2025 மே 14, புதன்கிழமை

இந்தியா கையை விரித்தது ஏன்?

Administrator   / 2017 மார்ச் 01 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமொன்றை, இந்தியா கடந்த வாரம் பகிரங்கமாகக் கைவிட்டது; அல்லது முன்னரே கைவிட்டுவிட்டு, கடந்த வாரம் முதன் முறையாக பகிரங்கமாக அதனை ஊரறியச் செய்தது.  

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான விடயத்தையே இந்தியா கடந்த வாரம் அவ்வாறு பகிரங்கமாக கைகழுவி விட்டது.   
கடந்த 18 ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கரே, இந்தியா சார்பில் வடக்கு, கிழக்கு இணைப்பை கைவிட்டுவிட்டார். 

 “இந்தியா தொடர்ந்தும் இவ்விரு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தப் போவதில்லை” என அவர் நேரடியாகவே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடம் கூறிவிட்டார்.  

இந்தியாவின் அதிகாரப்படி நிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும்.  

தமது மூன்று நாள் விஜயத்தின் இறுதி நாளான கடந்த 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே ஜெயசங்கர், வடக்கு, கிழக்கு இணைப்பைப் பற்றிய இந்த வித்தியாசமான கருத்தைத் தெரிவித்திருந்தார் என இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியது.   

இந்தச் சந்திப்பின்போது, “வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்து, தனி நிர்வாக அலகாகப் பிரகடனப்படுத்துமாறு, இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும்” எனப் பிரேமசந்திரன், இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.   

“இந்த மாகாண இணைப்பானது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்பதால் இந்தியா, அந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் கடமையை அந்த அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க வேண்டும்” எனவும் அவர் கோட்டுக் கொண்டார்.   

“இலங்கை, இந்திய ஒப்பந்தம் இன்னமும் செல்லுபடியானதாக இருந்தால், அதன் ஒவ்வொரு அம்சமும் செல்லுபடியானவையாக இருக்கவேண்டும்” எனக் கூறிய பிரேமசந்திரன், “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டதன் பின்னர், அது நிரந்தரமானதாக இருக்கும்” எனவும், “கிழக்கு மாகாண மக்களின் கருத்துப்படி அம்மாகாணங்களைப் பிரிப்பதற்காக நடத்தப்படவிருந்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவிடுவதில்லை” என இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, தமிழ்த் தலைவர்களுக்கு அன்று வாக்குறுதியளித்திருந்தார், எனவும் இந்தச் சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்.  

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், “1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், இரு நாடுகளிலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன”. எனவே, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து ஏற்பட்டுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.   

“தமிழ் மக்களுக்கு முக்கியமான சகல விடயங்களையும் மாகாண இணைப்பு என்ற இந்த ஒரு விடயத்துக்காகப் பணயமாக பாவிக்கக்கூடாது” என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் மேலும் கூறியிருக்கிறார்.  

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் மீண்டும் பிரிக்கப்பட்டது.   

மாகாண இணைப்பு என்ற விடயம் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இருந்த போதிலும், அப்போது இந்தியா அந்தத் தீர்ப்பைப் பற்றிக் கருத்து வெளியிடவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இந்தியா அந்தத் தீர்ப்பு வெளியானபோது, சும்மா இருந்துவிட்டது.சிலவேளை இந்தியா அப்போதே இந்த விடயத்தைக் கைவிட்டு இருந்து இருக்கலாம்.  

ஆனால், அப்போது இந்தியா அந்த விடயத்தைக் கைவிட்டுவிட்டதாக இவ்வளவு தெளிவாகத் தெரிவித்து இருக்கவில்லை. எனவே, இந்தியா மாகாண இணைப்பு என்ற விடயத்தைத் தாம் கைவிட்டுள்ளதைக் கடந்த வாரம் ஜெய்சங்கர் மூலமாகவே முதன் முறையாகத் தெளிவாக கூறியிருக்கிறது.   

ஆயினும், இலங்கையில் சிங்களத் தலைவர்களோ அல்லது தமிழ்த் தலைவர்களோ அதனைப் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. சில தமிழ் ஊடகங்கள் அந்தச் செய்தியைப் பிரசுரிக்கவும் இல்லை.  

