுசக்தி (ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி) பிரச்சினையை விட மனித உரிமைப் பிரச்சினை மிக முக்கியமானது" என்று சற்று வித்தியாசமான வாதத்தை முன் வைத்து விட்டு, "தமிழர்களின் உரிமையை இலங்கையில் பாதுகாப்பது டெசோவின் கடமை மட்டுமல்ல. இந்தியாவின் கடமை மட்டும் அல்ல. அது உலகத்தின் கடமை" என்று ஆவேசமாகப் பேசினார். திராவிட இயக்கப் பேரவையின் சார்பில் பேசிய சுப. வீரபாண்டியன், "ஈழத்தமிழர்களுக்கு உரிமை பெறுவது கடினம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்துவதே எவ்வளவு கஷ்டம் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்திருக்கிறது" என்று கூறி, சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு ஏற்பட்ட தடங்கல்களைச் சுட்டிக்காட்டியவர், "இலங்கையில் அமைதிப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்ற பிறகுதான் "அந்த தம்பிகள்" ஆயுதப் போராட்டத்தை 1970 வாக்கில் கையிலெடுத்தார்கள்" என்று சூடாகப் பேசினார்.

மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், "இலங்கைத் தமிழர் பிரச்சினை ஏதோ தமிழகப் பிரச்சினையல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினை. ஆகவே டெசோவின் தீர்மானங்களை நான் மனதார ஆதரிக்கிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க உதவாமல் பாரபட்சமாக இருப்பது இந்தியாவின் ஒற்றுமைக்கே பாதகமாக முடியும்" என்றும் எச்சரித்தார். மொரா்க்கோ நாட்டிலிருந்து வந்திருந்த தேசிய உண்மை(ம) நீதி ஆணையத் தலைவர் அஃபெகோ முபாரக் பிரான்சு மொழியிலேயே மேடையில் பேசினார். அதை மொழிபெயர்த்த தி.மு.க. தலைமைக் கழக அமைப்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "டெசோ சக்தி வாய்ந்த அமைப்பு. தேசிய, பிராந்திய தலைவர்கள், உலகத் தலைவர்களை ஈர்க்க தி.மு.க. தலைவர் கலைஞரால் மட்டுமே முடியும். ஈழத்தமிழர்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்" என்று முபாரக் பேச்சின் தமிழாக்கத்தைப் படித்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர்கள் படும் துயரத்தைப் பார்த்து வாள் ஏந்த வேண்டிய நேரம் வந்து விட்டது. சீற வேண்டிய நேரம் வந்து விட்டது. கொதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தனி ஈழம், பொது வாக்கெடுப்பு போன்றவற்றை கலைஞர் போல் சொல்லும் துணிச்சல் இன்று யாருக்கு இருக்கிறது. குறிப்பாக ஒரு கோடி உறுப்பினர்களுக்கு மேல் வைத்திருக்கும் தி.மு.க. இந்தப் பிரச்சினையை எழுப்புவதால்தான் ஈழத்தமிழருக்கு விடியல் கிடைக்கும்" என்ற ரீதியில் ரொம்பவும் ஆவேசமாக உரை நிகழ்த்தினார். கைதட்டலும் பெற்றார்.

விக்ரமபாகு கருணாரத்தின பேசும் போது, "தமிழர்களின் கலாசாரம் அழிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே இலங்கையில் சுதந்திரமாக அரசியல் பேச முடியவில்லை. டெசோவின் தீர்மானங்கள் இலங்கையில் எல்.எல்.ஆர்.சி. அறிக்கைக்கு சமமாக இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. அதற்கு இன்னொரு காரணம் இலங்கை அரசுக்கு உதவி செய்வது இந்தியாதான். ஏன் தமிழர்களுக்கு எதிரான இந்தியாவின் போரை ஜனாதிபதி ராஜபக்ஷதானே நடத்தினார்" என்ற ரீதியில் காரசாரமாகப் பேசினார். அதற்கு அரங்கத்தில் பெரும் வரவேற்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது. "இங்கு டெசோ மாநாடு நடத்துவது போல் எல்லா நாடுகளிலும் நடத்துங்கள். இலங்கையில் நிலைமை மாறும். இந்த டெசோ மாநாட்டிற்கே இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்" என்று வித்தியாசமான உரை நிகழ்த்தினார்.

