2025 மே 01, வியாழக்கிழமை

ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள்

காரை துர்க்கா   / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.  

அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார்.  

“தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார்.  

“நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்னை அடிக்கடி கேட்கின்றார்கள். இதுதான் என்னுடைய ஆதங்கம்” எனவும் அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.  

பத்து ஆண்டுகளாகப் போர் ஓய்ந்த காலங்களிலேயே, தமிழுக்குத் தடங்கல்கள் இருக்கும் போது, போர் அரக்கன் கோரத் தாண்டவம் ஆடிய காலங்களில், தமிழும் தமிழர்களும் அனுபவித்த வேதனைகள் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு, இது ஒரு சிறந்த எடுத்தக்காட்டு ஆகும்.  

தமிழ் மக்களை, இந்நாட்டின் சம பிரஜைகளாக ஏற்காது, அவர்களது உரித்துகளை வழங்காது, தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாக,  அடிமைகளாக வைத்திருக்கவே பேரினவாதம் விரும்புகின்றது. இதுவே, தமிழ் மக்களது ஆதங்கமும் ஆவேசமும் ஆகும்.  

ஆனால், தேர்தல்க் காலங்களில் வாக்குப் பெறுவதற்கு மட்டும், தேனுருகிப் பேசியும் இதயம் கனிந்து உறவாடியும், தமிழ் மக்களது வாக்குகளை எப்படி உறிஞ்சிப் பெற்றுக் கொள்ளலாம், அதனூடாக எவ்வாறு வெற்றி பெறலாம் என்றே பேரினவாதம் முயன்று வருகின்றது.  

நடைபெறுகின்ற தேர்தல்களில் தமிழ் மக்கள், கொழும்பு அதிகாரத்துக்கு வாக்களித்தாலும் முடிவுகள் ஒன்றே. அவை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையே. அதுவே, திட்டமிட்டு ஏமாற்றப்படுதல், வாக்குறுதிகளைத் தட்டிக்கழித்தல், காலங்கடத்தல் ஆகும்.  

இது இவ்வாறு நிற்க, “யுத்தத்தால் வீழ்ந்த வடக்கை மீளக் கட்டி எழுப்ப, இளைஞர்கள் யுவதிகள் முன்வர வேண்டும்” எனவும் வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்து உள்ளார்.  

ஆனால், அதிகரிக்கும் இளையோர் தற்கொலைகள், மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனை, புகைத்தல் பழக்கங்கள், வீட்டு வன்முறைகள், பாலியல் வன்முறைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறையற்ற திருமண உறவுகள், முன்னாள் போராளிகளது பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள், நுண் கடன்களால் பாதிக்கப்படுவோர் எனப் பல்வேறு சமூகப் புரழ்வுகளால், தங்களது சமூகம் வழி தவறிச் செல்வதாகத் தமிழ்ச் சமூகம் கவலை கொள்கின்றது.  

ஒருபுறம் இவ்வாறான பிரச்சினைகள் இருக்க, மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள், தடுப்பில் உள்ள அரசியல் கைதிகள் பிரச்சினைகள், விடுவிக்கப்படாத காணிப் பிணக்குகள் என, நீண்டு வளரும் பிரச்சினைகள் தொடருகின்றன.   

இவை கொடும் போரால், ஏற்கெனவே உடலியல், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு மேலும் தலையிடி கொடுக்கின்ற விடயங்களாக உள்ளன. இது, தமிழச் சமூகத்தில் பலபக்க பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.  

மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனை, வீட்டு வன்முறைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை நீதித் துறையைக் கொண்டோ பொலிஸ் துறையைக் கொண்டோ முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான சிக்கல்களிலிருந்து விடுபட, ஆழமான மனமாற்றம் ஏற்பட வேண்டும்.  

யுத்தத்தால் வீழ்ந்த வடக்கைக் கட்டி எழுப்ப, இளைஞர்கள், யுவதிகள் முன்வர வேண்டும் என ஆளுநர் கூறுகின்றார். ஆனால், அதற்கு முன்னதாக யுத்தத்தாலும் ஏனைய புறச்சூழல் காரணங்களாலும், இன்னமும் எழும்ப முடியாத இளைஞர்களை முதலில் தட்டி எழுப்ப வேண்டும்.  

எதிர்பார்ப்புடனும் தங்கி வாழும் மனநிலையுடனும் உள்ளவர்களாக இன்னமும் மக்கள் இருப்பதால், பல பிரச்சினைகள் உருவாகி உள்ளன என, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா. உதயகுமார் நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.  

யுத்தத்துக்கு முன்னர், சொந்தக் காலில் வாழ வேண்டும் என வைராக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்த சமூகத்தை, உதவி கோரி, அடுத்தவரில் தங்கி வாழும் மனநிலையை, யுத்தம் ஏற்படுத்தி விட்டது. தமிழ் மக்களது இயல்புகளிலும் இயலுமைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.  

