Thipaan / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஒருவாறாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக யாருக்கும் வழங்கப்படாதிருந்த இப்பதவிக்கு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீரை நியமித்ததன் மூலம், இப் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு பறிகொடுப்பதில் இருந்து மு.கா தற்காத்துள்ளது. அதுமட்டுமன்றி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பாகவும் இந்த சமூகத்துக்கு மறைமுக செய்தியொன்றைச் சொல்வதற்கு மு.காவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர், பொதுத் தேர்தலில் போட்டியிட்டதால் வெற்றிடமாகிய அப்பதவியை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து வெற்றிடமாகவே வைத்திருந்தார். தேசியப் பட்டியல் விவகாரம் இழுபறியாக இருந்தமையால் அதனை ஒரு பிரதேசத்துக்கு 'பிரதான பரிசாக' வழங்கிவிட்டு, இன்னுமொரு பிரதேச மக்களை 'ஆறுதல் படுத்துவதற்கு' மாகாண அமைச்சைப் பயன்படுத்தலாம் என்று அவர் எண்ணியிருந்திருக்கக் கூடும்.
இருப்பினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, சுகாதார அமைச்சை ஐ.ம.சு.கூவுக்கு பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையை இப்பதவிக்கு நியமிக்க தீர்மானித்திருந்தார்.
ஐ.ம.சு.கூவின் இந்த அதிரடி செயற்பாடு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு பெரிய தலையிடியாகிப் போனது. உடனடியாக சுகாதார அமைச்சுக்கு யாரையேனும் நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினருக்கு அவ் அமைச்சை வழங்குவதற்கு தலைமை முடிவெடுத்தது. இதன்மூலம் அமைச்சை தக்கவைத்துக் கொள்வது மட்டுமன்றி, 'உங்களுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை இப்போதைக்கு இல்லை' என்ற சேதியையும் மு.கா அம்மக்களுக்கு சொல்லியிருக்கின்றது.
இவ்விடத்தில் 'இப்போதைக்கு' என்ற வார்த்தைப் பிரயோகம் இங்கு ஏன் அவசியமாகின்றது என்றால், எதிர்காலத்தில் அட்டாளைச்சேனைக்கு ஒரு தேசியப் பட்டியல் கிடைப்பதற்கான சாத்தியம் இன்னும் இருக்கின்றது என்பதனால் ஆகும். அதாவது, தேசியப் பட்டியலைப் பல பிரதேசங்களிடையே சுழற்சிமுறையில் பகிர்ந்தளிப்பதற்கு கட்சித் தலைமை ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக அறிய முடிகின்றது. இதன்படி முன் அரைப்பகுதியில் வேறொரு முக்கியஸ்தருக்குத் தேசியப் பட்டியல் எம்.பி.யை வழங்கிவிட்டு பின் அரைப்பகுதிக்கு அட்டாளைச்சேனைக்கு வழங்கும் சாத்தியமிருப்பதாகக் கூறப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தேசியப் பட்டியலுக்கு 'மேலதிகமான ஒரு பரிசு' என்று சுகாதார அமைச்சை மு.கா விசிறிகள் சிலர் குறிப்பிட்டாலும், உண்மையில் அட்டாளைச்சேனை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரண்டரை வருடங்களுக்கு கோராமல் இருப்பதற்கான ஆறுதல் பரிசே இது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
முன்னதாக ஐ.ம.சு.கூ கட்சிக்கு மாகாண சுகாதார அமைச்சு கிடைக்கப் போகின்றது என்ற தகவல் வெளியானதும் அதில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகள் உஷார் அடைந்தன. குறிப்பாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்துள்ளார். இருந்தாலும், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸைச் சேர்ந்தவரான உதுமாலெப்பையை நியமிப்பதில் ஜனாதிபதி ஓரளவுக்கு உறுதியாக இருந்தமை தெரியவந்தது. இச்செய்தியைப் பிரதியமைச்சர் அமீரலியிடம்
ரிஷாட் கூற, பின்னர் அத்தகவல் உதுமாலெப்பைக்குக் கிடைத்தது.