இனப்பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது என்பதைப் போல், இதுவரை காலமும் கருத்து வெளியிட்டு வந்த தமிழ்த் தலைவர்கள், ஜெய்சங்கரின் இந்தக் கூற்றினால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்க வேண்டும்.  

 ஆனால், அவ்வாறு அவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரியவில்லை. சிலவேளை, அரசியல் மேடைகளில் இதனைப் பற்றிக் குறிப்பிட்ட போதிலும், தமிழ், சிங்களத் தலைவர்களாகிய இரு சாராரும் மாகாண இணைப்பை நடைமுறைச் சாத்தியமானதாக கருதவில்லைப் போலும். எனவே, இரு சாராரும் ஜெய்சங்கரின் கருத்தில் புதிதாக எதுவும் காணவில்லைப் போலும்.  

உண்மையில், ஜெய்சங்கரின் கருத்தைப் பற்றி ஆச்சரியப்படத் தேவையில்லை. இந்தியா, எப்போதும் தமது நலன்களை முன்நிலைப்படுத்தியே முடிவுகளை எடுத்துள்ளது.   

இலங்கையின் இனப் பிரச்சினையை பற்றியும் இந்தியா தமது நலன்களை மையமாக வைத்தே சிந்தித்து வந்துள்ளது. அன்று தமிழ் ஆயுதக் குழுக்களை ஆதரிக்கும் போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் போதும், இந்திய நலன்களை மனதில் வைத்தே இந்தியத் தலைவர்கள் முடிவுகளை எடுத்தனர்; இன்றும் அவ்வாறேதான். 

அன்று மாகாண இணைப்பை ஆதரிக்கும் போது, இருந்த இரு தரப்பு மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகள் இன்று மாறியுள்ளன. எனவே, இந்தியத் தலைவர்கள் அன்று ஆதரித்த சில விடயங்களை இன்று ஆதரிக்காமல் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. 

அன்று, 1970 ஆம் ஆண்டுகளின் இறுதியிலும் 1980 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்தன, பல விடயங்களில் இந்தியத் தலைவர்களை, குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை ஆத்திரமூட்டி வந்தார்.   

இந்தியா, அப்போது சோஷலிஸ மற்றும் முதலாளித்துவ என்ற அடிப்படையில் இரு துருவங்களாகப் பிரிந்து இருந்த உலகில், சோஷலிஸ அணியுடன் நெருக்கமாக இருந்தது. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன, அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ அணியுடன் நெருக்கமாக இருந்தார்.   

இந்தியா, ஒதுக்கித் தள்ளியிருந்த இஸ்ரேலுடன் அவர் புதிதாகத் தொடர்புகளை ஆரம்பித்தார். இந்தியாவின் பிரதான எதிரியாகக் கருதப்பட்ட பாகிஸ்தானுடன் தொடர்புகளைப் பலப்படுத்தி வந்தார்.  

 

எனவே, இந்தியா, இலங்கை அரசாங்கத்தை சந்தேகக் கண் கொண்டே பார்த்தது. ஏற்கெனவே இந்தியாவுக்கு வடமேற்கிலும் வடகிழக்கிலும் உள்ள பாகிஸ்தானும் வங்காளதேசமும் அமெரிக்க அணியில் இருந்த நிலையில் இலங்கையும் அந்த அணியுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அமெரிக்காவுக்குத் தம்மை சுற்றிவளைக்க வாய்ப்புக் கிடைப்பதாக இந்தியத் தலைவர்கள் நினைத்தனர்.  

எனவே, இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் இந்தியா நினைத்தது. அதற்குப் பொருத்தமான முறையில் அக்காலத்தில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் வடக்கு, கிழக்கு போரின் காரணமாகத் தமிழகத்துக்குச் சென்றிருந்தனர். அவர்கள் தமக்கு ஒரு சுமையெனக் கூறிய இந்தியா, முதலில் இனப்பிரச்சினையைத் தீர்த்து, அகதிகளை மீண்டும் அழைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கூறியது.   