அன்று, அவசரத்துக்குப் பக்கத்து வீட்டில் உப்பு வேண்டுவதையே கௌரவக் குறைச்சலாக எண்ணிய தமிழ்ச் சமுதாயம் வாழ்ந்தது. இன்று அனைத்துத் தேவைகளுக்கும் அடுத்தவரின் கையைப் பார்க்கின்ற சமுதாயமாக மாறி உள்ளது; மாற்றப்பட்டு உள்ளது.  

மூன்று தசாப்தங்கள் தாண்டிய நிதானம் இழந்த கொடும் போர், அதனூடாகத் தொடர்ந்த வன்முறைகள், துன்புறுத்தல்கள்,  எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை அறவே அற்ற நிலை என்பவற்றுக்குள், வலிந்து கொண்டு செல்லப்பட்ட ஒரு சமூகம் சுமூகமான நிலைக்கு வருவது சுலபமான விடயம் அல்ல.  

யுத்த மனவடுவும் அதனால் ஏற்பட்ட உளத் தாக்கங்களும் தலைமுறைகளாகத் தொடரக் கூடியவை. அது உளவியல்,  சமூகம் தாண்டி, மரபணு மூலமாகவும் கடத்தப்படுகின்றது என உள மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.  

போர் அனைத்துத் தமிழ் மக்களையும் பாதித்து உள்ளது. ஆனால், நந்திக்கடல் அவலங்களையும் முள்ளிவாய்க்கால் கொடூரங்களையும் கண் முன்னே கண்டவர்கள் இன்னமும் அதிர்ச்சிகளூடே வாழ்ந்து வருகின்றார்கள்.   

“எங்கள் உறவுகளது எண்ணங்கள் எங்களுக்கு அடிக்கடி வருகின்றது. அவர்கள் எங்களோடு வாழ்கின்றார்கள். நாங்கள் அவர்களோடு வாழ்கின்றோம். அவர்கள் எங்கள் கனவுகளில் வந்து போகின்றார்கள். போரில் நாங்கள் தப்பி அவர்களைக் காப்பாற்ற முடியாத பாவிகளாகி விட்டோம்” எனப் பலவித ஏக்கங்களோடும் பரிதவிப்புகளோடும் குற்றஉணர்வுகளுடனும் மக்கள் வாழ்கின்றார்கள்.  

உடல், உளம், சமூகம், ஆன்மீகம் ஆகிய நான்கு தளங்களில் உள்ள உச்ச, உன்னத நிலையே ஆரோக்கியம் என, உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்கின்றது.  

‘ஆகா ஓகோ’ என வசதிகளோடும் வளங்களோடும் வாழ்ந்த ஒரு சமூகம், இன்று கனவுகளோடும் கவலைகளோடும் வாழ்ந்து வருகின்றது. ஆகவே இது தொடர்பில், ஒவ்வொரு தமிழ் மகனும் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.  

எனவே, பாதிக்கப்பட்டவர்களது மனநிலைகளை அவர்களது நிலையில் இருந்து அணுகி, அவர்களை மெல்ல மெல்லச் சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டிய பாரிய கூட்டுப் பொறுப்பு, ஒவ்வொரு தமிழருக்கும் உரியது.  

ஆகவே, இந்த உளநலச் சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். எச்சரிக்கைக் மணியாக மது, போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன உள்ளன.  

இந்தப் பணியில் கணிசமான அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற அமைப்புகளும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தேவைகள் அதிகமாக உள்ள நிலையில் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல’வே நிலைவரங்கள் உள்ளன.   

ஆகவே, ஓர் அனர்த்தத்துக்குப் பின்னராக வீச்சுக் கொண்டு, ஒட்டுமொத்த இனமுமே பாதிக்கப்பட்ட உளநலம், உளஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை, ஒரு சில உள வைத்தியர்களாலோ ஒரு சில உள ஆற்றுப்படுத்துனர்களாலோ சீர்படுத்த முடியாது.  

எனவே, இது பாரிய ஆளணியோடு, நன்கு திட்டமிட்டு, இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி, ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வர வேண்டும்.  

ஆளணி விடயத்தில், தற்போது பட்டதாரி பயிலுநர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பல்கலைக்கழகங்களில் உளவியல், மெய்யியல் துறைகளில் பட்டம் பெற்ற, இது தொடர்பில் ஆர்வம்மிக்க பயிலுநர்களைப் பரிசீலிக்கலாம்.  

முரண்பாடுகள் நிறைந்தும், சமநிலை குழம்பியும், உறவுகள் அறுந்தும், துயரங்கள் நிறைந்தும் அல்லல்படும் மனங்களை, இந்த அணி மறுசீரமைக்க முயற்சி செய்யட்டும். ஏனெனில், தெய்வத்தால் ஆகாது என்னும் முயற்சி, தன் மெய்வருத்தக் கூலி தரும்.  

வடக்கு மாகாண ஆளுநரே! இதை நீங்கள் தொடக்கி வைக்கலாம். உங்களால் முடியும்; ஏனெனில், இது இன்றைய அவசரமானதும் அவசியமானதுமான பணியாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .