2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அரசியலாகும் அப்பாவிகளின் இரத்தம்

Johnsan Bastiampillai   / 2021 மார்ச் 10 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி (உயிர்த்த ஞாயிறு தினம்) மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத் தாக்குதலை வழிநடத்தியவர்கள் யார் என்பது? அதைப் பற்றி அக்கறை கொண்டுள்ள அனைவரும் தற்போது எழுப்பும் கேள்வியாகும். 

அத்தாக்குதலைப் பற்றி விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம், அது தெரியவரும் எனப் பலர் எதிர்ப்பார்த்த போதிலும், அவ்வாறான எந்தத் தகவலும் அந்த அறிக்கையில் இருக்கவில்லை. 

அந்த அறிக்கையில், அவ்வாறான தகவல்கள் இருக்கும் எனக் கத்தோலிக்க திருச்சபையும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தனர். அதனால்தான், அந்த அறிக்கையில் அவ்வாறான தகவல்கள் இல்லாததையிட்டு விரக்தியடைந்து, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஞாயிற்றுக்கிழமையை (07) ‘கறுப்பு ஞாயிறு’ எனப் பிரகடனப்படுத்தினார். அதன்படி, மட்டக்களப்பைத் தவிர, நாட்டில் சகல கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் ஞாயிறு ஆராதனைக்காகச்  சென்ற பெரும்பாலானோர், கறுப்பு உடை அணிந்து சென்றார்கள்.  

‘ஈஸ்டர் தாக்குதல்’ முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த சம்பவமாகும். எனவே, ‘கறுப்பு ஞாயிறு’ தின நிகழ்வுகளுக்கு, சர்வதேச ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை அளித்தன. 

தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியவராகக் கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுக்கும், தலைமை தாங்கிய ஒருவர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களுக்குப் பணம் முதலானவற்றை வழங்கியவர்கள் இருக்க வேண்டும் என்றும் பலர் நம்பினர். 

ஆனால், ஆணைக்குழு தனது அறிக்கையில், ஸஹ்ரானே தாக்குதல் நடத்திய குழுவின் தலைவர் என்றும் தெமட்டகொட வர்த்தகரான முஹம்மத் இப்ராஹீமின் இரு மகன்களான இன்சாப், இல்ஹாம் ஆகியோரே தேவையான நிதி வசதிகளைச் செய்து கொடுத்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது, தாக்குதலை நடத்திய கும்பலுக்குப் பின்புலத்தில் இருந்து, அவர்களை வழிநடத்திவர்களை அம்பலப்படுத்துமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபை தொடர் போராட்டமொன்றில் இறங்கியிருக்கிறது. எவரும் இதை எதிர்த்துப் பேச முடியாது; பிழையெனக் கூறவும் முடியாது. 

ஒரு சமூகத்தை இலக்கு வைத்து, இது போன்றதொரு மிலேச்சத்தனமான  தாக்குதல் நடத்தப்பட்டால், பாதிக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் கோபத்தையும் மற்றவர்களால் அளவிட்டுக் கூற முடியாது. அது, பாரிய வேதனையையும் கோபத்தையும் தரும் என்பதை மட்டும் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த விடயத்தில், அரசாங்கம் பெரும் சவாலை எதிர்நோக்கி இருப்பதைக் காண முடிகிறது. இரகசிய பொலிஸ் விசாரணை மூலமோ, முன்னைய அரசாங்கம் இந்தத் தாக்குதல் தொடர்பாக நியமித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமோ, தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ள ஆணைக்குழுவின் மூலமோ, ஸஹ்ரான் ஹாஷிமின் ‘தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு’க்குப் பின்னால் இருந்து, இயக்கத்தை வழிநடத்திய எவரும் இருந்தததாக அறியப்படவில்லை. ஆனால், பின்னால் இருந்து தாக்குதலை வழிநடத்தியவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என, கத்தோலிக்க திருச்சபை, அரசாங்கத்தை வற்புறுத்தி வருகிறது. 

அதேவேளை, ஏனைய சகல விடயங்களைப் போலவே, இந்த விடயமும் அரசியல்வாதிகளுக்கு அரசியலாக மாறியிருக்கிறது. அவர்கள் அனைவரும், இதைத் தமது அரசியலுக்காகப் பாவிக்கிறார்கள்.

 இது ஒரு தேசிய பிரச்சினை என்றோ, இதனோடு சம்பந்தப்பட்ட சகல உண்மைகளையும் கண்டறியாவிட்டால் நாளையும் இது போன்ற அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றோ, இந்நாட்டு அரசியல்வாதிகள் கருதவில்லை.இந்தத் தாக்குதலோடு, தமது அரசியல் எதிரிகளை முடிச்சுப் போட்டு, இன்பம் காண்பதே அவர்களினதும் நோக்கமாகியுள்ளது. 

முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு முன்னர், அதைப் பற்றிய தகவல்களை, உளவுப் பிரிவினர் பாதுகாப்புத் துறையிலுள்ள முக்கியஸ்தர்களுக்கு அறிவித்து இருந்தனர். எனவே, அதைப் பாவித்து முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களைச் சாடுவதில் தான், தற்போதைய அரசாங்கத்தின் பல தலைவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். 

முன்னைய அரசாங்கத்தின் தலைவர்களினதும் அக்காலத்தில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினரதும் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே, தகவல் கிடைத்தும், தாக்குதலைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்பது, முற்றிலும் உண்மையே! 

ஆனால், இவ்வாறானதோர் அழிவு நடக்கட்டும் என, அவர்கள் வேண்டும் என்றே விட்டுவிட்டு இருந்துவிட்டார்கள் என்று கூற முடியாது. அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியதைப் போல், அக்கால அரச தலைவர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும், இவ்வளவு பாரிய தாக்குதலொன்று இடம்பெறும் என நினைக்கவில்லை என்றே ஊகிக்க முடிகிறது. அவர்கள் செய்த தவறு அதுவே; இது பொறுப்பற்ற தன்மையாகும்.

ஆனால், 30 ஆண்டு காலப் போரொன்று இடம்பெற்ற ஒரு நாட்டின் தலைவர்கள் என்ற முறையில், அவர்கள் இதைப் பாரதூரமாகக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.அவ்வாறு செய்யாததற்காக, அவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். ஆயினும, அதைத் தற்போதைய அரசாங்கம், தமது அரசியலுக்காகப் பாவிக்கக் கூடாது. 

அதேவேளை, முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களும் ஏனைய அரசியல்வாதிகளும், தாக்குதலைத் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களே நடத்தினார்கள் என்று கூற முயல்வதும் விந்தையானது. தாக்குதலால் கோட்டாபய ராஜபக்‌ஷவே, அரசியல் ரீதியாகப் பயனடைந்தார் என்றும் எனவே, தாக்குதலின் பின்னால் அவரே இருந்துள்ளார் என்றும் கருத்துப்பட அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். 

அதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சு ஸஹ்ரான் ஹாஷிமுக்கு மாதாந்தம் கொடுப்பனவொன்றை வழங்கி வந்தததாகவும் எனவே, தாக்குதலுக்கு கோட்டாபயவே காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

தாக்குதல், ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்துக்குப் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கோட்டாபய ராஜபக்‌ஷ, “நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த நான் தயார்” எனக் கூறியிருந்தார். 

அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்றார். எனவே, இந்தத் தாக்குதல் அவருக்குத் தேர்தல் வெற்றிக்காக உதவியது என ஒருவர் வாதிடலாம். ஆனால், அவர் தான் தாக்குதலை நடத்தப் பின்புலத்தில் செயற்பட்டார் என்று வாதிடுவது விந்தையானது. 

அந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசிய கட்சியும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெற்றதை விட 20 இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றது. அந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றிருந்தால், அவர் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தார் என வாதிட முடியுமா?

இராணுவம், பொலிஸ் உளவுப் பிரிவினர், கிளர்ச்சிக் குழுக்களுக்குள் ஊடுருவி தகவல் திரட்டுவதெல்லாம் புதிய விடயம் அல்ல. புலிகளின் உளவுப் பிரிவில் இருந்த ஒருவர், இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர், இராணுவ அதிகாரியாகத் தம்மைச் சந்தித்ததாக, புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

கிளர்ச்சிக் குழுக்களில் உள்ளவர்களைத் தம் பக்கம் வளைத்துக் கொண்டு, அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, தகவல் பெறப்படுகிறது. கிளர்ச்சிக் குழுக்களும் இவ்வாறு செய்கின்றன. எனவே பாதுகாப்பு அமைச்சு, ஸஹ்ரானுக்கு பணம் வழங்கியிருந்தால், அதற்காகப் பாதுகாப்பு அமைச்சு, ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதும் விந்தையானது. 

வேறு சிலர், முஸ்லிம் தலைவர்களில் எவரையும், தாக்குதலோடு ஆணைக்குழு தொடர்புபடுத்தவில்லை என்பதற்காக, ஆணைக்குழுவைக் குறை கூறுகின்றனர். கோட்டாபய தலைமையிலான அரசாங்கம், பதவியில் இருக்கும் போது, சாட்சியங்கள் இருந்தும், முஸ்லிம் தலைவர்களைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க, ஆணைக்குழு செயற்படும் என நம்ப முடியாது. 

தமது அரசியல் எதிரிகளை, இந்தத் தாக்குதலோடு சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற தேவை, எல்லோருக்கும் இருக்கிறது. சில முஸ்லிம் குழுக்களும் தம்மோடு சித்தாந்தம், அரசியல் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் ஏனைய முஸ்லிம் அமைப்புகளை, தாக்குதலோடு சம்பந்தப்படுத்த முயல்கின்றன. ஆனால், போதிய சாட்சியங்களின்றி ஆணைக்குழுவால் எவரையும் சந்தேக நபர்களாகக் குறிப்பிட முடியாது. 

ஏனெனில், இறுதியில் நீதிமன்றமே குற்றவாளிகளைத் தீர்மானிக்க வேண்டும். நீதிமன்றத்தில் அந்தப் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணைகளை, பொலிஸார் எதிர்நோக்க வேண்டும். எனவேதான், பலமான ஆதாரங்கள் இல்லாமல் எவரையும் இந்த விடயத்தில் குற்றஞ்சாட்டப் போவதில்லை என, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார். 

இந்தப் பிரச்சினையை, அரசியல் மயமாக்குவதால் விசாரணைகள் சிக்கலாகிவிடும். இந்த விடயத்தில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் உள்ளடங்கலாகச் சகலரும், ஓரணியாக இருந்தே செயற்பட வேண்டியுள்ளது. 

ஏனெனில், ஸஹ்ரானின் குழுவினர் முதலில், கண்டி பெரஹராவைத் தாக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும் தமது கொள்கையை ஏற்காத முஸ்லிம்கள் நிர்வகிக்கும் பள்ளிவாசல்களையும் தாக்கத் திட்டமிருந்ததாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்தது. அவர்களுக்குத் தாம் அல்லாத அனைவரும் எதிரிகளே!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X