திராவிடக் கழதத் தலைவர் வீரமணி, "டெசோ மாநாடு ஐந்தாம் ஈழப்போர். ஆனால் இந்த போரில் ஆயுதம் இல்லை. சுயமரியாதை இயக்கத்தை நடத்தும் எங்களுக்கு பெரியார் போன்ற தலைவர்கள் தந்த ஆயுதங்கள் இருக்கின்றன. கலைஞரின் பேனா இருக்கிறது. ஈழத்தமிழர்களின் பக்கம் உலகத்தின் பார்வையை ஈர்க்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கத் தேவையான அழுத்தத்தை இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்" என்று பேசியவர், 1939ஆம் வருடத்திலேயே இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று எடுத்துக்காட்டினார். அதற்கு திராவிடக் கட்சிகளின் தொடக்கத்திற்கு வழிகோலிய தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் 1939ஆம் வருடத் தீர்மானத்தை மேடையில் வாசித்தார். தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், "கலைஞரின் குரல்தான் டெசோவின் குரல். இந்தக் குரலை மத்திய அரசு (இந்திய அரசு) புறக்கணிக்க முடியாது. ஈழத்தமிழர் பிரச்சினை இன்று கலைஞர் போல் எழுந்து நிற்க முடியாமல் இருக்கிறது. கைதூக்கி விட ஆள் இல்லாமல் தவிக்கிறது. அதை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுப்பதுதான் டெசோ மாநாட்டின் முக்கியப் பணி" என்ற ரீதியில் பேசினார்.

இறுதியில் தி.மு.க. தலைவரும், டெசோ மாநாட்டுத் தலைவருமான கருணாநிதி பேசினார். இலங்கை தமிழர்களுக்காக 1956 முதல் தி.மு.க. போராடி வந்த விதங்களை பட்டியலிட்ட அவர், "மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அதனால்தான் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறேன். இதைவிட வேறு அழுத்தம் என்ன வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை" என்றார். அதே நேரத்தில் தமிழ் ஈழம் பற்றி ஏன் தீர்மானம் இல்லை என்பதை விளக்கிய தி.மு.க. தலைவர், "முதலில் அங்கே (இலங்கையில்) காயம்பட்டுக் கிடப்பவர்களை ரணத்தை ஆற்ற, காயத்தை ஆற்ற, அவனை உயிர் பிழைக்க வைக்க முதல் உதவி செய்வதைப் போல "டெசோ" மாநாட்டின் மூலமாக தேவையான முதல் உதவிகளை எல்லாம் இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். செய்யத் தொடங்கியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வது போல் என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டிருக்கின்ற  நிறைவேறாத கனவு இருக்கிறதே (தனி ஈழம்), அந்தக் கனவு நிறைவேறும் வகையில் உங்களையெல்லாம் அரவணைத்துக் கொண்டு போராடுவேன். நிச்சயமாகப் போராடுவேன்" என்று உருக்கமாகப் பேசினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் "டெசோ" மாநாடு ஒரு முக்கிய திருப்பத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு தமிழர் வாழ்வுரிமைக்காகவே நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி போன்றோர் கூறியிருப்பது மாநாட்டிற்கு மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸும் வேறு வழியின்றி கை கொடுக்க விரும்புகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "ஈழம்" என்ற சொல்லை முதலில் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டு, பிறகு உடனே அதைப் பயன்படுத்தத் தடையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே அறிவித்ததும் தமிழகத்தில் எழுந்துள்ள அழுத்தம் காரணமாகவேதான். இந்தியாவின் மீதான அழுத்தம் இனி தமிழகத்திலிருந்து பலமாகவே இருக்கும் என்பதற்கு டெசோ மாநாடு ஒரு முன்னோடியாக இருக்கிறது. இனி இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி அனைத்துக் கட்சிகளுமே இப்படியொரு போட்டி அமைப்புகளை உருவாக்கி கூட்டம் போடலாம். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க.வின் செயற்குழுக்கூட்டம் வருகின்ற 27ஆம் திகதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டங்கள் வருகின்ற 20ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை தமிழகம் முழுவதும் தி.மு.க. நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் இந்த அவசரச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது.

அனேகமாக இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையை மனதில் வைத்து அ.தி.மு.க.வும் ஒரு மாநாட்டையோ, கருத்தரங்கத்தையோ நடத்த முன்வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X