பின்னர், தாமே இனப்பிரச்சினையைத் தீர்க்கவென இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட ஆரம்பித்தது.  
அதன் பிரகாரம், தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா பணம், ஆயுதம் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியது. அதிகாரப் பரவலாக்கல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியது.  

கிழக்கு மாகாணத்தின் கலப்பு இனப் பரம்பலையும் கருத்திற் கொள்ளாது, வடக்கு கிழக்கு இணைப்பையும் ஏற்றுக் கொண்டது.  
ஆனால், இன்று அவ்வாறு இலங்கை அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க இந்தியாவுக்கு அவசியம் இல்லை.   

இன்று இலங்கை, சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வளர்த்து வந்த போதிலும், அன்று போல் ஆத்திரமூட்டும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குவாரத்தை ஏற்படுத்தி, இலங்கையில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என இந்தியா கருதுவதாகத் தெரியவில்லை.   

இந்தப் பின்னணியில்தான் வடக்கு, கிழக்கு இணைப்பைத் தாம் தொடர்ந்தும் வலியுறுத்தப் போவதில்லை என ஜெய்சங்கர் கூறியதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  

தமிழ்த் தலைவர்கள், 1980 களின் ஆரம்பத்திலிருந்தே வடக்கு, கிழக்கு இணைப்பையும் சுயநிரணய உரிமையையும் அதிகாரப் பரவலாக்கலையும் சமஷ்டி ஆட்சி முறையையும் வலியுறுத்தி வந்துள்ளனர்.  

உண்மையிலேயே, இந்த நான்கு கோரிக்கைகளும் ஓரளவுக்கு இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேறியது. ஆனால், 2006 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு இணைப்பு முற்றாக இரத்துச் செய்யப்பட்டது.  

இந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டு, அதாவது வடக்கு, கிழக்கு இணைப்பும் அதிகாரப் பரவலாக்கலும் ஒரு வகையில் ஒன்றுக்கு ஒன்று முரணான கோரிக்கைகள் என்றும் வாதிடலாம்.   

அதிகாரப் பரவலாக்கலின் நோக்கம், அரச நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதேயாகும். அதற்காகச் சிறிய அதிகார அலகுகளே இருக்க வேண்டும். ஆனால் மாகாண இணைப்பின் மூலம் அதிகார அலகுகள் மீண்டும் பெரிதாகின்றன.   

எனினும், மாகாண இணைப்பானது இது போன்ற பொருளாதார அல்லது நிர்வாகக் கண்ணோட்டத்தில் கோரப்பட்டதல்ல. 1970 களில் அது அரசியல் கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்பட்டது.

 உண்மையில் அது, எதிர்காலத்தில் தமிழ் ஈழத்தை அடைவதை இலகுவாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். அந்த நோக்கத்தை விளங்கிக் கொண்ட அரசாங்கங்கள் அதனை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளன.  

தமது நலன்களுக்காக இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட்ட போதிலும், இந்தியா அதனை வெளிப்படையாகக் கூறவில்லை. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகத் தாம் இந்த விடயத்தில் தலையிடுவதாகவே காட்டிக் கொண்டது.   
எனவே, இனப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், தமிழ்த் தரப்புக்கு ஆதரவாக இந்தியத் தலைவர்கள் அக்காலத்தில் நடந்து கொண்டனர். இருந்த போதிலும் தாம் நியாயமாக நடந்து கொள்வதாக இலங்கை அரசாங்கத்துக்கு காட்டிக் கொள்ளவும் முயற்சித்தனர். 

எனவே, ஒரு புறம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்து, தமிழ் ஆயுதக் குழுக்களைச் சமாளிக்க வேண்டும் என்பதைப் போன்றதோர் கருத்தை, அரசாங்கத்துக்கு வழங்கிய இந்தியா, மறுபுறம் இரு மாகாணங்களும் நிரந்தரமாகவே இணைக்கப்படும் எனத் தமிழ்த் தரப்பினருக்கு வாக்குறுதியளித்தது.   