அவர் உடனடியாக, தன்னால் விசுவாசிக்கப்படும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கு அழைப்பை எடுத்து இவ்விடயத்தைக் கூறினார். இதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத அதாவுல்லா ஓரிரு தினங்களுக்குள் தன்னைச் சந்திக்க நேரம் தருவதாக உதுமாலெப்பைக்குக் கூறியிருக்கின்றார். உதுமாலெப்பையும் தலைவர் நேரமொதுக்கி தம்மை சந்திப்பார் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால், இரண்டு மூன்று நாட்களாக தலைமையிடமிருந்து எந்த அழைப்புமில்லை என்று உதுமாலெப்பை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருப்பதாக அறியக் கிடைக்கின்றது.
சமகாலத்தில் மு.கா சுறுசுறுப்பாக இயங்கி ஏதோ ஒரு முடிவுக்கு வந்ததால் அக்கட்சி ஒரு மாகாண அமைச்சைத் தக்க வைத்துக் கொண்டது என்று எடுத்துக் கொண்டால், அதாவுல்லா மற்றும் உதுமாலெப்பை ஆகியோரின் அசட்டையீனமே கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் ஆக்கியிருக்கின்றது என்றால் மிகையில்லை.
மாகாண சுகாதார அமைச்சராக யாரேனும் ஒருவரை மு.கா நியமித்தது வரவேற்கத்தக்கதே. ஆனால், இந்நியமனத்தினைக் காரணம் காட்டி வெளியில் சிரிக்கின்ற பலர் உள்ளுக்குள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர் என்பதே நிதர்சனமானது. உண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழியங்கும் கிராமங்களின் மக்கள் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேண்டுமென்றே வேண்டியிருந்தனர். தலைவரின் வாக்கை மலைபோல் நம்பினர். அதைவிடுத்து, சுகாதார அமைச்சுப் பற்றிய எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. அது மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்;கே கிடைக்குமென நினைத்தனர். தற்போது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நஸீர் கூட, தவத்தை 'எதிர்கால சுகாதார அமைச்சர்' என்றே விழித்துப் பேசியிருந்தார்.
ஆனால், இன்று இப்பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டுள்ளதால் தேசியப் பட்டியல் எம்.பி.யை மு.கா தலைமை தருவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற அடிப்படையில் கணிசமான மக்கள் ஒருவித அதிருப்தி அடைந்திருக்கின்றனர். தேசியப் பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்த முஸ்லிம் காங்கிரஸ், மாகாண அமைச்சைத் தந்து சமாளிக்க முடியாது என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கும். அதற்காக அவர்கள் மு.காவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது
அதாவுல்லாவுக்கு இப்பிரதேச மக்கள் பெருமளவு வாக்களிக்காமலேயே அந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு மாகாண அமைச்சை அதாவுல்லா முன்னர் வழங்கியிருந்தார். அவ்வாறு மக்கள் கேட்காமலேயே அவர் கொடுத்தததற்கு சமமான மாகாண அமைச்சையே முஸ்லிம் காங்கிரஸ் இன்று வழங்கியுள்ளது. இதன்மூலம், தேசியப் பட்டியலுக்கான மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விடலாம் எனக் கருத முடியாது.
இந்நிலையில் சுழற்சிமுறையில் தேசியப் பட்டியல் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டால் கூட சுஹைர், ஹுசைன் பைலா போன்ற அரசியல்வாதிகளைக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில், முன்-அரைப் பகுதிக்காக கொடுக்கப்படும் எம்.பி. பதவியை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பிடுங்கி எடுப்பது பெரிய வேலையாக இருக்கும். எனவே, இதுவும் கூட இப்பிரதேசத்துக்கான தேசியப் பட்டியல் குறித்த உத்தரவாதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.
முன்னதாகத் தேசியப் பட்டியல் மற்றும் மாகாண அமைச்சுப் போன்றவற்றை இலக்கு வைத்து செயற்பட்ட ஒரு சிலர் நஸீருக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டதில் திருப்தி அடையவில்லை என்றே தெரிகின்றது. இவருக்கு மாகாண அமைச்சு வழங்கப்பட்டதால், இப்பிரதேசத்துக்கு ஒரு எம்.பி. கிடைப்பதும் அதற்காக தம்முடைய பெயர் பரிசீலிக்கப்படுவதும் தடைப் பட்டிருக்கின்றது என்ற வருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சமூக அக்கறையும் சுயநலமும் இரண்டறக் கலந்திருக்கின்றது. குறிப்பாக இந்நியமனம் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் மனநிலையில் பாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு சுகாதார அமைச்சு கிடைக்கும் என்று மாகாண சபை உறுப்பினர் மனக்கோட்டை கட்டியிருந்தார் என்பது அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிந்தது. 'தேசியப் பட்டியலை அட்டாளைச்சேனைக்கும் மாகாண அமைச்சை அக்கரைப்பற்றுக்கும் தருவதற்கு கட்சித் தலைமை உறுதிபூண்டுள்ளது' என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அது தவிர, தேசியப் பட்டியலை அட்டாளைச்சேனைக்குக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர்களுள் தவமும் ஒருவர். அதற்கு, அயற்கிராமத்தின் மீதான கரிசனை மட்டுமன்றி மறைமுக வேறு காரணமும் இருந்தது எனலாம். அட்டாளைச்சேனைக்கு எம்.பி. கிடைக்காவிடின் தமக்கு சுகாதார அமைச்சு கிடைக்காது என்பதே அக்காரணம்.
இதற்காக மு.கா செயலாளரை விமர்சித்தும், அவருக்கு தேசியப் பட்டியல் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கத்தேவையில்லை என்று நியாயப்படுத்தியும் ஏ.எல். தவம் அறிக்கை விடுத்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்புவரைக்கும் அதாவுல்லாவின் கட்சியில் இருந்தவர் தவம். ஒரு தடவை மு.கா தலைவர் ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு நோன்பு திறக்க வந்த போது ஊருக்குள் நுழைய விடாமல் தலைவரை தடுத்து நிறுத்திய குழுவில் முன்னின்று செயற்பட்டவரான தவம், மு.காவின் மூத்த உறுப்பினரும் கட்சிக்காக அஷ்ர‡ப் காலத்திலிருந்தே கடுமையாக உழைத்தவருமான ஹசனலியை விமர்சித்ததைக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கடுமையாக ஆட்சேபித்தனர்.
இன்று செயலாளரை விமர்சிப்பவர் நாளை நம்மையும் விமர்சிக்கத் தயங்கமாட்டார் என்பது ஹக்கீமுக்கு விளங்காமல் போயிருக்காது. தவத்துக்கு கடந்த மாகாண சபை தேர்தலில் எழுந்த அலை தலைவரை சந்தோசப்படுத்துவதாக இருக்கவில்லை. ஏதாவது பதவியை தவத்துக்கு கொடுத்தால் அவர் தமது கட்டுப்பாட்டை மீறிவிடுவார் என்று மு.கா தலைமை கருதுவதாக கட்சிக்குள் ஒரு கதை உலாவுகின்றது. ஹசனலியை விமர்சிக்கும் அறிக்கையும் இந்த நிலைப்பாட்டுக்கு மேலும் உரம் இட்டிருக்கலாம். இதன் விளைவு, எது நடந்துவிடக் கூடாது என்று தவம் நினைத்தாரோ, அது இன்று நடந்திருக்கின்றது. இதனால் அவரது செயற்றளம் வாடிப் போயுள்ளது.
எவ்வாறிருப்பினும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்விவகாரத்தைக் காலம் தாழ்த்தியேனும் முடிவுக்குக் கொண்டு வந்தது நல்லதே. தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று அம்மக்கள் குரல்கொடுப்பது நியாயமானதே என்றாலும், தேசியப் பட்டியல் மற்றும் மாகாண அமைச்சுக்களுக்கான பதவிப் போட்டியில் பல ஊர்களுக்கும் தனிநபர்களுக்கும் ஆறுதல் பரிசுகூட கிடைக்காமல் போகப் போகின்றது என்பதை நினைவிற்கொள்ள வேண்டியுமிருக்கின்றது.
தேசியப் பட்டியல் கேட்டு சண்டை பிடிக்காத இருவருக்கு இரண்டரை மாதங்களுக்கு மேலாக தேசியப் பட்டியலை கொடுத்து அழகுபார்க்கின்ற ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு மாகாண அமைச்சை வழங்கியுள்ளமை, தேசியப் பட்டியலுக்கு பகரமான ஆறுதல் பரிசா, அல்லது பின்னொரு காலத்தில் சுழற்சி முறை எம்.பி. வழங்கப்படுவதற்கு முன்னதான மேலதிக பரிசா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கின்றது. எது எவ்வாறெனினும் தற்போதைக்கு இது ஆறுதல் பரிசு. இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது, கால ஓட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago