Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
மொஹமட் பாதுஷா / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இப்போதெல்லாம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றது.
அதேபோன்று, எதிர்காலத்தில் அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய அரசமைப்பு பற்றியும் அதில் மாகாண சபை முறைமை, நாடாளுமன்றத் தேர்தல் முறைமை உள்ளிட்ட முக்கிய ஏற்பாடுகளில் மேற்கொள்ளப்படுவதற்குச் சாத்தியமான திருத்தங்கள் பற்றியும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது காலத்தின் அவசியமும் கூட!
உலக மக்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட வாழ்வில், அரசியலின் நேரடி- மறைமுக விளைவுகள் இருக்கின்றன. அரசியல் நகர்வுகள், தனிமனித நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துகின்ற பிரதான காரணியாக இருக்கின்றமையால், அரசியல் விவகாரங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றன.
ஆனால், இலங்கைச் சூழலில், அரசியலுக்கு அப்பால் பேசப்படாத விடயங்கள் ஏராளமுள்ளன. முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்குள் ‘கொவிட்-19’ இனை விடவும் வேகமாகப் பரவி வருகின்ற போதைப்பொருள் பாவனை, வியாபாரம், இளைஞர்களின் ஒழுங்கீனமான செயற்பாடுகள், நெறிபிறழ்வான உறவுகள், அலைபேசி விளையாட்டுகள், தொழில்நுட்ப சாதனங்களை மய்யப்படுத்தியதாக உருவெடுக்கும் மந்தபுத்தி என, இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.
இதில் மிகவும் முக்கியமானதும் பாரதுரமானதுமான விடயம், போதைப் பொருள் விற்பனையும் அளவுகடந்த பாவனைப் பரவலும் ஆகும். முன்னொரு காலத்தில், முஸ்லிம் ஊர்களைப் பொறுத்தமட்டில், விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே மது, கஞ்சா பாவிப்பவர்களாக இருந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மதத்தின் கட்டுப்பாடுகள் முக்கிய காரணியாக இருந்தன என்று சொல்லலாம்.
தமிழ்ச் சமூகத்தில், ஒப்பீட்டளவில் மதத்தின் மூலமான வரையறைகள் குறைவு என்றாலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் குறிப்பிட்டளவான நபர்களே, போதைப் பொருள் பாவனையாளர்களாக இருந்தார்கள். அதுவும் மதுப்பாவனையே அதிகமாகக் காணப்பட்டது. வயதில் குறைந்தவர்களிடையே, போதைப்பொருள் பாவனை மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்பட்டது. ஆனால், இன்று நிலைமை வெகுவாக மாறியிருக்கின்றது.
இன்று, நாட்டில் மதுபானம் சட்டரீதியாக விற்பனை செய்யப்படுவதும் அதனால் அரசாங்கத்துக்குப் பெருந்தொகை வரி கிடைப்பதும் நாடறிந்ததே. ‘புகைத்தல் புற்றுநோயை உண்டுபண்ணும்’ என்ற வாசகத்துடன், புகையிலை உற்பத்திகளை விற்பனை செய்வதும் அதன்மூலம் அரச வரியைப் பெறுவதும் அந்த நிதியைக் கொண்டு போதை ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடத்துவதும் எனக் கேலிக்கூத்தான நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த சில வருடங்களுக்குள், நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஒரு புரட்சியே நடந்திருக்கின்றது. அந்தளவுக்கு இந்தச் சந்தை, ஒரு ‘மாபியா’ போல வியாபித்திருக்கின்றது. புதுப்புது வகையான போதைப்பொருள்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா, கேரளா கஞ்சா, குடு, ஐஸ், ஹெரோயின், கொக்கையின் எனப் பலவகைகள், ‘அவர்களுடைய சந்தையில்’ தாராளமாக விற்பனையாகின்றன.
வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் ஊடுருவிய இக்கலாசாரம், அண்மைக் காலங்களில், கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் வியாபித்திருக்கின்றது. போதைப்பொருள்கள் அவற்றின் இயல்பான வடிவத்தில் மாத்திரமல்லாமல், மாத்திரைகள், டொபிகள் எனப் பல்வேறு வடிவங்களிலும் சூட்சுமமான முறையில் விற்கப்படுகின்றன.