அதன்படி, முதலில் இரு மாகாணங்களை இணைத்துவிட்டு, தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று சமூகங்களும் ஏறத்தாழ சமமாக வாழும் கிழக்கு மாகாணத்தில், சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்திப் பின்னர் அம் மாகாணங்களை பிரிக்கலாம் என இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கூறியது. 

அதேவேளை, மாகாணங்களைப் பிரிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பொன்று பரிந்துரை செய்யப்பட்டாலும் அதனை நடத்த இடமளிப்பதில்லை எனத் தமிழ்த் தரப்பினருக்கு இந்தியா வாக்குறுதியளித்தது.  

இதனைத்தான் பிரேமசந்திரன், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவிடாமல் இரு மாகாணங்களும் நிரந்தரமாக இணைக்கப்படும் என ராஜீவ் காந்தி வாக்குறுதியளித்தார் என ஜெய்சங்கரிடம் கூறியுள்ளார். அக் கருத்தை இதற்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கூறியிருக்கிறார்.  

அதாவது, ராஜீவ் காந்தி, ஜே.ஆர். ஜெயவர்தனவை ஏமாற்றியே வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அவரின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன் பின்னரும் மாகாண இணைப்புக்கு மற்றொரு தடை ஏற்பட்டது.   

மாகாண சபைச் சட்டத்தின்படி தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை கீழே வைத்தாலேயே ஜனாதிபதி இரு மாகாணங்களை இணைக்கும் வர்த்தமானியை வெளியிடுவார். ஆனால், முதலில் ஆயுதங்களைக் கீழே வைப்பதாக கூறிய புலிகள் இயக்கம் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்திய படைகளுடன் மோத ஆரம்பித்தது. 

எனவே, தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை கீழே வைக்கும் என்று இந்தியா இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயிற்று. ஆனால், மாகாணங்கள் இணைக்கப்படவே வேண்டும் என இந்தியா விடாப்பிடியாக இருந்தது.  

 இது இந்த விடயத்தில் இலங்கைக்கு கிடைத்த இரண்டாவது ஏமாற்றமாகும். இந்த நிலையில் வேறு வழியின்றி, ஜனாதிபதி ஜெயவர்தன மாகாண சபைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அல்லாது அவசர கால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பாவித்து தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை கீழே வைக்க ஆரம்பித்தால், ஜனாதிபதி மாகாணங்களை இணைப்பார் என திருத்தினார்.   

நாடாளுமன்றத்தில் அல்லாது ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பாவித்து திருத்தப்பட்ட ஒரே சட்டம் மாகாண சபைச் சட்டமாகும். இதனையே 2006 ஆம் ஆண்டு அம்மாகாணங்களை மீண்டும் பிரிக்கும் போது சிங்கள தரப்பினர் தார்மிக அடிப்படையாகப் பாவித்தனர்.   

இந்தியாவும் கைவிரித்த நிலையிலும், அதேவேளை தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் பிரிந்த கிழக்கு மாகாணத்தில் நிர்வாகிகளாக மாறிவிட்ட நிலையிலும் அம் மாகாணத்தை வட மாகாணத்துடன் மீண்டும் இணைப்பதானது முன்னரை விட கடினமானதாகவே இருக்கும். 

குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அதற்குப் பெறுவதானது முன்னரை விட பல மடங்கு கஷ்டமானதாகவே அமையும்.   

வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம் மாகாண சபை போன்ற சுலோகங்கள் இப்போது கௌரவச் சின்னங்களாகவே பல அரசியல்வாதிகள் பாவிக்கின்றனர்.  

உண்மையில் ஜெய்சங்கர் கூறுவதைப் போல், போரின் பின்னரான நிலைமையின் கீழ் பிரச்சினைகளையும் இது வரை காலமும் பாவித்த சுலோகங்களையும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மீளாய்வு செய்வதில் தவறில்லை. 
போருக்கு பின்னரான நிலைமையில் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புதிய சுலோகங்களும் புதிய தந்திரோபாயங்களும் அவசியமாகும் என்பதிலும் சந்தேகம் இல்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X