2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அமைச்சு மாற்றங்கள் தீர்வா?

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 08 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

நாட்டில் மின் துண்டிப்பு நேரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள். எரிபொருள், சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு, பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாத நிலை, பொருட்களின் விலை கட்டுப்பாடற்று அதிகரித்தே செல்கிறது. இவ்வாறிருக்கையில், நாடு எங்கே செல்கிறது என்று மாத்திரம் கவலை கொள்வதால் பயன் ஏதும் உண்டா?

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான ஆயுதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அது நாட்டின்  அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக சொல்லப்பட்டது. சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டனர். ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, 13 வருடங்கள் கடந்து விட்டன. நடந்திருக்கும் பயன் என்ன? “கறுப்புச் சந்தையில் டொலர் வாங்கி, கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கி, கறுப்பாகவே யுத்தத்தை முடித்தோம்” என்று நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், இப்போது நாட்டில் பிரச்சினைகளுக்கும் குறைவில்லாதுதான் இருக்கிறது.

2019 டிசெம்பர் மாதத்தில் ஆரம்பித்த கொவிட்-19 பெருந்தொற்றைத் தான் எல்லோரும் காரணமாகச் சொல்கிறார்கள். இது ஒன்றே இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்தால், அமைச்சர்கள் மாற்றப்படத் தேவையில்லை. நாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஜனாதிபதி 2019 நவம்பர் மாதத்தில் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் 2020இல் நாட்டின் ஆட்சியையும் அக்கட்சி கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர் வந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் முடிவில்லாதவையாக மாறிவிட்டன.

இப்போது உருவாகியிருக்கும் பொருள்களின் தட்டுப்பாடோ, மின்துண்டிப்போ வடக்கு கிழக்கு மக்களுக்கு அனுபவமில்லாத விடயங்களல்ல. ஆனால், நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இப்போது இந்தப் பெருஞ்சிக்கலை அனுபவிக்கின்றன.

நாட்டின் வரலாற்றில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் வரலாறு, பொன் எழுத்துகளால் பொறிக்கப்படுமா இல்லையா என்பது, ஆட்சி நிறைவடையும் போதுதான் தெரியவரும். ஆனால், அதனை எவ்வாறு அவர்கள் சரிசெய்யப்போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். 

பெரும்பான்மையின சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவானதாக பெருமைப்பட்டு, அநுராதபுர மகாபோதியில் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி, இப்போது அப்பெரும்பான்மை மக்களாலேயே நிராகரிக்கப்படுகின்ற, வெறுக்கப்படுகின்ற நிலைமையை எட்டிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அரசாங்கம் என்பது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதே.  இவைகள் யாவும் உறுதியான அத்திவாரத்துடன் இருக்கின்ற ஆட்சியே சிறப்பானது என்று சொல்லப்படுகிறது. இலங்கையின் அமைச்சரவை காண்கின்ற ஆட்டத்தினைப் பார்க்கின்றபோது, இதில் சந்தேகமே ஏற்படுகிறது.

கூட்டுப் பொறுப்பென்பது  அமைச்சரவைக்கான அடையாளமாகும். ஆனால, இப்போதைய அரசாங்கத்தில் கூட்டுப் பொறுப்பென்பது இம்மியளவும் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சர்களே, எதிர்க்கட்சியினரைவிட மோசமாக விமர்சிக்கின்றமையாகும். இந்த விமர்சனங்களின் காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது என்று கொண்டாலும் அது அமைச்சர்களுக்கு மாத்திரமோ, அரசாங்கத்துக்கு மாத்திரமோ பாதிப்பைக் கொண்டுவருவதில்லை. முழு நாட்டு மக்களையுமே பாதிப்படையச் செய்கிறது.

நாடு மறுசீரமைக்க முடியாத, மீளக் கட்டியெழுப்பமுடியாத அதள பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், எதையுமே செய்துவிட முடியாது என்பது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசிய கட்சியும் கொடுக்கும் குடைச்சலை கவனிக்கவேண்டியிருக்கிறது.  அந்தக் குடைச்சல்கள் சாதாரணமாக சமாளிக்கப்படுவதாகக் காண்பிக்கப்பட்டாலும் அது உண்மையல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆட்சியமைத்த இரண்டு வருட காலத்துக்குள் அமைச்சரவையில் நடந்த மாற்றங்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக விமல் வீரவன்ச, உதய கம்மம்பில போன்றவர்களையே கூறவேண்டும். ஆனால் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக, இப்போதே பதவி விலக வேண்டிய வாசுதேவ நாயக்கார போராடுகிறார்.

ஆட்சியமைப்பில் முக்கியமானவர்களாக பங்காளர்களாக இருந்தவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுசில் பிரேம் ஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். அது நடைபெற்றபோதுகூட இது போன்ற எதிர்பார்ப்பு இருந்ததே தவிர, ஒன்றும் நடைபெற்றுவிடவில்லை.

ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்வதற்காகவேனும் ஓர் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், அலாவுதீனின் அற்புத விளக்கோடு அதிசய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்துவார் என்ற பெரும் எதிர்பார்ப்போடு நிதி அமைச்சராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

ஆனால் நடைபெற்றது ஒன்றுமில்லை. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நிதி அமைச்சரினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்டது. அப்படியிருக்கையில் ஏனைய அமைச்சர்களிடமிருந்து பதவிகளைப் பறிப்பதும் மற்றொருவரை நியமிப்பதும் ஒரு சிறந்த நடவடிக்கையாக எப்படிப் பார்க்க முடியும் என்பதுதான் குழப்பம்.

மஹிந்த ராஜபக்‌ஷவினால் நிதி அமைச்சை திறம்பட நிர்வகிக்க முடியாமலிருப்பதாக பசில் ராஜபக்‌ஷவிடம் கொடுக்கப்பட்டது. பவித்திரா வன்னியாராச்சியால் சுகாதார அமைச்சினை திறம்பட நிர்வகிக்க முடியாதுள்ளது என்று கெஹலிய ரம்புவெலவிடம் கொடுக்கப்பட்டது. இதுபோன்றுதான் ஏனைய அமைச்சர்களும் இப்போதும் மாற்றப்பட்டிருக்கிறது.

அமைச்சினை சரியாக நிருவகிக்க முடியாதவர்கள் என்று கருதியவர்களுக்கே வேறு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. மேலைநாடுகளின் அரசியல் பாரம்பரியங்களுக்கு இதனை எவ்வாறு உதாரணப்படுத்துவது.

இவ்வாறிருக்கையில், நிதிக் கொள்கை தோல்வி, மத்திய வங்கியின் நாணயக் கொள்கை திறம்படக் கையாளப்படவில்லை.  நிதியமைச்சு தோல்வி, வெளிநாட்டு அமைச்சு மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. நீதி அமைச்சு, விவசாயத்துறை, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு,  கடற்றொழில் அமைச்சு, கலாசார அமைச்சு என்று பெரும் பட்டியலே இருக்கையில் நடைபெறும் மாற்றங்களால் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கா அரசு முயற்சி செய்கிறது என்றும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.

இந்த நிலையில்தான், தற்போது நடைபெற ஆரம்பித்திருக்கின்ற ஜெனீவா மனித உரிமைகள் சபையின் அமர்வு, இலங்கைக்கு பிரளயங்களைக் கொண்டுவரவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அந்த அறிக்கை  குறித்து இலங்கை அரசும் அறிக்கையை வழங்கியுள்ளது.

யுத்தக் குற்றம், காணாமல்போனோர் விவகாரம், பயங்கரவாதத் தடைச்சட்டம், மனித உரிமைகளின் நிலை என பல்வேறு விடயங்கள் மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பேரினவாதத்தை ஆதரிக்கும் கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளதாகவும் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பாரிய பாதகங்களை கொண்டுவந்து என்றும் தெரிவித்துள்ளார். இது சாதாரணமானதோர் அறிக்கையாகப் பார்க்கப்படமுடியாதது.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான முரண்பாடு தொடங்கியது முதல் தமிழர்கள் விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாராக இருந்த போதிலும் அதனை ஏற்பதற்கு சிங்களவர்கள் தயாராக இருக்கவில்லை என்பதுடன் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்குபவர்களாகவே இருந்தார்கள். தமிழ் மக்களின் பிரச்சினையை, பிரித்தாளும் தந்திரங்கள், சலுகைகள் போன்றவற்றைக் கொண்டே கையாண்டிருக்கிறது.

இனத்துவேசத்தினை சிங்கள மக்களிடம் விதைப்பதன்மூலமே ஆட்சியாளர்கள் நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற போர்வையில் தமிழ் மக்களையே ஆசுவாசப்படுத்த முனைகின்ற செயற்பாடே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதே குற்றச்சாட்டு.

ஆனால், உண்மை நிலைமையினை சிங்கள பௌத்த மக்களுக்கு எடுத்துக்கூறினால் அவர்கள் நிலைமையினை புரிந்துகொள்வார்கள் எனவும், ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களுக்கு இதனை செய்வதற்கு தைரியம் இல்லை என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில், கடந்த ஜெனீவா அமர்வு, ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள், இலங்கை அரசாங்கத்தால் கையாளப்பட்டது போன்றே இவ்வருடத்திலும் கையாளப்படும் என்றுதான் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நிலையில், இப்போது நாடு இருக்கின்ற நெருகக்கடியான நிலையில் இது எவ்வாறு சாத்தியம் என்பது முக்கியமான கேள்வி.

இவ்வாறான பலவிதமான முரண் நிலைகளுக்குள் இருக்கின்ற இலங்கை அரசாங்கமானது, முன்வைக்கின்ற அமைச்சரவை மாற்றம் என்கிற முயற்சியை எதற்கான முடிவாகப் பார்ப்பது என்பதுதான் விடைகாண முடியாததொன்று.
அதேநேரத்தில், ஜெனீவா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில், காலங்கடத்தல்களை நிகழ்த்திக் கொண்டு, வெற்றி பெற்றதாக பெருமை அடித்துக் கொள்வதற்கு, எதற்கு அரசாங்கம் என்பதும் விடைதெரியாத கேள்வியே!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X