முன்னைய காலங்களில், நடுத்தர வயதினராலேயே பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த போதைப்பொருள்கள், இப்போழுது பாடசாலை மாணவர்களைச் சென்றடைந்திருக்கின்றது. இது அரசியல் பெரும் புள்ளிகளின் பலத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற வியாபாரமாகவே தெரிகின்றது.
ஆனால், இந்த வியாபாரத்துக்காக ஏழைச் சிறுவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதுடன் போதைக்கு அடிமையாகும் இளைஞர் சமுதாயத்தினர் போதை உலகில் மூழ்கி, எதிர்காலத்தைச் சீரழிக்கும் அபாயநிலைக்குள் அகப்பட்டுவிடுகிறார்கள்.
பாதுகாப்புத் தரப்பினரும் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் இதைக் கட்டுப்படுத்துவதற்காக முழுமூச்சாகச் செயற்படுகின்றனர். ஆயினும், அதைவிட வேகமாக போதைக்கலாசாரம் முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களுக்குள் நிலைகொண்டுள்ளது.
பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானாலும் ஒன்றில் - அவர்கள் வெளியில் வந்துவிடுகின்றார்கள்; அல்லது, வேறு ஆள்கள் அந்த வர்த்தகத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில், மக்கள் எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கியிருந்த சந்தர்ப்பத்தைக் கூட, பல இடங்களில் போதைப்பொருள் வர்த்தகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள்.
இவ்வாறாக, போதைப்பொருள்கள் இளைஞர்கள் கூடும் இடமெல்லாம் ஊடுருவியிருக்கின்றது. பல பாடசாலைகளின் வாயிற்கதவு வரையும் வந்திருக்கின்றது. ஆனால், ஆசிரியர்கள் இது பற்றி பேசுவது அரிதாகவே நடக்கின்றது. இந்த மௌனம், பாடசாலைகளுக்குள் இன்னும் பரவலாகப் போதைப்பொருள்கள் உள்நுழைவதற்குச் சாதகமான களநிலைமைகளையே ஏற்படுத்தும்.
இவ்வாறாக, போதைப்பொருள் பாவனை, இளம் சமுதாயத்திடையே ஏற்பட்டிருப்பதால், அவர்கள் பெரும்பாலும் நமது உலகத்தில் சஞ்சரிப்பதில்லை. அவர்களின் உலகம் வேறு!
இந்நிலையில், போதைப்பொருள் கிடைக்காத இளைஞர்கள், எவ்வழியிலும் அதைப் பெற்றுக் கொள்வதற்காக களவு, கொள்ளைகளில் ஈடுபடுவதை அண்மைக் காலங்களில் காண முடிந்தது.
குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற களவுகளில் ஈடுபட்டவர்களும் அதற்குப் பின்னால் இருந்தவர்களும் போதைப் பொருள் அடிமைகள் என்ற விடயம், சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்றன.
கொரோனா வைரஸின் பின்னரான நிதித் தட்டுப்பாடும், புதிய அரசாங்கத்தின் கெடுபிடிகளும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்குப் பெரும் சிக்கலாக அமைந்துள்ளன. ஆனாலும், புதிய புதிய வழிமுறைகளின் ஊடாக, போதைப் பொருள் வர்த்தகம் நடைபெறுகின்றது.
போதைப்பொருளுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையையும் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களின் அளவையும் பார்க்கின்ற போது, இந்த வர்த்தகத்தின் பருமன், இதைவிடப் பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு கடினமன்று.
போதைப்பொருள் பாவனையால், இளைய சமுதாயம் கெட்டுக் குட்டிச் சுவராகியுள்ளது. மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாதுள்ளது. உழைக்கின்ற இளைஞர்கள் பலர் தமது மொத்த உழைப்பையும் போதைப் பொருள் வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு வீடு திரும்புகின்ற நிலை உருவாகியுள்ளது. இது குடும்பங்களில் தொடர் வறுமைக்குக் காரணமாகியுள்ளது.
அத்துடன், இதைக் கொள்வனவு செய்வதற்காக, எதையும் செய்யும் நிலைக்கு இளைஞர்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர். இது பல்வேறு சமூக விரோத செயல்களுக்கும் ஒழுங்கீனங்களுக்கும் காரணமாகின்றது. இதற்குப் பின்னால், ‘பலமான கைககள்’ இருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், வயதில் குறைந்த இளைஞர்களே மாட்டிக் கொள்கின்றனர். கையூட்டலும் சட்டத்தின் ஓட்டையும் கைகொடுக்காத நிலையில், அவர்களின் வாழ்க்கை அப்படியே வீணாகி விடுகின்றது.
இதுபோலவே, அலைபேசியை மய்யமாகக் கொண்ட விளையாட்டுகளும் இன்று பெரும் சாபமாக மாறியிருக்கின்றன. ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளில் இளைஞர்களும் யுவதிகளும் மூழ்கிக் கிடக்கின்றனர். அவர்கள், வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கின்றனர்.அத்துடன், மந்தபுத்தியுடைய, அறிவீனமான இளைஞர் சமூதாயத்தை இது உருவாக்குகின்றது.
இதேவேளை, தொழில்நுட்பத்தை மய்யமாகக் கொண்ட இணையவழி அரட்டைகள், வட்ஸ்அப், பேஸ்புக் அரட்டைகள் இளைஞர்களையும் யுவதிகளையும் அபத்தமான உலகில் வெட்கமற்று உலவ விடுகின்றன. போதைப் பொருள்கள் மட்டுமன்றி, இதுபோன்ற செயல்களும் கூட திருமணத்துக்கு அப்பாலான உறவுகள், கள்ளத் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன் பல திருமணங்கள், விவாகரத்து வரை செல்வதற்கும் காரணமாகி விடுகிறது. நீண்டகால அடிப்படையில் நோக்கினால், இவையெல்லாம் சர்வசாதாரணமான விடயங்களல்ல!
‘போதைப்பொருள் வர்த்தகர் கைது’, ‘போதைப்பொருளுடன் இளைஞர்கள் சிக்கினர்’, ‘வீடியோ கேம் விளையாடிய மாணவன் தற்கொலைக்கு முயற்சி’, ‘கள்ளக்காதலுக்காக கணவன் கொலை’ என்று செய்திகளைத் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
எங்கேயோ நடந்ததாகக் கேள்விப்பட்ட விடயங்கள், இன்று அருகிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் நடக்கின்றன. ஆனால், இன்று அரசியல்வாதிகள், சமூக சிந்தனையாளர்கள் இதுபற்றிப் பேசுகின்றார்களா? சமயம், சமயக் கோட்பாடுகள் என்று தூக்கிப் பிடிக்கும் மத ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள், கோவில் நிர்வாகங்கள், தேவாலயங்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனவா?
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு சமூகமாகத் தங்களுக்குள் இருக்கின்ற போதை வியாபாரிகள், பாவனையாளர்களைக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனரா?
அவ்வாறு கைதாகும் நபர்களை, எதற்காகவும் விடுவிக்காமல் நூறு சதவீதம் சட்டப்படி தண்டிக்க, பாதுகாப்புத் தரப்பு திடசங்கற்பம் பூண்டுள்ளதா?
இவ்வாறான அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, என்ன பதில் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆகவே, இதுவிடயத்தில் இனியாவது தமிழர்களும் முஸ்லிம்களும் கவனம் செலுத்த வேண்டும். அரசமைப்பை மாற்றுவதற்கு முன்னர், சட்டங்களைத் திருத்துவதற்கு முன்னர்.... அவசரமாக நமக்குள் பேசப்பட வேண்டிய, திருத்தப்பட வேண்டிய இதுபோன்ற பிரச்சினைகள் ஏராளம் உள்ளன என்பது நினைவிருக்கட்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
44 minute ago
2 hours ago